எதற்காக எழுதுகிறேன்? – எம்.ஜி.சுரேஷ்

 

எம். ஜி. சுரேஷ்

mgs-image

 

நீங்கள் என்னிடம் உங்கள் சுட்டு விரல் உயர்த்திக் கேட்கிறீர்கள்: ‘நீ எதற்காக எழுதுகிறாய்?’

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?

‘நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அப்படிச் செய்யாமல் இருக்க என்னால் முடியவில்லை’ என்று சமத்காரமாகப் பேச நான் விரும்பவில்லை. அதே போல், ‘எனது வாழ்க்கை சொற்களால் ஆனது; ஒன்று நான் வாசித்த சொற்கள், இரண்டு நான் எழுதிய சொற்கள்’ என்று சார்த்தர் சொன்னது போல் கம்பீரமாகவும் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில், சார்த்தர் அளவுக்கு நான எழுதிக் குவிக்கவும் இல்ல, அவரைப்போல் படித்து முடிக்கவும் இல்லை. ‘வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட இளைஞன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியே இலக்கியம். எனவே, என்னை பாதித்த வாழ்க்கையை, பதிலுக்குப் பாதிக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியே எனது இலக்கியம்’ என்று நான் வசனம் பேசி வாதிட மாட்டேன். ஏனெனில், நான் எழுத்தாளன் மட்டுமே. புரட்சிக்காரன் அல்ல.

சரி, நான் என்னதான் சொல்லட்டும்.

எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன்னதாக, நான் எப்படி எழுத வந்தேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்வது சரியாக இருக்கும் என்று படுகிறது. ஆமாம். நான் எப்படி எழுத வந்தேன்?

அடிப்படையில் நான் ஒரு வாசகன். வாசிப்பது எனக்குப் பிடித்தமான காரியங்களில் ஒன்று. கறாராகச் சொல்லப் போனால் பிடித்தமான ஒரே காரியம் அதுவாகத்தான் இருந்தது. பள்ளிப்பருவத்தில் எனக்குப் படிக்கக்  கிடைத்தவை வார இதழ்கள் மட்டுமே. குமுதம், விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் என்னுள் இருந்த வாசனை உயிர்ப்பித்தன. அவற்றில் வந்த சிறுகதைகள், தொடர்கதைகள் என்னை வசீகரித்தன. பின்னர், கசடதபற, கணையாழி போன்ற சிற்றிதழ்களின் பரிச்சயமும் கிடைத்தது. பலவிதமான எழுத்துகளை வாசிக்க வாசிக்க எனக்கு எழுத்தின் ருசி என்னவென்று தெரிந்தது. நிறையப் படித்தேன். நிறைய விவாதித்தேன். என்னுடைய அம்மா லக்‌ஷ்மியின் ரசிகை. நானும் லக்‌ஷ்மியின் வாசகன் ஆனேன். என் தாத்தா கல்கியின் ரசிகர். நானும் கல்கியின் வாசகன் ஆனேன். என் மாமா ஜெயகாந்தனின் ரசிகர். நானும் ஜெயகாந்தனின் ரசிகன் ஆனேன். பின்னர் நானே சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கி.ரா. என்று தேடிக் கண்டுபிடித்தேன். பல எழுத்தாளர்களை நேரில் பார்த்துப் பேசினேன். நா.பா., அகிலன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வண்ணநிலவன், இளவேனில் போன்ற பலர் என்னுடன் நேர்ப்பழக்கம் உள்ள இலக்கியவாதிகள். ஆனாலும், எனக்கு எழுதவேண்டும் என்று ஏனோ தோன்றியதே இல்லை. நான் அடிக்கடி சந்திக்கும் சில எழுத்தாளர்களில் இளவேனிலும் ஒருவர். அப்போது அவர் கார்க்கி என்ற மாத இதழை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் எழுத்தாளர் இளவேனில் தனது ‘கார்க்கி’ இதழுக்காக ஒரு சிறுகதை எழுதித் தருமாறு என்னைக் கேட்டார். என்னால் நம்ப முடியவில்லை. ‘நிஜமாகவா கேட்கிறீர்கள்?’ என்றேன். ‘ஆமாம், ஏன் கேட்கிறீர்கள்? என்றார் அவர். ‘என்னை நம்பியா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை’ என்றேன். பின்பு எனது முதல் சிறுகதையான ‘இரண்டாவது உலகைத் தேடி’ யை எழுதினேன். சரியாக வந்த மாதிரிதான் தோன்றியது. எழுதியதை அவரிடம் கொடுத்தேன். படபடப்பாக உணர்ந்தேன். பின்னர் அதைப்பற்றி மறந்துவிட்டேன்.  அவரிடம் அது பற்றிய அபிப்பிராயம் எதையும் நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஒரு வேளை, கதை அவருக்குப் பிடிக்காமலிருந்து, முகதாட்சண்யத்துக்காக, ‘பிடித்திருக்கிறது’ என்று பொய் சொல்லும் தர்மசங்கடத்துக்கு அவரை ஆளாக்க வேண்டாம் என்று நினைத்தேன். அடுத்தவாரமே கார்க்கி இதழ் வந்தது. அதில் என் சிறுகதை முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இப்படித்தான் நான் எழுத வந்தேன்.

