அழைப்பு

ஹரீஷ் கண்பத்

பேருந்து நிலையத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வந்திறங்கி முக்கால் மணி நேரமாகியிருந்தது. வருவதாகச் சொல்லி விட்டு தாமதித்துக் கொண்டிருந்த நண்பன் மேல் கோபம் வரவேயில்லை. ஊரின் வெயில் கூட நின்று நிதானமாக உடலைத் தடவுவது போலிருந்தது. ஜனம் வெள்ளமாய் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரிடமும் பரபரப்பில்லை. மாறாக உற்சாகம் மண்டிக் கிடந்தது. ஊரில் வாழ்ந்த நாட்களில் இது போன்ற பண்டிகை சமயங்களில் இந்தப் பக்கம் வந்ததில்லை. பண்டிகையின் சுவடு ஊர் முழுக்கப் படர்ந்து பரவியிருப்பதாகப் பட்டது.எத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கிறேன் என்று சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளவில்லை. நிச்சயம் ஐந்தாறு வருஷங்கள் இருக்கும். கடைசியாக மாரியின் திருமணத்துக்கு வந்தது.

வருகிறேன் என்று சொன்னவனுக்கு மீண்டும் அழைத்தேன். எடுத்துப் பேசினான். எதிர்முனையில் காற்றின் இரைச்சல் அதீதமாக இருந்தது.வண்டியோட்டிக் கொண்டே பேசுகிறானோ என்று கவலையாக இருந்தது. “ கலெக்டரேட்ல இருக்கறண்டா பையா. வந்துர்றேன்” என்றான். எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். பசித்தது. நிலையத்தின்   வெளியே எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவகம் இருப்பதாக ஞாபகம் வந்தது. மெதுவே நடந்து அங்கே சென்றேன். நிரம்பக் கூட்டம். மீண்டும் வெளியே வந்து நின்று கொண்டேன்.பக்கத்தில் மிட்டாய்க் கடை வாசலில் ஒரு குழந்தை அலறிக் கொண்டிருந்தது. அதன் அம்மா குழந்தையைக் கொண்டு வந்து மிட்டாய்க் கடை வாயிலில் அமர வைத்த தன் அறிவைத் தானே நொந்து கொண்டே குழந்தையைச் சமாதானம் செய்தபடி இருந்தாள்.

மெல்ல நடக்கத் துவங்கிய என்னை வழிமறித்தவாறு வண்டியை நிறுத்தினான் பிரபு. செல்லமாக அவன் தோளில் தட்டி, “இதான் வர்ற டைமாடா பையா?” என்றேன். பல வருடப் பட்டண வாசத்தால் பேச்சில் தலைகாட்டாமல் தேய்ந்தழிந்து போன ஊர் வாசம் இங்கு வந்ததும் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடுவது ஆச்சரியம் தான்.”இல்லடா. நான் வந்தர்லான்னு பாத்தன். உன்னிய கிரிஸ்ணகிரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ணுடான்னா நீயி தரும்புரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ற. மொதுல்லயே போன் பண்ணிருந்தா கரெட்டா வந்துட்ருப்பேன்” என்றான்.“செரி ரொம்ப பேசாத. பசிக்கிது. எங்கனா சாப்புட போலாம் வா” என்றேன்.” எங்க போறது?” என்று என்னையே திருப்பிக் கேட்டான். “ அதியமான் போலாம் வா” என்று வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. திடீரென்று ஞாபகம் வந்தவனைப் போல், “ டேய் நம்ம டீலக்ஸு இன்னும் இருக்குதா இழுத்து மூடிட்டானுகளா?” என்றேன். டீலக்ஸ் என்று நாங்கள் அழைப்பது எங்கள் ஊரின் பலான படத் திரையரங்கை. கல்லூரி நாட்களில் அங்கேயே பழியாய்க் கிடந்ததுண்டு.” நல்லா தான் இன்னும் ஓடினிருக்குது” என்றவன் சற்றே பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தான். “ எல்லா தேட்டரும் அப்டியே தாங்கீது. கணேசா மட்டும் மூடிட்டான்” என்றான்.அந்த அரங்கில் மௌனம் பேசியதே படத்தைத் தனியே போய்ப் பார்த்தது நினைவில் வந்து போனது.”டேய்.. அப்புறமா எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி போய் பாத்துட்டு வந்துரலாம்” என்றதற்கு சரி என்று தலையாட்டினான். அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.

