(சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, எழுதியவர் முகவரி vedhaa@gmail.com)
மணலை வாரி இறைத்தபடி போருக்கான ஓலத்துடன் வெகு வேகமாக பாலையைக் காற்று கடந்துகொண்டிருந்தது. ஒழுங்கற்ற வட்டமாய் வேலியிடப்பட்ட மந்தையில் அரைக்கண் மூடி இன்னும் எத்தனை தூரமென்ற ஆழ்ந்த சிந்தனையில் நின்றபடியும், கால் மடக்கி மணலை அழுத்தியபடியும் கிடந்தன ஆடுகள். அதன் தடித்த மயிர்களுக்கிடையே மணல் செருகிக்கிடந்தது. ஆழ்ந்து ஊன்றப்பட்ட கோலுக்கும் காலுக்குமான கயிற்றைச் சட்டை செய்யாத கழுதைகள் மெல்லிய உடலசைவுடன் அரையுறக்கம் கொண்டன. பாம்பூர்ந்த தடத்தை கடந்த தேளொன்று மணல்பெருக்கிய நடையுடன் வரும் தியாசைக் கண்டதும் சட்டென தன்னை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது. ஆங்காங்கே பொருத்தப்பட்ட நெருப்புகள் பல அணைந்து கங்குகளாய் கனன்றன. மற்றவை காற்றுடன் உத்வேகமாய்ச் சண்டையிட்டு சடசடத்தன.
தரையில் பாவாமல் பாவி, பின் அந்தரத்தில் சுழன்றாடும் மணற்புயலின் இரவொன்றில் யனோவா சன்னதம் கொண்டான். ஜெஹோவாவின் மொழியில் கதறியபடி பித்லாஹ்மியின் தெருக்களில் அலைந்தான். மக்கள் காற்றில் தள்ளாடியபடி முகம் மறைத்து, கண்கள் சுருக்கி அவனை தொடர்ந்தனர். வற்றிய பெண் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியபடி தெருக்களைப் பார்த்தனர். கூடத்தை அடைந்த கிழவன் பலிமேடை பற்றி மூச்சிரைத்தான். மண் படர்ந்த உதடு பிரித்து ஓலமிட்டான். திசைகளில் கிழக்கை அவன் கண்கள் பற்றின. கைகளும் அதையே சுட்டின. வெயிலூறிய பகலொன்றில் இரைக்கான ஆடுகளோடும், பொதிக்கான கழுதைகளோடும் பெருங்கூட்டமாய் கிளம்பினர் மக்கள். பல சூர்யோதங்களை கடந்தபின், இயற்கையால் உறிஞ்சப்பட்டவர்கள் தவிர எஞ்சியோர் இதோ இப்பாலையில் கிடந்தனர்.
பெருந்துயர் போர்த்திய அக்கூட்டத்தில் எவருக்கும் விழித்திருக்க வலிமையில்லை. உடல்கள் தெரியாவண்ணம் அவர்கள் மேல் கவிந்திருந்த கம்பளி கிழிசலுக்குள்ளே தட்டுத் தடுமாறி வழியறிந்து நுழைந்து கொண்டிருந்தது குளிர். அழத்திராணியற்ற குழந்தைகள் மரணித்ததைப்போல் தூங்குகின்ற இரவிது. பெரும் மணற்பரப்பை கடக்கத் துணிந்த மக்களுக்கு இத்தகைய இரவு பகல் இன்னும் முழுதும் பழக்கப்படவில்லை. சுடும்பகலில் விழிக்காதவர்கள் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டு மறக்கப்பட்டனர்.
மாசா தன் உடல் முழுதும் மறைக்காத கம்பளிக்கு பணிந்து, அதற்குள் தன்னை குறுக்கிக்கொண்டாள். குளிரில் விரைத்த அவளின் முலைக்காம்புகளும், பாதங்களும், மணல் கடந்து மரமொதுங்கும் அவளின் கனவுகளுக்குள் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டன.
