ஏன் எழுதுகிறேன்? – ரவி நடராஜன்

ரவி நடராஜன்

தமிழில் வழக்கமான விஷயங்களை எழுத எனக்குப் பிடிக்காது.

அலுவலகத்திற்குப் புறநகர் ரயிலில் பயணம் செய்வது எனது அன்றாட வழக்கம். சமீபத்தில் எழுதிய தொழில்நுட்பக் கட்டுரை ஒன்றை அச்சடித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அதே ரயிலில் பயணம் செய்யும் தமிழ் நண்பர் ஒருவர், தமிழில் ஏதோ படித்து/திருத்திக் கொண்டிருந்த என்னிடம்,

“என்ன தமிழ்க் கவிதையா?” என்றார்.

“நாளைய தொழில்நுட்பம் பற்றி தமிழில் எழுதி வருகிறேன். சரிபார்க்க ரயில் பயணம் சரியாக இருக்கிறது”, என்று சொன்னவுடன், அவசரமாக வேறு தலைப்பிற்குத் தாவினார். இத்தனைக்கும், தொழில்நுட்பத் துறைதான் அவருடைய தொழிலும்! சத்தியமாக, நான் தமிழில் வழக்கத்திற்கு மாறான விஷயங்களைச்  செய்யும் பைத்தியம் என்று அவர் நினைத்திருப்பார். அவருடைய பார்வையில், கவிதை எழுதுவதற்கான ஒரு மொழி தமிழ். மற்றபடி வீட்டில் குடும்பத்தாருடன் பேசவும் பழகிய ஒரு மொழி. அதைத் தாண்டி ரஜினி, கமல், இளையராஜா, ரகுமான், கருணாநிதி, ஜெயலலிதா விவாதிக்க தோதான மொழி. அவ்வளவுதான்.

என்னுடைய இன்னொரு நண்பர், என்னுடைய எழுத்துக்களைப் படிக்கும் எழுத்தாளர். வீட்டிற்கு வந்த சில நண்பர்களிடம்,

“இவர் தமிழில் நிறைய எழுதி வருகிறார்”  என்றார்.

உடனே மற்ற நண்பர்கள், “குமுதத்திலா, விகடனிலா எழுதுகிறீர்கள்? நீங்கள் சிறுகதையா இல்லை தொடர்கதை எழுத்தாளரா?” என்று அடுக்கினார்கள். விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்பம் என்று சொன்னால் போதும், உடனே சுஜாதாவிற்குத் தாவிவிடுவார்கள். இந்தத்  தமிழ் எழுத்தாளனை முழுவதும் மறந்து நைலான் கயிறு/கரையெல்லாம் ஷெண்பகப்பூ கதைக்கு உரையாடல் தாவிவிடும். தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் எல்லாம் ஒத்து வராது என்று சொல்வதோடு நிற்காமல், “மடிக்கணினி என்றால் யாருக்குப் புரியும்? தமிழால் ஆங்கிலத்துக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாது. நாமெல்லாம் ஆங்கிலத்தில்தானே படித்தோம். அதனால்தானே இன்று வேலையில் இருக்கிறோம்” என்று 300 ஆண்டு பழைய பல்லவியைப் பாடுவார்கள். அதை மீறி சில விவாதங்களை முன் வைத்த பொழுது, என்னை சற்று அடாவடி அல்லது பைத்தியம் என்று முடிவு கட்டியிருப்பார்கள் என்பது என் எண்ணம்.

சரி, தமிழில் எழுதுவதால் நாம் புகழ் பெற முடியுமா? ?

என்ன அபத்தமான கேள்வி! முதலில் தமிழர்கள் அதிகம் படிப்பதே இல்லை. படித்தாலும், அரசியல் மற்றும் சினிமாதான் கல்லூரிப் படிப்பைத் தாண்டி, தமிழில் படிக்கிறார்கள். சிலர், கவிதை, சிறுகதை, மற்றும் தொடர்கதை படிக்கிறார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்பது வேலை கிடைக்க ஒரு கருவி. வேலை கிடைத்தவுடன் தொழிலுக்கு தேவையானதை ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு தமிழைப் பின்னுக்குத் தள்ளுவதுதான் முதல் வேலை J

இப்படியிருக்க ஏன் தமிழில் எழுதுகிறேன்?

