அமேஸான் காடுகளிலிருந்து- 3 : நிசப்தம்

மித்யா

அத்தியாயம் 3 – நிசப்தம்

 

மறு நாள் காலை ஜெப்ரி, டேவிட் மற்றும் ஜிம் ஆகிய மூவரும் அந்தக் காட்டுப் பகுதிக்குள் செல்லக் கிளம்பினார்கள். அவர்கள் கையில் தலா ஒரு ரைஃபில் இருந்தது. ஜெப்ரியும் டேவிட்டும் தங்கள் ஹோல்ஸ்டரில் பிஸ்டல் வைத்திருந்தார்கள். காட்டுவாசிகள் அவர்களுடன் வர மறுத்துவிட்டதால் எல்லோரும் ஒரு பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்தார்கள். ஜெப்ரி காடுவாசிகளை திட்டிக்கொண்டே வந்தார்.

அவர்கள் காட்டுப்பகுதியின் எல்லைக்கு வந்தபோது அங்கு தங்கியிருக்கும் காட்டுவாசிகளின் குடிசைகளைப் பார்த்தார்கள். இவர்கள் அந்தக் காட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்று காட்டுவாசிகளுக்கு புரிந்துவிட்டது. குடிசைக்குள் இருப்பவர்களைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். அவற்றில் ஒரு குடிசைக்குள்ளிருந்து கிறிஸ்டோ வெளியில் வந்தான். அவன் ஜெப்ரி மற்றும் டேவிட்டைப் பார்த்தவுடன் பரவசமடைந்தான். பிரிட்டனில் பல இளைஞர்களுக்கு நாயகர்களாக இருந்த இருவரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லாக, வலது கையை நீட்டி கொண்டு, “வெரி ப்ளீஸ்ட் டு மீட் யூ” என்று சொல்லிக்கொண்டு கிடு கிடு என்று அவர்களை நோக்கி ஓடி வந்தான். அவனைப் பார்த்து ஜெப்ரி உக்கிரமாக முறைத்தார். ஓடி வந்துகொண்டிருந்த அவன் உறைந்து நின்றுவிட்டான். அவன் முகம் வாடிவிட்டது.

காட்டுப்பகுதிக்குள் அவர்கள் நுழையும் தருணம், ஜிம், “நான் உங்களுடன் வரவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. நான் இங்கேயே உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறேன்” என்றான். “நீ ஒரு கோழை. நீ ஒரு முட்டாள். உலகில் நீ முன்னுக்கு வரமுடியாது. இனி என் கண்ணில் முழிக்க வேண்டாம். உன் சாமான்களை எடுத்துக்கொண்டு லண்டனுக்குச் சென்றுவிடு. அங்கு ஏதாவது கிளார்க் வேலை தேடிக்கொள் இந்தக் காட்டில் உனக்கு வேலை இல்லை” என்று ஆவேசமாக் கத்தினார் ஜெப்ரி. “அவனை விடுங்கள். நாம் செல்லலாம்” என்று அவரை டேவிட் சமாதானப்படுத்தினான்.

இருவரும் காட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களுக்கு காடு புதிதல்ல. நுழைந்தவுடன் அவர் காதுகள் கூர்மையாகின, கண்கள் எல்லா இடங்களையும் தேட ஆரம்பித்தன. அவர்கள் உடம்பு முறுக்கிக் கொண்டிருந்தது. ஒரு சின்ன அசைவையும் அவர்களின் கண் பார்த்தது. எல்லா ஒலிகளும் அவர்கள் காதை வந்தடைந்தன. அவர்கள் இருவரும் காட்டு மிருகங்கள் போல் மாறியிருந்தார்கள். இருண்டிருந்த காட்டில் பூச்சிக்கடியைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. மரத்திலிருந்து கீழே ஊர்ந்து வரும் பாம்பு ஒன்றை டேவிட் கையால் பிடித்து, கீழே வீசி, தன் பூட்ஸ் காலால் நசுக்கினான். துடிதுடித்து இறந்தது அந்தப் பாம்பு. மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டிருந்த கொரில்லா ஒன்றை ஜெப்ரி சுட்டு தள்ளினார்.

மூன்று மணி நேரம் நடந்த பின்பு அவர்கள் நதிக்கரைக்கு வந்தார்கள். இங்கு வெளிச்சம் நிறைந்திருந்தது. ஒரு பெரிய மரத்தின் கீழே இருவரும் அமர்ந்தார்கள். ஒரு ஃபிளாஸ்க்கிலிருந்து நீரை அருந்திவிட்டு ஜெப்ரிக்கு ஃபிளாஸ்க்கை கொடுத்தான் டேவிட். இருவரும் சற்று நேரம் ஒன்று பேசிக்கொள்ளவில்லை.

