கனமான போர்வையென இருள் அவளைச் சூழ்ந்தது. ஒளியின் எந்த ஒரு சாகசமும் செல்லுபடியாகாத இருட்டு. கோளறு வான்வெளி. விண்மீன்கள் உமிழும் ஒளிக் குளிகைகளை வாங்கிப் பரவசப்படுத்த கோள்கள் இல்லை. தானே ஒளிரும் விண்மீன்கள் திகைத்தன. இதென்ன ஒளியை வெறுக்கும் உயிரினங்கள் வந்து விட்டனவா? இல்லை இல்லை… இவைகள் ஒளியை மறுக்கும் கோள்கள்.
ஒளியின் நிழல் அல்லவா இருள். நிழலில் எப்படி ஒளியேற்றுவேன்? ஒளிரும் நிழல்… நிழலில் ஒளி; இரண்டும் சங்கமிக்கும் புள்ளியை இந்த இருள் தாண்டியே தண்டிக்கிறது. ஒளி பரவ விலகும் இருளில்லை இது. இருள் நிறைக்க மறையும் ஒளி. தன் இருப்பின் பயனறியாமல் ஒளி உள் வாங்குகிறது. அருணா தன் சிந்தையின் போக்கை நினைத்து வியந்தாள். நம்மைச் சூழும் இருள் உலகின் மேல் கவிய ஏன் ஆசைப்படுகிறோம்? ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலல்லவா அவை இரண்டும்? அதனதன் நியதியில் அவை அவை அததற்கான மதிப்பைப் பெறுகின்றன. ஒளி இல்லையேல் உயிர்ப்பு இல்லை. ஆனால் அந்த உயிர் பயிராவதோ இருளில். இயக்கம் ஒன்று, அமைதி ஒன்று.
மீண்டும் சிரிப்பு வந்தது அவளுக்கு. அவள் இருளைக் குடைந்து குடைந்து அந்த குகையினுள் இருக்கப் பிறந்திருக்கிறாள். ஆம்… இருக்கத்தான்… வாழ அல்ல. ஒளி இல்லாமல் இந்த இருளிற்கும் அர்த்தமில்லை என்று புரிகிறது.
குளிர்ந்த ஒளி வீசிய அந்த நாள்… இன்றைய இருளிற்கு வித்திட்ட காலத்தின் நாள். விசையில் அகப்பட்ட பொருள் போல அந்த வேகத்தின் சுழலில் சிக்கிய நாள். இன்றும் அக்கணம் அந்தக்கரணத்தில் நிற்கிறது. திரிசங்குவின் உலகம் போல் தனியானது, ஆனால் அதை சுவர்க்கம் என்று சொல்கிறார்கள். தனிமையானது அப்படி ஆகுமா?
அந்த மாலை அவள் நினைவில் கிளர்ச்சியை உண்டாக்கியது. முழு மதி அன்று. சோம்பும் மேகங்களிடையே சந்திரனும் சற்று சோகமாக வலம் வந்தான். மணல்பரப்பும், சிறு குன்றுகளும் அவன் ஒளி படர, அட்சதை சிதறிய மண மண்டபம் போலவும், சூடக் காத்திருக்கும் மலர் மாலைகள் போலவும் காட்சி அளித்தன.
மூன்று கடல்களின் சங்கமம்; முத்தான கூடல். அலைகள் வெண்ணிலாவைத் தொடும் ஆசையில் மேலெழும்பி, தளர்ந்து, கரையை அறைந்து, அறைந்து திரும்பின.
அவள் மரகதப் பச்சையில் ஒளிர்ந்தாள். மணப்பெண் அலங்காரம். முத்துச் சுடராய் மூக்குத்தி. கண்களில் கனவும், கவிதையும். ஒசிந்த இடையில் வைர ஒட்டியாணம். அணிகலன்கள் அவள் புன்னகை முன் மதிப்பிழந்தன.
காலம் தன் போக்கில் நெய்து கொண்டே இருக்கும் இழையறா ஆடைகளில், பருவங்கள் தம் பதிவைத் திரும்பத் திரும்பச் செய்தாலும் சிலது பொங்குகிறது, சிலது மங்குகிறது, சிலதோ உறைந்துவிடுகிறது.
அவர்களுடைய குடும்பத்தின் தோட்டக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது உண்மை போல் தோற்றமளித்த கல் குருவியை ஒரு உயிர்க்குருவி அலகால் கொத்திக் கொத்தி புண்ணானதைப் பார்த்தாள். கல் குருவியும், உயிர்க் குருவியும் என்ன ஒரு இணை! நினைவிலேயே சுவைக்கும் ஒளி; நிழல் தின்னும் வாழ்வின் வலி.
அவள் மேல் இருள் மிகக் கனமான போர்வையென இறங்கியது.
…
ஒளிப்பட உதவி – eugene stickland
Fantastic description. Excellent command over the language. When we read again and again the story leads to different direction. Keep it up. Write more.