எனக்கு விஞ்ஞான தர்க்கரீதியான சிந்தனைதான் பிடித்திருக்கிறது என்பதால், கவிதை சரிப்பட்டு வராது. “மெர்க்குரிப் பூக்களே, செவ்வாய்க் குளங்களே” என்று எழுதுவது எனக்கு மிகவும் பித்தலாட்டமாகத் தெரிகிறது (விஞ்ஞானப்படி இரண்டும் சாத்தியமில்லை. மெர்க்குரியில் வெப்பநிலை 188 டிகிரி, செவ்வாயில் கடும் குளிர், -55 டிகிரி). கவிதை எழுத பல்லாயிரம் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கட்டுரை ஒன்றை 2009 –ல் எழுதப் போய், 30 வருட இடைவேளைக்குப் பிறகு, சில பக்கங்கள் தமிழில் எழுத முடிகிறதே என்ற மகிழ்ச்சிதான் முதல் படி.

சரி, சில சின்ன முயற்சிகள் செய்யலாமே என்று வெவ்வேறு தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி கட்டுரைகள் எழுதி, அவை வெளி வந்தவுடன், மேலும் பத்திரிகை ஆசிரியர்கள் ஊக்குவிக்க, ஏன் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தமிழில் எழுதக்கூடாது என்று தோன்றியது.

தமிழ் மிகவும் பழைய, ஆனால் ஏழை மொழி. தொழில்நுட்பக் கல்வியிலும் அறிவியல் செல்வாக்கிலும் அதிகம் முன்னேறாததால், இன்னும் பழமையாகவே உள்ளது. இத்தனை காலம் தாக்கு பிடித்ததே பெரிய விஷயம் என்றாலும், இனியும் இணைய உலகில் தாக்கு பிடிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ரஜினியும், ஜெயலலிதாவையும் வைத்து ஜல்லியடித்து இணையத்தில் தமிழைக் கரையேற்ற முடியாது. தமிழின் ஏழ்மை, அதில் அதிக வகைவகையான விஷயங்கள் இல்லாததே. ஏன் தமிழர்கள் தமிழ் என்றவுடன் கருணாநிதியையோ அல்லது வைரமுத்துவையோ முன் வைக்கிறார்கள் ? இந்த இருவரின் தமிழும் பழைய விஷயம். சுஜாதாவின் முயற்சிக்கு மேல் தமிழ் விஞ்ஞான/ தொழில்நுட்ப உலகில் வளரவேயில்லை.

தொழில்நுட்பத்திற்கு செண்டிமெண்ட் கிடையாது, பிரிடிஷ் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளிய அமெரிக்க ஆங்கிலம் இன்றைய இணையத்தின் சிந்தனை மொழி. பிரிடிஷ் ஆங்கிலத்திற்கே இந்த நிலை என்றால், தமிழ் சில காலங்களில் மறக்கப்பட்ட மொழியாக வாய்ப்புள்ளது.

மூன்று விஷயங்கள் தமிழில் தொழில்நுட்ப/ விஞ்ஞானக் கட்டுரைகள் எழுத என்னை தூண்டிய வண்ணம் உள்ளது.

  1. தமிழில் அதிக அளவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பச் சொற்கள் இல்லாததால், புதிய சொற்களை உருவாக்கும் வாய்ப்புகள் இம்மொழியில் ஏராளம். புதிய சொற்களை உருவாக்கும் இன்பம் அலாதியானது. எத்தனை பேருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு? சத்தியமாக கன்னித்தமிழ் தான் – ஒப்பீட்டில் மற்ற மொழிகள் பாட்டிகளாகத் தோன்றுகிறது J
  2. விக்கிப்பீடியா தமிழில் உள்ளது. வழக்கம் போல, அதிகம் பயனற்ற கட்டிரைகள், அரசியல், தனிநபர், மற்றும் சினிமாவாகத் தமிழ் சிரிக்கிறது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகள் நிறைய தமிழில் வர வேண்டும். எளிதில் இணைய நுகர்வோர் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். 15 லட்சம் பேர் உள்ள டச்சு மொழியில் 90 லட்சம் பேர் பேசும் தமிழ் மொழியைவிட பல மடங்கு நல்ல கட்டுரைகள் இருப்பது என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது
  3. ஆராய்ச்சி அடிப்படையில் தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. சொல்லப் போனால், ஆராய்ச்சி என்பது நம்முடைய வழக்கத்தில் இல்லாத ஒன்று. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கு ஏராளமான ஆராய்ச்சி தேவை. மேற்கோள்களும் அவசியம். சிக்கலான் இத்துறையை எளிமைப் படுத்துவதோடு, இதில் மேலும் படித்து முன்னேறவும் வழி வகுக்க வேண்டும். இத்தகைய முறைகள் தமிழில் அதிகம் இல்லாதது ஒரு புறம் குறையாகப் பட்டாலும், இதுவே ஒரு உந்துதலாகவும் உள்ளது. இம்முறைகளை இன்னும் சில எழுத்தாளர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளது இன்னொரு உந்துதல் என்று சொல்லலாம்

