விலக்கம்

எஸ். சுரேஷ்

இன்று, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, என்னால் மறக்க முடியாத நாளாகி விட்டது. இதே போல் மறக்க முடியாத இன்னொரு நாள், டிசம்பர் எட்டு 1985. அன்றுதான் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நான் எங்கள் ஜெயநகர் வீட்டின் மொட்டை மாடியில் என் தோழி பத்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது சிலர் உரக்கப் பேசுவது எங்கள் காதில் விழுந்தது. அதில் ஒரு குரல் அப்பாவுடையது.

நானும் பத்மாவும் கீழே இறங்கி வந்தோம். அப்பாவிற்கும் மூன்று ஆட்களுக்கும் வாக்குவாதம் பலமாக நடந்து கொண்டிருந்தது. என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. அப்பா ஏதோ உரக்க கத்திக் கொண்டிருந்தார். வந்தவர்களில் ஒருவன் சபாரி சூட்டில் இருந்தான். அவன் பதிலுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் சத்தமாகப் பேசுவதைக் கேட்டு ரோட்டில் போகிறவர்கள் எங்கள் கேட் முன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தார்கள். வந்திருந்த மூவரில் ஒருவன் கேட் பக்கம் சென்று, “ஹோகி ஹோகி’ என்று எல்லோரையும் விரட்ட ஆரம்பித்தான்.

அப்பொழுது ஒரு போலிஸ் ஜீப் கேட்டுக்கு முன் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் இறங்கி கேட்டை திறந்து உள்ளே வந்தார். அங்கு நின்றிருந்தவன் அவருக்கு சல்யூட் அடித்தான். நான் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் பயந்து போனேன். அந்த பயம் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும். பத்மா என் தோள்களை அணைத்துக் கொண்டாள். “ஒன்றும் ஆகாது, பயப்படாதே”, என்றாள்.

உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் சபாரி ஆளைப் பார்த்தார். பிறகு அப்பாவிடம், “உங்களை கைது செய்ய வேண்டும். இதோ ஆர்டர்ஸ்” என்று ஏதோ காகிதத்தை நீட்டினார். நான் ஒன்றும் புரியாமல் அப்பாவைப் பார்த்தேன். இவ்வளவு நேரம் உரக்க பேசிக்கொண்டிருந்த அப்பா மௌனமானார். தலை குனிந்து, ‘சரி’ என்பது போல் ஆட்டினார். பிறகு என்னைப் பார்த்து, “நீ இங்கேயே இரு. மஞ்சுநாத் வருவான். அவன் எல்லாம் பாத்துப்பான்”, என்று சொல்லிவிட்டு, “பன்னி” என்று இன்ஸ்பெக்டரை பார்த்து சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று போலிஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

“அப்பா அப்பா. என்ன ஆச்சு? அப்பா, அப்பா…” என்று நான் அவரை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கையில் ஜீப் கிளம்பியது. “ஏனு இல்லா. நான் சீக்கிரமே வரேன்,” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ஜீப் ரொம்ப தூரம் சென்று விட்டது.

அழுது கொண்டிருந்த என்னை பக்கத்து வீட்டுக்காரர்கள் வேடிக்கை பார்த்தார்கள். பத்மாவைப் பார்த்து, “ஏனு ஆயித்து?” என்று கேள்வி கேட்டார்கள். எங்களுக்கு வலது புறம் வீட்டில் இருக்கும் சாவித்திரி ஆண்ட்டி ஓடி வந்தாள். “அழாதே. ஒன்னும் ஆகியிருக்காது. சீக்கிரமே அப்பா வந்துடுவார்,” என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றாள். எதிர் வீட்டில் இருக்கும் லீனா ஆண்ட்டியும் வந்து ஆறுதல் சொன்னாள்.

கால் மணி நேரம் கழித்து மஞ்சுநாத் அங்கிள் வந்தார். எல்லோரும் அவரிடம் விஷயம் என்ன என்று கேட்டார்கள். அவரோ, “ஏதோ ஆபிஸ் விஷயம். நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்கு எல்லாம் சரியாகிவிடும்” என்று எல்லோரையும் துரத்தினார். வேண்டா வெறுப்பாக எல்லோரும் வீட்டை விட்டு விலகிப் போனார்கள்.