‘கதை நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதலாமே’ என்றார் அவர். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. அதற்கு முன்னால் நா.பா கேட்டதற்கிணங்க தீபம் இதழில் புதுக்கவிதை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அது 1970 ஆண்டு தீபம் இதழில் பிரசுரமாகி இருந்தது. சிறுகதை என்று பார்த்தால் கார்க்கியில் எழுதியதுதான் முதல். அந்தக் கதையை வாசித்த நிறையப்பேர் பாராட்டினார்கள். எனக்கும் எழுத வருகிறது என்பது எனக்கே ஒரு புதிய செய்தியாக இருந்தது. அந்த நேரத்தில் நான் புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். தீபம், கணையாழி, மற்றும் பல சிற்றிதழ்களில் அவை பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இப்போது ஒரு கதை பிரசுரமானதும் கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல், நாவல் என்று கிளை பரப்பினேன். எனது ஆதர்ச எழுத்தாளர்களான க.நா.சு., ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்  ஆகியோருக்கு என் எழுத்து பிடித்திருந்தது என்பது ஒரு விசேஷம். அந்த அங்கீகரிப்பு என்னை மேலும் தொடர்ந்து எழுதுமாறு செய்தது. முதலில் கவிதை எழுதினேன். அதற்கு அங்கீகாரம் கிடைக்காததால் அதை விட்டுக் கதைகள் எழுதினேன்.

ஆக, அங்கீகாரத்துக்காகத்தான் நான் எழுதுகிறேனோ?

ஏன் கூடாது? அதற்காகவும்தான் எழுதுகிறேன்.

இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பிறர் என்னை எழுதச்சொல்லிக் கேட்காமல் இருந்திருந்தாலும் நான் எழுத ஆரம்பித்திருப்பேனோ என்று கூட தோன்றுகிறது.

முதலில் ஒருவர் சொன்னதன் பேரில் எழுத ஆரம்பித்தாலும், அதன் பிறகு யாரும் சொல்லாமலே தொடர்ந்து எழுதவும் செய்கிறேனே, அது ஏன்?

ஆசை. எழுதும் ஆசை. மனசுக்குள் முட்டி மோதும் விஷயங்களை வெளியே கொட்டத்துடிக்கும் ஆசை. பின்பு, அதற்குச் சாதகமான எதிர்வினைக்கான தாகம் ஏற்படும் போது அந்தத் தாகம் தீரப் பாராட்டல்களைப் பருக ஆசை. பாராட்டுகள் வர வர தாகம் தீர்ந்து விடுவதில்லை என்பது ஒரு வினோதம். பாராட்டப் பாராட்ட தாகம் தீர்வதற்கு மாறாக வளர்கிறது. யாராவது என் எழுத்துகளைக் கவனிக்கிறார்களா என்று மனக்குறளி கூர்ந்து கவனிக்கிறது. யராவது கவனித்துவிட்டால் போதும், காய்ந்த மரத்தில் தீ பற்றிக் கொள்வதைப் போல், புறக்கணிக்கப்படும் தருணங்களில் எனக்குப் பிறரின் கவனத்தைக் கவரும் ஆசை பற்றிக் கொள்கிறது. தொடர்ந்து எழுதுகிறேன். பாராட்டுகள் தொடர்கின்றன. விருதுகள், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுதல் போன்ற கௌரவங்கள் தொடர்கின்றன. என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. இதற்காகவும் எழுதுகிறேன்.

வாசிப்பு நமக்குப் புதுபுது இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஜெயகாந்தனை வாசித்தபோது அவர் மாதிரி எழுத வேண்டும் என்பது இலக்காக இருந்தது. பின்பு, உலக இலக்கியங்கள் பரிச்சயமான போது, அவர்கள் ரோல் மாடல்களாக இருந்தார்கள். பின் நவீனத்துவம் அறிமுகமானபோது இதாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே, உம்பர்த்தோ எக்கோ போல் எழுத ஆசை வந்தது. இலக்குகள் மாற, மாற வேறு வேறு மாதிரி எழுதிப்பார்ப்பதும் நேர்ந்து விடுகிறது. இதனால் புது மாதிரி எழுத வேண்டியதாகி விடுகிறது. . ஏற்கெனவே எழுதியதில் வரும் திருப்தியின்மை மேலும் மேலும் எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன். இதற்காகவும் எழுதுகிறேன்.

சரி,இதனால் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கவும் முடியுமா?

முடிவதில்லைதான். சில சமயங்களில் எழுதவும் செய்கிறேன் பல சமயங்களில் எழுதாமலும் இருக்கிறேன். அது எதனால்?

யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் ஆனது. சொற்களுக்கு இடையே நிலவும் மௌனங்கள். எழுதுவது சொற்களை உருவாக்குதல். எழுதாமல் இருப்பது மௌனங்களை உருவாக்குதல். இரண்டுமே எழுத்தின் பாற்பட்டவை.

ஏதோ ஒரு உந்துதலின் விளைவாக எழுத வருகிறார்கள். சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். சிலர் இடையிலேயே விட்டு விடுகிறார்கள். ஃபிரெஞ்சுக் கவி ரிம்பாட் தனது பத்தொன்பதாவது வயதிலேயே எழுதுவதை நிறுத்திக் கொண்டான். மௌனி இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதவில்லை. ஜெயகாந்தன் எழுபதுகளுக்குப் பிறகு சுமார் நாற்பதாண்டுக்காலமாக எழுதாமல் இருந்தார். ‘புயலில் ஒரு தோணி’ ப. சிங்காரம் தனது இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதுவதை விட்டுவிட்டார். இவர்களெல்லாம் பெரிய சாதனையாளர்களாகக் கருதப்படுபவர்கள். அப்படியும், இவர்களெல்லாம் ஏன் தங்கள் பிரதிகளை எழுத வந்தார்கள். அதே போல்  ஏன் பின்னர் எழுதாமல் நிறுத்திக் கொண்டார்கள்? எழுதியவரை போதும் என்று தோன்றியிருக்கலாம். அதில் தவறில்லை. அது ஒரு விதமான மௌன நிலை என்று படுகிறது.

மௌன நிலையில் இருப்பதனால் அவர்கள் எழுதவில்லை என்று சொல்ல முடியுமா என்ன?

இப்போதும் கூட நான் என் கதைகளை முதல் வரி முதல் கடைசிவரி வரை,- ஏன் கடைசிச் சொல் வரை – மனசாலேயே எழுதிப் பார்த்துவிடுகிறேன். அதன் பின்னரே காகிதத்துக்கு பெயரக்கிறேன். அனேகமாக என் மனதில் இருந்த எல்லாவற்றையும் பெயர்த்து விடுகிறேன். ஒரு சில விஷயங்கள் இந்தப் பெயர்த்தலின் போது கை நழுவிப் போய் விடுவதும் உண்டு. அவற்றை மீண்டும் மீட்டெடுத்துப் பிரதியில் சேர்ப்பது ஒரு மூச்சு முட்டும் அனுபவம்.

ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்தாளர்கள் எழுதும்போது செய்வதைப் போலவே, எழுதாதபோதும் ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். அது சிந்திப்பதும், சிந்தித்ததை அரூபமாக எழுதுவதும். அதாவது, ஸ்தூலமாகக் கைகளால் எழுதாத போது, அரூபமாக மனதால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. நாம் எல்லோருமே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனம். ஒரு எழுத்தாளனுக்கு மூளைச்சாவு வரும் வரை இந்த இயக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆடிப்பழகிய கால்கள் ஆடாமல் இருக்க முடியாது. அது போல் எழுதப் பழகிய கைகளால் எழுதாமல் இருக்க முடியாது. ஒருவன் ஸ்தூலமாகக் கைகளால் எழுதினாலும், அல்லது அரூபமாக மனதுக்குள் எழுதினாலும் அவன் எழுதிக் கொண்டிருப்பவனே. எனவே, எழுதாமல் நிறுத்திக் கொண்டவர்களும் மனசுக்குள் எழுதிக் கொண்டிருப்பவர்களே. ஒருவேளை, எதிர்காலத்தில் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டால், அப்போது ‘எதற்காக எழுதாமல் இருக்கிறேன்’ என்|று பதில் சொல்லுமாறு என்னிடம் கேள்வி கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

oOo

(எம்.ஜி. சுரேஷின் நாவல்கள், நூதனமான புனைவுகளின் வழியே மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணையைக் கோரி நிற்கின்றன. சோதனை முயற்சி நாவல்கள என்றாலே வாசிக்கச் சிக்கலானவை என்கிற பிம்பத்தை தன் இயல்பான கதைகூறு திறத்தால் சரித்தவர் எம்.ஜி. சுரேஷ். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள், ஆறு நாவல்கள், இரு திறனாய்வு நூல்கள், தவிர ஐந்து ‘பின் நவீன சிந்தனையாளர் அறிமுக‘ நூல்கள் என இவர் பங்களிப்பு ஒவ்வொன்றும் தமிழ்ச் சூழலில் முக்கிய வரவுகள் எனலாம். இவரது நாவல்கள் புனைவுக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும், புனைந்து வண்ணப்பொலிவுடன் மிளிர்பவை. பின் நவீனம் என்கிற எதிர்கோட்பாடு பற்றிய புரிதல்களை தமிழில் நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் எம்.ஜி. சுரேஷ்.)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.