ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு முறத்தில் வைத்து கையில் தரப்பட்ட குழந்தையா இது என்று வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள் உமா. ட்ரைனில் சுழற்றி அடிக்கும் காற்றில் கையைக் காலை உதறிக்கொண்டு அவள் மார்போடு ஒட்டிக்கொண்டது அந்தப் பதினைந்து நாள் குழந்தை. பக்கத்தில் சந்துரு எதையோ யோசித்தபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். திடீர் திடீரென குழந்தையைப் பார்ப்பதும் உமாவைப் பார்ப்பதும் என அவன் நிலையில்லாமல் இருந்தான்.
லேசாக நரைக்கத் தொடங்கியிருந்த தனது கூந்தலை ஒதுக்கி காதுக்குப் பின்னே சொருகிக் கொண்டாள் அவள். நடுவகிடெடுத்து மேல் நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். தான் இப்போது பெண்ணா அல்லது பொம்பளையா என்று அவளுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு. 35 வயதில் நரைக்குமா என்பதைவிட ‘நரை வந்துட்டு ஒரு பூச்சி பொட்டு வல்லையே’ என்ற கேள்வியை எந்நேரமும் சித்ரா அத்தை கேட்டுவிடக்கூடும் என்பதே அவளது கலக்கமாக இருந்தது. இனி அவள் கேட்கமுடியாது. இது என் குழந்தைதான். என் குழந்தையேதான்.
மெலிந்து கருத்து எதிலும் கவனமின்றித் தவிக்கும் தன் கணவனைப் பார்த்தாள். அவனுக்கு மீசை எப்போதோ நரைத்துவிட்டது. இரண்டு நாள் சவரம் செய்யாத முகத்தில் நரை ஆங்கங்கே எட்டிப் பார்த்தது. முதல் நரை கண்ணில்பட்டபோது அவளுக்குள் மெல்ல ஒரு பயம் எழுந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையாட்டி. அவனவனுக்கு 50 வயசுல புள்ள பொறக்குது. உங்க மாமா கடைசில புள்ள பெத்தப்ப 52 வயசு. நம்ம சரவணனை பெத்தேன்’ என்றாள் சித்ரா அத்தை.
சித்ரா அத்தையிடமிருந்து தப்பிப்பதற்காகவாவது ஒரு குழந்தை பிறந்திருக்கலாம். ஆனால் பிறக்கவில்லை. இரண்டு பேருக்கும் எந்தக் குறையும் இல்லை. முதல் நாள் முதல் நேற்று வரை சந்துரு அதே வேகத்தோடும் அதே ஆசையோடுதான் இருக்கிறான். ஒருவேளை அவனுக்குள்ளும் எல்லாம் விட்டுப் போயிருக்குமோ? தெரியவில்லை. ஆனால் இருக்காது. தன் கணவனின் வேகம் தனக்குத் தெரியாதா என்று நினைத்துக்கொண்டாள். உண்மையில் அவளுக்கு என்னவோ விட்டுத்தான் போயிருந்தது.
சொல்லி வைத்ததுபோல் எந்தக் குறையும் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் குழந்தை இல்லை என்ற குறை மிகப்பெரியதாக மாறி அவளைச் சுழற்றி அடித்தது. வெளியில் எல்லோரும் போல் சிரித்து எல்லோரும் போல் உடுத்திக் கொண்டாலும் உள்ளே எப்போதும் ஒரு கரும்பாறையைச் சுமந்துகொண்டே நடப்பது போல் இருந்தது. ஏனோ ஒரு கருகூட தங்கவே இல்லை. ஒவ்வொரு மாதமும் சரியாக உட்கார்ந்தாள். தள்ளிப் போனதுகூட இல்லை. யாரும் இவளை மலடி என்றோ வேறுவிதமாகவோ பெரிதாகக் குறை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் பார்வையிலேயே அடுத்து அவர்கள் கேட்க வரும் கேள்வியை இவளால் படிக்கமுடிந்தது. முதலில் அழுகை, பின்பு கோபம், பின்பு சலிப்பு, பின்பு அவளே முந்திக்கொண்டு சொல்லிவிடுவாள். ‘டாக்டர்ட்ட காமிச்சிட்டுத்தான் இருக்கோம்.’ மிக சமத்காரமாக சித்ரா அத்தை ‘நா கேக்கலியே இப்போ’ என்று சொல்லிவிட்டு, ‘அதெல்லாம் வரும், ரெண்டு பேர் வீட்டுலயும் புள்ளைக்கா குறைச்சல்’ என்பாள்.