தியாஸ் தனக்கு வணங்காத கால்களை இழுத்து இழுத்து அக்கூட்டத்தை நெருங்கினான். வீங்கிய அவன் உதடுகள் குளிரில் மரத்துப்போனாலும் கடுத்தது. அவனின் அழுக்கு தோய்ந்த கருப்பு உடையின் உள்ளே, உறுப்புகள் மீது வலிகள் தெறித்தன. கண்ணில் தெறிக்கும் மணலை கைகளில் தடுத்தபடி, அலங்கோலமாய் ஆங்காங்கே குவிந்திருக்கும் கம்பளிகளை கண்டான். கண்ணீர் இளஞ்சூடாய் விழிகளை நிரப்பியது. நீர் முழுதும் வற்றிய உடலில் எங்ஙனம் புதிதாய் ஊற்று பிறக்கிறது என்ற ஐயம் அவனுக்கு இருந்தது. அவன் தொண்டையில் எழுந்த கேவல்களை பல்லடைத்து அடக்கிக்கொண்டான். கட்டித்துக்கிடந்த அவன் தலைமயிர்க்கடியிலும், கீழ்தாடையிலும் ரத்தத்துடன் வலி உறைந்து நின்றது.
மணல் தேய்த்து நடந்தபடி நெருப்பருகே சென்றான். புனல் வாய் போன்ற இரும்பு குடுவையில் சுள்ளிகள் எரிந்தன. அதை தன் இளைத்த கைகள் கொண்டு எடுத்தான். தீ வெடித்துச் சிதறி காற்றுடன் நகர்ந்து காணாமலாயின. கறுத்திருண்ட பெரும் மேகங்களாய் கிளம்பிய கூட்டம் சில காலங்களில் சிறுத்துப் போனது, அவனுக்கு மாசாவை கண்டறிய உதவியாய் இருக்க கூடும். நெருப்பை இடவலது திருப்பி, உற்றுப் பார்த்தபடி கூட்டத்தில் புகுந்தான்.
உப்பி சுருண்டிருந்த பசோக்காவின் கம்பளியை அடையாளம் கண்டான். சாம்பல் நிறத்தில் கறுப்பு கோடிட்ட நிறத்தில் இருந்த அழகிய கம்பளி இப்பொழுது வெளிறி நைந்திருந்த்து. முன்பு ஒரு குளிர்காலத்தில் பசோக்காவின் வீட்டிலிருந்து அக்கம்பளியை எடுத்துக்கொண்டு வெளிவரும் போது பசோக்கா வாசலுக்கு வந்துவிட்டிருந்தான். கம்பளியை கீழே வைத்துவிட்டு அதிரும் இதயத்துடன் மெல்ல அவனை கடக்கையில் பசோக்காவின் நுரை பொங்கும் எச்சில் தியாசின் காதில் சொத்தென விழுந்தது. திரும்பாமல் நடந்த தியாஸ் அந்த எச்சிலை அவனை விட்டு மறையும் வரை துடைக்காமல் இருந்தான். பசோக்கா இத்திருட்டை பற்றி யனோவாவிடம் முறையிடாமல் தன்வீட்டுப்பொருட்களை தியாசிடமிருந்து காத்துக்கொண்டான். இப்பொழுது அந்த கம்பளிக்குள் குழந்தையின் அசைவைக் கண்டான் தியாஸ். அக்கம்பளி பசோக்காவையும், அப்பெண் குழந்தையையும் மட்டுமே உள்ளடக்க முடியும். அவன் அருகில் யாரும் சுருண்டிருக்கவில்லை. அவன் மனைவி இரக்கமுள்ளவள்.
தியாஸ் குறுக்கும் நெடுக்குமாக காலை இழுத்துக்கொண்டு அலைந்தான். கண்ணீர் முற்றிப்பெருக மனம் வெகுவாய் அடைத்துக்கொண்டது. தவிட்டு நிறமுடைய கம்பளிக்கு வெளியே தண்ணீர் குடுவையின் மர மூடியை நெருப்பு காட்டியது. சத்தமின்றி மெல்ல உருவினான். குடுவையின் வாய்ப்பகுதியில் நீர் கசிந்திருந்தது. பாதி அளவுள்ள தண்ணீரை கனம் உணர்த்தியது. சிரமத்துடன் உதடு பிரித்து இரண்டு மிடறுகள் விழுங்கி விட்டு மரமூடியை அழுத்தி மூடி கம்பளிக்குள் செருகினான். நீர் நெஞ்சை கடந்ததாகத் தெரியவில்லை.
