எழுத்து எப்போது பிறக்கிறது என்று நான் யோசித்திருக்கிறேன். அன்றாடத்தின் அலுவல்கள், பயணங்கள், சந்திப்புகளின் இடையே ஆயிரம் சிதறிய இடைவெளிகளில் எழுதுவதற்கான உந்துதல் கிடைக்கிறது. பெரும்பாலான தருணங்கள் அடுத்த நொடியின் அவசரத்தில் கடக்கப்பட்டுவிடுகின்றன. கடக்கப்படும் ஒரு சில உந்துதல்கள், இன்னும் அழுத்தமாக உருண்டு முட்டிக்கொண்டு வரும் தருணங்கள் அமைவதுண்டு. அப்போது, எழுதாமல் அடுத்த நொடி நகராது. பெரும்பாலான சமயம் நெருக்கடிகளும் மென்சோகங்களுமே எழுத வைப்பதுபோல தோன்றினாலும், உண்மையில் சந்தோஷங்களும்தான் அந்த உந்துதலை தருகின்றன. இன்னும் ஆழ்ந்து யோசித்தால், மேலோட்டமான நம்பிக்கைகளில், எதிர்பார்ப்புகளில் மனம் பதறாத நொடிகள் அவை. முன்னும் பின்னும் அறுக்கப்பட்டு இந்த நொடியின் தனிமையின்பத்தில் உதிப்பவை.
என் கவிதைகள் நம்மை சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்து, அழகை தேடுபவை. சாலை நெரிசல்களிலிருந்து யாரும் பார்க்காத நிலவையும், காலை அவசரங்களில் யாரும் கவனிக்காத மரத்தையும் காட்டுபவை. பெரும்பாலான படைப்புகளில் இன்னும் தொலைந்துபோகாத குழந்தை உலகமும் உற்சாகத்துடன் வெளிப்படுகிறது. இயற்கையும், சின்ன சின்ன கவனிப்புகளும் சந்தோஷங்களும், மற்ற கடமைகளால் வடிவமைக்கப்பட்ட அன்றாடத்திற்கு சமன் நிலை அளிக்கின்றன. நம் சந்தோஷத்தை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும் என்ற உற்சாகத்தை அளிக்கின்றன. இந்த நொடியின் பரிபூர்ணமான அனுபவம், ஒரு ஜன்மத்தின் நிறைவை அளிக்கிறது. அதை எழுதி பதிவு செய்வது என்பது, மீண்டும் மீண்டும் அங்கு செல்வதற்கான பாதை அமைப்பதே.
கவிதைகளின் அடிப்படையான மர்மம், அவை மொழியினால் கட்டப்படுபவை அல்ல; தன் வெளிப்பாடுகளால் மொழியையே கட்டமைப்பவை. மொழி என்பது கருவிதான். கவிதை, அனுபவம். மொழி மூலம் மட்டுமே ஒரு கவிதையை பகிர்ந்துகொள்ள முடியாது. அதற்கு மேலாக, அனுபவங்களின் உச்சியில் அவை அமைகின்றன. மிக நுட்பமான, மிக மிக அந்தரங்கமான, தனக்கேயான கவனிப்புகள் என்று நாம் நினைக்கக்கூடியவைதான் எப்படி மானுடத்தின் பொதுவான அனுபவங்களில் சென்று பதிகின்றன. கவிதைகள் அப்படி வாசகர்கள் மனதிலும் பதிந்து படர, மிக மிக நேர்மையாக இருக்க வேண்டும்.
எழுத்து என்பது தனி உலகம். இலக்கிய வாசகராகவும் படைப்பாளியாகவும் இருப்பதில் இருக்கும் உற்சாகமே , அப்படி ஒரு தனி உலகம் நமக்கு கிடைக்கும் என்பதுதான். அங்கு, தினம்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்கள், நம்மை பாதிக்கும் மனிதர்கள், நம் வாழ்வின் குறுகிய வட்டத்தைத் தாண்டி, மானுடத்தின் விரிந்த தூரிகையில் மீண்டும் மீண்டும் வரும் கதை பாத்திரங்களாக மாறக்கூடும். இப்படி நம் அனுபவங்களை, கதைகளாக சொல்லும்போது, அதை ஆராயந்து எதிர்கொள்வதற்கான தெளிவை எழுத்து நமக்கு அளிக்கிறது. புனைவுலகில் எல்லோரும் மன்னிக்கப்படக்கூடியவர்கள். ஒவ்வொருவரும் மானுடத்தின் ஒவ்வொரு குணம். அதில் நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கமுடியும். அது நம்மிடம் ஒரு காருண்யத்தை உண்டு பண்ணுகிறது. வாழ்க்கையை இன்னும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்வதற்கான நிதானத்தை அளிக்கிறது.
எனக்கு மிகப் பிரியமான எழுத்தாளர் அசோகமித்திரன். அவர் கதைகளைப் படித்து மூடும் ஒவ்வொரு முறையும், என்னைச் சுற்றிய உலகம் நூறு மடங்கு துல்லியத்துடன் தோன்றும். சாதாரணமாக நான் எடுத்து வைக்கக்கூடிய அடுத்த அடியில் ஒரு உற்சாகம் கூடும். அதுவரை சலிப்பளித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு விசேஷமும் மர்மமும் தெரியும். சாதாரண வாழ்க்கை என்பது சுவாரஸ்யமான சவால்களாலான கதாநாயக வாழ்க்கையாக மாறிவிடும். அதுபோல, என் அனுபவங்களில் ஒரு மாயாஜாலத்தையும் மர்மத்தையும் சேர்த்துப்பார்க்க நான் புனைவுகளை எழுதுகிறேன்.
என்னளவில் எழுத்து என்பது, எனக்கான ஒரு தனி உலகம். நிஜ உலகின் இலக்கணங்களும், நிர்பந்தங்களும் தாக்காத உலகம். சில சமயம் அவை அப்படியே தலைகீழாகும் உலகம். நான் கண்டறியும் உண்மைகளைக் கொண்டு சேர்த்துக்கொள்ளும் உலகம். அதுவே என்னை ஆசுவாசப்படுத்துகிறது. எங்கும் எப்போதும் அதற்குள் தஞ்சம் சேரலாம் என்ற உணர்வே சந்தோஷத்தை அளிக்கிறது. அந்த விரிந்த புன்னகையே படைப்பாளியை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது என்று நினைக்கிறேன். அந்த புன்னகையே என்னை எழுத வைக்கிறது.
(பொறியியல் படித்தபின் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றும் ச. அனுகிரஹா, கவிதைகள், ஒரு சில சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். பெரும்பாலான படைப்புகள் சொல்வனம் இணைய இதழிலும், பதாகையிலும், ஆம்னிபஸ் தளங்களில் வெளிவந்திருக்கின்றன.)