மஞ்சுநாத் அங்கிள் என்னிடம், “வித்யா, நீ ஒன்றும் கவலைப்படாதே. இது ஆபிஸ் விஷயம். நாளைக்கு நான் போலிஸ் ஸ்டேஷன் போய் அவனை வீட்டுக்குக் கொண்டு வருகிறேன். நீ ஒன்றும் கவலைப்படாதே” என்றார். என்னதான் ஆயிற்று என்று நான் பல முறை கேட்டும் அவர் இதே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு பத்மாவை என்னுடன் இரவு தங்கியிருக்கச் சொல்லிவிட்டு மஞ்சுநாத் அங்கிள் தன் வீட்டிற்கு சென்றார். அவருக்கு அடுத்த நாள் காலை நியூஸ் பேப்பரில் அந்த செய்தி வரும் என்று தெரிந்திருக்கவில்லை.

“ஊழல் வழக்கில் நால்வர் கைது” என்று கொட்டை எழுத்தில், முதல் பக்கத்தில் அந்தச் செய்தி வந்தது. அதைப் படித்துக்கொண்டிருந்த பத்மா என்னைப் பார்த்ததும் பேப்பரை நீட்டினாள். தலைப்புச் செய்தியுடன் கூட அப்பாவின் புகைப்படமும் முதல் பக்கத்தில் இருந்தது. போலிஸ் மற்றும் அந்த சபாரி சூட் ஆள் சூழ அப்பா நடுவில் இருக்கும் புகைப்படம். நடுத்தர உயரம், தடிமனான கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி. எந்த சலனமும் இல்லாத முகம். அப்பாவைத் தவிர அப்பாவுடன் வேலை செய்யும் மூன்று பேரின் படங்கள் இருந்தன. அதில் சதானந்த் அங்கிள் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். இன்னொருவர் அப்பாவுடைய பாஸ்.

செய்தியைப் படித்துவிட்டு நான் அழுவேனோ என்று என் முகத்தை பத்மா உற்று நோக்கிகொண்டிருந்தாள். ஆனால் எனக்கு அழுகை வரவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. இந்த குழப்பம் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாற இரண்டு மாதங்கள் வேண்டியிருந்தது.

oOo

இன்றைக்கு, ஆகஸ்ட் பதினெட்டு, 1998, இப்பொழுதும் எனக்கு அதே குழப்பம். பத்திரிகையில் ஜிம் பார்சன் புகைப்படம் வந்திருக்கிறது. ஆனால் இது வரும் என்று முதல் நாளே தெரியும். அன்றிரவு என்னிடம் ஜிம், தான் நாளை கைதாகலாம் என்று சொன்னான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜிம் ஒரு பார்மா கம்பெனியில் வேலை செய்கிறான். அவனை ஏன் போலிஸ் கைது செய்ய வேண்டும்? ‘இன்சைடர் ட்ரேடிங்’ என்றான் ஜிம்.

தன் கம்பெனியில் நடக்கும் சில விஷயங்களை ஸ்டாக் மார்க்கெட்டில் விளையாடும் சிலருக்கு ஜிம் சொல்லியிருக்கிறான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபமாம். ‘நான் செய்வது தவறு என்று நான் உணரவில்லை” என்று கூறி ஒரு குழந்தை போல் அழ ஆரம்பித்தான். இப்பொழுது பத்திரிகையில் ஜிம் பார்சனின் பெயரும் புகைப்படமும் வந்திருக்கிறது. நீல நிறக் கண்கள், பொன்னிற தலைமுடி, சவரம் செய்யப்பட்ட உருண்டை முகம். இதழ்களில் புன்னகை. அவன் காலேஜில் படிக்கும்பொழுது எடுத்த படமாக இருக்கும். ‘Jim Parson involved in insider trading’ என்று கொட்டை எழுத்தில் தலைப்பு.

