(Mikhail Shishkin, and what life does to us என்ற தலைப்பில் Cynthia Haven எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு)
ஏறத்தாழ எப்போதும் நான் பல்வேறு காலக்கெடுக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பத்திரிக்கையைச் சுருட்டி என்மேல் ஒரு போடு போட்டால்தான் என் கவனத்தை நீங்கள் கவர முடியும். எனவே, டீப் வெலம் பதிப்பித்த “காலிகிராபி லெஸ்சன்– தொகுக்கப்பட்ட கதைகள்” என்ற மிகைல் ஷிஷ்கினின் அற்புதமான தொகுப்பைக் கொண்டு என் நண்பர் ஸ்காட் எஸ்பாஸிடோ ஒரு மாதிரியான உவமேய, சைபர்ஸ்பேஸ் வகையில் அதைச் செய்திருக்கிறார் என்று நான் நன்றி சொல்ல வேண்டும்.
“த டேக்கிங் ஆப் இஸ்மய்ல்” என்ற நூலுக்காக 2000ஆம் ஆண்டு புக்கர் பரிசும், “மெய்டன்ஹேர்” (ஒப்பன் லெட்டர், 2012) என்ற நூலுக்காக 2005 நேஷனல் பெஸ்ட்செல்லர் பரிசும் 2006 நேஷனல் “பிக்–புக்” பரிசும் வென்ற ஷிஷ்கினை மேற்கத்திய உலகில் முதல்முறை படிக்கும் கடைசி ஆள் நானாகத்தான் இருக்கிறேன் போலிருக்கிறது, தெரியும். அப்படி பார்த்தால், இப்போதும் எனக்கு ஷிஷ்கின் பற்றி தெரியாது, அவரது நாவல்களை நான் படித்ததில்லை. இந்தப் புதிய தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நினைவுக்குறிப்புகள், ஆய்வுகளில் சிறிதளவுதான் படிக்க முடிந்தது. இன்னும் சில காலக்கெடுக்களை நான் கடந்து செல்லும்வரை, தள்ளி வைக்கப்பட்ட என் சந்தோஷங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கப் போகிறது.
இன்றுள்ள பல ருஷ்ய எழுத்தாளர்கள் விஷயத்திலும் நடப்பது போலவே மேற்கத்திய பத்திரிகையாளர்கள் ஷிஷ்கினை ருஷ்யாவின் வாதைக்குட்பட்ட நிகழ்காலத்தின் மையத்தில் இருத்துகின்றனர். அவருடனான பேட்டிகளும் இலக்கியத்தைவிட செய்திகள் குறித்தே கேள்விகள் எழுப்புவதாக இருக்கின்றன. இத்தனைக்கும் ஷிஷ்கின் ருஷ்யாவிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஜூரிச்சில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் சுதந்திர ருஷ்யாவின் தரப்பை முன்வைப்பவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இர்னடாண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு கூறியது அதற்குச் சான்று:
“ருஷ்யாவில் புரட்சிக்கு முன்னும், புரட்சிக்குப் பின்னும், மிக அதிக அளவில் வாசிக்கப்பட்ட எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டவர்களாக இருந்தனர்– இவர்களின் புத்தகங்களை வாங்குவதும் விற்பதும் கடினமாக இருந்தது. ஆனால் இவை மிகவும் விரும்பிப் படிக்கப்பட்ட எழுத்து, எனவே எழுத்தின் ஆதர்ச நோக்கம் பொழுதுபோக்காக இருக்கவில்லை, விற்க வேண்டும் என்பதாக இருக்கவில்லை. எழுத்தாளருக்கே முக்கியமாக இருந்த சில கேள்விகளை எழுப்புவதே எழுத்தின் பொருளாக இருந்தது. அந்தப் புத்தகம் எந்த ஒரு வாசகரையும் சென்று சேராமல் போகலாம் என்ற புரிதலும் இருந்தது.
“ஆனால் இந்தக் கேள்விகள் எல்லாம் அனைவருக்கும் முக்கியமாக இருந்தவை. ஒரு சர்வாதிகார ஆட்சியில், அவமானகரமான சூழலில் எப்படி வாழ்வது, மனிதனுக்குரிய கௌரவத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது? இதுதான் கேள்விகள் அனைத்தினும் முக்கியமான கேள்வி. ஒவ்வொரு தலைமுறைக்கும் உரிய ருஷ்ய இலக்கியம் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளரும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டியிருந்தது. நாங்கள் மிகவம் வினோதமான தேசம். ஒவ்வொரு தலைமுறைக்கும் அதற்குரிய போரும் அதற்குரிய சர்வாதிகாரமும் தேவைப்படுகின்றன“.
