(Wordriot என்ற தளத்தில் Emil Ostrovski எழுதிய “His Vase is a Metaphor for Our Relationship” என்ற குறுங்கதையின் தமிழாக்கம்)
நாங்கள் ஒரு மாதம் போல் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அவன் ஒரு பூந்தொட்டியை வீட்டுக்கு கொண்டு வருகிறான். எனக்கு அந்தப் பூந்தொட்டி பிடித்திருக்கிறதா என்று கேட்கிறான். “தெரியவில்லை,” என்று சொல்கிறேன்.
“தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? இது ஒரு பூந்தொட்டி”
“இது பூந்தொட்டி என்று எனக்குத் தெரியும்”.
“உனக்கு பூந்தொட்டிகளைப் பிடிக்காதா? உனக்குப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… இது.- இது உன்னை எனக்கு நினைவுபடுத்தியது…”
ஒரு பூந்தொட்டி ஏன் அவனுக்கு என்னை நினைவுபடுத்த வேண்டும் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. எனவே, “யோசித்துக் கொண்டிருக்கிறேன், என்னைக் கட்டாயப்படுத்தாதே,” என்று சொன்னேன்.
நான் அந்தப் பூந்தொட்டியைப் பற்றி நிறையவே யோசித்து விட்டேன். இந்தப் பூந்தொட்டி ஒரு கதையாக இருந்தால், நிச்சயம் என் நண்பனைப் பற்றிய என் உணர்வுகளுக்கும், நாங்கள் இருவரும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தின் சாத்தியத்துக்குமான படிமமாக இருந்திருக்கும். ஒரு வேளை நாங்கள் இந்தப் பூந்தொட்டியைக் கீழே போட்டால் அது துண்டுதுண்டாகச் சிதறிப் போகலாம்; அப்போது அது எங்கள் உறவு முறிவதன் குறியீடாக இருக்கும், ஆனால் நான் சிந்தனையில் அவ்வகையினள் அல்ல. பூந்தொட்டியைப் பற்றிய என் உணர்வுகள் பூந்தொட்டியோடு முடிகின்றன என்று நினைக்கிறேன், வேண்டுமானால் பூந்தொட்டிகளைப் பற்றிய பொது உணர்வு இருக்கலாம். குறிப்பாக, நான் என் கண்ணில் படும் விஷயங்களை\ உள்வாங்கிக் கொள்பவள் அல்ல, இது எனக்கு கவலையாகதான் இருக்கிறது, ஏனென்றால் நான் இந்தப் பூந்தொட்டியைப் பார்க்கும்போது பூந்தொடியை மட்டுமே பார்க்கிறேன், இது நீலமாக இருப்பதைப் பார்க்கிறேன், நீலம் குறித்து என் எண்ணவோட்டங்கள் நேர்த்தன்மை கொண்டவையல்ல. உதாரணத்துக்கு, நீலம் என்ற சொல்லோடு நான் வானத்தையும் கடலையும் தொடர்புறுத்திப் பார்க்கிறேன். இவை மிக உயர்ந்த, மகத்தான எண்ணப் பிணைப்புகள், ஆனால் வானத்திலிருந்து விழுந்து கடலில் மூழ்குவது என்ற விஷயமும் உண்டு. ஒவ்வொரு முறை சமையலறைக்குள் நுழையும்போதும் நான் என் எண்ணங்களின் இந்தத் தொடர்பு தென்படுவதை வரவேற்பவள் அல்ல. ஆக, பூந்தொட்டி குறித்த என் எண்ணவோட்டங்கள் நேர்த்தன்மை கொண்டவையல்ல. ஆனால் நான் இந்தப் பூந்தொட்டியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறேன், அல்லது, அதைவிட, பூந்தொட்டிகளை உறவுகளுக்கான படிமங்களாகப் பார்க்கக்கூடிய வகைப்பட்டவர்களுக்கு பூந்தொட்டி எவ்வளவு முக்கியமாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஒருவேளை பூந்தொட்டியை நிராகரிப்பது என்பது அவனது மானுடம் அனைத்தையும் கொடூரமாக நிராகரிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்களின் வகைபாட்டுக்குரிய மனிதனாக என் நண்பனும் இருப்பானோ என்று கவலைப்படுகிறேன் எனவே அடுத்த நாள் கலை, அவன் தன் பேகலில் க்ரீம் சீஸைத் தடவிக் கொண்டிருக்கும்போது, “நான் அந்தப் பூந்தொட்டியைப் பற்றி யோசித்துப் பார்த்தேன்,” என்று சொல்கிறேன்.
அவன் என்னை நோக்கித் திரும்பி, “ஓ?” என்கிறான்.
“ஆமாம், நான் அந்தப் பூந்தொட்டியைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அது எனக்கு வானத்தை நினைவுபடுத்துகிறது”
அதற்கும் அவன், “ஓ,” என்றுதான் சொல்கிறான். அப்புறம், “வானம்,” என்று சொல்கிறான். அப்புறம், “அதைப் பார்த்ததும் எனக்கு உன் ஞாபகம் வந்தது. ஏனென்றால் இஸ்ரேலில் நடந்த கதையை நீ சொல்லியிருக்கிறாய். அங்கிருந்து வரும்போது உன் அம்மாவுக்கு வாங்கிக் கொடுக்க ஒரு நினைவுப் பரிசைத் தேடிக் கொண்டிருக்கும்போது அதைப் பார்த்தாய், அந்தச் சின்னப் பூந்தொட்டி உன் சாமான்களுடன் எடுத்துச் செல்லச் சரியாக இருக்கும் என்று நினைத்தாய், ஆனால் உன் அம்மா அது ஒரு கோப்பை என்று நினைத்தாள். அது வேடிக்கையான சம்பவம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு, அவள் பூந்தொட்டியில் அருந்தினாள் என்பது சிரிப்பாக இருக்கிறது. அதனால்தான் அது உன்னை நினைவுபடுத்தியது”.
“ஆமாம், ஆனால் இந்தப் பூந்தொட்டி சின்னதாகக்கூட இல்லை. இது நடுத்தர அளவுள்ள பூந்தொட்டி. அதாவது, வழக்கமான பூந்தொட்டியின் அளவுதான். இதை யாரும் கோப்பை என்று தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இது பூந்தொட்டி மாதிரிதான் இருக்கும். எனக்கு இது பூந்தொட்டி மாதிரிதான் இருக்கிறது”.
“அப்படியானால் இது உனக்குப் பிடிக்கவில்லையா?”
“இல்லை. எனக்கு இதைப் பிடித்திருக்கிறது. ஆனால் இதைப் பார்க்கும்போது எனக்கு கடல் ஞாபகம்தான் வருகிறது”
“அதைப் பார்த்தால் உனக்கு வானம்தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று நினைத்தேன்:”
அப்போதுதான் எனக்குப் புரிந்தது, பூந்தொட்டிகளை உறவின் படிமமாகப் பார்க்கும் வகையினள் நான் என்பது..
நன்றி- Wordriot
குருங்கதை? குருகுருக்கிறது
🙂
இப்ப திறுத்திட்டோமில்ல! 🙂