“முதலிலே கடலின் அடிவயிற்றிலிருந்து ஒரு விம்மல், உடனே அதற்கொரு சிகரம்; அத்துடன் அது கரை நோக்கி உருண்டு புரண்டு விரையும் ஒரு திரளல்; வருகையிலேயே கரையிலிருந்து மீளும் சிற்றலைகள் அத்துடன் விழைந்து திருகும் ஒரு குழையல், சிகரம் உடைந்து வெண் நுரை அலை மீது சரியும் கக்கல். சங்கதி ஏதோ சொல்ல வந்து, வாய் திறந்து வார்த்தை வராமல்-இல்லை, ஒருவேளை அதன் பாஷையேஅதுதானோ-என்னவோ- ஆத்திரத்துடன் கரை மீது மோதியதும் குடம் பால் சரிந்தாற்போல், கரை வரை நுரை-கரை தாண்டிக் கூடி பெரிதாய்ப் பரவி, பெரிதும், சிறிதும் பொடிந்தும் நுரைக்கொப்புளங்கள் தனித்தனியாய் வெள்ளலை வாங்கிக் கொண்டதும் வர்ணங்கள் ஒவ்வொரு குமிழிலும் பிறந்து மிளிர்வது கண் கொள்ளவில்லை”(அலைகள்)
கடலை இப்படி ஓர் சித்திரமாகக் காட்டும் வல்லமை அவர் எழுத்திற்கு மட்டுமே உண்டு. விம்மல்,திரளல், குழையல், கக்கல், கொப்புளங்கள் இந்த சொற்கள் அலைகளின் சித்திரத்துடன் கலந்து காட்டும் வண்ண மாயங்கள் இந்தக் காட்சி மொழி , அதில் ஏறும் வாழ்வின் நிதர்சனம்- இல்லை தரிசனம், சித்திரச் சொல் போடும் சொற் சித்திரம்.
“சிந்தித்து, சிந்தித்து நான் அறியாமலே வாக்கை வாயில் உருட்டுகையில் இன்னும் செவிக்கும், நாவிற்கும் மணம் கிட்டியும் ருசிக்கெட்டாதோர் தித்திப்பு.”இனிக்கிறது, கசக்கிறது போன்ற தனிப்பட்ட உணர்வுகளைக்கூட சொல்லில் காட்ட முடிவது அவரால் நாம் பெறும் அனுபவம்.
“இது கோலமல்ல;காடு. நள்ளிரவில் நிலவு நிழலில் இலைகளின்நெய்வில் விலங்குகளின் விழிகள். இலைமறைவில்,இரையைச் சிந்திக்கும் குரூர விழிகள். என்ன சிந்திக்கின்றன? ஏன் சிந்திக்கின்றன? கண்ட கனவின் மீட்சி போல், மேலிமையுள், கோலத்தினின்று ஒரு உரு நிமிர்ந்தது.சின்னப் பொம்மையின் சிறுகூடு. உடுத்திய தூய வெண்மையோடிழைந்த வெள்ளைத் தாழம்பூ நிறம். கால், கை நகங்கள், உதடு, செவி மடிகளின் ரோஜா இதழ்த்திட்டுக்கள் கவனத்தைப் பறித்தன.கன்னத்தின் பீங்கான் வழவழப்பின் கீழ், மாதுளை விதையுள் உறைந்த ரச ஓட்டம் போல் கமழும் ரத்த காந்தி”(மாற்று)கோலங்கள் காண்கையிலே ஏற்படும் பரவசத்தின் ஊடாக பின்னிப் பின்னி சிக்கலாக, ஊடும் பாவுமென விளையாடி, தன் அமைப்பிற்கு வந்து சேரும் கோலங்கள் ;வாழ்க்கை போடும் கோலம்-பரபரப்பும், சுழிகளும், தீர்மானங்களும்,சட்டென்றுதிரும்புவதும்,ஒய்யாரமாகஓடுவதும்,பின்னர்
அமைதியாக நடப்பதும் எல்லாமற்று இணைவதும், ஒடுங்குவதும் அவன் போடும் கோலங்கள்.அது என் கைவழி வழிகிறது-ஆனால் என் இயக்கம் அல்ல.
“வாழ்க்கை ஒரு பரிட்சை கணக்கு மாதிரித்தான் இருக்கிறது.எங்கேயோ எப்படியோ ஒரு சிறு தப்பு நேர்ந்து விட வேண்டியதுதான்-விடை எங்கேயோகொண்டு போய் விட்டுவிடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு;புரிந்த கணக்கு; முன்னால் போட்ட கணக்கு தான்.”
