கோணல்கள் – முதற்பதிப்பின் முன்னுரை

அட்டைப் படம்: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி

‘குருஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது. – அசோகமித்திரன் (முன்னுரை – புதிய தமிழ்ச் சிறுகதைகள்)

இந்தப் பன்னிரண்டு கதைகளும் இதுவரை எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் வெளிவராதவை. தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்கிற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை. பத்திரிகைகளின் பந்த நிர்ப்பந்தங்களை மீறியும், இலக்கிய பூர்வமாகவும் சிந்திக்கிற நான்கு பேர் தாங்களாகவே வெளியிட்டிருக்கிற சிறுகதைத் தொகுப்பு இது. இக் கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றைய சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை. தப்பித் தவறி ஒன்றிரண்டு பிரசுரிக்கப்படுகிற வாய்ப்பு உண்டு என்று யாரேனும் சொல்வீர்களேயானால், அது பத்திரிகை ஆசிரியர்களும் சமயங்களில் அவர்கள் அகராதிப்படி நிதானம் இழக்கக்கூடும் என்பதைத்தான் நிரூபிக்குமே அன்றி அவர்களின் இலக்கியப் பிரக்ஞையை நிரூபிக்காது.

இந்த சிருஷ்டிகர்த்தாக்கள் நன்கு பெரும் என்னோடொத்தவர்கள்; எனக்குச் சம காலத்தவர்கள் என்பதினாலேயே இவர்களின் கனவுகள், கற்பனைகள், இவர்கள் தேடி அலைகிற உண்மைகள், உணரத் துடிக்கிற அனுபவங்கள் என்னைப் பெருமளவில் பாதிக்கின்றன. வாசகன் மனத்தில் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தத் தேவையான Creative Tension சிருஷ்டி கர்த்தாவுக்கு மிக அவசியம். மனித சமூகத்தில் அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள், மதிப்பீடுகள் அவ்வளவாக மாறவில்லை என்றே சொல்லவேண்டும். இக் குணாதிசயங்களை, மதிப்பீடுகளைப் புரிந்துகொள்கிற கலைஞன், வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டவன் ஆகிறான். அவனது சிருஷ்டிகள் உயிர்த் துடிப்பும், அர்த்த புஷ்டியும் நிரம்பப் பெறுகின்றன. அவை சமகாலத்திற்கு மட்டுமில்லாமல் மனித பரம்பரைக்கே உரியனவாய் ஸ்தாபிதம் பெறுகின்றன.

சிறுகதை இப்படி, இப்படி அமையவேண்டும் என்று திட்டம் அமைத்துக் கொடுத்த முதல் இலக்கிய ஆசிரியர் எட்கர் ஆலன்போ. சிறுகதையின் முக்கிய நோக்கம் single effect உருவாக்குதல் என்றும், இந்த single effectஐத் திறம்பட உருவாக்குகிற வகையிலேயே கதையின் உருவம் அமையவேண்டும் என்றும் சொன்ன எட்கர் ஆலன் போ, கடைசியாய் சொன்ன விஷயம் மிகவும் முக்கியமானது: “எந்த ஒரு வார்த்தையையும் எடுக்க முடியாதபடி, கதையின் முதலும் முடிவும் மாற்ற முடியாதபடி அமைவதுதான் சிறுகதை”.

இப்படிச் சிறுகதை எழுதினவர்களில் மாப்பஸான் பெயரைத்தான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மாப்பஸான் கதைகளில் plot என்பது முக்கியமான அம்சம். உருவ அமைப்புப் மாற்ற ஒண்ணாத விதத்தில் அமைந்திருக்கும்.

சிறுகதையில் வார்த்தைகளின் பங்கு முக்கியமானது. ஆனால் ஓவியம் மாதிரி வார்த்தைகள் புலன்களைத் தொடுவது சிரமம். ஒரு இலக்கிய ஆசிரியன் தன் மேதாவிலாசத்தால் புலன்களைனைத்தையும் தொடும் விதத்திலும் எழுத முடியும். இப்படி எழுதினவர்களில் முக்கியமானவர்கள்- பத்திரிக்கைத் தொழிலுடன் தொடர்ப் கொண்டவர்களான – கிப்ளிங், ஸ்டீபன் கிறேன், ஹெமிங்க்வே ஆகியவர்கள்.

ரஷ்ய எழுத்தாளரான கோகோல், புற உலகைப்பற்றி கதைகள் எழுதிய போதிலும், அவற்றை மனோ தத்துவ ரீதியில் எழுதினார், கதையில் செயலுக்கு சமானமாக, எண்ணத்திற்கும் இடம் கொடுத்தவர்கள் ரஷ்ய எழுத்தாளர்களான துர்கனேவும், செஹாவுமே.

செஹாவ் கதைகளில், கதாபாத்திரங்களின் அடிப்படை குணாதிசயங்கள், குறிப்பட்ட சூழ்நிலைக்கு மட்டும் பொருந்துவதாய் இல்லாமல் பிரபஞ்ச ரீதியில் இருக்கும். செஹாவ், வாழ்க்கையின் அடி நாதத்தை குறிப்பால் உணர்த்தியவர்; மனோ தத்துவ ரீதியில் சிறுகதையின் எல்லையை விரிவுபடுத்திக் கொடுத்தவர்.

