“நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம்.” “கங்கா” முன்னுரையில் ஒரு சரமாக நெளியும் எழுத்தாளரின் தன்னுணர்வு.
”ஆண்டவன் நம்மைக் கைவிடமாட்டான்; அவனை விட்டால் நமக்குக் கதியில்லை; நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை. எதற்கும் வேளை வரணும். வேளையேதான் தெய்வம். வேளை வந்தால் தெய்வம் வந்தது, தெய்வம் வந்தால் வேளை வந்தது. காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது”..(கஸ்தூரி)
“கரையிலிருப்பவனுக்கு தன்னெதிரே விரிந்த கடலைப் பற்றி அதிசயிப்பு. கப்பலிலோ கட்டுமரத்திலோ கடலில் இருப்பவனுக்கு தான் மீளக் கரை இருக்கும் தெம்பு. தெய்வத்துக்கும், மனிதனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரமும் இதுதான் என்பது என் துணிபு. வந்தேன், பார்த்தேன் ஜெயித்தேன். இதை உலகில் யாத்திரையாகக் கொள்வோமா? ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா? முடிந்தால்தானே அது யாத்திரை? ஜெயித்தேன். ஜெயித்தபின் எங்கிருந்து வந்தேனோ அங்கு மீண்டேன். இது உலகத்தின் கோள வடிவிற்கு ஒரு சான்றாய் நிற்பதோடு அல்லாமல் மனிதன் தெய்வமாகும் சரிதையும் அதுவேயாகும். கட்டிடம் முடிந்து கொண்டே வருகையில் ஓரொரு சாரமாய் தட்டிக் கொண்டே வரவேண்டியதுதானே? தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா?”
“நியாயம் அநியாயம் பாபம் புண்ணியம் நல்லது கெட்டது இவையெல்லாம் அப்புறம் அவையே இருக்கின்றனவோ இல்லையோ? என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது? அது எவ்வளவு தாங்கும்? அதுதான் முக்கியம அதுவேதான் அது அதுவன்றி எதுவுமில்லை எது அது, அதுதான் புரியவில்லை”
“ஆண்டவனே! அவனைக் கூப்பிட்டுவிட்டால் அவன் வந்து விட முடியுமா? இல்லை, பக்தி வந்துவிடுமா? பக்தி வேண்டாம் அவன் வேண்டாம் எண்ணத்தின் வைராக்கியம்தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது? எவ்வளவு நீ தாங்குவாய்? நீ தேடுவது உன்னை வந்து அடையும்போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய்? உன் க்ஷேத்ரம் – பூமி எது? பூமிக்கேற்ற பயிர் பயிருக்கேற்ற பூமி உன் பூமியில் எது விளையும்?”(க்ஷேத்ரம்)
“ஆண்டவனே, நீ என்னத்தை கீழே சிந்திவிட்டாய்? காலமும், யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ? ” ‘ஜமதக்னி’ கேட்கும் கேள்வி இது.
‘பூரணி’ சொல்லும் பதிலும் எண்ணங்களை அசைத்துவிடும். “தெய்வமா பெரிது? தேடுகிறதுதானே முக்கியம்?”
“மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விட மாட்டேன். மனிதன் மரண பயத்தில் எனக்கு நித்யத்தைத் தந்தான். உன்னில் என் அரூபம் அதன் சாயம் களைகிறது. உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவருக்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள்.”
சொல் அவருக்குப் பொருளாகவே கை கட்டி நின்றது. இருந்தும் சொல்லின் போதாமையை அவர் சுட்டிக் கொண்டேயிருந்தார். இறை என்பதை ஒத்துக்கொண்ட அளவிற்கு அவர் இறைவனை ஒத்துக் கொள்ளவில்லை. உயிரின் சுழற்சியும், தாகமும், பரிவும், பிரிவும், ஒளியும், ஒலியும் அவரது கதைகளின் உயிரோட்டம். மீனோட்டம் காட்டுவது போல் பாய்ந்து கொண்டே இருக்கின்றன மீன்கள். நதியின் துறைதோறும் பாயும் துளிகள்; எழுத்தின் சுவை. அதன் சூடும் இதுவே. “சத்யம் கடைசியில் ஜயிக்கலாம் ஆனால், சந்தேகத்துக்குத்தான் பவர் ஜாஸ்தி”
யாகச் சொல்லால், சொல்யாகம் செய்தவர். சித்திரச் சொல்லால், சொற் சித்திரம் வரைந்தவர். எழில் சொல்லால் சொல் எழில் கூட்டியவர். சரக் கொன்றை எனத் தோற்றி கொன்றைச் சரம் சூட்டியவர். தத் +த்வ்ம்- அது நீயே என வழி சொன்னவர். அதற்கான துணிவும் தெளிவும் கொண்டவர்.
லா. ச. ரா. – நினைத்துக் கொள்வோமே?
oOo
- சித்திரச் சொல் சித்திரம்
- யாகச் சொல் சொல் யாகம்
- சொல் எழில், எழிற்ச்சொல்
- சரக் கொன்றை, கொன்றைச் சரம்
- முகிலிடை மின்னல்