பிறகு டேவிட் ஜெப்ரியைப் பார்த்து கேட்டான், “இந்த வயதிலும் நீங்கள் ஏன் இது போன்ற ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்? உங்களுக்கு இல்லாத செல்வமா, புகழா? லண்டனில் பெரிய பங்களா, எஸ்செக்ஸ்ஸில் ஒரு கோட்டை. நீங்கள் இப்பொழுது ஒரு நைட்டாகி விட்டீர்கள். உங்களுக்கில்லாத அரசியல் செல்வாக்கா? நீங்கள் லண்டனில் ஹாயாக ஓய்வெடுக்கலாமே? எதற்கு இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”

“ஹ்ம்ம். நீ இதை கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நமக்குள் காடு இறங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. நம்மால் நகரத்திற்கு செல்ல முடியாது. அங்கு சென்றுதான் என்ன செய்வோம். எனக்கு பெண்கள் மோகம் என்றோ தணிந்து விட்டது. அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. பதவி, பட்டம் இதையெல்லாம் துச்சமாக மதிக்கிறேன். நமக்கு பட்டம் கொடுக்க யாருக்கு தகுதி இருக்கிறது? இடத்தை விட்டு நகராமல் அரசியல் செய்யும் ஆட்கள் நமக்கு பட்டம் கொடுக்க, நாம் அதை வாங்குவது வெட்கக்கேடு. லண்டன் சென்றால் என்ன செய்யலாம்? தினமும் ஒரு பார்ட்டி அல்லது பால் செல்லலாம். அங்கு சென்றால் என்ன நடக்கும்? எல்லோரும் நம்மைச் சூழ்ந்து கொண்டு நம்மிடம் கதை கேட்பார்கள். நாமும் நம் வீர சாகஸ கதைகளை சொல்ல வேண்டும். சொல்லி முடித்தவுடன், “ஜெப்ரி எவ்வளவு நன்றாக கதை சொல்கிறார்’ என்று பாராட்டுவார்கள். அதற்கு பிறகு ஒவ்வொரு பார்ட்டியிலும் நாம் கதை சொல்ல வேண்டும். நம்மை ஏதோ கூத்தாடி போல் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்களை மகிழ்விப்பதே நம் வேலை போல் நினைத்துக் கொள்வார்கள். எல்லோரும் சூழ்ந்திருந்து கதை கேட்டு நம்மைப் பாராட்டும்போது நன்றாகதான் இருக்கும். ஆனால் பிறகுதான் தெரியும் அவர்கள் நம்மை ஒரு வேட்டைக்காரனாக பார்க்கவில்லை. நம்மை ஒரு கதைசொல்லியாக பார்க்கிறார்கள் என்று. டேனியல் போன்றவர்கள் சில வருடங்கள் காட்டில் இருந்துவிட்டு இப்பொழுது கதை சொல்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் அவன் மேல் மோகம் கொண்டிருக்கிறார்கள். அவன் என்றோ கூத்தாடியாகிவிட்டான். நான் அப்படி மாறத் தயாராக இல்லை” என்று ஆவேசமாக முடித்தார்.

மறுபடியும் மௌனம் நிலவியது.

சமநிலைக்கு வந்தபின் ஜெப்ரி டேவிட்டை கேட்டார், “நீ லண்டன் சென்று விடலாமே? ஏன் இன்னும் இங்கு சுற்றுகிறாய்?” என்று.
டேவிட் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். பிறகு மெல்லிய குரலில், “என் மனைவியின் நிழல் என்னை இன்னும் துரத்துகிறது ஜெப்ரி. உங்களுக்கு நான் அவளை எவ்வளவு நேசித்தேன் என்பது தெரியும். அவளுடன் இருந்த அந்த மூன்று வருடங்கள் என்னால் மறக்க முடியவில்லை ஜெப்ரி. அவளை போல் என்னை நேசித்தவர்கள் யாரும் இல்லை. அவள் வேண்டாம் என்று சொல்லியும் நான் அவளை என்னுடன் காட்டிற்கு அழைத்து வந்தேன். அவள் சொல் கேட்டு லண்டனில் தங்கி இருக்க வேண்டும். அவள் என்னுடன் காட்டுக்கு வந்து, என்ன என்று தெரியாத கொடிய நோய் தாக்கி, அழுகி செத்தாள்.” டேவிட் கண்களில் கண்ணீர் துளிகள். “அவள் டேவிட் டேவிட் என்று முனகிக்கொண்டிருந்தது இன்னும் என் காதில் ரீங்கரிக்கிறது. எவ்வளவோ சாதனைகள் செய்த நான் அவளைக் காப்பாற்ற முடியாமல் தவித்தேன். இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறேன்”

மெல்லிய குரலில் ஜெப்ரி கேட்டார், “அவள் நினைவு உன்னை வாட்டுகிறது என்றால் அதே காடுகளில் எதை எதிர்பார்த்துச் சுற்றுகிறாய்?”