வீட்டின் நினைவுகள் மூச்சு முட்ட அழுத்தும் கொடி போல் மூளையைச் சுற்றிலும் படர்ந்து இறுக்கத் துவங்கியது. தலையை உலுக்கிக் கொண்டேன். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.” டேய் காந்தி நகருல எங்கப்பாவோட அத்த வீடு கீது. அங்க தான் போவணும். சாயந்திரமா பத்திரிக குடுக்க கெளம்பலாமா” என்றேன்.”செர்ரா.. என்னைய வீட்ல விட்டுட்டு நீ வண்டிய எட்துனு போ. சாய்ந்தரம் என்னைய கூட்டிக்கோ” என்றான்.கிளம்பினோம். கணேசா தியேட்டரின் வழியே போகும் போது அந்த இடம் பல்லெல்லாம் கொட்டிப் போய் விட்ட பின்பும் புன்னகை மாறாத பாம்படக் கிழவி போல் தோன்றியது.

அப்பாவின் அத்தை மிக மிகத் தளர்ந்திருந்தார். இன்னமும் அவர் கையில் பிரம்புடன் பாடம் எடுப்பது போலவே ஒரு பிம்பம் மனதில் பதிவாகியிருந்ததை அழிப்பது சிரமமானதாயிருந்தது.நடுங்கும் விரல்களால் தலையைத் தடவி வரவேற்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறையில் புகுந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது மணி நாலாகியிருந்தது.தயாராகி வெளியே வந்து வண்டியை எடுத்தேன். வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போதே காற்றில் லேசாகக் குளிர் கலந்திருந்தது. குளிர் இந்த ஊருக்குப் புதிதில்லை. அற்புதமான சீதோஷ்ணம். சிறு வயசில் எத்தனை குளிரையும் தாங்கும் உடம்பு, இப்போதெல்லாம் முடிவதில்லை.பட்டணம் பல விதமான உபாதைகளை விதைத்திருக்கிறது.

குளிரை ரசித்து உணர்ந்தபடியே அவன் வீட்டுக்கு வண்டியை மெல்ல விரட்டினேன்.சத்திர மேல் தெருவும் அப்படியே தானிருந்தது. மாலை நேரம் வீட்டு வாசல்களில் முளைக்கும் பணியாரக் கடைகள் மொளகா வடைக் கடைகள் வியாபாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. பிரபு வீடு மட்டும் முற்றிலுமாக மாற்றிக் கட்டப்பட்டிருந்தது.  வெளியே வந்தவனிடம் விசாரித்தேன். “ தெர்லடா பையா. ரெம்ப நாளா இப்டி தான் கீது. மின்ன எப்பிடி இரின்ச்சுனு மறந்து போச்சி” என்றான் சாதாரணமாக. நான் வந்து எவ்வளவு வருஷங்கள் ஆகி விட்டிருக்கின்றன என்று அப்போது தான் புரிந்தது..

இருவரும் கிளம்பினோம். நானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டேன். அழுக்கடைந்த கட்டிடமென ஞாபக அடுக்குகளில் எப்போதும் பதிந்திருக்கும் அரசு மருத்துவமனை, பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரியாக மாறியிருந்தது மனசை என்னவோ செய்தது. இது வழியே பிரதான சாலையிலிருந்து எத்தனை முறை வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன். இப்போது வெறும் கட்டிடக் காடாய் கண் முன் நின்றது. ஏனோ கல்லூரி படிக்கையில் விபத்தில் இறந்து போன அடுத்த வகுப்பு மாணவனின் உடலைப் பார்க்க இங்கு வந்தது நினைவில் நிரடியது. துக்கத்தை அனுசரிக்காமல் அப்போது மனம் கவர்ந்திருந்த பக்கத்து வகுப்பின் பெண்ணை நோட்டம் விட்டபடியிருந்த குற்ற உணர்வும் துல்லியமாய் கண் முன் வந்துன் போனது.

