அமேஸான் காடுகளிலிருந்து- 4: தேவதை வந்தாள்

 மித்யா

அன்று இரவு கிறிஸ்டோவிற்கு தூக்கம் வரவில்லை. ஜெப்ரியின் கண்கள் இல்லாத சடலம் அவன் கண்களில் அடிக்கடி தோன்றி மறைந்தது. டேவிட் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெப்ரிக்கு இந்த கதி என்றால் அவருடைய கதி என்னவோ? அவர் உயிருடன் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஆனால் அவர் எப்படி மாண்டிருப்பார்? ஜெப்ரி போல் அவரும் துடிதுடித்திருப்பாரா? அவரை எந்த மிருகம் கொன்றிருக்கும்? ஜெப்ரியின் மரணத்துக்கும் எந்த மிருகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். மிருகத்தினால் சாவு வந்தால் ஒரு கை காணாமல் போயிருக்கலாம், அல்லது ஒரு கால் காணாமல் போயிருக்கலாம். ஏன், தலையே காணாமல் போயிருக்கலாம். இப்படி கண் மட்டும் காணாமல் போயிற்றென்றால் அது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் வேலைதான் என்று இந்த குழுத் தலைவன் நேற்றுதான் எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். சற்று நேரம் முன் எல்லோரும் வானைப் பார்த்து ஏதோ கத்தினார்கள். பல முறை காட்டை வணங்கினார்கள். அதற்கு பிறகு தூங்கச் சென்று விட்டார்கள்.

கிறிஸ்டோவின் குடிசைக்குள் அந்தப் பெண் நுழைந்தாள். கிறிஸ்டோவை தங்களுடைய குழுவில் உள்ள ஒருவனைப் போல் காட்டுவாசிகள் நடத்தினார்கள். தினமும் ஏதோ ஒரு பெண் கிறிஸ்டோவின் குடிசைக்குள் வந்து அவனுடன் படுத்துக் கொள்வாள். முதலில் கிறிஸ்டோவிற்கு இது குழப்பமாக இருந்தது. அவன் ஒரு பெண் மேல் மோகித்திருந்தான். அவளை அவனுக்கு ரொம்ப பிடித்தது. அவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அந்தப் பெண்ணோ பல ஆண்களுடன் கூடினாள். இதைக் கண்டு கிறிஸ்டோ வெகு கோபமாக இருந்தான். அவள் அவனுடைய குடிசைக்குள் இரவில் வந்தபொழுது தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு அவளைத் தொடாமல் இருந்தான். இப்படி பல முறை நடந்தபின் கிறிஸ்டோ இவர்களுடைய விழுமியங்கள் தன்னுடைய விழுமியங்களுக்கு நேர் எதிராக இருப்பதை உணர்ந்தான்.

லண்டனில் ஒரு பெண் பலருடன் செல்வதுண்டு. ஆனால் ஒருவனுடைய காதலி ஆனபின் அவள் அவனுடன்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இங்கு அது போல் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் யாருடனும் கூடி இருக்கலாம். யாரும் யாருக்கும் சொந்தமில்லை. கிறிஸ்டோ முதலில் இதை ஒரு காட்டுமிராண்டி சமூகமாகப் பார்த்தான். ஐரோப்பியா இவர்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது என்று பல ஐரோப்பியர்கள் போல் அவனும் நினைத்தான். ஆனால் மெதுவாக அவன் கருத்து மாறியது. இந்த குழுவிற்குள் கற்பழிப்பு என்பது யாரும் கேட்டதில்லை. இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் ஜெயித்தவர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உட்படுத்துவதில்லை. இந்த குழுக்களின் தலைவன் ஆணாக இருந்தாலும் எல்லோரும் சமமாகதான் கருதப்படுகிறார்கள். கிறிஸ்டோவிற்கு இதையெல்லாம் யோசிக்கும்பொழுது மிகவும் குழப்பமாக இருந்தது. அப்பொழுதுதான் குடிசைக்குள் வந்த பெண் அவனை முத்தமிட்டாள்.

