விளையாட்டு

 

தி. வேல்முருகன்

ஏய்? அரிசிக்காரங்க பத்மா அம்மாகிட்ட கேட்டு அந்த முத்திரைப் படிய வாங்கி வா சீக்கிரம்.

ஓடி வாங்கி வந்து கொடுத்து விட்டுச் சென்றவனைத்  திரும்பவும், ஏய்…, மணி என்று அம்மா கூப்பிட்டச் சத்தம், விளையாடச் செல்ல அவனுக்கு இருந்த மனநிலையை மாற்றிய எரிச்சலில், என்ன?

என்ன அவ்வளவு கடுப்பு தொரைக்கு?

படி வாங்கி வரும்போது பார்த்த பால்ராஜூம், சம்பத்தும் பேட் பந்தோடு சென்றவர்களிடம், ஏய், நானும் வரேன், என்னையும் சேர்த்து கொள்ளுங்கடா, என்று கேட்டதற்கு, சரி,  நிக்கிறோம் சீக்கிரம் வாடா, என்று சொல்லி இருந்தனர். நேரமானால் கடைசியாகத்தானே பேட் செய்ய முடியும்?

இந்தா, படிய கொண்டு கொடுத்துட்டு  சித்தப்பாவ கூப்பிட்டு போயி நெல்ல அரைச்சிட்டு வா

படியை எடுத்துக் கொண்டு வரும்போதே பால்ராஜூம் சம்பத்தும், நாங்க போறோம், என்றதும் இவன் படியைக் கையில் வைத்துக்கொண்டே பூவரச மரத்து சட்டத்தில் இவனாகவே சுயமாக தயாரித்த பேட்டைத் தேடியபோது அது கட்டம் போட்ட சிமெண்ட் அச்சு ஜன்னலோரம் சாத்தியிருந்தது.

படியை ஐன்னல் திண்டில் வைத்துவிட்டு பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் பின்னாடியே ஓடினான்.

அகரம் கொள்ளுமேடு தெருவின் பின்புறம் உள்ள புஞ்சையை கோடையில் உழுதிருந்தனர். அதில் பந்து போடும்  இடம் மட்டும் களிமண் கொண்டுவந்து பரப்பி  கைப்பலகையால் நிரவி தண்ணீர் ஊற்றி கட்டை கொண்டு தட்டி அந்த உலகத்தரம் வாய்ந்த பிட்ச் தயாரித்திருந்தனர். அதில் விளையாடுபவர்கள் எல்லாம் பான்டிங், கங்குலி, சேவாக், சச்சின் பந்து வீச்சில் அக்தர், ஸ்ரீநாத், கும்ளேவாக இருந்தனர். கற்பனையில் எல்லா ஆட்டங்களின் அம்பயர் தவறும் விவாதிக்கப்பட்டு அவர்கள் ஆட்டத்தில் அது போல நேராமால் பார்த்துக் கொண்டனர்.

மணி , சம்பத்,பால்ராஜ், மற்றும் புதிதாக வந்த கண்ணனுடன் நால்வர் அணி தயாரானது. லெக் சைடு மட்டும்தான் அடிக்க வேண்டும். ஆப்சைடில் அடித்தால் அவுட், வயலின் முதல் வரப்பில் தடுத்து பந்து நின்று விட்டால் டூ. அதைத் தாண்டி போலிசு வயலையும் தாண்டி மாலாக்கா வீட்டு மதிலில் பட்டால் போர். மதிலுக்கு மேல் சென்றால் சிக்சர். ஆட்டத்தின் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டன. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான்.

பந்து வைத்திருந்த சம்பத், நான்தான் பர்ஸ்ட் பேட்டிங், பேட் வச்சிருந்த பால்ராஜ், நான் செகண்ட் பேட்டிங், என்றான் மீதமிருந்த மணியும் கண்ணனும் சா ப்பூ த்ரி. முடிவு சா என்று சொல்லி கண்ணன் மூன்றாவது பேட்டிங்.

கடைசி பேட்டிங் மணிக்கு ஏமாற்றமாக இருந்தது நெல்லு வேறு அரைக்கப் போக வேண்டும் என்ற கவலை.