செந்தில் நகரை அடைந்து தினேசனுக்கு தொலைபேசினேன். அவன் வீட்டுக்கு வழி சொன்னான். வீட்டைக் கண்டடைவது அவ்வளவு சிரமாகவெல்லாம் இல்லை. தெரு மூலை வீடு. அபாரமாக வரவேற்றான். பாலாஜி அங்கேயே வந்திருந்தான். அங்கேயே வைத்துப் பத்திரிகையைக் கொடுத்தேன். பெண் என்ன செய்கிறாள் , திருமணம் எங்கே போன்ற கேள்விகள் சடுதியில் முடிந்து போக, எங்கள் உரையடலில் எப்போதும் எனக்குப் பிடித்தமான பகுதியான கல்லூரி ஆசிரியர்களின் வசனங்களைக் கிண்டலடிக்கும் பகுதி துவங்கியது. பாலாஜி அதில் விற்பன்னன். நேரம் போனதே தெரியவில்லை. மணி ஆறாகி விட்டிருந்தது. சுரேஷின் வீடு அருகிலிருப்பதால் அவனைப் போய் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவனைச் சந்தித்து பத்திரிகையைக் கொடுத்தேன். அவன் அம்மா சுரேசனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இன்னும் எதுவும் தகையவில்லை எனவும் லேசான வருத்தத்துடன் கூறினார்.அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு அடுத்து மாரியைப் பார்த்து விட்டு வந்து விடலாமென்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஆறு மணிக்கே இருள் முழுவதுமாகக் கவிந்திருந்தது. காற்றில் குளிர் வெகுவாக ஏறியிருந்தது.குளிரில் வண்டியைச் செலுத்துவது சிரம்மாயிருந்தது. இன்னொரு பக்கம் ஆனந்தமாயும் இருந்தது. மாரியின் ஊரருகே புதிதாக ஒரு மேம்பாலம் முளைத்திருந்தது. அதைக் கட்டிப் பல வருஷங்கள் ஆகியிருக்கக் கூடும். நான் இப்போது தான் பார்க்கிறேன். இடப்புறம் திரும்பி ஊர்ப் பாதையில் நுழைந்ததும் பழகிய வீட்டு நாய் போல் இருள் வந்து மேலெங்கும் அப்பிக் கொண்டது.மாரியின் திருமணத்துக்கு வந்த போது இருந்தது போலவே இப்போதும் ஊரில் ஏதோ திருமணம் நடந்து கொண்டிருந்தது. சீரியல் விளக்குகளின் ஒளி மினுங்கிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் இந்திப் பாடல் பாடிக் கொண்டிருந்த்தைக் கேட்டு சிரிப்பாக வந்தது.

மாரி வீட்டைல் அடைந்தோம். ட்யூப் லைட் பலகீனமாக எரிந்து கொண்டிருந்த வெளிப்புறத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஏறி ஒரு சிறுவன் ஆடிக் கொண்டிருக்க, இன்னொருவன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பிள்ளைகளாக இருக்கக் கூடும். எழுந்து வந்து முகம் மலர வரவேற்றான். அவன் மனைவி சமையலறையில் வேலையாய் இருப்பது தெரிந்தது. ஆள் தளர்ந்திருந்தான்.

சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்து, எழுந்து உள்ளே சென்றவன் திரும்பி வருகையில் கையில் மிக்சர் தட்டோடு வந்தான். “ என்னாயா ஆளே டல்லாயிட்ட?” என்றேன். அதேனோ எப்போதும் மாரிய மட்டும் “டா” போட்டு அழைக்க வாய் வந்ததேயில்லை. உருவம் காரணமாக இருக்கலாம்..என்னவோ போ. ஜட்ஜு எக்ஸாம் எளுதினேன். ஜஸ்டுல மிஸ்ஸாயி போச்சு. அடுத்து எப்பன்னு தெர்ல. வேலை டென்சன் வேற. பி பி கூட வந்திருச்சுன்னா பாத்துக்க” என்றான்.

“இந்த வயசுல பி பி எல்லாம் வரக் கூடாதுயா. என்னா போ நீயி. “ என்று சலித்துக் கொண்டேன். அவன் பிள்ளை ஓயாமல் சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தான். பத்திரிகையை கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்ததும், “ந்தா.. ஒரு நிமிசம் இரு. வந்தர்ரேன்” என்றபைட் மாரி உள்ளே ஓடினான்.