சந்துரு எதிர்க்காற்றின் சுகத்தில் உறங்கத் தொடங்கியிருந்தான். நான்கு நாள்களாகவே அவனுக்கு உறக்கமில்லை. எப்போதும் ஒரு பதற்றத்தில் இருப்பதை அவள் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். இவளுக்குள்ளும் பெரிய பதற்றம் இருந்தது. 35 வயதில் ஓடியாடி ஒரு குழந்தையை வளர்க்க முடியுமா? ஆனால் அதை மீறிய நம்பிக்கை இருந்தது. வெறி இருந்தது. கல்யாணம் ஆகி பத்து வருடங்களில் ஒரு குழந்தையில்லை என்பது அத்தனை பெரிய விஷயமா? கையில் ஒரு ரோஜாக்கூட்டத்தின் பஞ்சுப்பொதியென வெளிர்சிகப்பு நிறத்தில் சிசு ஒட்டிக்கிடக்கும்போதுதான் தெரிகிறது, அது நிஜமாகவே ஒரு பெரிய விஷயம்தான் என.
குழந்தையை உடலோடு இறுக்கிக்கொண்டாள். சந்துரு அவள் தோள்மேல் சாய்ந்து விழுந்தான். ஏனோ அவளுக்கு நிறைவாக இருந்தது. காரணமில்லாமல் கண்ணீர் வந்தது. குழந்தை இல்லை என்று இனி அழவேகூடாது என முடிவெடுத்தது நினைவுக்கு வந்தது. குழந்தையை மெல்லத் தூக்கி முகர்ந்து பார்த்தாள். ஆசை தீர அழவேண்டும் போல் இருந்தது. மீண்டும் முகர்ந்தாள். உடலெங்கும் பால் வாசனை. மீண்டும் மீண்டும் முகர்ந்தாள். முத்தமிட்டாள். அவள் உள்ளம் வெறிகொண்டது. சந்துரு இவளைக்கிடத்தி உடலெங்கும் நுகரும்போது ‘இது என்ன லூஸாட்டம்’ என்றபோது அவன் சொன்னான், ‘ஒரு வெறின்னு வெச்சிக்கோ. ஒனக்குப் புரியாது’ என்று. இதுவும் அதே போல்தானா? அல்லது வேறு ஒரு விதமா? ஆனால் நிச்சயம் இது ஒரு வெறிதான். எல்லாமே தன்னுடையது என்னும் வெறி. உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவி கால் நுனி பலமிழந்து தலைசுற்றுவது போல் இருந்தது. ஒரு கையில் சந்துருவைப் பிடித்துக்கொண்டாள். அந்த வெறியுடன் முதல்முறை அவன் இவள் கையைப் பிடித்தபோது இருந்த அதே வேகம் அவளுக்குள் இப்போது இருப்பதை உணர்ந்துகொண்டாள்.
திடீரென கேட்ட மொபைல் சத்தத்தில் குழந்தை தூக்கம் கலைந்து சிணுங்கி அழுதது. சந்துரு பதறி போனை எடுத்தான். உமா சந்துருவை முறைத்துக்கொண்டே குழந்தையை கையில் ஊஞ்சல் போல வைத்துத் தாலாட்டினாள். சந்துரு போனில் என்னவோ பேசினான். அவன் முகம் கொஞ்சம் கலவரமடைந்தது போல் இருந்தது. போனை வைத்தவுடன் அவள் அவனிடம் ‘யாராம்?’ என்றாள்.
‘சித்ரா அத்தைதான். அம்மா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம். பின்மண்டைல அடியாம். ஒரு மணி நேரமா நம்ம கூப்பிடுறாளாம், லைனே கிடைக்கலியாம். சீரியஸா ஒண்ணும் இல்லையாம்’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பார்த்தான்.
அவள் குழந்தையை அவளுக்குள் மறைத்தவாறே ‘உங்க அம்மா விழறது மொதவாட்டியா’ என்றாள்.