கட்டுரை எழுதுவது ஒரு புறம். இன்றைய இணைய தமிழ் உலகில் இரண்டு விஷயங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது.

  1. இணையம் என்றால், ஆழமான விஷயங்களை தமிழர்கள் அதிகம் படிப்பதில்லை. திறன்பேசிகளில் சும்மா மேய்கிறார்கள்
  2. படித்த கட்டுரையை தமிழர்கள் பாராட்டுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. உலகிலேயே மிக மெளனமான படிப்பாளிகள் தமிழ் மக்கள் என்றுதான் தோன்றுகிறது

இதை எல்லாம் மாற்றத்தான் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

 

oOo

தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கட்டுரைகள் மற்றும் தொடர்ந்து எழுதி வரும் ரவி நடராஜன், தொழில்முறையில் கணினி மென்பொருள் தொழிலில் பல்லாண்டுகளாக பணிபுரிபவர். கனடாவில் வசிக்கும் ரவி, ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் பல கட்டுரைகளை எழுதி வருபவர். இதைத் தவிர புத்தக விமர்சனம், இளையராஜா இசை ஆய்வு மற்றும் இந்தியப் பொருளாதாரம், கல்வி பற்றி அவ்வப்பொழுது எழுதுபவர்.

இவருடைய பெரும்பாலும் தொழில்நுட்ப/விஞ்ஞான கட்டுரைகளை இங்கே வாசிக்கலாம்:

http://solvanam.com/?author_name=ravinatarajan

இவருடைய புத்தகங்கள் இங்கே இலவசமாகப் படிக்கலாம்;

http://freetamilebooks.com/ebooks/vignana-mutti-mothal/

http://freetamilebooks.com/ebooks/growth-of-scientific-thoughts/

http://freetamilebooks.com/ebooks/glimpses-of-internet-technologies/

http://freetamilebooks.com/ebooks/internet-technologies-part-2/

http://freetamilebooks.com/ebooks/alternatenergy_initiative_savings/

http://freetamilebooks.com/ebooks/music-genious-raja/

 

3 comments

  1. நண்பர் இரவி அவர்களே!
    மிகச்சரியாக அவதானித்து ஒரு தன்னிலை விளக்கம் அளித்து இருக்கிறீர்கள்.
    பல அறிஞர்கள் தமிழில் தொழில் நுட்பம் எழுதுவது சாத்தியம் இல்லை என்று கை விரித்திருக்கிறார்கள். அதைக்குறை சொல்பவர்கள், வடமொழியில் கணிணி மென்பொருளையே எழுதி அதை எஸ்.ஏ.பி (மறைந்த குமுதம் ஆசிரியர் அல்ல ஜெர்மனியின் தலையாய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று)க்கு விற்கலாம் என்று யாராவது சொன்னால் அதை நம்பி தலையை ஆட்டுவார்கள். தமிழ் ஆங்கிலம் போல ஒரு மொழி. மொழி என்பது வார்த்தைகளின்(சொற்களின்) கடல். அந்தக்கடலில் தொழில் நுட்பச்சொல் நதியை அழகாக இணைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கட்டுரைகளை வாரந்தோரும் படிப்பேன் என்று பொய் சொல்ல மாட்டேன். அவ்வப்போது படிக்கிறேன். அதன் தாக்கமாக மென்பொருள் துறையின் வரைவு, செயல் மற்றும் மேலாண்மைக்கான ஒரு தொடரை என் வலைப்பூவில் ஏற்றலாம் என்று நான் திட்டமிட்டு இருக்கிறேன். சம்பிரதாயமாகச்சொல்வதென்றால் மேலும் எழுதுங்கள். என்னைப்போன்ற சிலரும் இருக்கிறார்கள் உங்களைப்படிப்பதற்கும் பின்பற்றுவதற்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.