“எல்லைப்படுத்தத்தானே கணக்கே ஏற்பட்டிருக்கிறது! எல்லையிலாததற்கும் எல்லை நாட்டும் கணக்கு” (ஏகா)
“பிறப்போடு வந்துவிட்டாற்போல் உடலோடு ஒட்டி வெள்ளை ரோஜா நிறத்தில் கடல் நுரையில் நெய்தாய ஆடையினூடே மார்க்கச்சு விண்ணென்று தெறித்துத் தெரிகின்றது.ரவிக்கை பூணாது,திரண்ட பனித்தோள் குமிழ்கள், கழுத்தின் விலாசம்”
“கீழ் வானத்தில் பெரிய யாகம் நடந்து கொண்டிருக்கிறது. மேகப் பாறைகள் நெகிழ்ந்து உடனே கரைந்து ஆஹூதியில் கவிழ்கின்றன. தழல் ஆட்டம், வான் பூரா பரவுகிறது”
“வானத்துக்கும்,வெய்யிலுக்கும் காற்றின் மத்யஸ்தம் நடந்து கொண்டிருக்கிறது.வெறிச்சிட்டுக் கிடந்த வான வீதியில் போக்குவரத்து தொடங்கிவிட்ட்து. மேகங்களின் பவனி,பட்சி ஜாலங்களின் விதவிதமான வரிசைக்கட்டுகள். ஆட்டத்தின் கையிலிருந்து தள்ளிக் கம்பளத்தில் விழும் சீட்டில் காண்பது போல,பட்சிக் கூட்டங்கள் மேகத்தின் பின்ணணியில் வித விதமான பொட்டுகள் வைக்கின்றன.மேற்கு மணக்கோலம் பூணுகிறது. பெண்ணுக்கு எந்தப் புடவையும் பிடிக்கவில்லை.அவிழ்த்துப் போட்ட புடவைகள், வித விதமாய் போர் போராய்க் குவிகின்றன.”
“வானத்தில் இங்குமங்குமாய்ப் பிசுபிசு பஞ்சு மிட்டாய்ப் படர்ச்சிகள், புலுபுலு ரோஜா மொக்குகள். கசங்கிய மாலியங்கள் சிதறிக் கிடக்கின்றன.இருளை இதமாய் நல்ல வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட்டு மலர்ந்த மினுமினு வெளிச்சம், இடத்துக்கே தண்ணொளியை வர்ணமாய்த் தீட்டுகிறது. ஏதோ, ஒரு ABSTRACT ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கிறது.”
“திடீரென வானத்தில் பூக்கள் மண்டிக் கிடக்கின்றன. மொட்டுக்கள், மலர்கள்,பிய்ந்த இதழ்கள்,மூச்சுவிடும் விண்மீன்கள்,சின்னதும் பெரிதுமாய்ச் சீனாக்கற்கண்டு கட்டிகள், வைரச் சிதறல்கள், உறைந்து போன கண்ணீர்த் துளிகள், இதய உதிரிகள்-இவற்றிலிருந்து இழுத்த ஜிகினாச் சரடுகளில் ஏதேதோ நினைவுகள், தோற்றங்கள்”
“ரீதி கௌளையின் ஒரு சொகுசு வளைவு
கன்னியாகுமரியின் மூக்குத்தி”(உத்தராயணம்)
“அண்டாவில் ஜலம் கண்ணாடித் தகடு போல் அசைவற்று நின்றது, வானபிம்பம்.இவ்வளவு துலக்கமாய், அதுவும் இரவில் ஒரு நாளும் தெரிந்ததில்லை. கலக்கம் எங்கள் கண்ணிலா, வானத்துக்கேவா? தனித்தனியாய், சம்சாரமாய் பாளை வெடித்துச் சொரியும் முத்துக்களாய் ஆனால் அத்தனையும் அதனதன் முழு உருவில், ரச குண்டு போல் தொங்கிக்கொண்டு இன்று எத்தனை நட்சத்திரங்கள்”(காசி)
“ மாலை வருகிறது.ஆசையுடன் வாசல் வழி எதிர்பார்த்திருந்த விருந்தாளி ஓசைப் படாமல் கொல்லை வழியோ, பக்க வழியோ வந்து கூடத்தில் அமர்ந்துவிட்டாற்போல், வந்தது தெரியாமல் வருகிறது.கரைத்துக் கழித்துக் கொட்டிய ஆரத்தி போன்று மாலை ஒளியின் செம்பிழம்பு தோட்டத்திலும், ஓட்டிலும், சுவர்களிலும் வழிகின்றது”(இன்று நேற்று நாளை)
