இவ்வுரைக்குரிய தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால் முதலிலேயே சொல்லி விடுவது நலம் என்றே நினைக்கிறேன், இது கதை அல்ல, வாழ்க்கை. இல்லை, இப்படிச் சொல்வது பொருத்தமாக வராது. வாழ்க்கைக் கல்வி, இது சரியாக இருக்கலாம். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு மானேஜ்மெண்ட் புக்கின் ஆரம்பப் பாடம். இந்த காரணத்தினால், இந்த உரையில், தவறு, பாடத்தில் கோமு மட்டுமே பிரதானம். மற்றவர்கள் அவளைச் சுற்றி, பெயர் இல்லாமல் அவளின் உறவுகளாக. இவ்விதம் உரையாற்றுவது எனக்கு மிகவும் நிறைவைக் கொடுக்கிறது. காரணம், யாருக்கு என்ன பெயர் என மெனக்கெடவும் வேண்டாம்.. அந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவும் வேண்டாம். இந்தச் சட்டகத்தை ஆரம்ப பாடமாக கொள்ளலாம்.
கோமுவின் வாழ்க்கைக் கதையை ஒரு கண்ணோட்டம் கண்டால் இந்த உரையில் உங்களுக்கான தின பலன்கள் மிகச் சற்றே விளங்கும் சாத்தியக்கூறுகளும் உண்டு.
கோமுவுக்குத் திருணம் ஆனபோது அவளுக்குச் சிறிய வயதென்று கூற முடியாது. அதற்காக வயதானவள் என்றும் கூறலாகாது. பொருந்தச் சொல்வதானால், அந்தக்கால கல்யாண வயதினும் சற்றே அதிகம்இதற்குக் காரணம் ஒன்றும் இருந்தது. கோமு ஒரே பெண். பல வருடம் தவம் இருந்து, பின் பிறந்தவள். அதனால் தாய் தகப்பனின் செல்லப்பிள்ளை. இப்படியாக, குதிர் போல் ஆனாலும் குழந்தையாக பாவிக்கப்பட்டதால், கல்யாணம் பற்றிய நினைப்பு பெற்றோர் மனதில் உதிக்கவில்லை. கோமு செல்லமாக வளர்க்கப்பட்ட காரணத்தினால், சமையல் அறையின் பக்கம் அம்மா செய்து வைத்த முறுக்கு, தட்டை இதர நொறுக்குத்தீனி எடுத்துச் சாப்பிட மட்டுமே சென்றவள்.
இப்படிப்பட்ட ஒரு சின்ன தீனிக்கு தான் சமையல் அறை என்ற நம்பிக்கை காரணத்தினால்கோமு கல்யாணம் முடிந்து கணவன் வீடு வந்ததும், ‘பத்த வை’ என்று சொன்னபோது கடவுள் முன் இருந்த விளக்கு கண்களில் படாமல் உதறலுடன் சமையல் அறை அடுப்பை பற்ற வைக்க…..
கோமு மாமியார் பல வருடங்கள் முன்னரே சிவனடியை அடைந்து அங்கிருந்து அருள் பாலித்திருக்கிறாள் போல. ”ஆஹா. பெண் என்றால் இவளல்லவா பெண். காரியமே கண்ணாய் சமையல் செய்ய வந்த இவளுக்கு சமையலறை கோமூ என்ற பெயர் வழங்கலாம்,” என்று சொந்த பந்தங்களால் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.
கோமுவிற்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது உண்மை. ஆனால் காதுக்கு இந்தப் பட்டப்பெயர் குளிர்ச்சியையும், மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பையும் தந்ததென்னவோ நிஜம். அப்போது மனதிற்குள் முடிவெடுத்தாள்…..இனி எக்காரணம் கொண்டும் நான் பின் நோக்கி நடக்க மாட்டேன். இந்தப் பாதையிலேயே முன்னேறுவேன் என்று. இதை நான் அவள் வாழ்வின் முக்கியமான திருப்புமுனையாக கருதுவேன். ஒருமனதாக ஒரு செயலில் இறங்கிவிட்டால் எப்படி இந்த அண்ட சராசரமே நமக்குத் துணையாக வரும் என்பதைப் பார்ப்போம்.