சரித்திரப்புகழ் வாய்ந்த ஆட்டத்தின் முதல் பந்தை பால்ராஜ் புயல்வேகத்தில் இடது கையால் வீச, சீரான லோ புல்டாசாக விழுந்தது. சம்பத் பந்தைப் பார்க்காமல் ஒரு காட்டு சுத்து சுத்தியதில் மிடில் ஸ்டம்பை தகர்த்தது.  சம்பத், நோ பால், என்று சொல்லிப் பார்த்தான். பால்ராஜ், லகலகலக, என்று குரல் கொடுத்தான்.  யாரும் ஒத்துக் கொள்ள வில்லை.

ஒரே ஒரு பந்து போடுங்கடா பிளிஸ், என்றதும் கண்ணன் பந்தை புல்டாஸ் போட்டுக் கொடுத்தான். அதையும் அடிக்க முடியாமல் சோகமாகி பேட்டை பால்ராஜிடம்   கொடுத்துவிட்டு, நான்தான் வீசுவேன், என்று அவனிடமிருந்து பந்தை வாங்கி கும்ப்ளே போல் ஓடி வந்து சம்பத் வீசினான்.

முதல் இரண்டு பந்து ஆக்ரோஷமாக இருந்தது. மூணாவது பந்து சார்ட் பிட்ச். கும்ளே சார்ட் பிட்ச் வீசினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அது. மிக லாகவமாக பால்ராஜ் அடிக்கவும் பந்து ஓடி வரப்பில் தடுத்து நிற்கும் என்ற மணியின் நப்பாசையில் மண் விழுந்து யரோ கை கொண்டு எடுத்துப் போடுவது போல் கல்லில் பட்டு வரப்பை எம்பி உருண்டோடி சுவற்றில் அடித்து நின்றது. முதல் போர். நாளாவது பந்தும் போலிசு வயலைத் தாண்டி மதிலில் பட்டது. அந்த ஓவரில் மேலும் இரண்டு ரன்களும் அடுத்த ஓவரில் ஆறு ரன்னும் எடுத்தான்.

அடுத்து கண்ணன். அவன் ஓடி மிதமாக வலது கையால் வீசிய எல்லா பந்தையும் ஒன்றும் இரண்டுமாக எட்டு ரன்கள் எடுத்து விட்டான். அடுத்த ஓவர் சம்பத். முதல் பால் கையை ஒட்டிய புல்டாஸ். ஆட முடியாமல் அவுட்டாகிவிட்டான்.

மணிக்கு வெற்றி பெற பதினாறு ரன்கள் எடுக்க வேண்டும்.

கண்ணன் வீச வந்ததும் அவனுக்கு கொஞ்சம் வாய்ப்பு தெரிவது போல் இருந்தது. எப்படியாவது அடித்து விட வேண்டும். அதற்கு ஏற்றார்போல் கண்ணன் ஓடி வந்து போட்ட பந்து புல்டாஸ். மணிக்கு வாகாக இடுப்பைத் தாக்கும் நோக்கோடு இடதுபுறம் வந்ததை முழுவேகத்தோடு அடிக்க முனைந்தபோது, பந்து அந்த பூவரசம் சட்ட பேட்டின் விளிம்பில் பட்டு மேலே பறந்தது.

பால்ராஜ் கையில் விழுமோ என்று அவன் தலையைக் குறுக்கி, பேட்டை காற்றில் வீசிய போது போலிசு வயலில் இருந்த மதிலையும் தாண்டி மாலாக்கா வீட்டு கூரைச் சீமை ஓட்டில் அடித்து எங்கோ விழுந்தது.

நால்வரும் பந்தைத் தேடி ஓடினர். மதிலோரம் மணி நின்று கொண்டு, எங்களுக்கு சண்டைக்காரங்கடா  நீங்க பாருங்கடா, என்றதும் சம்பத்தும் பால்ராஜூம் மதில் ஏறி உள்ளே தேடச்சென்றனர்.

கண்ணன் கனத்த உருவம் அவனால் மதில் ஏற முடியாது.

