“எங்கடி போயிருந்த, நாலு நாளா ஆளையேக் காணும்?” என்று புகையிலைத் துண்டை விண்டு வாயில் போட்டபடியேக் கேட்டாள் பேச்சியம்மாள்.
ஒரு இணுக்கை பிட்டு வாயில் அதக்கிய பொண்ணுத்தாயி, ” டவுணுக்குத்தேன். பெரியாசுபத்திரில ரெண்டு நா கெடக்க வேண்டிதாப் போச்சு. எல்லாம் நா வாங்கி வந்த வரம்”
“பெரியாசுபத்திரிக்கா? அடிப்பாவி. இப்படி சொல்லாமக் கொள்ளாம போயிட்டு வந்திருக்கியே. என்னத்தேன் ஆச்சு” எனப் பதறினாள் பேச்சியம்மாள்.
“என்னத்த ஆச்சு. நாளு தள்ளிப் போச்சுன்னு போயிட்டு வந்தேன்” விரக்தியோடு சொல்லிக் கொண்டிருந்தவள் சட்டென சுதாரித்துக் கொண்டு “யார்டையும் சொல்லிராதடி, மாரியப்பனுக்குக் கூட சொல்லல” எனக் கெஞ்சலோடு பேச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“அடிப்பாவி” பேச்சியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
“கெரகம்…. இந்தாள்ட்ட சொன்னாலும் கேக்க மாட்டிக்கிறாரு. காலம் போன காலத்துல இது வேற. மாரியப்பந்தேன் கெடந்து செரமபட்டுக்கிட்டு சின்னதுக ரெண்டையும் பாத்துக்கிட்டிருக்கான் . இதுல நாலாவதுன்னு ஒண்ணு நம்மாள முடியுமா?” சொல்லி முடிக்குமுன்னர் பொன்னுத்தாயின் கண்கள் தளும்பின.
“ஏய்… ஆனது ஆயிப்போச்சி. நீ ஏங்கெடந்து கண்ண கசக்குற? இனியாவது அந்தாளக் கொஞ்சம் அடங்கி நடக்கச் சொல்லு. உம்பையன நெனச்சா பாவமாத்தான் இருக்கு”
“என்னத்தப் பாத்து நடக்கிறது. ஒத்தப் பைசா சம்பாத்தியமில்ல. ஆனா அப்பப்ப காச மட்டும் பிடுங்கிட்டுப் போயி…’ சொல்லும்போதே பொன்னுத்தாயின் குரல் விம்ம, “ இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா…”
“விடு விடு. ஒன்னும் ஆகாது. ஆண்டவன் இருக்கான்” என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கிளம்பினாள் பேச்சியம்மாள்.
மூத்தவன் மாரியப்பன் அதற்கடுத்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து தனலட்சுமியும், காசிநாதனும் என இரட்டையர்கள். முத்துக்கருப்பனுக்கு வேலையென எதுவும் கிடையாது. குடித்துவிட்டுத் திரியும் ஊதாரி. பலமுறை சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மாரியப்பன்தான் ஒற்றை ஆளாக குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமப்பவன். தன் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு தம்பி தங்கையை எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று பொட்டிக் கடை வைத்திருந்தான். தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அப்பாவிடம் ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. அப்பாவென்று சொன்னதுகூட கிடையாது. “அந்த ஆள்” தான். முத்துக்கருப்பனுக்கு தினமும் குடித்தாக வேண்டும். வாரத்துக்கு நான்கு நாட்கள் டவுணுக்குப் போய் ஆட்டம் என்றால் மீதி நாட்கள் செல்லத்துரை தோப்பில் போய் கும்மாளம். தினமும் பொன்னுத்தாயுடன் வம்பு வரத்துதான். சமயத்தில் அடிதடி வேறு. அவரைக் கண்டாலே மாரியப்பனுக்கு ஆகாது. அவருக்கும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை சாடைமாடையாக அவரை குற்றம் சொல்வது பற்றிக் கொண்டு வரும்.
தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பொன்னுத்தாயி, மகனுக்கு வீட்டிற்குள்ளும் கணவனுக்குத் திண்ணையிலும் சோறு வைத்துவிட்டு காத்திருந்தாள். ”அவன போலீஸ் கூப்டு போயிருக்காங்க” என்று முத்துக்கருப்பன் சொல்ல, “போலீசா எதுக்கு? என்னன்னு தெரியலயே” மனசு படபடத்தது. புலம்பிக் கொண்டிருந்தாள் மாரியப்பன் திரும்பி வரும் வரை.