சில நிமிஷங்கள் கழிந்து வந்தவன் கையில் சில பொட்டலங்களைத் திணித்தான். கைய நீட்டு என்றவன் ஒரு கயிற்றைக் கையில் கட்டி விட்டான். “ காசி போய்ருந்தன். பிரசாதம். இது கால பைரவரு கவுறு. கலியாணம் வேற நிச்சியமாயிருக்குது. இருட்டுல வேற போறீங்க. இத கட்டிக்க” என்றான்.மாரியின் கைச்சூடு குளிருக்கு இதமாக இருந்தது.

“செல்லா இங்க தான் பைபாஸுக்கு அந்தாண்ட இருக்கறானாம். பாத்துட்டு போயர்லாமா” என்றான் தினேசன்.அவனுக்குத் தொலைபேசி, அவனை பைபாஸ் முனைக்கு வரச் சொல்லி விட்டு அங்கே கொண்டு போய் வண்டியை நிறுத்தினோம்.அடுத்த சில நிமிடங்களில் செல்லா வந்தான். கல்லூரியில் பார்த்த எந்தச் சுவடுமின்றி முதிர்ந்திருந்தான். ஆனால் உற்சாகமாக இருந்தான். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருந்தான். ஓஷோவைப் பின்பற்றுவதாகச் சொன்னான். பத்திரிகையைக் கொடுத்ததும் அந்தத் தேதியில் பட்டணம் வரும் வேலை இருப்பதாகவும் கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். பேச்சு எப்படியோ திசை திரும்பி கல்லூரியை பற்றி மாறியது. அடுத்த அரை மணி நேரம் பாலாஜி கல்லூரி வாத்தியார்களைப் பற்றி ஆற்றிய பலகுரலில் எல்லாரும் வயிறாரச் சிரித்தோம். கிளம்பும் போது பாலாஜியின் தொண்டை முழுவதுமாகக் கட்டியிருந்தது.

குளிரில் எனக்குமே தொண்டை லேசாக அடைக்கத் துவங்கியிருந்தது. ஆனால் மனசு மட்டும் ஏனோ தளும்பிக் கொண்டே இருந்தது.” டேய் எங்க வீட்ட போயி ஒரு வாட்டி பாத்துட்டு வந்தர்லாம்” என்றேன். பிரபு, தினேசன் , பாலாஜி மூவருமே ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் தான் எத்தனை நாட்கள் உண்டு உறங்கி, விளையாடி, கூடி களித்து ஒன்றாக திரிந்த இடம் அது. அவர்களுக்கும் நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்.

பைபாஸ் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை எந்த விதமான மாற்றங்களுமில்லாமல் அப்படியே பலகீனமான மஞ்சள் சோடிய வெளிச்சத்துடன் மனசை என்னவோ புரட்டியது. என் தெருவில் எதுவுமே மாறியிருக்கவில்லை. வீட்டு வாசலில் சாலையில் நின்றபடி, தெரு விளக்கொளியில் வீட்டை சற்று நேரம் வெறித்தபடி இருந்தேன்.” இங்க தான நாம கிரிக்கெட் ஆடுவோம்” என்று அவர்கள் மூவரும் அந்த வீட்டைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்பேசியை எடுத்துப் படம் பிடிக்க முயன்றேன். இருளில் சரியாக வரவில்லை. கண் லேசாகக் கலங்கியது போல் தோன்றியது. பிரமை போல. சட்டென்று ஏதோ ஒரு நொடியில் உள்ளே போய் வீட்டை வாங்கியவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு சுற்றிப் பார்த்து விட்டு வரலாமா என்னும் ஆசை பூதாகாரமாக எழுந்து ஏனோ எழுந்த நொடியிலேயே அடங்கி அமிழ்ந்து போனது. கிளம்பி விட்டேன்.

வண்டியில் ஏறி நகரத் துவங்கிய பின்னும் அவ்வளவு வெட்ட வெளியிலும் வீட்டைப் பற்றின அலையலையான நினைவுகள் பின் தொடர்ந்து துரத்தி வந்து மூச்சு முட்டச் செய்தபடி இருந்தன.

