“பசு நாக்கு போல் முன் மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது”. இவ்வரி கதாபாத்திரத்தின் இயல்பையும் உருவையும் மிக இயல்பாக “கஸ்தூரி“யில் சொல்லிவிடுகிறது. முனைந்து திணிக்காமல் இயல்பாகக் பூக்கும் கொன்றை.
“ஆனால், திடீரென சொல்லுக்கும், செயலுக்கும் இடைக்கோடு உன் ருத்ரத்தில் அழிந்ததும் ப்ரளயம் புரண்டெழுந்து ஒரு கணம் என் மேல் மூடி…” எப்பொழுது மலர்ந்தது இது? மலர்கையிலே பார்த்தவர் உண்டா?
“கல்லருகில் சிற்றலைகள் தத்தம்தோள்களை இடித்துச் சிரித்துக் கொண்டிருந்தன. சிரிக்கும் சரம்.” (தரங்கிணி)
“என் எண்ணங்களை நானே நூற்று என்மேலேயே பின்னிக் கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது, அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.”
“எனக்கும் உனக்கும் நமது நமது என எதை எனக்கு எனக்கென கொண்டோமே? ஆனாலும் உன்னிலும் என்னிலும் உன்னையும் என்னையும் இன்றி கண்டது பின்னையும் என்? கண்டதும் வேண்டாம் கொண்டதும் வேண்டாம் உன்னையும் என்னையும் நம்மிலிருந்த நான் நான் எனது என விண்டதும் வேண்டாம்” (மாற்று- இதழ்கள்)
வளைவாகத் தொடுத்து காட்சி தரும் கொன்றைச் சரத்தில் வெளி வட்டம், உள் வட்டம் காட்டி மயக்கி நடுவில் காணும் ஒற்றைச் சூனியமாக எழுத்தில் தொடுக்க எப்படி முடிந்திருக்கிறது இவருக்கு!
“அலைகள் “ என்னென்ன சொல்லும்?
“வருடங்களின் பின்ணணியில் புதைந்து போன நினைவின் மொத்தமான அரூபம் புகுந்து புறப்படுகையில், ஒளிச் சிதர்களாய் ரூபம் பிரிகின்றது.
“மடித்த விசிறி திடிரென விரிந்தாற் போல், பஞ்ச வர்ணக் கிளி சிறகு விரித்துப் பறந்தாற் போல், கோடை மழையில் வானவில் வளைந்தாற் போல், காலடியில் மழைத் தேக்கத்தில் ஜால வர்ணங்கள் தோய்ந்தாற் போல், சுண்டிய தந்தி தன் விதிர்விதிர்ப்பில் எட்டுத் தந்திகளாய் விசிறினாற் போல், மந்தர ஸ்தாயியில் குரலின் கனத்த கார்வை போல், நான் ஒண்டியில்லை. எத்தனை எத்தனையோ பெயர்கள், பெயர்களின் ஓசை, ஓசைகளின் சாயை. சாயையிலிருந்து மறுபடியும் ததும்பும் பெயர்கள், பெயர்களைத் தாங்கும் உயிர்கள், உயிர்களின் தனித்தனி வாழ்வுகளாய்ப் பிரிந்துவிட்டாய்.”
எந்தத் தனிமையின் முள் நிரடி, ஒன்று பலவாய், பலதும் பலவாய், உயிர் எனும் சரட்டில் கோர்க்கப்பட்ட சாயை தோற்றும் கொன்றைச் சரமோ?
“சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகி விடும்போது அதில் சாவுக்கும், உயிருக்கும் பிரமாத இடமில்லை.” (கொட்டு மேளம்). இலை மறைவில் பூத்த கொன்றை. ஆனாலும் நினைவை அழிக்கும் வாசம் வீசும்; அல்லது அழிக்கச் சொல்லி வீசும்.
“நியாயம் பொதுச் சொத்து, தனிச் சொத்து இல்லை. நியாயத்தின் தன்மை சமயத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரு சமயத்தின் நியாயம் இன்னொரு சமயத்தின் நியாயமாயிருக்கணும்னு அவசியமில்லை. அனியாயமாகவே இருக்கக்கூடும்.” (இதழ்கள்-1). என்ன ஒரு வசீகரம் இந்தப் பதிவில். சட்சட் என்று கோர்க்கப்படும் மாலை. ஆனால் நமக்குத் தெரியும்-தனித்தனி பூக்களால் ஆனது என்று- நியாயம் சமயத்தின் பூ. நீதி? ”உலகம் ஒரு உண்மை. ஆயினும் அதன் தனித்தனி ஞாயம் வெவ்வேறு.”
“அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாகப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.”(பாற்கடல்) அக்கினி ஒன்று கரங்கள் பல, தீட்டும் உருவங்கள் பலதாக, அழித்தழித்து ..பூ, பூக்கள், சரம் வாடல், மலர்தல்.
“அச்சமயம் என்னை என்னிலிருந்து பிரித்து என்னெதிரில் நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்டு என்மேல் என்னை நான் துப்பிக் கொண்டிருந்தேன். தன்மீது தான் வைத்திருக்கும் பாசத்திற்கு மிஞ்சியது இல்லை. அதே போல் தன்னைதானே வெறுக்கும் பயங்கரம் போல் எதுவும் இல்லை. தன்னை வெறுக்கையில் தான் வெறுக்காதது எதுவும் இல்லை.”
“ஜலம் கோபக்கண்ணின் அடிச் சிவப்புடன் வண்டல் மண்ணைக் கரைத்து காலடியில் சுழித்து ப்ரளயமாய் ஓடிற்று. வானம் எதிர்த்துச் சீறிற்று.
“மனம் ஒன்றில் அது எதுவாயினும் சரி- ஒன்றில் ஒன்று பட்டு அவ்வொன்றன்றி மற்றெல்லாம் மறந்து, அல்லது மற்றவையினின்று விடுபெற்று அவ்வொன்றின் நினைவும் அடங்கி, நினைவு என்று ஒன்று இருந்தால் ஒன்று என்று நினைவு குறித்த அது அந்நினைவும் இன்றியதால், அதுவும் அழிந்துவிடின், பிறகு அது என்று எது?” ’ப்ரளயம்’ கொணரும் கொன்றை இது. சுழிப்பில் சரமெனத் தோன்றி தனி எனக் கண்டு அதையும் விட்டுவிடும் நினைவறுந்த சரப்பூக்கள்.
அடுக்கு மலர்ச்சரமாக இதைப் பாருங்கள்: ”அந்த வெள்ளி மணிக்குரல், உயிரின் பிரிவாற்றாமைத் தவிப்பு ஆதிமூல அலறலாகவே மாறி பூமியையே பட்டை உரித்துக் கொண்டு, அப்பாணம் நாத பிந்துக்களை உதிர்த்துக் கொண்டு வான் மண்டலத்தை நோக்கி ஏறுகிறது.”
மலர்களைப் பார்க்கிறோம், சரங்களைப் பார்க்கிறோம், நாசியால் வாசத்தையும் உணர்கிறோம். கண்களுக்கு வாசமாக, இந்தக் குற்றால அருவியைப் பாருங்கள்.
“அந்தத் தண்சுழிப்பிலிருந்து மூன்று மதத்த சடைகள் விரிந்து தளையவிழ்ந்து, சரிந்து பொங்குமாங்கடலுள் விழுந்து… பர்வதராஜகுமாரி தன் கூந்தலை அருவியில் அலசுகிறாளா அல்லது அவள் கூந்தல்தான் அருவியாய்ப் பாய்கிறதா? எத்தனை எத்தனை உவமைகள் உற்பத்தி ஆயினும், உன்னை எட்ட எத்தனை எத்தனை உயரம் பறந்தாலும் அத்தனையும் உன் ஒரு கால் சுவடு தீண்ட த்ராணியற்று, நீர்த்து உதிர்கையில் புவனமே ஜல் ஜல் என உன் கால் சதங்கையினின்று கழன்ற கிண்கிணி மணி. நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக் கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுக்கள், வாக்கியங்கள், வார்த்தைகள்,பதங்கள், பத-சரி-க-சா-ம-த ஸ்வரங்கள், ஓசைகள் ஒலிகள், மோனங்கள், திக் திக் திகில்கள், திமி திமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நக்ஷத்ரயிருட்டில் கருங்குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளைச் சிலிர்த்துக் கொண்டு தங்கத் துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும்- குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன், கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது” (தேவி)
ஒன்றையொன்று நெருங்கி ஒற்றைச் சரமாக காட்சியளித்து ஏமாற்றும் சரக் கொன்றை.
2 comments