“மேதைமை” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்ட் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஷிஷ்கினின் மொழி அற்புதமான வகையில் தெளிவும் கருக்கும் கொண்டிருக்கிறது. புராதானமானதாக இல்லாமல் அது தால்ஸ்தோய் மற்றும் தாஸ்தவெஸ்கியின் தலைகளுக்கு உயரே சென்று (இவர்களுக்கும் ருஷ்ய மொழிக்கும் இடையிலிருந்த உறவு அவ்வளவு சௌகரியமானதல்ல) புஷ்கினின் மரபைத் தொடுகிறது”
நான் இவர் பற்றி படித்திருந்த எதுவும் “காலிகிராபி லெஸ்சன்ஸ்“சின் தீவிர வேகத்துக்கு என்னைத் தயார் செய்திருக்கவில்லை. இருளுக்கு எதிரான கடைசி தீக்குச்சி போன்றது இதன் கவித்துவம். இவரது உரைநடை உயிர்ப்புடன் சுவாசிக்கிறது– சுவாசிப்பதில்லை, மூச்சிறைக்கிறது, சொற்கள் அழியக்கூடியவை என்பதை அறிந்திருக்கிறது, ஒவ்வொரு கணமும் சொற்கள் இறந்து கொண்டிருப்பதை அறிந்திருக்கிறது, நாமும் அவற்றோடு சாகிறோம்– நொடிக்கு நொடி நம் உயிர் பிடுங்கிச் செல்லப்படுகிறது (“நான் சுவாசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன், என் நுரையீரல்கள் உயிர் விழுங்கிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்“)
“ஹாப்–பெல்ட் ஓவர்கோட்” கதையில் அவர் தன் அம்மாவை நினைவுகூர்கிறார். அர்ப்பணிப்புணர்வு கொண்ட தலைமையாசிரியை, அவர் ஆந்த்ரபோவ் காலகட்டத்தில் கேவலப்படுத்தப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டு, நொறுங்கிப் போகிறார், அதன்பின் புற்றுநோயால் அங்குலம் அங்குலமாகச் சாகிறார். அவர் இறந்தபின் ஷிஷ்கின் அவரது பொருட்களிடையே வெகு காலத்துக்கு முந்தைய “சாதாரண பெண்ணின் நாட்குறிப்பு” ஒன்றைக் கண்டெடுக்கிறார்– ஸ்டாலின் ஆண்டுகளில் சோவியத் யூனியன் முழுமையையும் பீடித்திருந்த பயங்கரம் குறித்த தடயம் எதையும் அது அளிப்பதில்லை: “நீ கேட்பதற்கும் அதிகமாக வாழ்க்கை உனக்கு அளிக்கும் என்ற இளமையின் முட்டாள்தன தன்னம்பிக்கை கொப்பளிக்கும் அதன் பக்கங்கள்“. அவர் புலம் பெயரும்போது அந்த நாட்குறிப்பும் குடும்ப புகைப்படங்களும் மாஸ்கோவில் ஓரிடத்தில் பூட்டி வைக்கப்படுகின்றன; ஒரு நெருப்பில் சாம்பலாகின்றன, ஆனால் அவள் தனது இளமைக்கால நாட்குறிப்பில் விட்டுச் சென்ற ஆளுமை அவர் மனதில் தங்கி விடுகிறது: “ஒரு சிறை தேசத்தில் அவள் பிறந்தாள், இருளில் பிறந்தாள் என்றாலும்கூட அவள் வாழ்க்கையை ஒரு பரிசாய்ப் பார்த்தாள், அன்பால் தான் முழுமை பெறும் வாய்ப்பாய்க் கண்டாள், அன்பை அளிக்கவும், தன் ஆனந்தத்தை உலகோடு பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த வாய்ப்பாய்க் கொண்டாள்“.
“நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகம் வெம்மையற்றது, இருள் மிகுந்தது, ஆனால் அதனுள் ஒரு பெண் அருளப்பட்டிருக்கிறாள்– அவள் தன் அன்பு செலுத்தும் தேவையால் எங்கும் நிறைந்த மானுட இருளில் ஒரு மெழுகுவர்த்தி போல் ஒளி வீசட்டும் என்று“. உயிர்த்திரளில் உயிர் பிறப்பதன் பயனற்ற பணி இது: “தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத சிறுபிள்ளை இளம் பெண்ணின் வெகுளித்தனமான, மடமையல்ல இது, அருளியவனின், அருளிக் கொண்டிருப்பவனின், அதை நாம் எப்படிப்பட்ட நரகாய் மாற்றினாலும், பெண்களை இவ்வுலகுக்கு எப்போதும் அருளிக் கொண்டிருக்கப் போகிறவனின் ஞானம் இது,”.