வழியில் கடையில் சாப்பிடப் போன போது சாப்பாடு இறங்கவில்லை. ஏதோ பேர் பண்ணி விட்டு கிளம்பினேன். வீட்டுக்குப் போய் கட்டிலில் விழுந்த பின்னும் துரத்தல்கள் தொடர்ந்தன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலையில் எழுந்திருக்கும் போது ஏழரை ஆகியிருந்தது.இன்று காரிமங்கலம் போவதாக ஏற்பாடு. கோபுவைப் பார்க்க, கல்லூரியில் என் அருகில் மூன்று வருசங்களும் அமர்ந்திருந்தவன்.

அவன் வீட்டை அடைந்ததும் வரவேற்றான். கல்லூரி படிக்காய்யில் அவன் குரலை வெகுவாகக் கிண்டல் செய்வோம். இப்போது அவன் கல்லூரியில் விரிவுரையாளன் ஆகி விட்டிருக்கிறான். காலம் யாரை எப்படி மாற்றுகிறதென்று சொல்லவே முடிவதில்லை. குரல் நல்ல கெட்டிப்பட்டிருந்தது. பிள்ளைகள் மருண்டு விழித்தன. மாட்டுப் பொங்கல் தினமாதலால் சுடச் சுட பொங்கலும் வடையும் கொடுத்தான். பத்திரிகை வைத்து விட்டு செந்திலைப் பார்க்கக் கிளம்பினோம்.

சாலையைக் கடந்து எதிர்ப்புறம் ஏழெட்டு கிலோமீட்டர்களில் அவன் ஊர். வீட்டு வாசலை அடைந்த போது சரியாய் எங்கிருந்தோ வேகமாக வந்தான். “இன்னிக்கு மாட்டுக்கு பூசை வெச்சிருக்கறோம் கீள காட்டுல. அங்க தான் இருந்தேன். நீங்கள்லாம் வரீங்களேனு வந்தேன்” என்றவன் கொஞ்ச நேரம் எங்களோடு கதைகள் பேசிக் கொண்டிருந்தான். எழுந்தவன் “ வாங்களேண்டா. நீங்களும்? பூசை இனிமே தான் போட போறோம். அஞ்சு பத்து நிமிசம் தான், இருந்துட்டு போவீங்க” என்றான். அவன் பின்னாலேயே நடந்தோம். வீட்டைப் பூட்டி விட்டு சரிவில் நடந்தான். இரண்டு நிமிடங்கள் தான். தூரத்திலிருந்தே அவன் அப்பா அம்மா தங்கை எல்லாரும் மாட்டுக்குப் பூசை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

மாட்டின் உடம்பில் வண்ணங்களை அப்பியிருந்தார்கள். விளக்கேற்றி விட்டு மாட்டின் கழுத்தில் மாலையிட்டு விட்டு, கைச் செம்பின் தண்ணீரை மாட்டைச் சுற்றித் தெளித்தபடி “ பலியோ பலி” என்றான் செந்தில். அவன் அப்பா “ பொங்கலோ பொங்கல்” என்றார். மாட்டைச் சுற்றி நடந்தபடியே “ பலியோ பலி பொங்கலோ பொங்கலு” என்று குரல் கொடுத்தனர். இதே போல் மற்ற மாடுகளுக்கும் பூசை நடந்தது. பூசை முடிந்த பின், படையலிட்டிருந்த வெல்லம், புளிக் குழம்பு, சோறு எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பிசைந்து இலைத் துண்டில் வைத்து எங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வளவு அற்புதமான சுவையுடனிருந்தது அந்தக் கலவை.

வெயில் ஏறியிருந்தது. மணியைப் பார்த்தேன். உச்சியை அடைந்திருந்தது. இரவு பட்டணம் கிளம்ப வேண்டும். நேரம் நிறைய இருப்பது போலிருந்தது. அடுத்த நொடியே நேரம் மிகக் குறைவாயிருப்பதைப் போல் தோன்றிப் பதறச் செய்தது.பத்திரிகையைக் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். டவுனை அடைந்ததும் தினேசனும் பாலாஜியும் கிளம்பினர். நான் பிரபுவுடன் அவன் வீட்டுக்குச் சென்று அவன் அறையில் படுத்து விட்டேன்.