“மரணத்தை. இங்குதான் என் மரணம் இருக்கிறது. ஆனால் அன்று நான் இந்தப் பகுதிக்கு வந்து பார்த்தபோது என்னை பயம் கவ்விக்கொண்டது. மரணத்தை நான் வரவேற்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால்…” திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை அகல விரித்து அங்கு இங்கும் பார்க்கலானான் டேவிட்.

ஜெப்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. டேவிட்டைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார். டேவிட் பதில் சொல்லாமல் இங்கும் அங்கும் வெறி பிடித்தவன் போல் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஜெப்ரி அதை உணர்ந்தார்.

காடு நிசப்தமாக இருந்தது.

காட்டுக்குள் செல்பவர்களுக்கு தெரியும் காடு எப்பொழுதும் தூங்குவதில்லை, காடு எப்பொழுதும் நிசப்தமாக இருந்தது இல்லை என்று. ஆனால் இப்பொழுது விவரிக்க முடியாத அமைதி குடிகொண்டிருந்தது. ஓர் இலையும் அசையவில்லை. பட்சிகளின் குரல் இல்லை. பூச்சிகளின் ரீங்காரம் இல்லை. நதியின் சலசலப்பும் இல்லை.

சட்டென்று தன் துப்பாக்கியை எடுத்து வானை நோக்கிச் சுட்டார் ஜெப்ரி. அதன் எதிரொலி காடு முழுக்க கேட்டது. ஆனால் ஒரு பறவையும் மரத்தை விட்டுப் பறக்கவில்லை. எதிரொலி அடங்கியபின் மறுபடியும் மயான அமைதி.

ஜெப்ரி மரத்தின் கீழே நின்றிருக்க ரைஃபிலைக் கையில் ஏந்தி முன்னே சென்றான் டேவிட். நூறடி சென்ற பின்பு சட்டென்று நின்றான். அவன் முன் பச்சை நிறத்தில் புகை போன்ற ஒன்று தோன்றியது. அதை உருவம் என்று சொல்லமுடியாதபடி அதன் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது.

டேவிட் ரைஃபிலை உயர்த்தி அதைச் சுட தயாரானான். அப்பொழுது அவன் உடல் வெடித்தது. வெடிக்கும் சப்தம் எங்கும் நிரம்பியது. வெடித்துச் சிதறிய உடலிலிருந்து ஒரே ஒரு காது பறந்து வந்து ஜெப்ரியின் முன் விழுந்தது.

வாழ்க்கையில் முதல் முறையாக ஜெப்ரியின் மனதில் பீதி உண்டானது.

இதைப் போல் அவர் என்றும் பயந்ததில்லை. பல மிருகங்களை, பல காட்டுவாசிகளை ஒண்டிக்கு ஒண்டி சந்தித்தபோதும் அவர் பயந்ததில்லை. ஆனால் இப்பொழுது பயத்தில் அவர் கண்கள் விரிந்தன. பச்சைப் புகை தன்னை நோக்கி வருவதை கண்டார். தன்னையும் அறியாமல் அவர் கண்கள் விரிவதை உணர்ந்தார். ‘படக்’ என்ற ஓசையுடம் அவர் இரண்டு கண்களும் உடலை விட்டு வெளியே விழுந்தன.

இவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்பி உட்காந்து கொண்டிருந்த ஜிம்முக்கு முன் கண்கள் இரண்டும் இல்லா ஜெப்ரியின் சவம் வந்து விழுந்தது. அதைப் பார்த்து கத்த ஆரம்பித்த ஜிம் பல மணி நேரம் நிறுத்தவில்லை. அவன் புத்தி பேதலித்தது.

பிணத்தை பார்த்த காட்டுவாசி பெண்கள் பலர் மூர்ச்சையானார்கள். பிணத்தை யாரும் தொடத் தயாராக இல்லாததால் அதன் மேல் விறகுகளைப் போட்டு பிணத்தை எரித்தார்கள்.

இனி அடுத்த பலி யார்?

(தொடரும்)

ஒளிப்பட உதவி – The Written Word

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.