ஆனால் எப்படிப்பட்ட நரகம் இது– சோவியத் யூனியனில் மட்டுமல்ல. இனவொழிப்பை நோக்கி வரிசை கட்டி நின்ற கோட்பாடுகளின் நூறாண்டு சென்ற நூற்றாண்டு. அமைதி நிறைந்த சுவிட்சர்லாந்தும்கூட தீவிரவாதச் சிந்தனைகளிலிருந்தும் கணக்கில்லா துயரங்களிலிருந்தும் அடைக்கலம் தருவதில்லை. “த பெல் டவர் ஆப் சான் மார்கோ” என்ற கதையில் ஷிஷ்கின், லிடியா கொசெட்கொவா என்ற ருஷ்ய புரட்சிப்பெண்ணின் கடிதங்களைப் பின்தொடர்கிறார். தன எதிர்கால கணவன், சுவிஸ் அரசின்மைவாதி பிரிட்ஸ் ப்ரூப்பாச்சருக்கு அவள் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டேயிருக்கிறாள்– யாரும் அறியாத வரலாற்றுச் சித்திரங்கள், ஆனால் வினோதமான வகையில் அனைவரையும் போன்றவர்கள்.
இந்தக் கடிதப் போக்குவரத்தின் எண்ணிக்கையைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆறாயிரம் கடிதங்கள் ஆம்ஸ்டர்டாம் நகரில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது சோவியத் யுக அம்மாவுக்கு இருந்த அதே அளவற்ற நன்னம்பிக்கையும் நல்முனைப்பும் சுவாசிக்கும் அதே சொற்களில்– சுகவீனத்துக்கு முன், உருக்குலைக்கும் ஏழ்மைக்கு முன், அரசியல் அவமானத்துக்கு முன்– லிடியா தன் புதுக்காதலின் துவக்கத்தில் 1898ஆம் ஆண்டு எழுதுகிறாள்: “வளம் நிறைந்தவர்களாய் பல்கிப் பெருகுங்கள்“. நமக்கு அளிக்கப்பட்டது இவ்வளவுதானா? ஏன், எலிகளும் கோச்சின் நுண்ணுயிரிகளும்கூட இந்த உத்தரவை மதிக்கின்றன. ஆனால் மனிதன் அவனது புறவுடலைக் காட்டிலும் எண்ணிலடங்கா வகையில் மேன்மையானவன். என் அத்தனையையும், என் அறியப்படாத திறன்கள் அனைத்தையும், மானுடத்துக்கும், என் மக்களுக்கும், என் தேசத்துக்கும் தேவையான, முக்கியமான ஏதோவொன்றைச் சாதிக்கும் என் ஏக்கத்தை நீ எப்படி குறைத்து மதிப்பிட முடியும்– நான் இனவிருத்திக்கு என்று?”.
மணமுறிவுக்குப்பின் அவர் தொடர்ந்து கடிதம் மேல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார், எதற்கும் பதில் வரவில்லை. அவரது மரணம் பற்றி எதுவும் தெரியவில்லை, 1915ஆம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. தனிமையில், அன்னியப்படுத்தப்பட்டு, குடும்பத்தாராலும் நண்பர்களாலும் கைவிடப்பட்ட அவரது கடைசி எழுத்து ஒரு ஊமை அலறலாய் ஒலித்தது. நம்மில் பலரும் அதை வாழ்வின் முடிவில் எதிர்கொள்வோம். இன்னும் ஒரே ஒரு மணி நேரம் கொடு என்ற டெஸ்டிமோனாவின் பரிதவிப்பைப் போன்ற இழப்பின் துடிதுடிப்பு கொண்டது அது “அன்பே! நான் எல்லாவற்றையும்விட எதற்காக மிகவும் வருந்துகிறேன் தெரியுமா? என் அன்பின் முழுமையையும் உனக்கு என்னால் அளித்திருக்க முடியும், ஆனால் வலியைத் தவிர வேறெதுவும் உனக்கு நான் கொடுக்கவில்லை. உன்னால் முடியுமானால், என்னை மன்னித்துவிடு. என் வாழ்வின் உயர்ந்த நோக்கம் இதுதான் என்று எண்ணும்போது என் இதயம் உரக்க ஓலமிடுகிறது– நான் உனக்கு அன்பும் பாசமும் அளித்திருக்க வேண்டும், ஆனால் மாறாய், மாயத் தோற்றங்களின் மயக்கத்தில் பயனற்ற என் வாழ்வை பாழாக்கிக் கொண்டேன்“.
நன்றி – Bookhaven.stanford.edu