காற்றின் வேகம் குறைந்த கணத்தில், மந்தையில் ஓர் ஆடு சத்தமிட்டது. தியாஸ் அதை நோக்கி விருவிருவென நடந்தான். மந்தையின் ஓரத்தில் மாசாவின் கம்பளி இருந்தது. மாசாவிற்கு அவன் அளித்த முதற்பொருள். ஒருநாள் முழுக்க போர்த்திவிட்டு தன் வாசனையுடன் அவளுக்கு கொடுத்தான். அவனின் இடுங்கிய கண்களை கண்டவாறே மாசா பெற்றுக்கொண்டாள். கருப்பும், கருஞ்சிவப்புமான முடிகளை கொண்ட கம்பளி. நெருப்பை அவளருகே நிறுத்தி வைத்தான். மறுபடியும் அவளருகே வீற்றிருப்பதின் மகிழ்ச்சி, யாகுதாவின் அடிவயிற்று உதையில் பெற்ற நீண்ட வலியை மறைத்தது. வெகு நேரம் குளிருக்கு முகத்தைக் கொடுத்து காலைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். போதிய வெளிச்சத்தை தரவியலாத விண்மீன்களும் குறை நிலவும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன.
தியாஸ் மெல்ல கம்பளிக்குள் கை நுழைத்து அவளின் குளிர்ந்த கணுக்காலை பற்றினான். பாம்போ தேளோவென பயந்து கால் உதறி திடுக்கிட்டு எழுந்தாள் மாசா. பசியும் தூக்கமும் பொங்கிய கண்களுக்கு தியாஸ் கலைக்கப்பட்ட முகம் கொண்ட ஓவியமாய் தெரிந்தான். மாசா கண்களை அழுத்தி மூடி பின் திறந்து பார்த்தாள். நெருப்பின் ஒளியில் தியாஸ் சிவந்து தெரிந்தான். மாசா கம்பளியை இழுத்து போர்த்தி குனிந்து கொண்டாள்.
“என்னை பார் மாசா” என்றான் தியாஸ் முனங்கும் உதட்டுடன். அவன் உடல் மெதுவாக நடுங்கத்தொடங்கியது. “வழிந்தோடும் உயிரைத் தேக்குவது எத்தனை சிரமம் தெரியுமா மாசா?
மாசா நிமிர்ந்தாள். பாலையில் நெளிந்தோடும் ஒற்றையோடை போல் அவள் வரண்ட வெளுத்த கன்னச்சருமத்தில் நீர் இறங்கியது. “நீ போய்விடு தியாஸ், நான் உன் உயிரற்ற தேகத்தை பார்க்க விரும்பவில்லை. நீ போய்விடு. அதற்காக நான் உனக்கு நன்றியுடையவளாய் சாவேன்” மெல்லிய கேவலில் விசும்பினாள். பின் தலை திருப்பி அடங்கிப்போன அக்கூட்டத்தை பார்த்தாள். எங்கேயும் அசைவில்லை.
“இப்பெரும் மணற்பரப்பில், உனக்கு எதிரான திசையில் செல்ல எனக்கு தைரியம் இல்லை மாசா”. அவள் அழுகையும் பெருகியது. தன் கைகளைக்கொண்டு வாயைப் பொத்திக்கொண்டாள்.
