Literary Orphans என்ற தளத்தில் Dawn S. Davies எழுதியுள்ள Pankin என்ற சிறுகதையின் தமிழாக்கம்-
முதலில் எதுவுமில்லை. திட்டங்கள் இல்லை, செயல் இல்லை. சிந்தனை இல்லை. அப்புறம் ஒரு நாள் ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. அது அடங்கிய தொனியில் இருக்கிறது, அது சலசலக்கிறது. வாழ்க்கை திடீரென்று வெம்மையாகவும் எளிமையாகவுமாகிறது. நீ வெளியே போகிறாய். உன் நுரையீரல்கள் கிழிந்து திறந்து கொள்கின்றன. உனக்கு வலிக்கிறது. நீ அலறுகிறாய். நீ தனித்திருக்கும் பெருவெளி உன்னை அச்சுறுத்துகிறது. வெளிச்சம் சுடுகிறது. உன் அம்மா உன்னைத் தன் கைகளில் ஏந்துகிறாள், உன்னை கதகதப்பாக வைத்துக் கொள்கிறாள். நீ அமைதியடைந்து மௌனமாகும்போது உன் அப்பா உன்னைப் பெற்றுக் கொள்கிறார். உன் கண்களைப் பார்த்து, உன்னைத் தன் பன்கின் என்று அழைக்கிறார். அவர்கள் உன்னைப் போர்த்துகிறார்கள், உனக்கு உணவு அளிக்கிறார்கள், உன்னை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறார்கள். ஒரு மரப்பெட்டியில் உன் தொப்புள் கொடியின் தண்டுப்பகுதியைப் பத்திரப்படுத்துகிறார்கள். நீ அவர்களின் செல்வம். நீ தூங்கி எழுந்திருக்கிறாய். மீண்டும் தூங்குகிறாய். பின்னர் மீண்டும் எழுந்திருக்கிறாய். அங்கேயே கிடக்கிறாய், பாருக்குப் பின்னால், தரையில், நீ நெளிந்து கொண்டிருக்கிறாய். நீ தள்ளுக்கிறாய், பாடுபடுகிறாய். ஆனால் உன் கண்களில் படுவதெல்லாம் தரையில் விழும் சூரியக் கோலம்தான், அல்லது இறுக்கிப் பிடிக்கும் உன் கைவிரல்கள். நீ ஊளையிடுகிறாய். தரையை அழுத்தி எழுந்து நிற்கிறாய். தடுமாறி விழும் உன்னை உன் அம்மா வெளியே அழைத்துச் செல்கிறாள். உன் முதல் காலடிகள் வெம்மையான கோடைக்காலச் சேற்றில், சாணத்தின் இனிய மணம் வீசும் கொட்டகைக்கு. அங்கு நீ மங்கலான வெளிச்சத்தில் உன் அப்பா குனிந்திருப்பதைப் பார்க்கிறாய். அவர் தன் மாடுகளை நோக்கிக் காதல் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார். அம்மாவை இடித்துக் கொண்டு தோட்டத்தை நோக்கிக் கடந்து செல்லும்போது அவள் புட்டத்தில் மெல்லத் தட்டுகிறார். உன் சிரிப்பொலி கேட்டதும் உன் அம்மா தன் கையை எடுத்துக் கொள்கிறாள். நீ சாப்பிடுகிறாய், வளர்கிறாய், விளையாடுகிறாய். மரங்கள் உன் தேவதைகள்; மண் உனக்குக் களி, கோழிக்குஞ்சுகள் உன் சகோதரிகள். நீ ஓடுகிறாய், தாவுகிறாய். நீ காற்றில் சுழல்கிறாய். நீ சிரிக்கிறாய். நீ சோகத்தில் அழுகிறாய். நீ ரத்தம் சிந்துகிறாய். உன் அம்மாவின் எடை கூடுகிறது, அவள் மெத்தென்று இருக்கிறாள், முட்டாள் போலிருக்கிறாள். உன் அப்பாவின் பற்கள் ஒழுங்கற்று இருக்கின்றன. அதைச் சொல்ல நீ முயற்சி செய்கிறாய். பன்கின் என்ற வார்த்தையைக் கேட்கும்போதே உன் வாய் கோணிக் கொள்கிறது. கோழிக்குஞ்சுகள் நாற்றமடிக்க ஆர்மபிக்கின்ர்ண. நகரின் இருண்ட, சோகை விளக்குகம் உன் பெயரைச் சொல்லி அழைக்கின்றன. எனவே உன் அப்பாவின் பழைய பையில் உன் துணிகளை எடுத்துக் கொண்டு இருட்டு வேளையில் வெளியேறுகிறாய். சேறு உன் காலணிகளைப் பின்னோக்கி இழுக்கிறது, காலையின் உன் பெற்றோர் பார்ப்பதற்கான வழித்தடத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆடம்பரமான ஏதாவது வேண்டும் என்று ஏங்குகிறாய், பகட்டான, பளபளக்கும் ஏதாவது வேண்டும். அதை நீ புதிய ஒரு மந்தையின் மத்தியில் காண்கிறாய். ஒரு துடிப்பை உணர்கிறே, ஆசையின் ஒரு வலிப்பையும் உணர்கிறாய், அதனால் உன் தொண்டை இறுகுகிறது. இருட்டில் ஆடும் கும்பலில் நுழைகிறாய், இப்போது நீ யாருடைய பன்கினும் அல்ல. நீ காட், அல்லது கிட், அல்லது ஜோ-ஜோ அல்லது பிராங்கி ஆகிறாய். கவனமாக உன் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாய். புதிய கோழிக்குஞ்சுக் கூட்டத்துக்கு உன் களங்கமற்ற, தெளிவான சருமத்தைத் திறந்து கொடுக்கிறாய். அவை உன் முகங்களைக் கொத்துகின்றன, உன் கண்களை, உன் மார்களை. ஆனால் அவை உன்னை ஏற்றுக்கொள்கின்றன, தம் கூட்டத்தின் உன்னையும் சேர்த்துக் கொள்கின்றன. நீ தூங்கி எழுந்திருக்கிராய். மீண்டும் தூங்குகிறாய். முதல்முறை நீ ஒரு அந்நியனுடன் எழுந்திருக்கும்போது நீ விட்டுச் சென்றதில் ஒரு நற்றண்மை இருப்பதை உணரத் துவங்குகிறாய். உனக்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் நீ மறுபடியும் அதைச் செய்கிறாய். அப்புறம் மறுபடியும். காலம் போகிறது, ஆனால் உன்னால் நிறுத்த முடியவில்லை. உன் நிலை முன்னைவிட மோசம், இது உனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்போதும், உன்னில் ஒரு பகுதி வீடு திரும்ப விரும்பும்போதும் நீ திரும்பிப் போவதில்லை. எப்படிப் போவது என்பதை நீ மறந்து விட்டாய். அது எங்கிருக்கிறது என்பதுகூட உனக்குத் தெரியாது.