அமேஸான் காடுகளிலிருந்து – மித்யா

மித்யா 

10- இன வெறி

கீழே விழுந்த கிறிஸ்டோவும் அந்த அற்புத ஒளியைப் பார்த்தான். காட்டுவாசிகள் அதைக் கண்டு மண்டியிட்டனர். பின்னர் எழுந்து கோஷம் எழுப்பினார்கள். எல்லோரும் இந்த நிகழ்வின் மகத்துவம் அறிந்திருந்தார்கள். அவர்கள் ஆரவாரம் செய்வதைக் கேட்கும்போதே எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரிந்துவிடும்.

ஆனால் கிறிஸ்டோ சந்தோஷமாக இல்லை. அவனுக்கு காய்ச்சல் எடுத்தது. இரண்டு நாட்களுக்கு அவனால் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. ஆலிஸ் அவன் குடிசைக்கு வந்தாள். அங்கேயே தங்க ஆரம்பித்தாள். அவனுக்கு சேவைகள் செய்தாள். பார்த்த நாளிலிருந்து கிறிஸ்டோவுக்கு அவள் மேல் காதல் இருந்தது. இப்பொழுது அது வலுத்தது. இந்தச் சில நாட்களின் தனிமையும் நெருக்கமும் கூடி ஆலிஸ்சுக்கும் அவன் மேல் காதல் பிறந்தது. அவன் உடல்நிலை சரியான பிறகும் ஆலிஸ் அவனுடனே தங்கி இருந்தாள். இருவரும் கூடித் திளைத்திருந்தனர்.

அவர்கள் சந்தோஷமாக இருந்தபோதிலும் இருவருக்குள்ளும் காடு புகுந்துவிட்டிருந்தது. எப்படியாவது அந்தக காட்டை ஜெயித்தாக வேண்டும் என்ற தீவிர வெறி அவர்களுக்குள் குடிகொண்டது. அவர்கள் பேச்சில் ஏமாற்றம் வெளிப்பட்டது.

“நாம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டோம். ஆனால் அஞ்ஞானம் மிக்க இந்த காட்டுவாசியையும், ஆணவம் கொண்ட அந்த இந்தியனையும் வெளிகிரக மனிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர். விஞ்ஞானம் தழைத்தோங்கும் ஐரோப்யாவிலிருந்து வந்த என்னை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்து வெளியே தள்ளிவிட்டனர். அவர்கள் நம்மைவிட விஞ்ஞானத்தில் சிறந்தவர்களாக இருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள். நாம் எப்படியாவது காட்டுக்குள் சென்று அங்கிருக்கும் வெளிகிரகத்து மனிதனைச் சிறை பிடிக்க வேண்டும். நாம் யார் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,” என்று கிறிஸ்டோ ஆலிஸ்சிடம் கூறினான்.

“நானும் வேட்டைக்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் என்னைவிட என் குரு உயர்ந்த மனிதராகத் தெரியவில்லை. ஏதோ நான் இன்னும் தயாராகவில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றார். இவர்களுக்கு நாம் கொடுக்கும் இடம்தான் ஏதோ நம்மைவிட மேலானவர்கள் என்று இவர்களை நினைத்துக் கொள்ளச் செய்கிறது. நம் நாட்டு மனிதர்கள் இவர்களை அடக்கி ஆளுவதே சரி என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது,” என்றாள் ஆலிஸ்.

இருவரும் துப்பாக்கிகளையும், வெடிமருந்தையும், வில் மற்றும் விஷம் தோய்த்த அம்புகளையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்வது என்று முடிவு செய்தனர். அடுத்த நாள் மதியம் புறப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன.

இவர்கள் காட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்று அறிந்த காட்டுவாசிகளின் தலைவன் இவர்களைத் தடுக்க முயன்றான். “எதற்கு இந்த விளையாட்டு? இதற்கு முன் சென்ற இருவர் என்ன ஆனார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? இந்தக் காட்டை நேசியுங்கள். அங்கு சென்று அதை அழிக்கப் பார்த்து உயிர் விடாதீர்கள். உங்களை மீறிய சக்தி அது. நான் பல வருடங்களாக இங்கிருப்பவன். பல வீரர்களைப் பார்த்திருக்கிறேன். பல கோரச் சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதைப் போல் எதையும் நான் பார்த்ததில்லை. நீங்கள் அங்கே சென்று அந்த சக்தியை அழிப்பதற்கு பதிலாக உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை அவர்கள் உலகுக்கு அழைத்துச் செல்வார்கள்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

இதைக் கேட்ட கிறிஸ்டோ சிந்தனையில் ஆழ்ந்தான். “அவர் சொல்வது சரியாக இருக்கும் போல் படுகிறது. நாம் இந்த முயற்சியை கைவிட்டுவிடலாம்” என்றான்.

ஆனால் ஆலிஸ்சுக்குள் இனவெறி தீவிரமாக இறங்கியிருந்தது. “இந்த காட்டுமிராண்டி ஜனங்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்? நீ வருவதென்றால் என்னுடன் வா. இல்லையென்றால் நான் தனியாகச் செல்கிறேன். அந்த இந்தியன் சாதித்ததைவிட நான் அதிகம் சாதிப்பேன். வேற்று கிரக மனிதனை பிடித்துக் கொண்டு வருவதுதான் என் லட்சியம். அதை யாரும் தடுக்க முடியாது,” என்று கோபமாகச் சொன்னாள் அவள்.