சிறுகதையின் சக்தி சகல விஷயங்களையும் எடுத்துப் பேசுவதில்தான் உள்ளது. சிறுகதைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிற விஷயம் இன்னதுதான் என்று கட்டுபாடு எதுவும் கிடையாது. உருவகமாக, நீதிக் கதையாக சிறுகதை வடிவம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இருந்து வந்திருக்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டதாக, யதார்த்தமாக, முழுக் கற்பனையாக, குரூரமாக, சாமான்யமாக இப்படி அநேக விதங்களில் இந்த நூற்றாண்டில் சிறு கதைகள் எழுதப்பட்டிருந்தன.

மேலை நாடுகளில் கவிதை செத்துப் போய்விட்டது என்று ஒரு நூறு வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்பொழுது சிறுகதையும் செத்துப் போய்விட்டது என்று பேசப்படுகிறது. சமீப காலத்திய அமெரிக்க, ஐரோப்பிய சிறுகதைகளைப் படிக்க நேர்கிற யாரும் இடஹி ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

ஆனால் நம்முடைய தேசத்தில் சிறுகதையின் நிலைமை மாறுபட்டது. அதிர்ஷ்டவசமாக அதற்கு இன்னமும் நல்ல வாய்ப்பிருக்கிறது.

ஐரோப்பிய சிறுகதை உருவத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் – அதைத் திறம்படவும், சுயமாகவும் கையாண்டவர் ரவீந்திரநாத் தாகூர்.

தமிழில், மாப்பஸான் பாதிப்பினால் சிறுகதை எழுத ஆர்மபித்தவர்கள் என்று புதுமைப்பித்தன், கு.ப.ரா இருவரையும் சொல்லலாம். வாச்கானுக்கு அதிர்ச்சி தரவேண்டும் என்கிற வேகத்துடனேயே கதைகள் எழுதியவர் புதுமைப்பித்தன். இந்த ‘அதிர்ச்சி வேகம்’ சோதனைக் கதைகளின் இன்றியமையாத அம்சம். புதுமைப்பித்தனின் சொல்லாட்சி வாசகனை பிரமிப்பில் ஆழ்த்தவல்லது. இதிகாச, சரித்திர, சமூகச் சூழ்நிலைகளில் தன் சிறு கதைகளை அமைத்த இவரது கலையின் எல்லைகள் விரிவானவை.

கு.ப.ரா. Sex-ஐ அதற்குரிய முரண்பாடுகளோடு, இருபதாம் நூற்றாண்டு மனவியல் நிபுணர்கள் ஆராய்ந்து, அதன் மேல் ஏற்றிவைத்த சிந்தனை வளத்தைத் தாங்குகிறவிதத்தில் கையாண்டவர. எடுக்க முடியாதபடி, மாற்ற முடியாதபடி வார்த்தைகளைச் செதுக்கி அமைத்தவர் இவர். இவரது சிறுகதைகள் நளினமாகவும், நிதானமாகவும் எழுதப்பட்டவை.

அதீத கற்பனை உலகம் ஒன்றைத் தன சிறுகதைகளில் சிருஷ்டித்தவர் ‘மௌனி’. சாதாரண வார்த்தைகளைக் கொண்டே, முற்றிலும் புதிய, இலக்கியத் தரமான சூழ்நிலையை (atmosphere) உருவாக்க முடிந்தது இவரால்.

இவர்கள் மூன்று பேரில் யாருடைய பாதிப்பும், அல்லது வேறு எந்தத் தமிழ் சிறுகதை ஆசிரியரின் பாதிப்பும் இல்லாமலே ‘கோணல்கள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்கள் நான்கு பெரும் எழுதியிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.

மனித உணர்வுகளின் மெல்லிய இழைகளை நுட்பமாய் சித்தரிக்கிறது ‘உயிர்கள்’ என்ற சிறுகதை. இக்கதையில் காதல், சாவு என்கிற விஷயங்கள் குறிப்பாகவும், கலையழகுடனும் கையாளப்பட்டிருக்கின்றன. கனவுகள் கலையப்பெறாத இளைஞன் தானாகவே சமூகத்திலிருந்தும், குடும்பத்திடமிருந்தும் கூட ஒதுங்கிக் கொள்கிறானா அல்லது மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகின்றானா என்பது பழைய கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுகிற கதைகள் – கோணல்கள், சங்கரராமின் நாட்குறிப்பு- கலைக்கு இவை கனமான விஷயங்கள்; எனவேதான் நடைகூட படிப்பதற்கு சிரமம் தருகிறது.

சம்பாஷணையாகவே எழுதப்பட்டிருக்கிற ‘மரக்கப்பல்’ என்கிற சிறுகதையில் கிண்டல் பளிச்சிடுகிறது. ‘நட்சத்திரம் கீழே இருக்கிறது’ என்னும் சிறுகதை இரண்டு இளைஞர்களின் ஏக்கங்களை சுவாரஸ்யமாய் சொல்லுகிறது.

பழைய உலகத்திற்கும் புதிய உலகத்திற்கும் ஏற்படுகிற போராட்டம் ‘காலம் என்னும் தூரம்’ என்கிற கதையில்- ஆசிரியர் எந்தப் பக்கமும் சார்ந்து நிற்காமல் சொல்லப்பட்டிருக்கிறது. உதிரும் மலர்கள், மனிதர்கள் – இந்தக் கதைகளில் விடம்பனப் பார்வை தலைதூக்கி நிற்கிறது.

இந்த நால்வரிடத்திலும் சொல்வதற்கு ஏராளமாகவே விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையும் தீர்க்கமாகவும், கலைச் செறிவுடனும் எதிர்காலத்தில் இவர்கள் சொல்லியே தீருவார்கள் என்கிற நம்பிக்கையோடு இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன்.

ஆர் சுவாமிநாதன்

தி. நகர்,
14.11.1967

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.