“பார் மாசா, அத்தனை பேர் அடித்தும் என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. மயக்கம் குறைந்து வலி தெறிக்க நான் இமைகள் விரித்த போது ஒரு மணல் குன்றை கண்டேன். நிச்சயமாய் மாசா, உன் மஞ்சள் நிற மார்பகங்களையே கண்டேன். பெரும் மணலாய் நீயே படுத்திருந்தாய். வலிக்க எழுந்து போய் அம்மணலில் முகம் புதைத்தேன். நீயே எனக்கு உயிரூட்டினாய். இன்று நான் உன்னை மறுபடியும் பார்த்துவிட்டேன் மாசா. இனி என்னால் உன்னை பிரிய முடியாது,” அவளின் கரம் பற்றினான்.
மாசா அவன் உள்ளங்கைகளில் சூட்டை உணர்ந்தாள். “நீ போய் தான் ஆக வேண்டும் தியாஸ். இவர்கள் விழிக்கும் போது இங்கே இருக்காதே. இன்னுமொருமுறை அவர்கள் உன்னை அடிப்பதை காண்பேனானால் தாய் தந்தையரற்ற என் சகோதரிக்காக நான் உயிர் வாழ முடியாமல் போய்விடக்கூடும். விலகி போய்விடு தியாஸ். என் தந்தைக்கு நான் சத்தியம் செய்திருக்கிறேன். என் தமையனின் பிஞ்சு உடல் கூறாக்கப்பட்டு அள்ளிச்சென்றபோது, வெட்டுப்பட்டுக்கிடந்த என் தந்தைக்கு நான் சத்தியம் செய்திருக்கிறேன். இதோ என் வயிற்றில் என் தமையன்.. உன் மகன். நான் இவனைப் பெற வேண்டும். உயிருள்ளதாய். சிரித்து, துள்ளி மணலை இறைத்து விளையாடும் அவனை நான் திரும்பப்பெற வேண்டும். நீ போய் விடு. எங்காவது சென்று பிழைத்து கொள் தியாஸ்.. இனியும் திருடாதே..”
தியாஸ் கன்னம் இழுக்க, வலியில் முன்ங்கியவாறே அழுதான். குரல் வெளிவரவில்லை. ஆனால் கழுத்து நரம்புகள் வெட்ட வெட்ட அவன் அழுதான். மாசா கம்பளியால் தன் முகத்தைப் பொத்திக்கொண்டாள். தியாஸ் அவள் கம்பளியை பிடித்து இழுத்தான். அவள் இறுக்கப்பிடித்தபடி உள்ளே குலுங்கிக்கொண்டிருந்தாள். தியாஸ் அவள் முகத்தை நிமிர்த்திப்பார்த்தான்.
யோசேப்புவின் வீட்டிலிருந்து மரச்சில்லுகளை பொறுக்கி தன் வயிறு முழுக்கச்சுற்றியபடி வந்த மாசாவை தியாஸ் வழிமறித்தான். பிள்ளை உண்டானது எப்படி என்று வம்பிழுத்தான். மாசா அவனை போடா திருடா என்றாள். தியாஸ் அவள் மரச்சில்லுகள் கொண்ட மடியை உருவிவிட்டு தள்ளிப்போய் நின்றுகொண்டான். ரொட்டிக்கும் மரச்சில்லுக்கும் தன்னை விற்றவளே என ஏசினான். அவள் கண்ணில் கண்ணீர் பொங்க அவனை முறைத்தபடி நின்றாள். அவன் அலட்சியமாய் சிரித்தான். அவள் அங்கிருந்து நகரவுமில்லை. மரச்சில்லுகளை பொறுக்கவுமில்லை. தியாஸின் முகம் மாறியது. சரி விடு. கோவப்படாதே என்றான். மாசா அவனிடம் எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்துத் தந்தால் ஒழிய நகர மாட்டேன் என்றாள். தியாஸ் அவளை அடிக்க கை ஓங்கினான். அவள் கண் இமைக்கவில்லை. மெல்லக்குனிந்து பொறுக்க ஆரம்பித்தான். அவள் கால்களை சுற்றிக்கிடந்த சில்லுகளை பொறுக்கினான். அவள் கால்கள் திடமாய் நின்றிருந்தன. மெல்ல வருடினான். அவை இளகின. பின் அவள் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். மாசா அவன் தலை கோதினாள்.