என்னடா மணி! இப்படி அடிச்சிட்ட பந்து கிடைக்கலன்னா சம்பத் உடமாட்டான்டா

ஏய் கிடைக்கும் கம்முனு இருரா நீ வேற பயமுறுத்தாதடா

சிறிது நேரத்தில் பால்ராஜ் வந்து விட்டான். ஏய் எங்க தேடியும் கிடைக்கல. சம்பத் பந்துல்ல அவன் தேடட்டும் நான் போறேன் பசிக்குது, என்று பால்ராஜ் கிளம்பியதும் அவன் கூடவே கண்ணனும் கிளம்பிவிட்டான்.

ஏய் இருங்கடா  சம்பத் வந்ததும் சேர்ந்து போலாண்டா, சொல்லும்போது சம்பத் வெறுங்கையோடு மதிலில் இருந்து குதித்ததும் எல்லோர் பார்வையும் அவன் மேல். கண்கள் கலங்க, பந்து கிடைக்கலடா.

எனக்கு தெரியாது மணி அடிச்ச நீதான் வாங்கி தரனும் இருபது ரூபாய் புது பந்து.

மணிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. சம்பத், சாப்பிட்டுட்டு வந்து, தேடும்டா கிடைச்சிடும்டா.

இல்லை இல்லை அது கிடைக்காது நான் ஒங்கப்பாகிட்ட வந்து சொல்லுவேன், எனக்கு பந்து வேணும்.

சம்பத், நெல்லு அறைக்க போறன்டா கொஞ்சம் காசு வரும் அத தரன்டா சொல்லதடா

உனக்கு சாயந்திரம் வரைக்கும்தான்  டைம் மணி. இல்லைன்னா உங்கப்பாகிட்ட கண்டிப்பா சொல்லுவேன்.

அப்பா முதலில் கன்னத்தில்தான் அடிப்பாங்க. அடி வாங்கியவுடன் தலை சுத்துவது போல் இருக்கும், மிளகாய் கடித்ததுபோல் காந்தும். கொஞ்சம் குனிந்து போக்கு காட்டும் போது முதுகில் ஒரு வெடி சத்தம் கேட்கும். இரண்டு கண்ணில் இருந்தும் நீர் துளித்துளியாகச் சொட்டும். பேச்சு வராது அடுத்த அடி வாங்க உடம்பு தாங்காது, இனி செய்ய மாட்டேன்பா விட்டுடுப்பா, என்னும்போதே சத்தம் கேட்டு எதிர் வீட்டு அத்தை ஓடி வருவார். புள்ளைய இப்படியா அடிப்பாங்க, என்று அழைத்துச் சென்று அடிபட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவும்போது சிறிது வீ’க்கத்தோடு விரல் தடம் தெரியும்.

அடியை நினைக்கவே பதறுகிறது மணிக்கு. நெல்லு வேற அறைக்கச் சொன்னதும் கவலையோடு சித்தப்பாவை தேடி வந்தான். சித்தப்பா நெல்லை அள்ளிக் கட்டிக் கொண்டு இருந்தார்.

தொரைக்கு இப்பதான் ஊட்டு ஞாபகம் வந்துச்சோ, போயி சீக்கிரம் சாப்பிட்டுட்டு ஓடு சித்தப்பாகூட போயிட்டு வா

ம்ம்

அம்மா சித்தப்பாவிடம் ஐம்பது ரூபாய் கொடுத்தார். கள நெல் தம்பி, கொஞ்சம் களத்தில கொட்டி சூடு காட்டி இழைய  புடுச்சுகிட்டு வாங்க ஆவாட்டியோட கட்டி வச்சது சூடு காட்டுலன்னா இடிஞ்சுடும்.

சித்தப்பா நெல்லைத் தூக்கிக் கொண்டார்.  மணி தவிடும் நொய்யும் பிடிக்க பை சாக்கும் எடுத்துக்கொண்டு கூட ஓடினான். தெரு முடிஞ்சு ஆண்டியாங்கொல்லை தொடங்கியதும், சித்தப்பா எனக்கு ஒரு இருபது ரூபாய் தர்ரியா அப்புறமா காசு சேத்து தந்துடுறேன் சித்தப்பா?

என்னுகிட்ட ஏதுடா காசு? நானே வேல இல்லாமல் தண்டமா இருக்கேன்.