குழந்தையின் நட்சத்திரத்தையும் ராசியையும் சொல்லி குழந்தையைப் பெற்றவள் ஒரு முறத்தில் வைத்து தன்னிடம் ஒப்படைத்தபோது உமா சொன்னாள், ‘கடைசியா தாய்ப்பால் தந்துட்டு கொடுங்க. அதோட சரி. உங்களுக்கும் அதுக்கும் ஒரு உறவுமில்ல’ என்றாள். சந்துரு ‘சும்மா கெட’ என்றான். உமா பதிலுக்கு ‘நீங்க சும்மா கெடங்க’ என்றாள். அவள் சொன்னதை உடன்வந்த உமாவின் அக்கா கணவன் ஹிந்தியில் அந்தப் பெண்ணுக்குச் சொன்னான். அந்தப் பெண் கண்ணீருடன் ‘புரியுது’ என்று சொன்னதாக உமா ஊகித்தாள்.
அவளுக்கு 55 வயது ஆகியிருந்தது. உடல் பருத்து நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் கஷ்டப்பட்டாள். அவள் மகளுக்கு 23 வயது. எதிர்பாராமல் இந்த 55 வயதில் ஒரு குழந்தை. அந்தக் குடும்பத்தால் இதை எதிர்கொள்ளமுடியவில்லை. அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த உமாவின் ஒன்றுவிட்ட அக்கா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அந்தப் பெண்ணின் குடும்பம் தனக்குத் தெரிந்ததுதான் என்றும் குழந்தையை யாருக்காவது தத்து கொடுக்கப்போகிறார்கள் என்று கேள்விப்படுவதாகவும் உமாவுக்குச் சரியென்றால் தன் கணவனைப் பேசச்சொல்வதாகவும் சொன்னாள்.
முதலில் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா என்று சந்துரு பல வருடங்களுக்கு முன்பு கேட்டபோது உமா அழுதுகொண்டே ‘எனக்கு வக்கில்லன்றீங்களா இல்ல உங்களுக்கு வக்கில்லயா’ என்று கேட்டதை பல நாள் சந்துரு மறக்கவே இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குப் பின் தத்து என்ற பேச்சை அவன் எடுத்ததே இல்லை. திடீரென்று உமா அவனைக் கூப்பிட்டு ‘ஒரு குழந்தை இப்ப ரெடியா இருக்காம். குஜராத்லேர்ந்து மாலினி அக்கா கூப்பிட்டா. அகமதாபாத்துக்கு உடனே போகணும்’ என்றபோது, அவளுக்குள் இருப்பது கோபமா உறுதியா குழப்பமா அல்லது அவசரமா என்பதை இவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
வீட்டின் ஓர் அறையில் நடக்கமுடியாமல் கட்டிலில் கிடக்கும் அம்மாவிடம் சென்று ‘கொழந்த தத்து எடுக்கலாம்னு அவ சொல்றா’ என்று சொல்லவும், இடுப்பு ஒடிந்து நடக்கமுடியாமல் தன் பெரிய வயிற்றை கட்டிலின் மீது கிடத்தி ஒரு ஓரமாகச் சாய்ந்து படுத்திருந்த அம்மா, கண்கள் சொருகி என்ன நடக்கிறதென்றே உணர்வில்லாமல் இருந்த அம்மா, மூத்திர நாத்தத்தில் சோர்ந்து கிடந்த அம்மா, அவன் எதிர்பாராத வேகத்தில், உயர்ந்த குரலில் ‘எவ குழந்தைய எவ வளக்கது? என்ன சாதி என்ன எழவுன்னு தெரியாததெல்லாம் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது, சொல்லிப்புட்டேன்’ என்று சொல்லிவிட்டாள்.
அந்த அறைக்கு வெளியே நின்றிருந்த உமா அதற்கெல்லாம் அசரவே இல்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. உமா ஒரு பயந்த சுபாவம் உள்ளவள் என்று மட்டுமே சந்துரு நினைத்திருந்தான். உள்ளூர சின்னதாக ஒரு வீம்பு உண்டு என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இத்தனை தைரியம் அவளுக்குள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. தத்து குழந்தை வேண்டாம் என்றபோதும் அதே உறுதி, இப்போது வேண்டும் என்னும்போதும் அதே உறுதி. இவளைப் புரிந்துகொள்ளவே இல்லையோ என்றும் நினைத்தான். அம்மாவின் அறையை விட்டு வெளியே வந்தவனிடம் மிக நிதானமாக கொஞ்சம் குரலை உயர்த்தி அவன் அம்மாவுக்கும் கேட்கும் வண்ணம் சொன்னாள், ‘உடனே கிளம்பணும்’ என்று. உள்ளே அம்மா விசும்பும் குரல் கேட்டது. சந்துரு ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உமாவுடன் கிளம்பிப் போனான். போகும் வழியில் ரயிலில் அவனிடம் ‘அதென்ன எழவுன்றது? உங்கம்மாவுக்கு இருக்கு ஒரு நாள்’ என்று சொன்னாள். சந்துரு ‘விடு’ என்றான்.