oOo

நான் மஞ்சுநாத் அங்கிளுக்கு போன் செய்தேன். “பேப்பர் பாத்தேம்மா. உங்கப்பா ஒண்ணும் தப்பு செய்யல்ல. அவன் எப்போவுமே லஞ்சம் வாங்காத நேர்மையான ஆபிசர். அதுனால அவனுக்கு நிறைய எதிரிகள். அதுல எவனோதான் வேணும்னு மாட்டி விட்டிருக்கான்,” என்றார். இதைக் கேட்டு எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஆனால் அந்த நிம்மதி காலை பதினொரு மணி வரையில் தான் நீடித்தது. பதினொரு மணியளவில் நான்கு விஜிலன்ஸ் ஆட்கள் கையில் ஏதோ பேப்பருடன் வந்தார்கள். மஞ்சுநாத் அங்கிள் அப்பொழுது வீட்டில் இருந்தார். விஜிலன்ஸ் ஆட்கள் வீடு முழுவதும் தேடினார்கள். கடைசியில் என் முன் கட்டுகட்டாக நூறு ருபாய் நோட்டுக்களை அடுக்கிக் காட்டிவிட்டு என்னிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார்கள். அவர்கள் போனபிறகு மஞ்சுநாத் அங்கிளிடம் இதெல்லாம் என்ன என்று கேட்டேன். “பயப்படாதே. உன் அப்பா வந்து எல்லா விஷயமும் சொல்லுவான்” என்று சமாதானம் சொன்னார்.

அப்பா வருவதற்குள் பலர் என்னை விளக்கம் கேட்க ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருப்பவர்கள், என் உறவினர்கள், நண்பர்கள், கடையில் வேலை செய்பவர்கள், காய்கறி விற்பவர்கள் என்று சகலரும் என்னை துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தார்கள். எனக்கு வீட்டை விட்டு வெளியே செல்லவே பிடிக்கவில்லை. அப்பா எப்பொழுது வருவார், எப்பொழுது எனக்கு பதில் சொல்வார், நான் எப்பொழுது வெளியே சென்று, “என் அப்பா ஒரு தவறும் செய்யவில்லை’ என்று கூறுவேன் என்று காத்துக் கிடந்தேன்.

ஆனால் அப்பா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வாரம் கழித்து அப்பா பெயில் கிடைத்து வீட்டிற்கு வந்தார். ஒன்றுமே ஆகாதது போல் நடந்து கொண்டார். நான் பல முறை அவரிடம், “என்ன நடந்தது, உண்மை என்ன?” என்று கேட்டேன். ஆனால் அவரோ “ஏனில்ல”, என்று ஒரே வார்த்தையில் என் கேள்விகளைக் கடந்து சென்றார். நான் பல முறை அவர் முன் அழுது கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் எந்த பதிலும் சொன்னதில்லை.

oOo

ஜிம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தான், ஆனால் அவன் என்ன பேசுகிறான் என்று எனக்கு உரைக்கவில்லை. என் மனம் முழுதும் அந்தப் பத்திரிகையில் உள்ள ஜிம் மேல் தான் இருந்தது. “இவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றுதானே திருமணம் செய்து கொண்டேன். இப்பொழுது இப்படிச் செய்துவிட்டு வந்து நிற்கிறானே துரோகி,” என்றது என் மனம். நான் சட்டென்று பத்திரிகையை வீசிவிட்டு பெட்ரூம் போனேன். ஜிம் என்னுடன் உள்ளே வர பார்த்தான். ‘ப்ளீஸ் லீவ் மீ அலோன்’ என்று சொன்னவுடன் வெளியே நின்றுவிட்டான். நான் படுக்கையில் விழுந்தேன்.

oOo

ஒரு நாள் மாலை அப்பாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மது அருந்த ஆரம்பித்தார்கள். நான் என் அறையில் இருந்தேன். அப்பா மது அருந்துவது சகஜம். அவர் நண்பர்களும் அடிக்கடி வருவார்கள். எல்லோரும் மது அருந்திவிட்டு செல்வார்கள். எல்லாமே மிதமாகதான் இருக்கும். சிரிப்பொலி இருக்குமே தவிர கூச்சல் கலாட்டா என்று பலர் நினைப்பது போல் எதுவும் இருக்காது. எல்லோரும் தெளிவாகவே இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு குரல்கள் அவ்வப்போது உயர்ந்தன. “நம்ப மாத்திரமா லஞ்சம் வாங்கினோம்? பூரா டிபார்ட்மெண்ட் வாங்குது. தேவடியா மகன் நம்பள மட்டும் என் அரெஸ்ட் பண்ணனும்?”, என்று சதானந்த் அங்கிள் புலம்பினார். “நீ ஏன்டா வீட்ல பணத்த வச்ச. இப்போ பணமும் போச்சு அவங்க கேஸ் ஸ்ட்ராங் ஆயிடிச்சி” என்று இன்னொரு குரல் கேட்டது. அவர்கள் எல்லோரும் வீட்டுக்குச் செல்வதற்குள் அப்பா லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்று எனக்கு சந்தேகமில்லாமல் தெரிந்துவிட்டது.