விறகுகளை தீயுடைக்கும் ஓசையுடன் மக்கள் எழுந்தனர். மாசா பதறினாள். தியாஸ் பல்லை இறுக்கக் கடித்தபடி வீம்புடன் அமர்ந்திருந்தான். சகேயு ஓடி வந்து தியாஸை எட்டி உதைத்துத் தள்ள தியாஸ் பின்னால் சரிந்து விழுந்து பின் உடல் மணலில் இழுக்க ஊர்ந்து மாசாவின் இரு கரங்களைப்பற்றி தன் முகத்துடன் சேர்த்து அழுத்திக்கொண்டு அவள் மடியில் தன்னை புதைத்துக்கொண்டான். எத்தனை சூடு அவள் கரங்களுக்கு.. இச்சூட்டில் தானே என் மகனும் வாழ்கிறான் என எண்ணிக்கொண்டான். ஆம் அவன் என் மகன் தான். அவள் கரங்களை தன் கரங்களால் அழுத்தி பிடித்து முகத்தில் வைத்துக்கொண்டான். சகேயு தியாசின் முதுகில் உதைக்கத்தொடங்கினான். பின் மாசாவிடமிருந்து அவனை பிரிக்க அவன் ஆடை பற்றி இழுத்தான். தியாஸ் மாசாவின் இரு கரங்களை விடாமல் பற்றிக்கொண்டான். சகேயு மூச்சிரைக்க தியாஸின் கழுத்தில் ஓங்கி மிதித்தான். தியாசின் கைகள் சட்டெனத்தளர மாசா தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்து சகேயுவின் கால்களை கட்டிக்கொண்டு அழுதாள். உலர்ந்த பார்வைகள் கொண்ட மக்கள் அவர்களைச் சுற்றி குளிரில் நடுங்கி நின்று கொண்டிருந்தனர். மெல்ல நடந்தபடி யனோவா வந்தார். தியாசைக்கண்டதும் சிவந்த விழிகள் விரிந்தன. அவன் மேல் காரித்துப்பினார். மாசா இப்பொழுது யனோவாவின் காலைக்கட்டிக்கொண்டாள். எத்தனை சுற்றம் இருந்து தந்தையின்றி என் பிள்ளை பிறக்கலாமா? கருணை கொள்ளுங்களேன் என இறைஞ்சினாள். ய்னோவா அவளை குனிந்து பார்க்கவில்லை. தியாசை மட்டுமே நோக்கினார். பின் கூட்டத்தை நோக்கினார்.
பிறந்த மகவெல்லாம் இறந்தன. வயிற்று நீரில் ஊறி வளர்ந்த அங்கங்கள் வெட்டப்பட்டு இறந்தன. விடாய் கொண்ட மண் எத்தனை சுலபமாய் அத்தனை ரத்த்தையும் உறிஞ்சியது என்று நாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். நம் இறைவனுக்கு நாம் செய்த துரோகம் என்ன? அவன் கருணை பாலைக்காற்றாய் நம்மை கடந்து போய்விட்டதேன் என அறியோம். ஆனால் அவன் நம்மை காப்பான் என்றுதானே இன்னும் கோலைக் கைபிடித்தவண்ணம் உயிர்பிடித்து நிற்கின்றோம். அவனின் கருணை பொழிய வேண்டுமென்றுதானே மிஞ்சிய நம் உடைமைகளை அவனுக்கு பலியாய் வளர்த்தோம். அதைத் திருடிப் புசித்தவன் நம்முடையவன் என்றால் எங்ஙனம் குளிரும் நம் தந்தையின் உள்ளம்? எங்ஙனம் மகவாய் பிறப்பான் எம் தந்தை? பின் மெல்ல மாசாவைக் குனிந்து நோக்கினார்.