‘கோர்ட்ல எழுதி வாங்கணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். இன்னைக்கு நல்ல நாளு, குழந்தையை வாங்கிக்கோங்க’ என்றான் கூட வந்த உமாவின் அக்கா கணவன். பெற்றவள் குழந்தையை கடைசியாக ஒரு தடவை முத்தமிட்டுவிட்டு உமாவிடம் தந்தாள். உமா கைகள் நடுங்க கண்ணீர் கலங்க குழந்தையைப் பெற்றுக்கொண்டு அவளிடம் ‘இனிமே என்னையும் என் குழந்தையை மறந்துடுங்க’ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் வெளியேறினாள். பின்னால் அழும் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெள்ளமென தன்னைச் சூழும் முன்பு அதைக் கடந்துவிடவேண்டும் என்று எண்ணி குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடுபவள் போல விரைந்து நடந்தாள்.
காற்றில் அசையும் பொருள்களின் ஒலியைக் கேட்டு ட்ரைனில் மலங்க மலங்க விழித்துக்கொண்டு வந்தது குழந்தை. எல்லா வகையிலும் சட்ட ரீதியாகவும்கூட இனி இது தன் குழந்தை என்ற நினைப்பே அவளை மலரச் செய்தது. குழந்தை அவள் மேல் ஒண்ணுக்கிருந்தபோது வாயை மூடிச் சிரித்தாள். சுற்றிலும் யாருமே இல்லாததுபோல் தனது உலகத்தில் தன் குழந்தையுடன் தான் மட்டுமே இருப்பதாக அவள் நடந்துகொண்டாள். இனி சித்ரா அக்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். மாமியாரின் முகத்தை தைரியமாக ஏறெடுத்துப் பார்க்கலாம். குழந்தையைப் பாக்கதே பெரிய பாடா இருக்கு என்று உறவினர்களிடம் அலுத்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும்விட சந்துரு இழுத்துப்பிடித்து இறுக்கும்போது இந்த வாட்டியாவது குழந்தை பிறக்குமா என்ற எண்ணம் இல்லாமல் அவனுக்கு ஈடுகொடுக்கலாம்.
‘அம்மாவுக்கு எப்படி இருக்கோ?’ என்றான் சந்துரு. உடனே உமா ‘சித்ரா அத்தை குழந்தை வந்த நேரம்னு ஆரம்பிக்காம இருக்கணும். இதுல குழந்தையோட நட்சத்திரமும் ராசியும் உங்கம்மாவோட நட்சத்திரமும் ராசியும் ஒண்ணு. சித்ரா அத்தை என்ன என்ன பேசப்போறாளோ’ என்றாள். ‘அவ வாய் மட்டும்தான், உள்ள ஒண்ணும் இல்ல. நீ அவ பேசறதையெல்லாம் காரியமாக்காத’ என்றான். அவள் கொஞ்சம் யோசித்து, ‘ஒங்களுக்குமே அப்படி தோணுதோ’ என்றாள். அது காதில் விழாதது போல, குனிந்து குழந்தையைப் பார்த்துச் சிரித்து, குழந்தையைச் சுற்றியிருந்த துணியை நன்றாக முழுக்க மூடிவிட்டான். ‘பொம்பளை குழந்தை. இப்படி கிடைக்கிறதெல்லாம் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். எழுதி வெச்சி காத்துக்கிட்டு இருக்கிறவங்களுக்கே கிடைக்கலை. அந்தம்மா பணம்கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம், நல்லா வளர்த்தா போதும்னு சொல்லிட்டாங்களாம், உங்கக்கா வீட்டுக்காரன் சொன்னான்’ என்றான். உமாவுக்கு கண்ணீர் துளிர்த்தது. யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘பேரு என்ன வெக்கலாம்? எங்க வீட்டுல அம்மா பேரை வைக்கதுதான் வழக்கம்’ என்றான். உமா பதிலே பேசாமல் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ட்ரைனை விட்டு இறங்கி ஆட்டோவைப் பிடித்து வீட்டுப் படியேறும்போது சந்துருவுக்கு ஏனோ பயமாக இருந்தது. உமா எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாசலில் நின்று சத்தமாக ‘சித்ரா அத்தை, ஆரத்தி கரைச்சு வெக்க சொன்னேனே, கொண்டு வாங்க’ என்றாள். சித்ரா அத்தை வேகமாக ஆரத்தியுடன் வந்து எதுவும் சொல்லாமல் ஆரத்தி எடுத்துவிட்டு, சந்துருவிடம் மெல்ல ‘அம்மாவுக்கு நல்ல அடி, ஆஸ்பத்திரி வேணாங்கா, இந்த தடவை பொழைக்கறது கஷ்டம்தான்’ என்றாள். சந்துரு வேகமாக உள்ளே ஓடினான். வலது காலை எடுத்து வைத்து நிதானமாக உள்ளே சென்ற உமா, மாமியாரின் அறை வாசலில் ஓரமாக நின்றுகொண்டாள்.