“உயிர் அழிவற்றது. தன் உச்சரிப்புக்குத் தானே
திரும்பத் திரும்ப உருவைத் தேடுகிறது
திரும்பத்திரும்ப உச்சரணையே உயிரின் ஆதாரம்
திரும்பத்திரும்ப உருவே தொடர்பின் ஆதாரம்
திரும்பத் திரும்ப தொடர்பே முயற்சியின் ஆதாரம்
திரும்பத் திரும்ப முயற்சியே விமோசனத்தின் ஆதாரம்
திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப (புத்ர)
“தான்” உண்டாக்கிய நெருப்பில் “நான்” திருப்பித் திருப்பி தன்னையே காய்ச்சிக் கொள்கிறது. “நாம் இறக்கவில்லை.ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது, எப்படியோ, ஏனோ பிறந்துவிட்டது. பிறந்த பின் அதனால் இறக்க முடியவில்லை.இருந்துதான் ஆக வேண்டும்.. ஆனால் சரியாய் இருக்கும் முறையைத் தேடித்தேடி இருந்து இருந்து மாற்றி மாற்றி, மாறி மாறித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் தவிப்பு. வித்திலிருந்து மரத்தில் இருந்தொரு வித்து.. ஆனால் வித்தெல்லாம் வித்தல்ல. ஒரு நாள் முத்தானதொரு வித்து ஒரே முத்து.(ஜமதக்னி).
“அஞ்சலி” முகவுரையில் அழகு படச் சொல்கிறார். “பார்க்கப் போனால், ஜன்மங்களே உயிரின் உடை மாற்றம் தானே! உயிரே, உணர்ச்சிகளின் எண்ணங்களின் வேஷப் பொருத்தம் தானே!
“இதுகாறும், பௌர்ணமியின் நடு நிலவில், அவை ஜரிகைகள் மிதக்கும் கடலின் கருநீலப் புடவையுள் ஒளிந்த காற்றின் வீக்கத்தில் களியாட்டம் கண்டிருந்தாய். இப்போது என் சீற்றம் பார். என் சீற்றம் மட்டுந்தான் உயிர்”
“எழுதினால்தான் கவிதை அல்ல, வார்த்தைகள் தான் கவிதை அல்ல, கவிதையென்று தானே உணர்ந்தால்தான் கவிதை அல்ல; சத்தியத்தின் கோடரி எப்பொழுது உள் பாய்கிறதோ, அப்போது நான் சொல்லும் கவிதை நேர்கிறது.”(பாற்கடல்-ப்ளேக்)
“கற்பனை என்பது பலர் நினைப்பது போல் வெறும் கனவு கட்டுக்கதை புனைவதல்ல. தரிசனத்துக்குத் தன் உள் சக்தியைச் சமயம் வரும் போதெல்லாம் வளர்த்துக் கொண்டே இருப்பதுதான் கற்பனை. தன் வண்ணத்தை என் கை வண்ணத்தில் விளம்பல் அலுக்காத விளம்பல்”
“எழுத்து ஒரு அற்புதமான குழல் வாத்தியம். பிராண ஆஹூதியை அதனுள் செலுத்தியதும் அந்த ஆஹூதி வெளிப்படும் உருவத்தில் என்ன என்ன நாதங்கள்!(பாற்கடல்)
“பாற்கடலை நீயும் நானும் கடைந்தோம்
எனக்காக நீ, உனக்காக நான்,
எனக்காக நான்,
நமக்காக நாம்.
கடைந்தோம்,
அமுதம் வந்தது,
நான் கலசமானேன்
என்கரண்டி, என் பேனா;
நான் பரிமாறுகிறேன்,
உண், இனி நாம் தேவர்,
பாற்கடல் கடைந்து 5 முக்கியப் பொருட்கள் வந்தன.அதில் அமுதத் துளி ஏந்திய எழுத்தாணியோடு இவர் பிறந்திருக்கிறார்.
“எவ்வளவு தின்றும் குன்றா வான வெளியின் நீலத்தை, வெண்மேகங்கள் நிதானமாய் மேய்ந்து கொண்டு சென்றன.”(சோமசன்மா) அவரது சித்திரச் சொல்லை, சொற் சித்திரத்தை முழுதும் சொல்ல இயலுமா?
4 comments