ரகுராமன்
ஆம்…! பாவண்ணன் ஓர் ஆச்சர்யமான மனிதர்தான். முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏதோ ஒரு வகையில் பல வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். எழுத்துக்கள் வழியாக மட்டுமே பாவண்ணனை அறிந்து, நண்பராய் ஆன பிறகு அவர் ஓர் ஆச்சர்யம் என வாசக நண்பர்களால் உணர முடியும். இருபத்தைந்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்குள்ளான இலக்கிய வாழ்க்கையில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், மூன்று கவிதைத் தொகுப்புகளையும், இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகளையும், இரண்டு குறுநாவல்களையும், இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளையும் இலக்கிய உலகத்திற்குத் தந்திருக்கிறார். சொந்தப்படைப்புகள் மட்டுமல்லாது, கன்னடத்திலிருந்து மிக முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ’இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?’ என்று பலர் எண்ணலாம். வாசகராய் இருந்து நண்பராய் ஆன என்னால், அந்த ஆச்சர்யத்திலிருந்து வெளிவரவே முடியவில்லை.
அவருடைய அலுவலக வேலைகள், அவற்றுக்கே உரித்தான கெடுபிடிகள் என அத்தனையையும் தாண்டி இவ்வளவு படைப்புகளை எப்படி அவரால் கொடுக்க முடிகிறது என்பது ஆச்சரியம்தானே? ஒரு கடிதம் எழுதுவதற்கோ, ஒரு மின்னஞ்சல் அனுப்புவதற்கோ கூட நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு மத்தியில், தன்னுடைய அலுவலகப் பணி, குடும்ப பணிகள் எதையும் சமரசம் செய்து கொள்ளாமல் எழுத்துப் பணியிலும் குறைவற்றுச் செயலாற்றுபவர் ஒருவகை ஆச்சரியம்தானே?
பாவண்ணனின் படைப்புகளில் எது பிடிக்கும் என என்னை நானே கேட்டுக் கொண்டபோது கிடைத்த வரிசை கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், புராணப் பின்னணியில் புனைவு செய்யப்பட்ட சிறுகதைகள், கவிதைகள் என்பதாகும்.
’தினமணி’ நாளிதழில் இவருடைய கட்டுரைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், ஒரு சிறிய நிகழ்வை எப்படி அவர் அழகான கட்டுரையாக்குகிறார் என்று. அயல்நாட்டில் நடந்த கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாவண்ணனின் கவனத்தைக் கவர்ந்தது அம்மைதானத்தில் இருந்த ஒரு மரம். அதை வைத்துப் பசுமை, மரம் வளர்த்தல் என அவர் எழுதிய அக்கட்டுரை மறக்கவே முடியாதது.
புத்தக விமர்சனக் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தவை. பாவண்ணன் விமர்சனம் எழுதினாலோ, அறிமுகம் செய்தாலோ அப்புத்தகத்தை நிச்சயம் படிக்கலாம் என்றே தோன்றும். அவருடைய கட்டுரைத் தொகுதிகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இலக்கியங்கள் நேரடியாகப் பயனையோ, போதனையையோ அளிப்பது அல்ல என்றும், புத்தகங்களில் வாழ்க்கைக்கான ஏதோ ஒன்று, வாசிப்பவரின் அகத்தைத் தூண்டுவதாய் ஒளிந்து கிடக்கிறது என்றும் சுட்டிக் காட்டுபவர்; வாசிப்பும், அதில் தோய்தலும் ஒரு விதத்தில் வாழ்க்கையின் தேடல் என்று சொல்பவர்; எந்த ஒரு கதையையும், நாவலையும், இலக்கியத்தின் எந்த வடிவத்தையும் வாழ்வியல் அனுபவங்களோடும், சமூக வாழ்க்கையோடும் பொருத்திப் பார்த்து விடைகாண முயற்சிப்பவர்.தான் சந்திக்கின்ற மனிதர்கள், நிகழ்வுகள் போன்றவை மனத்தில் எழுப்பும் கேள்விகளை, தன் மனத்தில் அவர்கள்/அவை ஏற்படுத்திய தாக்கத்தை எவ்வித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இன்றி, தத்துவக் கோட்பாடுகளாகவோ, ஆத்ம விசாரமாகவோ பதிவு செய்யாமல், சாதாரணமாக எளிய முறையில் பதிவு செய்திருப்பார். தன்னுடைய ‘தீராத பசி கொண்ட விலங்கு’ என்ற தொகுப்பில். இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவை கட்டுரைகள் போலத் தோன்றினாலும், அவையனைத்துமே சிறுகதைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. ‘தரைக்கு இழுக்கும் அதிர்ச்சி’ என்ற கட்டுரை நெஞ்சை உலுக்கக் கூடியது. தன் தந்தைக்குக் கொள்ளி வைக்கத் தீச்சட்டியுடன் நிற்கும் சிறுவன், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் பிணத்தைச் சுமந்து செல்லும் தந்தை, காசநோயில் மனைவியை இழந்த கணவன், வரதட்சிணைக் கொடுமையால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்ளும் அவரது மகள் என மரணத்தின் பல வடிவங்களைப் பேசும் இக்கட்டுரை நெஞ்சைக் கனக்க வைக்கும். ‘இலட்சத்தில் ஒருத்தி’, ‘ஒரு தாயின் கதை’ போன்ற கட்டுரைகள் கண்ணீர் வரவழைக்கும்.
