கடல் கொள்ளும் கோவில் – பாவண்ணனின் ‘வெளியேற்றப்பட்ட சிறுகதை’ தொகுப்பை முன்வைத்து

நரோபா

pavannan

பாவண்ணன் தமிழில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் முக்கிய இலக்கிய ஆளுமை. கவிதையில் துவங்கி, சிறுகதை, நாவல், குறுநாவல், மொழியாக்கம், விமர்சனம், அனுபவ கட்டுரை என எழுத்தின் எல்லா வகைப்பாடுகளிலும் கணிசமாக எழுதியவர். பாவண்ணன் சிறுகதைகள் வாழ்வின் பல்வேறு தளங்களில் எழுகின்றன. அவருடைய ஏழு லட்சம் வரிகள் தொகுப்பை ஒரு உதாரணமாக கொள்ளலாம். நாமறிந்த பாவண்ணன் அல்ல அவர் என தோன்ற செய்யும் அளவுக்கு தொன்மங்களையும் நாட்டார் கதைகளையும் கையாண்டிருப்பார். மனம் பற்றிய கூர்மையான அவதானங்களை சொல்லும் உளவியல் கதைகளையும் எழுதி இருக்கிறார். அவருடைய சிறுகதையுலகம் மிகவும் பரந்ததாகவே இருக்கிறது.

அகரம் வெளியிட்ட வெளியேற்றப்பட்ட குதிரை தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளை கொண்டு பாவண்ணனின் படைப்புலகை நெருங்குவதற்கான முயற்சியே இக்கட்டுரை.

அவருடையவெளியேற்றப்பட்ட குதிரைகதை திசைமாறிய கூடைபந்து வீரனின் வாழ்வை சொல்கிறது. ராஜசேகரன் அவன் விரைவின் காரணமாக குதிரை என அழைக்கபடுகிறான். அவனுடைய அசாத்திய திறமை அபார வெற்றிகளை சாதனைகளை ஈட்டி தருகிறது. அரசியல் காரணங்களால் தேசிய அணியில் ஒதுக்கபடுகிறான். விரக்தியில் மதுவை நாட ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக எத்தனை விரைவாக உச்சம் அடைந்தானோ அதைவிட விரைவாக பாதாளத்தில் வீழ்கிறான். அவன் மீது அக்கறைகொண்ட தியாகராஜனின் வழியாக தென்படும் ஒளிகீற்றை பற்றி மீண்டும் ஏற முயல்கிறான். ராஜசேகரனின் பள்ளிகால பயிற்சியாளர் தங்கராஜ்ஓடுடா ஓடு..குதிரை மாதிரி ஓடணும்என்கிறார். விளையாட்டை தவிர ஏதும் தெரியாததை எண்ணி வருந்துகிறான். பந்தய குதிரைகள் போட்டியில் ஓடுவதை தவிர வேறேதும் அறியாதவை. மனிதர்கள் பந்தய குதிரைகளாகவே தயார்படுத்த படுகின்றனர். கதையில் ;மரம்; மற்றுமொரு குறியீடாக வருகிறது. கோவிலுக்கருகே பயணற்ற மரங்கள் வெட்டப்பட்டு தியான மண்டபம் எழுப்பபடுவதை அறிகிறான். தியாகராஜனும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரத்தை வேட்டத்தானே வேண்டும் என வேறொரு உரையாடலில் யதார்த்தமாக சொல்கிறார். கதையின் இறுதியில் அவன் தன்னை முடித்து கொள்வதற்கு முன் கோவிலில் வெட்டப்பட்ட மரங்களை நினைத்து கொள்கிறான். ஓடிக்கொண்டே இருக்கும் குதிரைநின்று இடையூறு செய்யும் மரம் எனும் இரண்டு படிமங்களுக்கு ஊடாக பயணிக்கிறது கதை. குதிரையாக தன்னை உணர்ந்தவன் இறுதியில் தன்னை இடையூறு செய்யும் மரமாக காண்கிறான். ஆகவே தானும் அப்புறபடுத்தப்பட வேண்டும் எனும் முடிவுக்கு வந்துவிடுகிறான். குதிரை தன்னை தானே வெளியேற்றி கொண்டது. மதுவின் ஈர்ப்பை விவரித்தல், இயற்கையை நோக்கி கைகூப்பி வணங்கும் கோபுரம் போன்ற விவரணைகள் கதைக்கு வலு சேர்க்கிறது. ராஜசேகரனுக்கும் மனைவிக்குமான உறவு, அவன் கொள்ளும் குற்ற உணர்வு, மகளுக்கும் அவனுக்குமான சிநேகம், துவக்கத்தில் இறுக்கமாக இருக்கும் மனைவி இறுதியில் அவனை ஏற்றுகொள்ளும் மனநிலைக்கு வருவது ஆகியவை அழகாக பதிவாகிறது. சாக்கடையாக தன்னை அவன் கருதிக்கொள்ளும் மனபோராட்டங்கள் ஊசலாட்டங்கள் கதையை மேலும் நெருக்கமாக உணர செய்கிறது. மரணத்திற்கு முன்னர் மீண்டும் அவன் அந்த மரத்தை எண்ணிகொள்வது கதையை ஒரு மாற்று குறைத்து விடுகிறது என தோன்றியது. ‘இந்த படிமம் இதற்காகத்தான்என செருகி வைத்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

