வண்ணக்கழுத்து

மாயக்கூத்தன்

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை. ஒரு கொடுரமான முக்காரம் கேட்டு திடீரென்று நான் விளித்தேன். கண்களைத் திறந்த போது, எனக்கு முன்னமே விளித்திருந்த கோண்ட், என்னைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு கீழே பார்க்கும்படி சைகை செய்தார். விடியலின் மங்கிய வெளிச்சத்தில் முதலில் எதுவுமே எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு கோபம் கொண்ட விலங்கின் முனகலும் உறுமலும் எனக்குத் தெளிவாகக் கேட்டது. வெப்ப மண்டலப் பிரதேசங்களில் விடியல் விரைவானது. நான் கீழே கூர்ந்து நோக்கினேன். இப்போது அதிகரித்து வரும் வெளிச்சத்தில் நான் கண்டேன்… நான் கண்டதில் இருவேறு கருத்துக்களே இருக்க முடியாது. ஆம், ஒளிரும் நிலக்கரிக் குன்று ஒன்று தன்னுடைய கரும் பக்கத்தால் நாங்கள் உட்கார்ந்திருந்த மரத்தை உரசிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பாதி முழுக்க இலைகளாலும் மரக் கிளைகளாலும் போர்த்தப்பட்டிருந்த போதும், அது ஒரு பத்து அடி நீளம் இருக்கக்கூடும் என்று நான் ஊகித்தேன். காலைச் சூரியன் பட்டு அந்த மிருகம், ஒரு உலையிலிருந்து வெளிவரும் கரிய அமுதக்கல்லைப் போல இருந்தது. ”இயற்கையில் காணும் எருமை ஆரோக்கியமாகவும் வாளிப்பாகவும் இருக்கிறது. மிருகக்காட்சிசாலையில் சடைதட்டிப் போன மயிர்களுடனும் அழுக்கான தோலுடனும் ஒரு அசிங்கமான மிருகமாகத் தெரிகிறது. அடைத்துவைக்கப்பட்டிருக்கும் எருமையைக் காண்பவர்கள் அது மிக அழகாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியுமோ? ஐயோ பாவம் இந்த இளைஞர்கள். கடவுளின் படைப்புகளை, நூறு விலங்குகளை மிருக்காட்சி சாலையில் பார்பதற்கு சமமானதான ஒரு விலங்கை அதன் இருப்பிடத்தில் நேரடியாகக் காண்பதைவிட்டுவிட்டு, சிறைகளில் மிருகங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய அறிவைப் பெற வேண்டியிருக்கிறது. சிறைகளில் இருக்கும் கைதிகளைக் கண்டு மனிதரின் தார்மீக நியாயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது, எப்படி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு மிருகத்தைப் பார்ப்பதைக் கொண்டே அதைப் பற்றி எல்லாமும் நாம் அறிந்து கொண்டுவிட்டதாக நம்மால் நினைக்க முடிகிறது?” என்று நான் நினைத்தேன்.