அம்மா குடுத்துதுல்ல அதுல குடேன் அம்மா கேட்டா ஏதாவது சொல்லி சமாளியேன்.

ஏன்டா நாயே பொய் சொல்லச் சொல்றியா நீ? அடிச்சுடுவேன்.

இல்ல சித்தப்பா…

உனக்கு எதுக்கு இருபது ரூபாய்?

அது வந்து சித்தப்பா… கிரிக்கெட் விளையாண்டமா, அப்போ ஓங்கி அடிச்சனா… பந்து மாலாக்கா வீட்டிற்கு மேல போயிடுச்சு பசங்க தேடுனப்ப கிடைக்கல. சம்பத் பந்து வேணுங்கறான் இல்லைன்னா அப்பாட்ட சொல்லிடுவானாம்.

ஏய் மாலா வூடுதான  நான் போயி எடுத்து தரேன் நீ ஒன்னும் கவலைப்படாத வா, நெல்லக்\ கொட்டி காய வைப்போம்.

நெல்லைக் கொட்டி கிண்டும் போது ஒரு பச்சைக் கிளிக்கூட்டம் பறந்து வந்து களத்து ஓரம் இருந்த இலுப்பை மரத்தில் அமர்ந்து கீ கீ என்று கத்திக் கொண்டு இலுப்பைப் பழங்களின் மேல் தலைகீழாக தொங்கிக் கடித்து இலுப்பைக் கொட்டைகளை கொறிக்க ஆரம்பித்தது. கிளியின் கழுத்தில் இருந்த கோடுகள் மணியின் கண்களுக்கு தொலைத்த வெளிர் பச்சை டென்னிஸ் பந்தை ஞாபகப்படுத்தியது.

அவன் அண்ணாந்து பார்த்ததை கவனித்த சித்தப்பா, எல்லாம் கீ கீ என்று அதன் மொழியில் பேசிக்கொள்ளுதுடா, என்றார்.

ச்சை கிளியாக பிறந்து இருந்தால் கஷ்டமில்லை என்று நினைத்தவன் கிளிக்கூண்டு ஞாபகம் வந்து, அய்யோ இதுவே பரவாயில்லை பந்து எப்படியாவது கிடைத்து விட வேண்டும்.

சித்தப்பா மறக்காம தேடி எடுத்து தர்ரியா?

என்னடா மணி?

பந்து சித்தப்பா.

அதான் எடுத்து தரேன் சொன்னேன்ல? வா, சாக்க புடி நெல்ல அள்ளி அரைச்சிட்டு போவும்,

அகரம் ரயிலடியை ஒட்டிய அது ஒரு பழைய காலத்து ரைஸ்மில். சுவர் எல்லாம் நூலாம்படைகள் ஒரே பெருச்சாளி புழுக்கையின் வீச்சம்.

வரிசையாக சின்னதும் பெரியதுமாக மூட்டைகள். பெண்களும் வயதானவருமாக நின்று கொண்டு இருந்தனர். ஒரு வயதான ஆயா சாக்கை ஒரு காலால் மெறித்துக் கொண்டு ஒரு கையால் தவிடு அள்ளியது. அள்ளி முடித்ததும் ஒவ்வொருவரும் ஒரு கை ஆயா முறத்தில் இட்டனர்.  டிரைவர் நெல் அறைக்க ஒரு கை அரிசியை அவருக்கு எடுத்து கொண்டார்.

மணிக்கு அந்த ஆயாவைப் பார்க்க என்னவோ போல் இருந்தது. உடம்பு முழுவதும் தவிடோடு  குனிந்தும் நிமிர்ந்தும் அந்த ஆயா அள்ளி கொண்டு இருந்தார். அவன் அரைத்தவுடன் ஆயாவுக்கு இரண்டு முறை அள்ளிக் கொடுத்தான்.ஆயா அதன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது.

சித்தப்பா ஒன்றும் சொல்லவில்லை. வீடு வந்ததும் காசு முழுவதும் அம்மாவிடம் கொடுத்து விட்டார். மணி சீரான அழுகையோடு,  சித்தப்பா பந்து…

ஏழாவது படிக்கற, இன்னும் பச்சைப்புள்ள மாதிரி அழுவுற? இருறா அங்கதான் போறேன்

மணி வழியைப் பார்த்து நின்றிருந்தான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர், எலே அந்தப் புள்ள எல்லா இடமும் தேடிப் பார்த்துச்சு.  நான் கூடத் தேடினேன், கிடைக்கலடா. வேற எங்கியோ போயி விழுந்து கிடக்கும் போயி பாரு.