இந்த மரம் எனும் படிமம் இதே தொகுப்பில் உள்ள வேறு இரண்டு கதைகளிலும் பயன்படுத்தபடுகிறது. ‘ஒரு முடிவுக்கு பிறகுகதையில் மாலதியும் ராகவனும் ஒருவருட மணவாழ்க்கை கசந்து மனமுவந்து பிரிய எண்ணுகிறார்கள். அதை அறிவிக்க கூட்டப்பட்ட விருந்தில் மாலதிக்கு சிறுவயதில் கேள்விப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது. ஏழை பெண்ணொருத்தி ஒரு மந்திரம் மூலம் மரமாகும் வரம் பெறுகிறாள். மரமாகி பூத்து குலுங்கி பூக்களை சேகரித்த பின்னர் மீண்டும் பெண்ணாகி விடுகிறாள். இதையறிந்து அவள் மீது மையல் கொண்டு மனம் புரிகிறான் ஒருவன். இந்த உருமாற்றம் அவனை கிறங்கடிக்க செய்கிறது. ஒரு அக்கறையற்ற தருணத்தில் கணவனின் அலட்சியம் காரணமாக மரமாகவே உறைந்து விடுகிறாள். மன்மறைந்து காற்றில் கலந்து அவன் மரத்திடம் மன்றாடுகிறான். இந்த கதையில் வரும் மரமாக மாலதி தன்னை உணர்கிறாள். உணர்சிகளற்று உறைந்த மரம்.

மற்றொரு கதையானமரம்தந்தையின் உக்கிரமான நினைவுகளை அவரது வன்மத்தை சொல்கிறது. செல்லமாக வளர்ந்த மகள் காதல் திருமணம் புரிந்துகொண்டதை தாங்க முடியாமல் துரத்தி துரத்தி அவர்களை அழிக்க முயலும் வன்மத்தை சுமந்தலைந்து பித்தேறி அழிகிறார். மகனின் பார்வையில் சொல்லப்படும் கதை தந்தையிடம் தான் மட்டுமே அறிந்த ரகசியத்தை பற்றி கேட்க துணியாதது குறித்து குற்ற உணர்வு கொள்வதோடு முடிகிறது. “காற்றின் விசையில் நாலு திசைகளிலும் கிளைகள் இழுபட்டு ஆடிக்கொண்டிருந்தாலும் உறுதி குலையாமல் நின்றிருந்தது மரம். கண்ணுக்குத் தெரியாத ஒரு யுத்தத்தை அது காற்றோடு நிகழ்துவதைப்போல இருந்தது. காற்றின் தந்திரம் கிளைக்குப் புரியவில்லை. கிளைகளின் உறுதி காற்றுக்குப் புரியவில்லை. முன்னும் பின்னுமாக அலைகழிக்கபட்டாலும் ஆயாசமில்லாமல் ஊக்கத்துடன் அசைந்து கொண்டிருந்தன கிளைகள்

மரம்காற்று தேக்கத்தையும் நெகிழ்வையும் சொல்லி செல்கிறது. மற்றொரு எல்லையில் நிலைத்தலையும் அலைகழிப்பையும் சுட்டுகிறது. ஒரே படிமத்தின் நேர்மறை எதிர்மறை பயன்பாடுகளை ஒரு தொகுப்பிலேயே கண்டடைவது சுவாரசியமான அனுபவமாக இருக்கிறது.