அடுத்த நாள் காலை எனக்கு அப்பாவை பார்க்கவே பிடிக்கவில்லை. எங்களிடையே பேச்சு குறைய ஆரம்பித்தது. நான் அவருடன் வெளியே செல்வதைத் தவிர்த்தேன். ஆனால் அவர் செய்த செயல் என்னை சுட்டது. கல்லூரியில் என்னுடன் படிக்கும் ஒருவன், நான் அவனுக்கு விடைத்தாள் காட்டவில்லை என்பதற்காக, “அப்பனப் போல இருக்கா. லஞ்சம் குடுத்தா தான் ஆன்சர் காமிப்பா” என்று சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள். பக்கத்து வீட்டு மாமி ஒரு நாள் என்னைப் பார்த்து, “உங்க வீட்டுக்கு மாடி போர்ஷன் கட்டலாமே. உங்களுக்கு பணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையே,” என்றாள். எந்த நிமிடமும் காதலனாக மாறக்கூடிய நெருங்கிய சிநேகிதன் ஸ்ரீகாந்த் என்னை விட்டு மெல்ல விலகிச் சென்றான். எனக்கு அடி மேல் அடி விழுவது போல் இருந்தது.

அப்பா குடியில் மூழ்கலானார். “ஏன்டா இப்படி பண்ற. உனக்கு ஒரு பெண் இருக்கா. இன்னும் ஒரு வருஷத்துல ரிடைர் ஆகப் போற. எதுக்கு இப்படி குடிக்கற?” என்று மஞ்சுநாத் அங்கிள் எவ்வளவு சொல்லியும் அப்பா குடியை நிறுத்தவில்லை. ஒரு நாள் என் நண்பர்களுடன் நான் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இருக்கும்பொழுது அப்பா அங்கே போதையில் எங்கள் முன் மயங்கி விழுந்தார். எனக்கு அவமானம் தாளவில்லை. இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

oOo

பத்திரிகையில் செய்தி வந்த மாலை, கிரேக் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஜிம் செல்லும் சர்ச்சில் கிரேக்தான் பாதிரியார். கிரேக் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். ஜிம் மனம் திருந்திவிட்டதாகவும், தான் செய்த தவறை சொல்லி பாவ மன்னிப்பு கேட்டதாகவும், அவன் அப்ரூவராக மாறப் போவதாகவும், நான் அவனை மன்னித்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அன்று இரவு ஜிம் என் கையைப் பிடித்துக்கொண்டு, நான் இனி இது போல் எதுவும் செய்ய மாட்டேன், என்று சத்தியம் செய்தான். நான் ஒன்றும் சொல்லாததால் அழ ஆரம்பித்தான். என்னால் அதை தாங்க முடியவில்லை. அவனை இறுகக் கட்டிக்கொண்டு “இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே”, என்று சமாதானப்படுத்தினேன்.

oOo

எங்கள் உறவுக்காரர்கள் வருவதை நிறுத்திவிட்டிருந்தார்கள். அப்பாவிற்கு சொந்த சகோதர சகோதரிகள் கிடையாது. எல்லோரும் தூரத்து சொந்தம்தான். அம்மா பக்கத்து உறவினர்கள் சிலர் வந்தார்கள். அப்பா இருக்கும் நிலைமையை பார்த்துவிட்டு என்னை சோகக் கண்களுடம் பார்த்தவிட்டு, “எல்லாம் விதி” என்று கூறிவிட்டு சென்றார்கள். என் பெரியம்மா தில்லியில் இருந்தார். எப்பொழுதாவது போன் செய்வார். அப்பா மீது அவருக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. மஞ்சுநாத் அங்கிள் மட்டும் தினமும் வந்து அப்பாவைத் திட்டிவிட்டு செல்வார்.

எனக்கு முதலில் அமெரிக்கா போகவேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால் அங்கு பல இந்தியர்கள் வருவார்கள். நம்மவர்கள் நம் குடும்பத்தை பற்றி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அதனால் ஐரோப்பாவில் எங்காவது செல்ல நினைத்தேன். பின்லாந்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. நான் படிக்க ஊரைவிட்டு செல்கிறேன் என்று சொன்னபொழுது அப்பா வெறும் ‘உம்’ என்றார்.