கல்யாணம் முடிந்த ஒரு வாரம் கோமு தப்பித்து விட்டாள். பெண்ணைக் கொண்டு வந்து விட்ட சாக்கில், பெண்ணுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் நோக்கில், கோமுவின் தாய் அவளுடனே இருந்து சமையல் முடிந்த பின் கோமுவின் மாமனார் அந்தப்பக்கம் வரும் போது, கருவேப்பிலை, கொத்தமல்லி அல்லது அது போன்ற ஏதோ ஒரு தழையை அவர் கண் பார்வையில் படும் ஒரு தருணம் தான் சமைத்து வைத்ததில் கோமுவைப் போட செய்து, ஒரு வாரத்தில் ஐந்து கிலோ ஏற்றிய அற்புத சமையல் நிபுணர் என்ற பெயரை பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்த உத்தம தாயானாள். ஆனால் சிரமம் என்றும் பாராமல் தலைகுப்புற நின்றபோதிலும் கோமு சமையலுக்கு “ச” சொல்லி “மையல்” இன்றி இருந்தாள். ஒரு வாரம் போன பின்னும் பெண்ணுடனேயே இருப்பது நன்றாக இராது என்ற காரணத்தினால் கோமுவின் அம்மா தன் வீடு கிளம்பிச்சென்றாள்.
முதல் நாள் கோமுவின் சமையல். கோமுவின் வீட்டில் அவள் சமையல் பற்றிய சந்தேகம் யாருக்கும் தோன்ற காரணமில்லாமல் போயிற்று. இந்த ஒரு வாரத்தில் வந்தவர் போனவர் என்று அனைவரிடமும் அவள் சமையல் பற்றி மிக சிலாகித்துப் பேசி கோமு என்ற நளனி என்ற பெயர் கொடுத்தாகிவிட்டது. அன்று சமையலறைக்கு எதேச்சையாக, கோமு மூக்கைச் செல்லமாக திருக வந்த கோமுவின் கணவன், தன் மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றான், திகைத்து. இங்கே ஒரு முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்ல வேண்டும். கோமு கணவன் மூக்கு நீளம், அகலம் என்று உடலிலேயே உருப்படியான உறுப்பு என்பது மட்டுமல்லாது தன் வேலையை செவ்வனே செய்யும் ஒன்றாகவும் இருந்ததால் சமையல் வாசமே அதன் தரத்தைக் காட்டிக்கொடுத்து விட்டது. திகைத்து ருசித்துப் பார்க்க நினைத்தவன், இன்னும் பரிசேஷணம் செய்யாத காரணத்தினால் கையை விருட்டென இழுத்து ஒன்றோடொன்று பிசைய ஆரம்பிக்க, தன் பெயரைக் காப்பாற்ற வேண்டி கோமு சட்டென கட்டிப்பிடிக்க, அப்போது சமய சந்தர்ப்பம் பாராது- இல்லை, பார்த்து என்றும் வைத்துக்கொள்ளலாம்- அங்கு வந்த கோமுவின் மாமனார், “ராமா, கிருஷ்ணா” என்று இன்னும் தெரிந்த சில கடவுள் நாமங்களை உச்சரித்து, தன் மகள் வீடு கிளம்பிச்சென்றவர்தான். ஆக, மாதக்கணக்காக கோமு தன் படு சுமார் சமையலில் சமாளிக்க பிரபஞ்சக் கணக்குகள் அவளுக்கு உதவியாக இருந்தன. சென்ற இடத்தில் கோமு சமையல் பற்றி மாமனாரும் பிரமாதப்படுத்திட ‘சமையல் திலகம் கோமு’ என்ற குடும்பப் பெயரும் இடப்பட்டது.
ஒரு காரியம் செய்ய நாம் முழு மனதோடு நினைத்தால். நம் சூழல் யாவும் ஒத்துழைக்கும்.