சினிமா இயக்க வேண்டும் என பதிமூணு ஆண்டுகளாக கனவு கொண்டிருப்பவனும் ஒரு எல்..சி ஊழியனுக்கும் இடையிலான உரையாடல் தான் இந்தக்கதை. மகாபலிபுரத்தில் வானவில்லின் பின்புலத்தில் கதை துவங்குகிறது. இயக்குனராக முயற்சி செய்யும் குலசேகர் ஆரவமுடன் பேசுகிறான். பாலு கேள்விகளை கேட்கிறார். சினிமா மீது எப்படி ஆர்வம் வந்தது? அவன் பட்ட துயரங்கள் என உரையாடல் விரிகிறது. அவனுடைய திரைக்கதைகளை சுருக்கமாக சொல்கிறான். விருதுகள் பெற்ற பின்னர் அளிக்க வேண்டிய நேர்காணல் வரையும் யோசித்து வைத்திருக்கிறான். திரைக்கதைகள் சுவாரசியமானவை. இந்த கதையை அவன் கூறும் வாழ்க்கை நிகழ்வுகளையும் திரைக்கதைகளையும் சேர்த்து வாசிக்க வேண்டும் என தோன்றியது.

இருவரின் மாறுபட்ட பின்புலங்கள், ரசனைகள் வாழ்க்கை ஆகியவை ஏறத்தாழ எதிரெதிர் புள்ளிகளில் நிற்கின்றான. பாத்திரங்களை எதிரெதிர் துருவங்களாக அமைந்துள்ளன. பொதுவாகவே பாவண்ணனின் கதைகளில் துருவங்களுக்கு இடையிலான ஊடாட்டம் இருப்பதாக தோன்றியது. மற்றொரு கதையானதெளிவில்இது நுட்பமாக வெளிப்படுகிறது. பிரதான கதை மாந்தர் ராதாவிற்கும் ஜெயந்திக்கும் இடையிலான ஒற்றுமையும் விலகலும் புலப்படுகிறது. இந்த தொகுப்பின் மிக சிறந்த கதைகளில் ஒன்று. திருமணமாகி சில மாதங்களில் கர்பிணி மனைவியை விட்டுவிட்டு வேலை விஷயமாக வெளிநாடு சென்ற கணவன். தனிமையில் வாடும் மனைவி தனது தேர்வு சரிதானா என எண்ணி குழம்புவதும், தனது முந்தைய காதலனின் நினைவுகளால் அலைகழிவதும் என நவீன வாழ்வின் மிக முக்கியமான சிக்கலொன்றை பேச முயல்கிறது கதை. ராதா அகாலத்தில் எழுந்து கணவனோடு பேசுகிறாள். குறுகிய கால மண வாழ்வின் தருணங்களை அவன் தினமும் மீண்டும் மீண்டும் மீட்டுகிறான். அவனுடைய நினைவாற்றல் ராதாவிற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. மிரட்சியை கூட அளிக்கலாம். ஒருவகையில் இவ்வுறவின் மீதான கவனமின்மை, முந்தைய உறவிலிருந்து பூரணமாக மீளாததும் கூட காரணமாக கொள்ளலாம். ராதாவின் தோழி ஜெயந்தியும் கர்பிணி தான். அவளது கணவரும் வெளிநாட்டில் தான் வாழ்கிறான். ஆனால் ஜெயந்தி தனிமையில் இல்லை. அவளுடன் அவளது மாமியாரும் மாமனாரும் வாழ்கிறார்கள். பூங்கா நடைபயிற்சியின் போது அற்புதமாக பாடல்கள் பாடும் சிறுமிகளுக்கு பள்ளி கட்டணத்திற்கு தயக்கமின்றி ராதாவால் ஐநூறு ரூபாய் அளிக்க முடிகிறது. ஜெயந்திக்கு அளிக்க மனமிருந்தாலும்அது ஒன்றும் அவளுடைய பணம் அல்லஎன்பது சொல்லபட்டிருக்கிறது. கல்வி கற்று வேலையில் இருப்பவள் ராதா. பிள்ளை சிகப்பாக பிறக்க வேண்டும் என புகுந்த வீட்டாரின் நிர்பந்தத்தை எண்ணி மருளும் ஜெயந்தி என இருவரின் குணாதிசயமும் கதையின் முடிச்சுக்கு வலு சேர்க்கிறது. ராதா சந்தானத்தை எண்ணி குழம்புகிறாள். இசையாக அவன் நினைவுகள் அவளுள் எழுந்து அவளை கொந்தளிக்க செய்கிறது. ஜெயந்தி தன்னை நேசித்த ராகவனையே திருமணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை நிம்மதியாக இருந்திருக்கலாமோ என வெளிப்படையாக வருந்துகிறாள். கருக்கிருட்டில் ராதாவை அலைகழித்த குயிலோசைகள் புலர்ந்த பின் காணாமல் போய்விடுகின்றன. “எதிலும் தெளிவு வேண்டும்குழப்பிக்கொள்ள வேண்டாம் என ஜெயந்திக்கு ஆலோசனை வழங்கிவிட்டு புன்னகைத்து மீண்டும்தெளிவு வேண்டும்என தனக்கே சொல்லிகொள்கிறாள். நாளையும் கருகிருட்டு வரும், அதன் பின்னர் விடியலும் வரும். அவிழ்க்க முடியாத முடிச்சுகளை போட்டபடியும் அதற்காக ஏங்கியபடியும் தான் வாழ்ந்தாக வேண்டும். மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையைகளையும், அவைகளை எதிர்கொள்ளும் சால்ஜாப்புகளையும் உருவாக்கிக்கொள்ளத்தான் வேண்டும்.    