நீ போ சித்தப்பா உன்னால நான் அடி வாங்கப் போறேன் சம்பத் வந்து அப்பாட்ட சொல்லுவான். நீ என்ன ஏமாத்திட்ட காசாவது தரலாம் இல்லை?

சரி போடா  நான் கடையில கிடைக்குதா பார்க்கிறேன்

அந்தப் பந்து சிதம்பரம் தெரசனம் பாக்கப் போனப்ப வாங்குனதாம். இங்கே பரங்கிப்பேட்டைல கிடைக்காது சித்தப்பா

– இல்லடா மணி  நான் எதுக்கும் பரங்கிப்பேட்டைக்குப் போயி பாக்கறேன்

மணி வீட்டில் கவலையோடு சம்பத்தை  எதிர்பார்த்து இருந்த போது, எம்மோவ் என்று அரிசிக்காரம்மா கூப்பிடும் சத்தம்.

ஏய் மணி என்னான்னு போயி கேளு கை வேல இருக்கு, என்றார் அம்மா

இவன் ஓடி, என்ன ஆயா?

அரிசி அளக்க முத்திரைப் படி வாங்கிட்டு போனல்ல, அத எடுத்து வாடா, ஓடு

– என்னடா கேட்கறாங்க?

படி கேட்கிகறாங்கம்மா

ஏன், காலையிலே குடுக்கல நீ?

மணி வாயிலிருந்து வார்த்தை இல்லை.

என்ன செய்யற?

தேடறம்மா

என்னாது, தேடுறியா?

அதற்குள் இரண்டு முறை அரிசிக்காரம்மா குரல் கொடுத்து விட்டார். மணிக்கு பயத்தில் எங்கே வைத்தோம் எனத் தெரியவில்லை.

எங்கடா?

காலையிலே தரனே? இந்தப் பய எங்கியோ வச்சிட்டு தேடிட்டு கிடக்கறான் அரிசிகாரங்கல?

நீ எல்லாம் கல்லூட்டு பெரிய வாழ்வுக்காரிடி பொழுது போயிடுச்சுல்ல இதெல்லாம் ஒரு சாக்கு, என்று அரிசிகாரம்மா சொன்னதும் அம்மா கடுங்கோவத்தோடு மணியைப் பார்த்தாள்.

படியைத் தேடிக்கொண்டு இருந்தவன் கண்ணில் கட்டம் போட்ட சிமெண்ட் அச்சு ஜன்னலோரம் இருந்த படி தெரிந்தது. அவன் பார்வையை பார்த்ததும் அம்மா படியை எடுத்து ஓங்கினாள். தெருவாசலுக்கும் நிலைப் படிக்கும் இடைப்பட்ட அந்த இடத்திலிருந்து மணி தப்பி ஓட உடல் வளைத்துத் திரும்பியபோது அம்மா முழுவீச்சில் படியால் அடித்தார். சரியாக அவன் நடுமண்டையை படி தாக்கியது, படியின் அடைப்பு தெறித்து ஓடி வட்டமிட்டு விழுந்தது

கண்ணு இரண்டிலும் கோடையில் வரும் மின்னலும் காதில் இடிச் சத்தமும் ஒருசேரக் கேட்க,  கீழே தலைசுத்தி விழுந்தான். வலதுகையும் இடது கையும் கோழிக்குத் துடிப்பது போல் துடித்தது. அவ்வளவுதான். அம்மாவுக்கு என்ன செய்தோம் என்று புரியவில்லை. அய்யோ சாமி, என்று கத்துகிறார். மணிக்கு கேட்கவில்லை.

அதற்கு பிறகு பதினைந்து வருடமாக பார்க்காத வைத்தியம் இல்லை  யார் எப்ப எதைக் கேட்டாலும் மணிக்குத் தெரிந்தது ஒன்றுதான்- பந்து, அதை மட்டும்தான் சொல்லுவான்.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.