எப்படியோ போகட்டும். எங்கள் மரத்தடியில் இருந்த அந்தக் கொலைகார எருமையைப் பார்ப்போம். வண்ணக்கழுத்தை என் உடையிலிருந்து விடுவித்து மரத்தில் உலாவ விட்டுவிட்டு, நானும் கோண்டும் அந்த மரத்திலிருந்து ஏணிப்படிகளில் இறங்குவதைப் போல கிளைகளில் இறங்கி, அந்த எருமைக்கு இரண்டிக்கு மேலே இருக்கும் ஒரு கிளையை அடைந்தோம். கோண்ட் சுருக்குக் கயிற்றின் ஒரு முனைவை மரத்தண்டோடு விரைந்து கட்டியதை அது கவனிக்கவில்லை. கீழே போட்டிருந்த கோண்டின் உடைகளில் கிழிக்கப்பட்டிருந்தவற்றில் மிச்சமிருந்தவற்றை அந்த எருமை தனது கொம்புகளைச் செலுத்தி கீழே விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்தேன். அந்த உடைகளில் இருந்த மனித வாடையே அதனை ஈர்த்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனுடைய கொம்புகள் சுத்தமாக இருந்த போதும், அதன் தலையில் இன்னும் காய்ந்திராத ரத்தக் கறை இருந்தது. அந்த இரவில் மீண்டும் அந்த கிராமத்திற்குச் சென்று மற்றும் ஒருவரை அது கொன்றிருக்கிறது என்பது தெரிந்தது. அது கோண்டை உசுப்பிவிட்டது. ’இதை உயிருடன் பிடிப்போம். மேலிருந்து இந்தச் சுருக்குக் கயிற்றை அதன் கொம்புகள் மீது வீசு, என்று என் காதில் கிசுகிசுத்தார். ஒரு நொடிப்பொழுதில் கோண்ட், மரத்திலிருந்து அந்த எருமையின் பின் பக்கம் குதித்தார். அது அந்த மிருகத்தை மிரளச் செய்தது. அதன் வலது பக்கம் நான் முன்பு சொன்ன மரமும், இடப்பக்கம் நான் அமர்ந்திருந்த மரமும் இருந்ததால், அதனால் திரும்பி ஓட முடியவில்லை. அந்த இரட்டை மரங்களை விட்டு வெளியே போக வேண்டுமென்றால், அது முன்னே போகவேண்டும் அல்லது பின்னே போக வேண்டும். ஆனால், அது நடக்கும் முன்பாகவே நான் சுருக்குக் கயிற்றை அதன் தலை மீது வீசினேன். அந்தக் கயிறு அதன் மீது பட்டவுடன் ஏதோ மின்சாரம் பாய்ந்த்தைப் போல அது உணர்ந்தது. அந்தக் கயிற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிக வேகமாக பின்னால் நகர்ந்தது. கோண்ட் முன்னரே அடுத்த மரத்தைச் சுற்றி நகர்ந்துவிட்டார், இல்லையென்றால் அது பின்னால் போன வேகத்தில், அதன் கூரிய கால் குளம்புகளில் சிக்கி நசுங்கி, வெட்டுப்பட்டு இறந்திருப்பார். ஆனால் இப்பொழுது நான் கண்டது எனக்கு பீதியைக் கொடுத்தது. இரண்டு கொம்புகளையும் சேர்த்து அடியில் இறுக்காமல் ஒரு கொம்பை மட்டுமே சுருக்குக் கயிற்றால் பிடித்திருந்தேன். அந்த நொடியே நான் கோண்டிடம் சீறினேன், “ஜாக்கிரதை! ஒரு கொம்பு மட்டுமே பிடிபட்டிருக்கிறது. அதிலிருந்தும் கூட கயிறு எந்த நொடியும் நழுவலாம். ஓடுங்கள்! ஓடி மரத்தில் ஏறிக் கொள்ளுங்கள்.”
ஆனால் அந்த துணிச்சல் மிகுந்த வேடுவன் எனது அறிவுரையை பொருட்படுத்தவில்லை. மாறாக, எதிரியைப் பார்த்தவாறு அருகிலேயே நின்றார். பிறகு அந்த முரட்டு மிருகம் தன் தலையை தாழ்த்து முன்னே பாய்வதைக் கண்டேன். பயத்தில் என் கண்களை மூடிக் கொண்டேன்.

நான் மீண்டும் கண்களைத் திறந்த போது, அந்த எருது அதன் கொம்பில் கட்டப்பட்டு, கோண்ட் பின்னே ஒளிந்து கொண்டிருந்த மரத்தை முட்ட முடியாமல் தடுக்கும் கயிற்றை இழுத்துக் கொண்டிருந்தது. அதன் பயங்கர முக்காரம் அந்த காடு முழுவதையும், பய ஒலிகளால் நிரப்பியது. பயத்தில் கிறீச்சிடும் பிள்ளைகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாக அதன் எதிரொலி எழுந்தது.

அந்த எருது அவரை அடைவதில் இன்னமும் வெற்றியடையவில்லை என்பதால், கோண்ட் தன்னுடைய ஒன்றரை அடி நீளமும் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட சவரக்கத்தியைப் போலே கூர்மையான பட்டக்கத்தியை எடுத்தார். மெதுவாக வலப்பக்கம் இருக்கும் இன்னொரு மரத்துக்குப் பின் நழுவினார். பிறகு பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். அந்த எருது, கடைசியாக கோண்டை எங்கு பார்த்த்தோ அந்த இடத்தை நோக்கி நேராக ஓடியது. அதிர்ஷ்டவசமாக அந்தக் கயிறு இன்னும் இறுக்கமாக அதன் கொம்பைச் சுற்றுயிருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.