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளநித்யாநேரடியான எளிய கதை. ஆனால் அதன் சித்தரிப்பின் வலிமையாலும், அது அளிக்கும் துயரத்தாலும் மனதை மிகவும் தொந்திரவு செய்யும் கதையும் அதுவே. ஒரு அனாதை இல்லத்தில் வளரும் குழந்தை மீது அங்கு வரும் தம்பதியினர் கொள்ளும் பரிவை சொல்கிறது. மரணபடுக்கையில் இருக்கும் நித்யாவையும் அவளுடைய நண்பர்களையும் மகாபலிபுரம் அழைத்து செல்கிறான் ரவி. இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள இரண்டு கதைகளில் மகாபலிபுரம் ஒரு படிமமாக துலங்குகிறது. “எட்டு திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்கதையில் குலசேகர் எழுதும் திரைக்கதைகளில் ஒன்றில் மகாபலிபுரத்தை பற்றிய குறிப்பிருக்கிறதுஇந்தக் கரையில பல கோயில்கள கட்டனான் பல்லவ மன்னன். கடலுக்கு ஏதோ பொருமல். அகங்காரம். தனக்கு நெருக்கமா நிக்கறதுக்கு இதுக்கு என்ன தகுதின்னு நெனைக்கற மாதிரி. காலங்காலமா இந்த கோயிலகள பாத்து பொருமிகிட்டே இருக்குது. உன்ன விடமாட்டேன்னு கோயிலகள பாத்து ஒவ்வொரு நிமிஷமும் பாஞ்சிகிட்டே இருக்குது. நூற்றாண்டு கணக்கா தொடருது இந்த பாய்ச்சல். ஒவ்வொரு கோயிலா விழுங்கி சிரிச்சுகிட்டே இருக்குது கடல். இன்னும் நீதான் பாக்கி சத்தமா ஒரு அகங்காரச் சிரிப்பு கேட்டுகிட்டே இருக்குது. அழியப் போறத பத்தி எந்த கவலையும் இல்ல, இருக்குறவரைக்கும் எப்படி இருக்குறேன்ங்கறதுதான் முக்கியம்னு உறுதியா நிக்குது கோயில்.” என்கிறார்.