“என்னப்பா ஆச்சு?எதுக்கு கூப்டாக?” மகன் வரவும் கேட்டாள்.
“அது ஒன்னும் இல்லம்மா நேத்து தெருல சின்ன சண்ட. அது விசயமா”
“ஒனக்கு ஒன்னுமில்லேலா?”
“ஒன்னுமில்லம்மா”
“எதுக்குப்பா தேவ இல்லாம ஊர்ப் பிரச்சன நமக்கு?”
“எம்மா நா போவல. எதும்னா ஒன்ட்ட சொல்ல மாட்டனா? இது வரைக்கும் ஏதாது மறச்சிருக்கனா? சரி அத விடு நீ மொத சோறப் போடு, சாப்ட்டு கடைக்குப் போனும்”
“ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா. நீ எந்த தப்பும் பண்ண மாட்ட, எதயும் என்ட மறைக்க மாட்டேன்னு தெரியும் இருந்தாலும் கொஞ்சம் சூதானமா இருந்துக்கோய்யா”
“சரிம்மா நா பாத்துக்குறேன். நீ பயப்படாத”
வெயிலுக்கு மறைப்பாக அஞ்சால் மருந்து பேனரை கடை முன் இறக்கி விட்டுவிட்டு, உட்கார்ந்திருந்தபோது, வட்டிப்பணம் கேட்டு பால்பாண்டி வந்தான்.
“அண்ணே குடுத்த இடத்துல இருந்து இன்னும் வரல. இன்னும் ரெண்டு நாள் டயம் குடுங்க. தந்துறேன்” என்றான். “ஏல என்னிய என்ன இளிச்சவாயன்னு நெனச்சியா? நாலு மாச தவணை தப்பிருச்சு. சாயந்திரம் வர்றேன். வட்டிப்பணமாச்சும் எடுத்து வை. ஏதோ கவுரவமா கடை வச்சிருக்கேன்னு சின்னப்பையன நம்பி பணம் கொடுத்தா இஷ்டத்துக்கு இழுத்து அடிக்கிறியே. அப்புறம் அசிங்கமாயிரும் பாத்துக்கோ” என்று மிரட்டி விட்டுச் சென்றான்.
கல்லாப் பெட்டியைத் திறந்து பார்த்தான். முழு பத்து ரூபாய் நோட்டும், சில்லறை நாலு ரூபாய் ஐம்பது காசும் கிடந்தது. இவன் சம்பந்தமே வேண்டாமென மொத்தத்தையும் திருப்பிவிடலாம் என்றால், முப்பதாயிரம் உடனடியாகக் கொடுக்க வேண்டும். என்ன செய்வது? இருந்த மொத்த பணத்தையும் வழித்து துடைத்து நேற்றுத்தான் தம்பிக்கும் தங்கைக்கும் ஃபீஸ் கட்டி ஆயிற்று. ஒன்றும் புரியவில்லை, தலை சுற்றியது. யார்யாரிடமோ கேட்டுப் பார்த்தான். ஐந்து ரூபாய் கூடத் தேறவில்லை. கடைசியாக டவுணில் இருக்கும் நண்பன் பழனிக்குப் போன் செய்தான்.
“தெரியும்டே. ஏதாச்சும் தேவைன்னாத்தான் இந்தப் பழனிய உனக்கு நெனப்பு வரும். சொல்லு” என்றான் பழனி.
“அப்டில்லாம் இல்லடா. ஒரு சின்ன உதவிதான்” என இழுத்தான் மாரியப்பன்.
” மேட்டர் என்னச் சொல்லு”
” அவசரமா ஒரு முப்பதாயிரம் பணம் வேணும்”
“போதுமா? நீங்க என்ன அம்பானிக்குப் போட்டியா எதும் தொழில் பண்ணப் போறீகளா?”
