பல்லில்லாத பாடகி
பொக்கை வாய் திறந்து
பற்ற வைக்கிறாள் நெருப்பை.
குரல்வளையின்
நரம்பு முடிச்சுகளில் மின்சாரம்.
அவளின்
பாதி கருகிய நாவில்
பறந்து வருகின்றன
தீப்பொறிகள்
தானாகவே
இயைந்து கொள்கிறது முகம்.
சூரியன் சுட்டெரித்ததில்
மேலும் கருகிய கருந்தோல்
முகத்தில் நீலம் பாரிக்க
கஞ்சிராவை அறைந்து அடிக்கிறான்
வாசிப்பவன்.
சற்றும்
சுருதியற்ற தாபத்துடன்
பாடலில் இணைந்து கொள்கிறான்
அம்மைத்தழும்புகள் நிறைந்த
ஒன்று விட்ட சகோதரன்.
தந்தி கொண்ட கருவியின்மீது
மேலும் கீழுமாய் கரகரத்து
கவனமில்லாமல்
எதிரொலிக்கிறது பாட்டு.
இசை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்,
கடவுளின் சொந்தக் குழந்தைகள்.
இதைப்போன்ற ஒரு
புனிதகேளிக்கையை –
தன் வீட்டில் வைத்து
ஏற்பாடு செய்யுமளவுக்கு
நல்லவரான பூசாரியிடம்
பேச்சுக்கொடுத்து,
பாடியவர்கள்
நீலக்குதிரை என்றார்களே,
உங்கள் சுவரில்
இருக்கும் படத்தில்
குதிரை வெள்ளையாக இருப்பது
எங்ஙனம்? என்றால்,
வாயின்
இடமிருந்து வலதுக்கு
பாக்குத்துண்டை
மாற்றிக்கொண்டு.
எனக்கு நீலமாகத்தான் தெரிகிறது
என்கிறார் பூசாரி.
புகழ்பெற்ற ஓவியர்
வரைய விரும்பும்
நீல வண்ணத்தின் ஒருநிறத்தை,
புனிதவிலங்கின்
வெள்ளை நிற
அடிவயிற்றில்,
பாக்குவெட்டியால்
தொட்டுக்காட்டி..
கஞ்சிரா
தன் நெஞ்சில்
அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.
oOo
(“The Blue Horse” என்ற அருண் கொலாட்கர் கவிதை தமிழாக்கம்)
ஒளிப்பட உதவி – விக்கிமீடியா
cannot understand. I am dense. pl explain. Bala
சற்று அவகாசம் கொடுங்க ஸார், முயற்சிக்கிறோம்