சந்துரு அவன் அம்மா படுத்துக்கிடந்த கட்டிலில் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு ‘என்னம்மா எப்படி இருக்க? ஹாஸ்பிடல்ல வெச்சு பாத்தா சரியாயிடும்’ என்றான். அவள் கண்கள் எதையோ தேடி வாசலில் நின்ற உமாவிடமும் உமா கையில் இருந்த குழந்தை மீதும் நிலைத்தன. சந்துரு ‘பொம்பள குழந்தைம்மா’ என்றான். அவள் கண்களில் நீர் வழிந்தது. ‘உள்ளே வரச் சொல்லு’ என்றாள். ‘இல்லம்மா, ஒனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும்… வேற வழி தெரியலைம்மா… இப்படி கிடைக்கிறதே அதிர்ஷ்டம்’ என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.
அவள் சொன்னாள், ‘அது எப்ப நம்ம வீட்டுக்குள்ள வந்துடுச்சோ, அது நம்ம வீட்டுக் குழந்தை. என்னவோ தோணிச்சு அப்ப சொன்னேன். இப்ப இப்படி தோணுது இப்படி சொல்றேன். இப்ப சொல்றதை எடுத்துக்கோ. உள்ள சாமி ரூம்ல அட்சதை இருக்கு, எடுத்துட்டு வா’ என்றாள்.
வெளியில் நின்றிருந்த உமா சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சந்துருவின் அம்மா குரலை உயர்த்தி ‘எல்லாம் போதும். வேணுங்கிறது அழுதாச்சு. இதுதான் கடைசி. அழுது முடி’ என்றவள், ‘ஏய் சித்ரா, அந்த அட்சதையைக் கொண்டு வா’ என்றாள். அட்சதை கொண்டு வந்த சித்ராவிடம் ‘என் ராசியாம்லா. எனக்கு சாவே இல்லைல்லா’ என்றாள். அதற்கு அவள், ‘குழந்தை அப்படியே உங்க ஜாடைல இருக்கு’ என்றாள்.
oOo
ஒளிப்பட உதவி – Pinterest
சிசு கதையை பற்றி
வெளியில் நின்றிருந்த உமா சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி
அழுதுகொண்டிருந்தாள். சந்துருவின் அம்மா குரலை உயர்த்தி ‘எல்லாம் போதும்.
வேணுங்கிறது அழுதாச்சு. இதுதான் கடைசி. அழுது முடி’ என்றவள், ‘ஏய் சித்ரா,
அந்த அட்சதையைக் கொண்டு வா’ என்றாள். அட்சதை கொண்டு வந்த சித்ராவிடம் ‘என்
ராசியாம்லா. எனக்கு சாவே இல்லைல்லா’ என்றாள். அதற்கு அவள், ‘குழந்தை அப்படியே
உங்க ஜாடைல இருக்கு’ என்றாள்.
சற்றும் எதிர்பாராத அட்டகாசமான ஒரு முடிவை தந்து சிசு கதையை ஹரன்
முடித்துள்ளார்.
நன்றி
அன்புடன்
தி.வேல்முருகன்
எல்லாக் குழந்தைக்கும் தன் biological mother -இடம் வளர உரிமை இருக்கிறது. அதை நாம் போய் பறிக்க முடியாது. அம்மா அப்பாவே யார் என்று தெரியாத, அல்லது அவர்களை இழந்துவிட்ட குழந்தைகளைத்தான் தத்து எடுக்கலாம்.