“லேய் விளையாடாத, அவசரம் அதான்”
“சரி வந்துத் தொல, தங்கச்சி கல்யாணத்துக்கு வச்சிருக்கதுடா. ஒரு மாசத்துல திருப்பித் தந்துரு”
“ஒரு வாரத்துல தந்துர்றேன்”
வெயில் இறங்கும் நேரம், கொஞ்சம் சுருக்கவே கடையை அடைத்து விட்டு, இருந்த பதினான்கு ரூபாய் ஐம்பது காசை எடுத்துக் கொண்டு டவுண் பஸ் ஏறினான். பால்பாண்டி தொல்லையை முதலில் தீர்த்து விடனும். மானம் போகிறது. பழனிக்குப் பணத்தைக் கொடுக்க இன்னொரு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னொரு வாரமாவது நேரம் இருக்கிறது. நேராக பழனி கடைக்குச் சென்றான். பூட்டி இருந்தது. அருகிலிருக்கும் டெலிபோன் பூத்திலிருந்து பழனிக்கு மீண்டும் போன் செய்தான்.
“மன்னிச்சிக்கோ மாப்ள. தங்கச்சியக் கூப்பிட மதுர போ வேண்டியதாப் போயிட்டு, நீ ஒண்ணு பன்னு, நம்ம சின்னதுரை அண்ணன்ட கடச்சாவி இருக்கு, வாங்கி அங்க படுத்துக்கோ. நா காலைல வெரசா வந்துருறேன்” என்றான்.
“சரி மாப்ள. பணம்?”
“அதான் சொன்னேன்ல காலைல வந்துருவேன்னு. வந்ததும் தாரேன்”
“கண்டிப்பா கெடச்சிரும்லா?”
“கண்டிப்பா”
ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்திருந்தது. போனை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். எதிரிலிருக்கும் மதுக்கடையில் தெரிந்த முகமாக இருக்கிறதே எனப் பார்த்தால், முத்துக்கருப்பனேதான். “இந்த ஆள்” எதுக்கு இங்க இருக்காரு என்று யோசித்தவாறே வெளியில் வந்தான். அவருக்கு பக்கத்திலே தொற்றிக் கொண்டாற் போலொரு பெண்மணி. அலட்டலும் அலப்பறையுமாக அவள் பேசிக்கொண்டே போவதைப் பார்த்ததும் மாரியப்பன் திடுக்கிட்டான். இதென்ன கூத்து என்றபடியே அவர்களைப் பின் தொடர்ந்தான். நேராகச் சென்ற அவர்கள் வலது பக்கம் திரும்பி பின் இடது பக்கம் உள்ள தெருவில் திரும்பினார்கள். அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு அந்த ஆள் ஒரு வீட்டிற்குள் நுழைய, அவருடைய அல்லாடலை கிண்டலடித்தபடியே கூடவே அந்தப் பெண்மணியும் சென்றாள்.
மாரியப்பனுக்குக் கோபமும் கழிவிரக்கமுமாகப் பொங்கியது. தகப்பனை எந்த நிலையில் பார்க்கக் கூடாதோ அப்படிப் பார்த்தான். கண்களில் கண்ணீர் வழிந்தது, அம்மாவை நினைத்து. கோபத்தில் அருகிலிருக்கும் பலகையில் ஓங்கிக் குத்த, சத்தம் கேட்டு முத்துக்கருப்பன் பதட்டத்துடன் வெளியில் எட்டிப் பார்த்தார். திண்ணையின் குறை வெளிச்சத்தில், அவரை நன்றாக நிறுத்திப் பார்த்துவிட்டு மாரியப்பன் விறுவிறுவென நடந்தான்.
மறுபடியும் அதே போன் பூத் எதிர்ப்பட்டதும், கையில் இருந்த கடைசி ரூபாய் காய்னைப் போட்டு போன் அடித்தான்.
“அலோ யார் பேசுறது?”
“நாந்தாம்மா மாரி” குரல் தழுதழுத்தது.
“எங்கயா போன? பால்பாண்டி வந்தான். கொள்ளநாளா கடன் தவணை கட்டலன்னு ஒரே கூப்பாடு. சின்னவ என்னமோ வார்த்தய விட, ஏகத்துக்கு சண்டயா போயிட்டுப்பா. ஊரையே கூட்டிட்டு, ஒரே.அசிங்கமாப் போச்சு. என்னயா ஆச்சு? “
“அவனுக்குப் பணம் தரணும். ரெடி பண்ணிட்டேன்” மாரியப்பனுக்கு தொண்டை அடைத்தது.
