‘அந்தத் தேரும் வீதியும் நிறைய மாறியிருக்கின்றன’- நித்ய சைதன்யா

பதின்பருவத்தில் பித்தேறி அலைந்த அந்நாட்களைத் தேடி சொந்த ஊருக்குச் சென்றால் பதினைந்து ஆண்டு இடைவெளியில் நான் வாழ்ந்த எதுவும் இல்லை, அல்லது அவையெல்லாம் உருமாறியிருந்தன. சொந்த ஊரும் தாமிரபரணியின் தண்ணென்ற நீரும் எனக்கு அவளாக மட்டுமே தெரிந்தது. என் பயணமே அவளின் நினைவுகளை மீட்டு எடுத்துவிடும் நோக்கம் கொண்டதே. இன்று முதிரா காதல் என்றும் சிறுபிள்ளை விளையாட்டு என்றும் கருதினாலும் அக்காலத்தில் அது அப்படியல்ல. ஆறு மணிக்கு அவள் குளிக்கவருவாள் என்கிற உணர்வோடு ஒவ்வொரு இரவும் திரைவிலகத் துடித்தலையும். அதிகாலையில் குளிர்நடுங்க ஆற்றின் நீரோட்ட சலம்பலில் நானும் காதுகொடுத்து அமர்ந்திருப்பேன். நல்லரவும் சாரையும் சிலசமயம் எனை அஞ்சி விலகிச்செல்லும்.

வெகு தொலைவில் ஒரு ஊதா நிறப்புள்ளியாக அவள் வருகை தென்படும். உள்ளம் ஆனந்தக் கூத்தாடும். கைவிரல்களில் காற்றில் அலையும் ஒரு பதற்றம் தொற்றும். ஊரே என்னை உற்று நோக்கும் மனபாவனையும் இளம் இருளுக்குள் கண்காணிக்கும் விழிகள் குறித்தும் பயம் தோன்றும். அருகில் நெருங்கி வர இதயம் வாய்க்குள் வந்து நிற்கும் திகைப்பு. அவள் என்னை எப்போதும் போல ஒரு பெண்பார்வை பார்த்துச் செல்வாள். அவள் தோழிகளிடம் ஏதோ சொல்லிச் சிரிப்பாள். நதிக்கரைக்கு அவளின் வருகைக்குப்பின் சங்கீத ஞானம் சற்று கூடுதலாகத் துவங்கும். மரக்கிளைகளில் அமர்ந்துள்ள கிளிகள் உள்பட பறவைகளும் என்னுடன் பறந்தமர்ந்து பறந்து செல்லும்.

அவள் வாழ்ந்து சென்ற வீடு இன்று மல்டிலெவல் காம்பளெக்ஸாகி பளபளக்கிறது. நான்கு ரத வீதிகளில் தினமும் காலை மாலை என இரண்டு முறையும் வலம் வருவேன். மிகுதியும் காலத்தை சுமந்து நிற்கும் தேருக்குப் பின் அமர்ந்து அவள் வரும் கணங்களுக்காக காத்திருப்பேன். இன்று அந்தத் தேரும் வீதியும் நிறைய மாறியிருக்கின்றன. எனக்குள் பதிந்திருந்த தெருவும் ஊரும் எங்கு சென்றன?

நதியின் நளினத்தை வெறித்து நின்றபோது யதேச்சையாக காண நேர்ந்த மல்லிகைச் சரம் சூரியக்கதிரில் சுடர்ந்து மனதிற்குள் ஒரு திடுக்கிடலுடன் மிதந்து சென்றது. காணும் மலரெல்லாம் அவள் சூடியதன்றி வேறென்ன?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.