கோமுவுக்கு இதுவே நடந்தது
இதுவரையில் சென்னை தாண்டி கடலூர்கூட நினைத்துப் பார்க்காத கோமுவின் கணவனது ஆபீஸ் எங்கோ வடக்கே ஊர் பேர் தெரியாத ஒரு இடத்தில் கிளை ஒன்று ஆரம்பிக்க, அதன் பொறுப்பை கோமுவின் கணவன் கைகளில் ஒப்படைக்க, அவளும் கிளம்பிச்சென்றாள்.
தீபாவளி, கார்த்திகை, பொங்கல், இப்படி எல்லா பண்டிகைகளிலும்சொந்த பந்தம் தவறாது சொன்ன வார்த்தை, “கோமு கை மணமே தனி, அவள் செய்திருக்கவேண்டும் இவைகளை“. இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். இவர்களில் ஒருவர்கூட கோமு சமைத்துச் சாப்பிட்டது கிடையாது.
ஆக வடக்கே சென்ற கோமு, சமையலில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பேச்சில் தேர்ச்சி நிறையத்தான் பெற்றுவிட்டாள். வார்த்தைக்கு வார்த்தை நடுவே அச்சா, மத்லப், ஹான், தேகோ, பத்மாஷ் போன்ற அற்புத வார்தைகள் அவள் ஊருக்குப் போகும் அந்தச் சில நாட்களில் அவளை எல்லோரிடமும் இருந்து தள்ளித்தான் வைக்கும்.
“அத்தை….இந்த குழம்பு இப்படி வெச்சா சரியா….”
“சித்தி…..அதிரசத்திற்கு மாவு பதம் என்ன….”
இப்படிப்பட்ட கஷ்டமான, தர்மசங்கட கேள்விக்கெல்லாம் அச்சா வார்த்தை போட்டுப் பேசும்போது, கேட்ட கேள்வி மறந்து, பதில் சொல்லாததும் மறந்து முழிக்கும்போது, கோமு தன் அஸ்திரத்தை ஏவி விடுவாள்.
“என்ன நான் சொன்னதுபோல்தானே செஞ்ச….?”
ஆக அடுத்த விடுமுறைக்கு கோமு வரும் வரையில் அவள் சொன்னதாகச் சொல்லப்பட்டு, பின்வரும் காலங்களில் அவள் செய்ததாகச் சொல்லப்பட்ட பண்டங்கள் அங்கே விலாவாரியாகப் பேசப்படும்.
ஆனால், இந்த உலக மகா அண்டப்புளுகு தாங்காமல் இறைவன் கோமுவை மிக சீக்கிரம் அழைத்துக்கொள்ள,அவள் இழப்பு பற்றி பேசும் யாவரும், “என்ன ஒரு அற்புதமான சமையல் கை,” என்று சொல்லப்போக, கோமு சமையல் பற்றி நன்கு அறிந்த அவள் கணவனும் அதை நம்ப ஆரம்பிக்க, அவரை பார்க்க. நினைக்காமல், ஆனாலும் அசந்தர்ப்பவசத்தால் பார்க்க நேரும் அனைவரிடமும் அவர் சொல்வது, “உனக்குத்தான் தெரியுமே கோமு என்ன அற்புதமா சமைப்பாள் என்று. அவள் சொன்ன ரெஸிபிக்களை ஒரு புஸ்தகமா வெளியிட்டுருக்கேன். ‘கிச்சன் க்வீன்- தி கோமு’ இருநூறு ரூபாய்தான், வாங்கி நீயும் நன்றாக சமைக்கக் கற்றுக்கொள்”
ஆக, The power of perception, The power of repetitive utterance and Techniques of presentation என்பதையெல்லாம் கோமுவில் வாழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம், இவை மானேஜ்மென்ட் உத்திகள் மட்டுமல்ல, இவற்றையே நாம் வாழ்க்கை கல்வியாகவும் கொள்வோமாக.