சகேயு தியாசை இழுக்க, எந்த மீறலும் இல்லாமல் தியாசின் உடல் மாசாவின் கரங்களிலிருந்து வழிந்தது. சிலர் மாசாவை தூக்கி இழுத்துக்கொண்டு போனார்கள். அவள் தன் அத்தனை ஆற்றலையும் கொண்டு கத்தினாள். பாலை அதை ஒரு சிறு நரியின் ஊளையாய் எடுத்துக்கொண்டது. கூட்டம் மெல்ல குழந்தைகளையும் உடைமைகளும் எடுத்துக்கொண்டு நத்தையென ஊறி தியாசைத் தனிமையாக்கினர். எழவோ திரும்பவோ முடியாமல், மண்ணிலிருந்து தியாஸ் தன் தலையை மெல்ல உயர்த்தினான். தன் எச்சில் படர்ந்த மண்ணை மட்டும் நோக்கி மகனே யூதாஸ் என முனங்கியபின் உயிர்விட்டான்.
பின்னணி கதை இருந்தால் புரிந்துக்கொள்ள உதவும். நன்றி.
I couldnot understand the story. ..the other story -yugasanthi– is super and realistic. if possible kindly give some explanation to understand the story on musa.thank u
விவிலிய பிண்ணனியில் விவரிக்கப்பட்ட கதைக்களம்.மனதை வருடும் எழுத்து நடை.மாசாவின் நிலை என்றென்றுமான மானுடத் துயர்.
Monica…can you post sources to understand the story’s background. Thanks.
பைபிளில் பழைய ஏற்பாடு வரலாற்றில் இதே போன்ற பிண்ணனிகள் உண்டு.ஜேகபின் பாலைநில பிரயாணத்தில் அவனுடைய மகள் டயானா அல்லது டீனா என்ற பெண்ணிற்கும் கானான் தேசத்தின் சீகேம் என்ற அரச குமாரனுக்குமான உறவு இப்படியான கதையே.யாக்கோபு தான் இஸ்ரேல் இனத்தின் ஆதி தகப்பன்.ஆதியாகமம் 34ம் அதிகாரத்தில் இந்நிகழ்வு வருகிறது.இப்படியான மேலும் சில நிகழ்வுகளும் பைபிளில் உண்டு.இது என் புரிதல். மற்ற விளக்கத்தை கதாசிரியர் தான் கூற வேண்டும்.சிறந்த நடையில் உருவான ஆழமான கதை. கதாசிரியருக்கு வாழ்த்துகள்.
யாக்கோபின் வம்சம் இஸ்ரேல். கானானியர் அவர்களின் இறைவாக்குப்படி ஒதுக்கப்பட்ட புற இனத்தவர்.யாக்கோபின் மகன்கள் தம் சகோதரியை பிற இனத்தவன் தீட்டுப்படுத்தினான் என்று வஞ்சம் கொண்டு அவனையும் அவன் தேசத்தின் அத்தனை ஆண்களையும் வஞ்சகமாக வீழ்த்தி தம் சகோதரியை அழைத்துக் கொண்டு எகிப்திற்கு சென்று விடுகின்றனர்.சீகேம் டீனாவின் மீது கொண்ட நேசத்தால் உயிர் துறக்கிறான்.என்றென்றுமான மானுட குல வரலாறு.பெண்ணின் கருவறையின் மீதான ஆதிக்கம்..
சுவாரஸ்யமான தகவல்கள். எனக்கு கர்னாடக சங்கீதம் மிக மிக பிடிக்கும். லயித்து ரசிப்பேன்.. ராகம் தெரியாது, தாளம் தெரியாது, சமயங்களில் மொழியும் புரியாது. ஆனால் பிரயத்தனமே இல்லாமல் ரசிக்க முடிகிறது. அப்படித்தான் மாசாவின் கரங்களை ரசித்தேன். அப்ப்ப்பா என்ன ஒரு மொழி நடை எப்பேர்பட்ட பாணி ஆளுமை. கதாசிரியருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பதாகையின் தேர்வுக்கு பாராட்டுக்கள். தாமதமான பாராட்டுக்கு வருத்தம். ஆசிரியரின் பிற படைப்பு சுட்டி அனுப்பினால் மகிழ்ச்சி.