தூக்கமும் விழிப்புமற்றா ஒரு மாதிரியான அரை மயக்க மந்த நிலையில் புரண்டபடிக் கிடந்தவனை பிரபு கையில் காபியுடன் எழுப்பினான். காபியை வாங்கி உறிஞ்சியபடியே “ பணியாரம் சாப்பட்லாமாடா பையா?” என்றேன். “செரி இரு வாங்கினு வரேன்” என்று கூறி விட்டுச் சென்றவன் சிறிது நேரத்தில் கையில் பொட்டலங்களுடன் வந்தான்.திருப்தியாகச் சாப்பிட்டோம். நேரம் குறைந்து கொண்டே வந்தது.

“செரி நா வீட்டுக்கு போறன். என்னிய கொண்டு போயி வுடு” என்றேன். வீட்டில் என்னை இறக்கி விட்டு விட்டு “நைட்டு எத்தினி மணிக்குடா பஸ்ஸு” என்றான். பத்தே முக்காலுக்கு வண்டி. நீ வரியா.. இல்லின்னாலும் ஒண்ணும் ப்ரச்னயில்ல. நான் போய்க்கிறேன்” என்றேன். “இல்லல்ல. நான் வந்து கூட்டினு போறேன். பத்தே காலுக்கு வரன்” என்று கிளம்பினான்.

என் வீடிருந்த பகுதியில் இப்போது சதுர அடி என்ன விலைக்குப் போகிறதென்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டு கிளம்பினேன். பழகிய பூனைக் குட்டி வீட்டை விட்டுக் கிளம்ப விடாமல் கால்களைச் சுற்றுவது போல கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ நினைவுச் சுழல் என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தது ஏதோ அசவுகரியமாக இருந்தது. பட்டணத்தை நினைத்து ஆயாசமாக இருந்தது.

இரவு உணவு எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டேன். நேரம் எப்படித் தான் போனதோ தெரியவில்லை.பிரபு வந்து ஆரனடித்தான். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் அடைந்ததும் “ நீ வேணா கெளம்புடா பையா. உங்கூட்ல திட்ட போறாங்க” என்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன் தான் குடித்து விட்டு வண்டியிலிருந்து விழுந்ததால் அவன் இரவில் எங்கே போனாலும் கண் கொத்திப் பாம்பாய் அவன் வீட்டில் கவனித்து வந்தனர். “ அதெல்லாம் ஒண்ணும் பரவால. உன் கூட தான் வந்துகுறேன்னு தெரியும் .ஒண்ணியும் சொல்ல மாட்டாங்க” என்று பிடிவாதமாய் நின்றான்.

வண்டி சரியான நேரத்துக்கு வந்தது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. ஏறி அமர்ந்து கையசைத்தவுடன் அவன் நகர்ந்தான்.ஊரின் குளிர் முகத்தில் பட்டால் தேவலாம் போலிருந்தது. குளிர் சாதனப் பேருந்தென்பதால் சன்னல்கள் திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தன. பேருந்தின் குளிர் சாதனம் மனசுக்கு ஒப்பவில்லை. மெல்லப் பேருந்து நகரத் துவங்கியது. இருள் படிந்திருந்த திறக்க முடியாத சன்னலின் வெளியே ஊர் கொஞ்சம் கொஞ்சமாக பின் தங்கி நழுவத் துவங்கியிருந்தது.

 

 

One comment

  1. // அப்பாவின் அத்தை மிக மிக தளர்ந்திருந்தார்// சாரு மாமி என்று எங்களால் அழைக்கப்படும் ” சரஸ்வதி டீச்சர.”
    உன் அப்பாவின் அத்தை என்று நான். கண்டுபிடித்த நாளன்று நான் பிறந்த ஊரைப்பற்றிய உங்கள் பதிவு என்னை ஏதோ செய்கிறது…

    நம்மூர் பாஷையை பதிவதற்கும் ,சிலாகித்து எழுதுவதற்கும் ஆளில்லை என நினைத்தேன். அருமை Harish Ganapathi.வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.