நான் ஊரைவிட்டு கிளம்பும்பொழுது அவர் குடிபோதையில் மயங்கிக் கிடந்தார். மஞ்சுநாத் அங்கிள்தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் செய்தார்.

oOo

ஜிம் மாறிக்கொண்டிருந்தான். அப்ரூவராக மாறிய பிறகு சோஷல் சர்வீஸில் ஈடுபட்டான். நான் அவனை நான்கு ஆண்டுகளுக்கு முன் மணந்திருந்தேன். பின்லாந்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் வேலைக்கு சேர்ந்து, அமெரிக்கனான ஜிம்மைச் சந்தித்து, எங்களுக்குள் காதல் மலர்ந்து, அவனை திருமணம் செய்து கொண்டேன். நான் என் பழைய வாழ்க்கையை பற்றி அவனுக்கு சொல்லவில்லை. சில முறை கேட்டு பார்த்தான். ஆனால் எனக்கு அதை பற்றி பேச பிடிக்கவில்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். பிறகு அதை பற்றி அவனும் பேசுவதில்லை, நானும் பேசியதில்லை.

திருமணம் ஆன இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் அமெரிக்கா வந்தோம். அப்பொழுதெல்லாம் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்த ஜிம் இப்பொழுது ஒரு பொறுப்புள்ள குடிமகன் போல் மாறிவிட்டான்.

oOo

நான் பின்லாந்த் வந்து சேர்ந்தவுடன் மஞ்சுநாத் அங்கிளுக்குதான் கடிதம் எழுதினேன். அப்பாவிற்கு எழுதவில்லை. மஞ்சுநாத் அங்கிள் அப்பாவைப் பற்றிதான் கவலைப்படுவதாக பதில் எழுதினார். ஒரு வருடம் கழித்து அப்பாவிற்கு ஒரு வருட சிறை தண்டனை கிடைத்ததை பற்றி மிகுந்த வருத்தத்துடன் எழுதினார். இனி இந்தியா பக்கமே போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

oOo

ஒரு வருடம் கழித்து தீர்ப்பு வந்தது. அன்று நானும் ஜிம்முடன் கோர்ட்டுக்கு சென்றிருந்தேன். பலருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. ஜிம்மின் வாக்குமூலம் இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. கோர்ட்டை விட்டு வெளியே வரும் பொழுது பலர் ஜிம்மின் கையை குலுக்கினார்கள். என்னையும் எல்லோரும் பாராட்டினார்கள். “யூ நெவெர் கேவ் அப். ஜிம்முக்கு பலமே நீ தான்” என்று புகழ்ந்தார்கள். அடுத்த நாள் பத்திரிகையில் எங்கள் இருவர் படமும் வந்தது. ஜிம் எப்படி ஒரு கண்ணியமான குடிமகனாக மாறி இருக்கிறான் என்பதை சிலாகித்து எழுதியிருந்தார்கள். எனக்கு அதைப் படித்தவுடன், அப்பாவை பார்க்க வேண்டும் என்று முதல்முறையாக தோன்றியது.

ஜிம்மிடம் நான் இந்தியா போக வேண்டும் என்றேன். புருவங்களை உயர்த்தி “இந்தியா?” என்றான். “எஸ்” என்றேன். “நானும் கூட வரவேண்டுமா?” என்றான். “இல்லை. நான் தனியாக செல்ல வேண்டும்” என்றேன். “நீ என்னை கைவிட மாட்டாய் அல்லவா” என்றான். “இல்லை. இது நீ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. சீக்கிரம் திரும்பிவிடுவேன்” என்று சொன்ன பிறகு தான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

பெங்களூருக்கு வந்து எம்.ஜி. ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினேன். ஒரு வாரம் கழித்து ரிடர்ன் டிக்கெட். ஒவ்வொரு நாளும் கிளம்ப வேண்டும் என்று நினைக்கும்பொழுது எனக்கு தைரியம் வராது. பயம் கவ்விக் கொள்ளும். ஹோட்டலிலேயே தங்கி விடுவேன்.

இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. நான் மறுபடியும் அமெரிக்காவிற்கு கிளம்ப வேண்டிய நாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு கார் ஏற்பாடு செய்து ஜெயநகர் நோக்கி புறப்பட்டேன். அப்பாவைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரே ஏர்போர்ட் செல்ல ப்ளான் செய்திருந்தேன்.