’எனக்குப் பிடித்த கதைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை முதல் பகுதியாகவும், அவர் சொல்ல வரும் சிறுகதையைப் பற்றி இரண்டாம் பகுதியிலும் சொல்லியிருப்பார். இத்தொகுதியைப் படித்த பிறகு அக்கதைகளைத் தேடிப் படித்திருக்கிறேன். இதைப்போலவே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை ‘ஆழத்தை அறியும் பயணம்’, ‘வழிப்போக்கன் கண்ட வானம்’, ‘மலரும் மணமும் தேடி’ ஆகிய புத்தகங்கள். ‘மலரும் மணமும் தேடி’ தொகுப்பில் தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் எண்ணூறு பக்க நாவல்களை இரண்டு அல்லது மூன்றே பக்கங்களில் விவரித்திருப்பார். அவர் கட்டுரைகளில் தரும் சில விளக்கங்கள் அவருடைய படைப்பு மற்றும் படிப்புத் தேர்வு என்ன என்பதை உணர்த்திவிடும். என் மனம் கவர்ந்த வரிகள் சில இங்கே:
- ‘இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவது இலக்கணம்; அப்படி இருக்க முடியாமல் போவதன் அவஸ்தைகளைப் பேசுவது இலக்கியம்’
- ’மன்னிப்பைப் போதிக்கிறது சீர்திருத்தம்; மன்னிக்க இயலாத மனச்சீற்றங்களையும், மன்னிப்பைப் பெற இயலாத குற்ற உணர்ச்சிகளையும் படம் பிடிக்கிறது இலக்கியம்’
- ‘பாவனையான பதில்களுடன் கிடைத்த ஆனந்தத்தில் திளைக்கிறது தினசரி வாழ்க்கை; அசலான பதில் உறைந்திருக்கும் புள்ளியை நோக்கி இருளடர்ந்த மனக்குகையில் பயணத்தைத் தொடங்குகிறது இலக்கியம்’
ஒரு முன்னணி படைப்பாளியாக இருக்கும் அதே நேரத்தில் இத்தனை புத்தகங்களைப் படித்து, அவற்றின் அழகு, மையம், படிம அழகு, அவற்றின் பலம், பலவீனம் எல்லாவற்றையும் எவ்விதச் சாடல் தொனியும், மேதாவித்தனமுமின்றி நிதானமாய் எடுத்துச் சொல்லவும் முடிகிறது என்பது எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான்.
கன்னடத்திலிருந்து முக்கியமான படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை பாவண்ணனுக்குண்டு. பொதுவாக இவரது படைப்புகள் அன்பைப் பற்றிப் பேசுவதாகவும், வாழ்வின் விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசுவதாகவும் அமைந்திருக்கும். சமூக அக்கறை கொண்ட இவர் சித்தலிங்கையாவின் ‘ஊரும் சேரியும்’, அரவிந்த மாளகத்தியின் ‘கவர்மெண்ட் பிராமணன்’ ஆகிய சுயசரிதைகளையும், ‘புதைந்த காற்று’ என்ற தொகுப்பையும் மொழிபெயர்த்துள்ளார். கிரீஷ் கர்னாடின் சிறந்த நாடகங்களான ‘அக்னியும், மழையும்’, ‘பலிபீடம்’, ‘நாகமண்டலம்’ போன்றவற்றை மொழிபெயர்த்துள்ளார். கன்னடத்தின் சிறந்த சிறுகதைகளை ‘நூறுசுற்றுக் கோட்டை’ என்கிற தொகுப்பாகவும், ‘நூறு மரங்கள், நூறு பாடல்கள்’ என்ற கன்னட வசன கவிதைத் தொகுப்பையும், ‘வட கன்னட நாட்டுப்புறக் கதைகள்’ என்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்பையும் கொண்டுவந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மணிமகுடம் சூட்டியது போல எஸ்.எல்.பைரப்பாவின் ‘பர்வா’ என்ற கன்னட நாவலைப் ‘பருவம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தது மிகப்பெரிய விஷயம் என்றே சொல்லலாம். இதற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். தனது சொந்தப் படைப்புகளோடு இத்தனை மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டிருக்கிறார் என எண்ணும்போதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நான் செல்கிறேன்.
அவருடைய தொன்மங்களைப் புனைவுகளாக்கும்க லையைக் கண்டு எப்போதுமே ஆச்சர்யப்பட்டுப் போய்விடுகிறேன். அச்சிறுகதைகளின் நடையும், மொழியுமே அலாதி சுகம். ‘போர்க்களம்’, ’புதிர்’, ‘வாசவதத்தை’, ‘குமாரவனம்’, ‘பிரிவு’, ‘அல்லி’, ‘அன்னை’, ‘சாபம்’, ‘சுழல்’, ’இன்னும் ஒரு கணம்’ என அடுக்கிக்கொண்டே போகலாம்.
கவிதைகளில் இவர் காட்டும் படிமங்களும், உவமைகளும், உரைநடை இலக்கியத்தில் சிறந்தவராய் இருக்கும் இவரால் எப்படி கவிதைகளிலும் பரிமளிக்க முடிகிறது என்பது ஒரு பெரிய ஆச்சரியம்!
இத்தனை எழுத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருக்கும்போதிலும், எப்போதும் நட்பு குறையாமல் பேசிப் பழகுவது பாவண்ணனுக்கு மட்டுமே உரியது எனும் ஆச்சரியத்தை அவருடன் நட்பு பாராட்டும் ஒவ்வொருவரும் உணர முடியும். அவருடைய உயர்வு எதுவோ நம்மால் அதை எட்ட முடியாது என்று எப்போதுமே நான் தலையுயர்த்திப் பார்க்கும் ஓர் எளிமையின் வடிவான ஆச்சர்யம் பாவண்ணன்!