நோயுற்றிருக்கும் நித்யா மீண்டும் மீண்டும் மகாபலிபுர கோயிலை கடல் கொண்டு சென்றுவிடும் என அஞ்சுகிறாள். இப்போது போய் பார்த்தாலும் கூட என்றேனும் ஒருநாள் அது கடலால் கொண்டு செல்லப்படும் என அஞ்சுகிறாள். ரவிமூழ்குவதும் மூழ்காததும் வேற பிரச்சனை..நாம் சென்று பாத்து வரலாம்என்கிறான். தன்னை அக்கோவில் இடத்தில் வைத்து பார்க்கும் நித்யா அவள் அஞ்சும் ஆற்றலால் கொண்டு செல்ல படுகிறாள். ஒரு குழந்தை மரணத்தை எப்படி எதிர்கொள்கிறது? அவளுக்கு எத்தனை குழப்பமாக இருக்கும். காரண காரியங்களை விளக்கி கொள்ளும் நிலையில் அவளில்லை

ரத்தம்தந்தைமகள் உறவை மிக நுட்பமாக பதிவு செய்கிறது. தாயுமானவனாக தன் மகனையும் மகளையும் வளர்க்கும் தந்தை அகால மரணமடைகிறார். அதை அவருடனேயே நெருக்கமாக வளர்ந்த மகளால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தன் குருதியில் அவர் இருக்கிறார் என கீறி காண்பித்தபடியே இருக்கிறாள். ரத்த உறவுள்ள மகன் தந்தையின் இடத்தை நிரப்ப முடியும் சாத்தியத்தை சொல்லி முடிகிறது கதை. ‘ரத்தம்கதையில்  ஒருவகையான தந்தைமகள் உறவை காட்டும் பாவண்ணன் நேரெதிராக அகங்காரமும் வன்மமும் பழிவாங்கும் வெறியும் நிறைந்த தந்தைமகள் உறவைமரம்கதையில் கையாள்கிறார். ரத்தம் நகரத்து நவீன தந்தையையும் மரம் நிலபிரபுத்துவ கிராமத்து தந்தையையும் சித்தரிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ரத்தம்ஒருவித உளசிக்கலை சித்தரிக்கிறது எனில்அழைப்புவேறுவித சிக்கலை நுட்பமாக சித்தரிக்கிறது. ஒன்றரை வயது குழந்தையின் மரணத்தை தாங்க முடியாமல் புத்தி பேதலிக்கிறாள் அந்த அன்னை. அனாதை இல்லத்தில் வளரும் அவள் படித்து அடைந்த வேலையை இழக்கிறாள். ஆனால் பணியில் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறாள். வாயிலில் அவளை அழைத்து செல்ல வண்டி நிற்பதாக ஒவ்வொரு நாளும் எண்ணுகிறாள். அவளுக்கு மட்டுமே ஒலிக்கும் அழைப்புமணி அவளை உசுப்புகிறது. அவள் அதை நோக்கி சென்றபடி இருக்கிறாள். இறுதியில் மீள முடியாத தொலைவுக்கு சென்று விடுகிறாள். இந்த கதை மனபிறழ்சியை அச்சமூட்டும் அளவிற்கு நுட்பமாக சித்தரித்து வாழ்வின் மிகக் குரூரமான எல்லையில் சென்று முடிகிறது.

பார்வைகதையும் ஒருஇல்லத்தைகளமாக கொண்டது. பார்வையற்ற ஒரு பெண் பார்வையடைய கொள்ளும் தடுமாற்றத்தை பதிவு செய்கிறது. பார்வையடைந்த ஒரு தோழியும் அவளுடன் இருக்கிறாள். பார்வையற்ற பெண் எழுதும் கவிதைகளில் ஆச்சரியமாக வண்ணங்களும் உருவங்களும் நிறைந்திருக்கின்றன என்றொரு அவதானத்தை வைக்கிறார்.

மகாபலிபுரம்கடல், மரம்காற்று, ஆகிய இந்த இரு படிமங்களும் ஒரே கேள்வியின் இரு வடிவங்களாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அலைகழிபவை நிலை பெறவும் நிலைபெற்றவை தேங்கி நிற்காமல் இருக்கவும் விழைகின்றன

