“விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து” – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு
பல்விரிவுத்தன்மை கொண்ட வாசிப்பு குறித்து வெ. கணேஷ் எழுதும் இரண்டாம் கட்டுரை இது. இதற்கு முன், குரோசவாவின் திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்- “ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்“. இந்த வரிசையில் அவர் மேலும் பல கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும்போதும் சில விவாதப் புள்ளிகளை முன்வைக்கலாம்.
பலதரப்பட்ட உணர்வு நிலைகளுக்குரிய பல்வகை யதார்த்தங்கள் வெளிப்படும் பல்வாசிப்பு ஆற்றல் கொண்ட படைப்புகள், யதார்த்தத்தின் பன்முகத்தன்மையை, அதன் பொது பிடிமானமின்மையை பிரதிபலிக்கும் காரணத்தால் சரியாகவே போற்றப்படுகின்றன. அதற்கு அடிப்படையாய் அமையும் பிரதியின் ambiguity எப்படிப்பட்டது என்பதையும் பேசுவது நம் பார்வையைச் செறிவாக்கக்கூடும். அதாவது, ஒரு படைப்பு பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதற்காகவே அது பாராட்டுக்குரிய தகுதியை அடைவதில்லை. வெவ்வேறு உணர்வு நிலைகள் வெவ்வேறு வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன என்பது மட்டும்தான் பன்முக விரிவு குறித்து நாம் சொல்லக்கூடிய விஷயமா?. இதற்கு பதில் காண, ஒரு விளையாட்டாய், வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு நிகழ்த்தினால் என்ன?
இந்தக் கதையில், மிக்கேல் புறச்சித்தரிப்பிலிருந்து உன்முகமாய் பயணிக்கிறான். அதை அவன் வார்த்தைகளில் விவரிக்கையில் சொல் பிம்பம் ஆகிய இரண்டும் (நாமரூபங்கள்!) அவனுக்கு பேயோட்டு கருவிகளாகின்றன- மிக்கேல் தற்பாலின கலவி குறித்த அச்சங்களை, அதன் துன்பியல் நினைவுகளை, இக்கதைசொல்லலைக் கொண்டு மீள்கிறான். கொர்த்தசாரின் கதைசொல்லிக்கு எதிர்த்திசையில், பிரதியிலிருந்து உன்முகம் நோக்கிய பயணம் மேற்கொள்கிறார் கணேஷ் – வாசிப்பு என்ற செயல், அவரது குழந்தைப்பருவத்தின் ஒரு சிறு துண்டத்தை பெரிய அளவில் விரித்துக் காட்டுகிறது, அப்படி ப்ளோ அப் செய்யப்பட்ட வாழ்வனுபவத்தை வாசிப்புக்கு உட்படுத்தும்போது, அது அவர் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் “ப்ளோ-அப்” என்ற சிறுகதையைப் புரிந்து கொள்ளும் கருவியாகிறது. சிறுகதையின் கதைசொல்லி பிரதியிலிருந்து பயணப்பட்டு தன் குழந்தைப் பருவ குழப்பங்களை சமநிலைக்கு கொண்டு வருகிறார், இந்தக் கட்டுரையில் வெ. கணேஷ் குழந்தைப்பருவ நினைவுகளிலிருந்து பயணப்பட்டு பிரதியின் குழப்பங்களைச் சமநிலைக்குக் கொண்டு வருகிறார்.
தான் பல்வகை வாசிப்புகளை நிகழ்த்தும்போதும் சிறுகதை தன் மையப் பொருளைப் புலப்படுத்துவதில்லை என்ற ஆதங்கத்தை ஒரு வாசகராய் வெ. கணேஷ் வெளிப்படுத்துகிறார். ஆனால் அதே சமயம், பல்வகை யதார்த்தங்கள் இருக்கக்கூடும் என்ற உண்மையை இந்தப் பிரதி நம்பச் செய்கிறது என்றும் வாசிக்கிறார். இதற்கு அடுத்த கட்டமாய், பிரதியின் பல்வகை வாசிப்புகள் பல்வகை யதார்த்தங்களை உருவாக்கக்கூடும் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவரது இந்தக் கட்டுரை ஒரு பிரதியாய் எந்த உண்மையைச் சுட்டுகிறதோ, அதுவும் பல்வகை வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கக்கூடியதுதான்.
வாசிப்பே பிரதியாகும் நிலையில், சற்று விலகி நின்று யோசித்தால், எது யதார்த்தம் என்ற கேள்விக்கு இணையாக எது பிரதி, எது வாசிப்பு, என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்வி, ஜூலியோ கொர்த்தசாரின் சிறுகதையிலும் தொக்கி நிற்கும் ஒன்றுதான். கதைசொல்லி தன் புகைப்படப் பிரதியின் ஒரு சிறு பகுதியை வாசிக்கத் தேர்ந்தெடுத்து அதற்கு பேருருத்தன்மை அளிக்கும்போது (ப்ளோ-அப்) அது வேறொரு யதார்த்தத்தைத் திருப்பித் தருகிறது, பரிசளிக்கிறது, விளைவிக்கிறது.. இத்தகைய தேர்வுகளுக்கு இடமுள்ள வரை, எது யதார்த்தம், எது பிரதி, எது வாசிப்பு என்ற கேள்வி முடிவற்ற ஒன்றுதான்.
இதைப் பேசும்போது டிஜிடல் போட்டோகிரபியில். அதிகம் பயன்படுத்தப்படும் இரு சொற்கள்- scan, என்ற சொல், ‘”close investigation,”‘ என்ற பொருளிலும், render என்ற சொல், “give back, present, yield”” என்ற பொருளிலும் முதலில் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிகிறது. ஆனால் இன்றோ scan என்ற சொல் நகலெடுப்பது என்ற பொருளிலும் render என்ற சொல் கூடுதல் பரிமாணம் சேர்ப்பது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது- பிரதி நெருக்கமான வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, வாசிப்பே வேறொரு வாசிப்புக்கு உட்படுத்தப்படக்கூடிய பிரதியுமாகிறது.
வெ. கணேஷ் கட்டுரை இங்கே
ஒளிப்பட உதவி – Corpse from “Blow-Up” speaks!, Roger Ebert