“இருக்குல்லா? நீ எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டன்னு தெரியும்.ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் சீக்கிரம் வந்துரு.சரி இப்போ எங்க இருக்க?”
“டவுண்ல”
“இந்தாள வேறக் காணும். எங்க போயித் தொலஞ்சாருன்னேத் தெரியல”
“இங்க தான் இருக்காரு”
“அங்கயா? ஒங்கூடையா?”
ச
ற்று மௌனத்திற்குப் பின் “எங்கூட இல்ல. இன்னொருத்தி கூட” என்று சொல்லிவிட்டுக் குமுறி அழுதான். ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்தது.
இரவு முழுவதும் தூக்கம் வராமல் அம்மாவையே நினைத்துக் கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் முகத்தை எப்படிப் பார்ப்பது, இப்படி போனில் போட்டு உடைத்திருக்கக்கூடாதோ? கேட்டு அவள் எப்படியெல்லாம் வேதனைப்பட்டாளோ என்று ஒன்றும் தெரியவில்லை. யோசித்துக் கொண்டிருக்கும்போதே கண் அசந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கே வந்த பழனி, அவன் கேட்ட முப்பதாயிரம் பணத்தைக் கொடுத்தான். உடனேக் கிளம்பினால் வெள்ளென ஊர் போய் சேர்ந்து விடலாம். அம்மாவை நினைத்தால்தான் மனம் ஆறவேயில்லை. அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பஸ்ஸில் இருந்து இறங்கியதும் வீட்டை நோக்கி ஓட்டமான நடைதான்.
மாரியப்பனின் தலை தெரிந்ததும், தம்பி காசி கத்தினான்.
“எப்பா இந்தக் கொலைகாரப் பாவி வாராம் பாரு”. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த தனமும் கூடவே கத்தினாள். ‘இப்படி கொன்னுப்போட்டியேண்ணே’.
“ஏல, நீ எல்லாம் நல்லாருப்பியா? கடன வாங்கிக் கூத்தடிச்சதுக்கு, ஆத்தாள காவு வாங்கிட்டியேடா,” என்றார் அந்த ஆள்.
“பொறுப்பானவன்னு பாத்தா இப்படி ஊதாரித்தனமா கடன வாங்கிப்புட்டானே…. அவ ரோசமுள்ளவா. அவமானம் தாங்க முடியாம தூக்குல தொங்கிட்டா,” என்று ஊரே ஒப்பாரி வைத்தது.
துக்க வீட்டின் அத்தனை அபத்தங்களுடன் சண்டை நடந்தேறியது. காசி கல்லை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். தனம் சுவற்றில் முட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். முத்துக்கருப்பன் ஆட்டம்தான் மிகவும் அதிகமாக இருந்தது. கண்டபடி ஏசிக்கொண்டே செருப்பை எடுத்துக் கொண்டு பாய்ந்து வந்தார். முந்தாநாள் மாரியப்பன் அவரை வெறுப்போடு பார்த்த பார்வை அவரால் மறக்க முடியவில்லை.
துக்கம் கேட்க வந்த கூட்டத்தில் பால்பாண்டியும் இருந்தான். பொறுக்க முடியாமல் அவனுடைய கணக்கை அங்கேயே பைசல் செய்தான் மாரியப்பன். அம்மாவின் முகத்தைப் பார்த்து பொங்கி அழக்கூட ஒரு நேரம் வாய்க்காமல் மாரியப்பன் மரத்துப் போய் நின்றிருந்தான்.
இரவு மசானக்காட்டில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்த வெட்டியான், “விடுப்பா. சொல்லு தாங்க முடியாம போயிட்டா புண்ணியவதி. அதுக்கும் ஒரு கொடுப்பினை வேணுமே” என்றான்.
ஒன்றும் பேசாமல் அம்மாவையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மாரியப்பன்.
Nice story
Arumai
என்ன வெங்கி,
இப்படி முடித்துவிட்டீர்களே? ஏழைகளுக்கு மானம்தான் பெரிது.எளியமனிதர்களுக்கு எதிலும் அவசரம்தான். நிதானம் கிடையாது எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள்.இதைதானே பலர் பயன் படுத்திக் கொள்வார்கள். முத்துக் குமார் தற்கொலைக்கு என்ன பயன் விளைந்த்து?