அவருடைய கதை மாந்தர்கள் பரிவுள்ளவர்கள். ராஜசேகரனும் சரி, அவனுக்கு உதவும் தியாகராஜனும் சரி, பாலுவும், குலசேகரும், ரவியும், சித்ராவும், ராமமூர்த்தியும் கருணையை சுரக்கிறார்கள். நித்யா, பார்வை, அழைப்பு ஆகிய மூன்று கதைகளிலும்இல்லங்கள்வருகின்றன. அவை நல்லவர்களால் நடத்தபடுகின்றன. நல்லவர்களையே உருவாக்கவும் செய்கின்றன. இந்த தொகுப்பில் உள்ள பாவண்ணனின் கதைகளின் அடிநாதமாக நான் இதையே காண்கிறேன். அவரை மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. ஏன் நன்மை வீழ்கிறது? வீழ்ச்சி தவிர்க்கவியலாதது என்றே மீண்டும் மீண்டும் அவர்கள் வாழ்ந்து காட்டி சொல்கிறார்களா? ‘ஏன்எனும் ஒற்றை கேள்வி, ஒரு மன்றாடல் இக்கதைகளின் வழியாக நம்முள் எழுகிறது. மறுபக்கம் வீழ்ச்சி தவிர்க்கவியலாதது தான் ஆனால் அதற்காக அதை அஞ்ச வேண்டியதில்லை, அஞ்சி ஒடுங்க வேண்டியதில்லை. இருக்கும் வரை வாழ்க்கையை அழகாக்கிகொள்ளவும் அர்த்தமாக்கிகொள்ளவும் முடியாதா? என கேட்கிறது.    

இந்த கதைகள் பெரும்பாலும் அதன் களம் சார்பாக, பேசுபொருள் காரணமாகவோ அல்லது மொழியின் விளைவாகவோ, ஒருவித திரைக்கதை அம்சம் கொண்டுள்ளதாக தோன்றியது. ‘சினிமாடிக்ஆக இருப்பது எதிர்மறையான விஷயமா என்றால் இல்லை. ஆனால் அது கதையை ஒரு வரையறைக்குள் கட்டிவிடுகிறது. குறிப்பிட்ட ஒரு திசையில் பயணிக்க வாசக மனம் வலியுறுத்தபடுகிறது. நுட்பமான விவரணைகளும் களமும் கொண்ட கதைகளும் கூட இறுதியில் இத்திசையில் தேர்வது ஒரு பலவீனம் என்றே எண்ணுகிறேன்

ஒட்டுமொத்தமாக ஒன்பது கதைகள் கொண்ட இத்தொகுப்பில்வெளியேற்றப்பட்ட குதிரை’, ‘நித்யா’, ‘அழைப்பு’, ‘மரம்ஆகிய கதைகள் உக்கிரமான இழப்புகளை துயரங்களை பேசுகின்றன. ‘ஒரு முடிவுக்கு அப்பால்’, ‘பார்வை’, ‘எட்டு திரைக்கதைகளும் ஒரு நேர்காணலும்’, ‘ரத்தம்ஆகிய கதைகள் நம்பிக்கையுடன் முடிகிறது. இத்தொகுப்பினுடைய முன்னுரை முக்கியமானது. ஒரு மழை காலத்தில் சாளரத்தருகே அமர்ந்து தெருவில் பெருக்கெடுத்து ஓடும் நீரை பார்க்கிறார். அங்கிருந்து அவருடைய மகன் இளவயதில் கப்பல்விட்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. காகித கப்பல்கள் சற்று தூரம் நீரில் பயணித்து மூழ்கிவிடுகிறது அல்லது கரையில் தரைதட்டி நின்றுவிடுகிறது. அங்கிருந்து அவருடைய மனம் நதியில் ஓடும் ஓடத்திற்கு தாவுகிறது. நதிவழி பயணம், எதிர்வழி பயணம் என இரு வாய்ப்புகள் உண்டு. எது பாதுகாப்பானது எனும் கேள்வியை எழுப்புகிறார்? ‘எந்தப் பயணத்திலும் பாதுகாப்புக்கும் பாதுகாப்பின்மைக்கும் சம அளவு வாய்ப்பிருப்பதாகவே தோன்றியது.’ என எழுதுகிறார்.

ஒரு தொகுப்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக பாவண்ணனை வகுத்துவிட முடியாது என்றாலும் அவருடைய படைப்புலகின் சில அக்கறைகளை கவனிக்க முடியும் என்றே எண்ணுகிறேன். பாவண்ணனை காலகிரம்மமாக காலந்தோறும் அவருடைய படைப்புலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வாசிக்கும் போது அவருடைய முக்கியத்துவம் புலப்படகூடும்.

  

      

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.