அப்பா அந்த வீட்டில்தான் இருப்பாரா? இப்பொழுது எப்படி இருக்கிறாரோ?  அப்பாவுடன் இருந்த ஒரே தொடர்பான மஞ்சுநாத் அங்கிள் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு அதை நினைக்கும்பொழுது மிகுந்த பயமாக இருந்தது. கார் மெதுவாக எங்கள் வீதிக்குள் நுழைந்தது. என் பயம் அதிகரித்தது. வேர்வையை துடைத்துக்கொண்டு வெளியே எட்டி பார்த்தேன்.

பக்கத்தில் இருந்த வீடுகள் எல்லாம் காம்ப்ளெக்ஸாக மாறிவிட்டிருந்தன. எங்கள் வீடு மட்டும் அப்படியே இருந்தது. அப்படியே அல்ல. சற்று அழுது வடிந்து கொண்டிருந்தது. நான் விட்டுச் சென்ற பிறகு பெயிண்ட் அடிக்கவில்லை போலிருந்தது. சில இடங்களில் பெயிண்ட் காணாமல் போய் செங்கல் பல்லை இளித்தது. காம்பவுண்ட் அருகில் எப்பொழுதும் பூத்திருக்கும் செடிகள் இப்பொழுது இல்லை.

வீட்டைத் தாண்டி டிரைவர் காரை நிறுத்தினான். நான் மெதுவாக நடந்து கேட் அருகில் வந்தேன். நடப்பதே கடினமாக இருந்தது. அப்பா இப்பொழுது எந்த நிலையில் இருப்பாரோ?

கேட் அருகே வந்தவுடன் அவரை பார்த்தேன். இன்னும் மாலை மங்கவில்லை. அவர் எனக்கு முதுகைக் காட்டி நின்றுக்கொண்டிருந்தார். தலை மயிர் நரைத்திருந்தது, ஆனால் அவர் உடல் வாகு அப்படியே தான் இருந்தது. நான் கேட் திறக்கும் சப்தம் கேட்டு அவர் திரும்பினார். என்னை அறியாமல் நான் ஸ்தம்பித்து நின்றேன். அவர் என்னை உற்று பார்த்தார். நான் மிகவும் மாறியிருந்தேன். பாப் கட், ஜீன்ஸ் மற்றும் மேக்கப் போட்டிருந்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? இல்லை அவரால் நான் திரும்பி வந்தேன் என்பதை நம்ப முடியவில்லையா?

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் சட்டேன்று சிரித்தார். நான் என் இள வயதில் பார்த்த அப்பாவாக மாறினார். பழைய நினைவுகள் என்னைத் தாக்கி விழியோரம் நீர் கோர்த்துக்கொண்டது. சிரித்துக்கொண்டே என்னை நோக்கி நடந்து வந்தார். “குருபிரசாத் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் குடுத்து அனுப்பினானா? எங்க சர்டிபிகேட் காமி” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது வீட்டுக்குளிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். “இங்க இருக்கீங்களா. உள்ள வாங்க காபி தரேன்” என்றார். “ஒரு நிமிஷம் இரு. குரு பிரசாத் இவங்கள அனுபியிருக்கான். நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் இருந்தா வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் மாத்திடலாம்” என்றார். அந்தப் பெண்மணி தலையில் அடித்துக்கொண்டு, “இவங்கள யாரும் அனுப்பல. ஏதோ அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க” என்றாள்.

அவர் மறுபடியும் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, அந்த பெண்மணி பக்கம் திரும்பி, “நீ ஏன் எனக்கு இன்னும் லஞ்ச் போடல. ஒரே பசிக்கறது” என்றார். “லஞ்ச் எப்போவோ சாப்பிட்டு டிபனும் ஆச்சு. இப்போ காபி குடிக்க வாங்க” என்று கூறி அவர் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் செல்கையில் என்னை பார்த்து, “நான் வந்து அட்ரஸ் சொல்றேன்” என்றார்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்தப் பெண்மணி அப்பாவை கையை பிடித்து உள்ளே அழைத்து போவதைப் பார்க்கிறேன். அதற்கு பிறகு பெங்களுரு விட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். டாக்ஸி ஏர்போர்ட் நோக்கி விரைந்துக் கொண்டிருந்ததுதான் நினைவிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.