அவளை இனி தடுக்க முடியாது என்று புரிந்து கொண்ட கிறிஸ்டோ, “சரி நானும் வருகிறேன்” என்றான்.

இருவரும் எல்லா ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். காட்டுவாசிகளின் தலைவன் சோகமான முகத்துடன் அவர்களைப் பார்த்தான், ஆனால் ஒன்றும் கூறவில்லை. முதியவர் ஒருவர் மட்டும் கிறிஸ்டோவைப் பார்த்து, “விதி வலியது என்று அந்த இந்தியன் சொல்லுவான். உனக்கு அது பெண் ரூபத்தில் வந்திருக்கிறது” என்றார்.

அது காதில் விழாதது போல் கிறிஸ்டோ நடந்து சென்றான். ஆலிஸ்சும் அவனும் காட்டுக்குள் நுழைந்தனர். அடர்த்தியான காடு கதிரொளியைத் தடுத்து இருட்போர்வை போர்த்திருந்தது. காடு முழுவதும் மங்கலான ஒளியே பரவியிருந்தது. எப்பொழுதும் போல் பூச்சிகள், பறவைகள், மிருகங்கள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. சிறிது தூரம் நடந்தபின் நதிக்கரைக்கு வந்தனர்.

“இங்குதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததா?” என்று ஆலிஸ் கிறிஸ்டோவைப் பார்த்து கேட்டாள்.

“இல்லை. அதற்கு இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டும். அந்த இடத்தில் விவரிக்க முடியாத நிசப்தம் குடிகொண்டிருக்கும். இங்கு நமக்கு எந்த பயமும் இல்லை” என்றான்.

நிகழப் போகும் பயங்கரம் பற்றி அவன் தெரிந்திருக்கவில்லை.

“இந்த நதிக்கரையில் சற்று இளைப்பாறலாம்” என்று சொல்லிவிட்டு நதியை நோக்கி செல்லப் போனாள் ஆலிஸ். ஆனால் அதற்குள் அவளை மரக்கிளையில் ஊஞ்சலாடிக் கொண்டு தாவித் தாவி வந்த மனிதக்குரங்கு ஒன்று அலேக்காகத் தூக்கியது.

“கிறிஸ்டோ” என்று உரக்க கத்திய ஆலிஸின் குரல் கேட்டு மேலே பார்த்தான் கிறிஸ்டோ. துப்பாக்கியை கையில் எடுத்து மனிதக்குரங்கைச் சுட குறி பார்த்தபோது அந்தக் குரங்கு ஆலிசைத் தூக்கி மேலே வீசியது.

“ஐயோ” என்று ஆலிஸ் கதறினாள். அவள் கீழே விழுந்துவிடுவாள் என்று கிறிஸ்டோ நினைத்திருந்தபோது வேறொரு மனிதக்குரங்கு இன்னொரு கிளையிலிருந்து தொங்கிக்கொண்டு வந்து அவளைப் பிடித்தது. அவள் பிடித்த குரங்கு கையில் வைத்திருக்கவில்லை, மறுபடியும் அவளைத் தூக்கி வீசியது. இப்படி நான்கு குரங்குகள் செய்தன. என்ன செய்வது என்று தெரியாத கிறிஸ்டோ குருட்டாம்போக்கில் சுட ஆரம்பித்தான். ஐந்தாவது குரங்கு ஆலிசை நதிக்குள் வீசியது.

கிறிஸ்டோ நதியை நோக்கி ஓடினான். ஆலிஸ் மேலே பறந்து நதியை நோக்கி விழுந்து கொண்டிருந்தாள். அவள் குரல் இப்பொழுது உச்ச ஸ்தாயியில் கதறியது. அவள் நதிக்குள் விழ இருக்கும்பொழுது நான்கு முதலைகள் வாயைத் திறந்து வைத்தபடி தண்ணீருக்குள்ளிருந்து வெளிவருவதை கிறிஸ்டோ பார்த்தான். கீழே விழுந்த ஆலிஸ்சை நான்கு முதலைகளும் கவ்விக்கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இழுத்தன. காட்டைத் தாண்டி நாட்டைத் தாண்டி விண்வெளி மனிதர்களுக்கும் கேட்கும் அளவு பெரிய ஓலம் ஆலிஸ்சிடமிருந்து எழுந்தது.

துப்பாக்கியை எடுத்து முதலைகளைப் பார்த்துச் சுட ஆரம்பித்தான் கிறிஸ்டோ. ஆனால் அதற்குள் முதலைகள் தண்ணீரில் மூழ்கிவிட்டிருந்தன. சற்று நேரத்தில் நதியில் ஒரு இடம் மட்டும் சிவப்பானது. ஓடும் நதி மெதுவாக அதை அடித்துச் சென்றது. சற்று நேரத்துக்குப் பிறகு நதி சுத்தமாகக் காணப்பட்டது. அலறல் நின்றபிறகு காடு நிசப்தமானது.

காட்டுவாசிகள், ஒரு கையால் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு, இன்னொரு கையால் கிறிஸ்டோவை தங்கள் பக்கம் வீசிய மனிதக்குரங்கைக் கண்டு திடுக்கிட்டனர்.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.