கூடல் முடிந்தபின் அவள் ஆழ்ந்த உறக்கத்தில். கிறிஸ்டோ ஆழ்ந்த சிந்தனையில். ஜெப்ரி போன்ற மாவீரர்களை தின்று துப்பிய காடு என்னை ஏன் ஒன்றும் செய்யவில்லை? அப்படி எனக்குள் என்ன இருக்கிறது? இவர்கள் நம்புவது போல் நான் ஒரு தெய்வப் பிறவியா? அப்படியானால் அதை என்னால் ஏன் உணர முடியவில்லை? நான் இவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? தன்னுள் எழுந்து கொண்டிருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குடிசையை விட்டு வெளியே வந்தான் கிறிஸ்டோ.

தரை ஈரமாக இருந்தது. மழை பேய்ந்து ஓய்ந்திருந்து. இங்கே எப்பொழுது மழை பெய்யும் என்றே சொல்ல முடியாது. இங்கு எப்பொழுதும் ஒரே போன்ற சீதோஷ்ண நிலைதான். இரவில் குளிர்ச்சி இல்லை. காற்றில் மிதமான வெப்பம் கலந்திருந்தது. மழை விட்டபின் வானம் சுத்தம் செய்யப்பட்டது போல் இருந்தது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.

கிறிஸ்டோ தன் கால்கள் தானாக காட்டை நோக்கிச் செல்வதை உணர்ந்தான். தனக்கு தன் சொந்த கால்களின் மேல் எந்த அதிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தான். அவனை பயம் கவ்விக் கொண்டது. அவனுக்கு மறுபடியும் குடிசைக்குள் சென்றுவிடவேண்டும் என்று இருந்தது. ஆனால் அவன் கால்களோ அவனை காட்டுக்குள் அழைத்து சென்றன.

காட்டுக்குள் நுழைந்த கிறிஸ்டோவிற்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் காடு இருட்டாக இருக்கும் என்றும், தன்னால் அந்த இருளில் ஒன்று பார்க்கமுடியாது என்றும் கிறிஸ்டோ எண்ணியிருந்தான். வானில் நிலவொளியும் இல்லை. ஆனால் காட்டுக்குள் அவனுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்தன. எல்லா பக்கமும் மரங்களும், மரத்தில் பொந்துகளும், பொந்துக்குள் குடியிருக்கும் ஆந்தைகளும், மரத்தின் கிளை மேல் படுத்திருக்கும் சிறுத்தையும், ஊர்ந்து செல்லும் பாம்பும் அவனுக்கு தெரிந்தன. ஆனால் காட்டை யாரோ ஒரு சன்ன பச்சை நிற போர்வையால் போர்த்துவிட்டதுபோல் இருந்தது. எங்கும் எதிலும் பச்சை நிறம் குடிகொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் ஆச்சரியமாக பார்த்தக்கொண்டே நடந்தான் கிறிஸ்டோ, எவ்வளவு நேரம் நடந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு நதிக்கரையை அடைந்திருந்தான். கால்கள் வலித்தன. ஓடும் நதியிலிருந்து தண்ணீரை கைகளால் மொண்டு குடித்தான். மிகவும் சோர்வாக இருந்தவன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தான். அந்த இடத்தின் அமைதியை ரசித்துக்கொண்டு கண்களை மூடினான். மூடியவுடன் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்படியே தூங்கிவிட்டான். காட்டின் அந்தப் பகுதியில் ஒலிகள் எதுவும் இல்லாததால்தான் அமைதி குடிக்கொண்டிருந்தது என்பதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு பத்தடி தூரத்தில் ஒரு ரைஃபில் இருந்ததையும் அவன் கவனிக்கவில்லை. அதன் அருகில் துண்டிக்கப்பட்டு கிடந்த காதும் அவன் பார்க்கவில்லை.

காலையில் சூரிய வெப்பம் முகத்தில் அடித்து அவனை எழுப்பியது. கண்ணைத் திறந்து பார்த்தான். அவனுக்கு முன் வெள்ளை நிற உடையில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.