பதாகையில் கவிதை எழுதுபவர்களில் றியாஸ் குரானா, ஜிஃரி ஹாசன், மஜீஸ் மூவருக்கும் ஒரு தனி மொழி அமைந்திருப்பது தன்னிகழ்வா அல்லது அப்படிப்பட்ட ஒரு கவிதை மரபின் வழியில் இவர்கள் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. மூவருக்கும் பொதுவாய் ஒரு தனி மொழி என்று சொல்வதில் ஒரு முரண்பாடு உள்ளது போல் தொனிக்கலாம். உண்மையில், இந்த மூவரின் கவிதைகளில் பலவும் ஒரு சிறுகதைக்குரிய இயல்பு கொண்டிருக்கின்றன. ஒரு சில கவிதைகளை சிறுகதைகளாகவும் வளர்த்தெடுக்கலாம். ஆனால் இவர்கள் மூவரும் ஒரே மாதிரி எழுதுவதில்லை. றியாஸின் கவிதைகளில் உள்ள படிமத்தன்மை, நேர்க்கோட்டு மொழிதலின்மை பிற இருவரின் கவிதைகளிலும் இல்லை. ஜிஃப்ரி ஹாசனின் கவிதைகளில் உள்ள துயரம் நேரடியானது, அதைப் பிறரிடம் பார்க்க முடியவில்லை. மஜீஸ் வெகுச் சில கவிதைகளே பதாகையில் எழுதியிருந்தாலும் அவர் எழுதுவதிலுள்ள நுட்பமான நகைச்சுவை மிகவும் மதிப்பு மிக்கது என்று தோன்றுகிறது, அது இயல்பாய் வெளிப்படுவதாலும், அதை அதிகம் காண முடியாமையாலும்.
இவ்வாரம் ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்
ஜிஃப்ரி ஹாசன் பதாகையில் எழுதிய கவிதைகளில் உள்ள ஆறுதலற்ற வலி இதில் இல்லை, ஒரு நேர்மறைத்தன்மை கொண்ட காரணத்தால் அவர் எழுதியதில் வித்தியாசமான கவிதை. அமைதியை நாடும் வகையில், துயரை விடுபடும் வகையில் எழுதியிருக்கிறார். வழக்கமாக, துயரில் மேலும் மேலும் ஆழ்த்துவதாகவே அவர் எழுதி வருகிறார். அவர் கவிதைகளில் ஏதோ ஓர் இடத்தில் துயர் மேலோங்கி பிறவனைத்தையும் விழுங்கி விடுகிறது.
இந்தக் கவிதையில் உள்ள ‘பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன’ என்பதில் உள்ள எளிய கவித்துவம் திரைப்பாடல்களுக்கு வெளியே மதிப்பிழந்து விட்டது என்று நினைக்கிறேன். அதில் ஒரு கற்பனைத்தன்மை இருக்கிறது. பாதையெங்கும் நினைவுகளின் நிழல் என் மேல் படிந்தது என்பதை இவ்வாறு உருவகப்படுத்தியிருப்பது அழகாக இருந்தாலும், இந்தக் கவிதை ஒரு பயணத்தைப் பற்றிய கவிதை என்பதால் அதற்கு இங்கு இடமில்லை என்று சொல்ல முடியாது.
‘எந்த இடத்தில் பிரிந்தோமோ/ அந்த இடத்தில் சேர்வோம்‘
என்பதைத் தொடர்ந்து அந்த வரி வருகிறது, அதன் பின் வரும் வரிகள்-
‘உங்கள் முகத்தில்/ நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்/ உங்கள் இதயங்களில்/ ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்/’
என்று செல்கின்றன.
முதலில் பிரிவு நேர்ந்த இடத்தில், அதற்கான காரணங்கள் உள்ள இடத்தில், ஒன்று சேர வேண்டும் என்ற விருப்பம். அடுத்து, பயணம், பாதை எங்கும் நினைவுகள். இவை பிரிதலின் நினைவுகள் என்பதால், ஒரு சிரிப்பும் நல்லெண்ணமும் மட்டும் போதும் என்ற இறைஞ்சுதல். இதையடுத்து, இதுவரை சொல்லப்பட்டதே மீண்டும் சொல்லப்படுகிறது-
‘நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை/ நம் சேரிடங்களாக்கி/ களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்’
இதைக் கற்பனை கலந்த ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்று கொள்ளலாம். இலக்கியத்தில் கற்பனையின் இடம் என்ன என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. அவநம்பிக்கைகளை கற்பனை கொண்டுதான் கடந்தாக வேண்டும். எனவே புன்னகை விதைக்கப்படுகிறது (புன்னகை மலர்தலால் நடுவோம் என்றாகும் போல)
இந்தப் புன்னகைக்குப் பின் என்ன நடக்கிறது? இனி, நம் சொற்கள் ஒவ்வொன்றும் நடந்து முடிந்த கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஒரு புன்னகை நம் சொற்களின் பொருளை மாற்றி விடுகிறது.
‘நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை /உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை/ ஒரு யுகப் பின்னடைவை/ இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன”
இறுதி வரிகள்-
‘துயர் படிந்த ஒரு காலமும்/ அதன் குரூரக் காயங்களும்/ ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே’
இப்போது நாம் இது என்ன பயணம் என்று கேட்டுக்கொண்டால், புன்னகையையும் நல்லெண்ணத்தையும் நோக்கிய பயணம் என்று சொல்ல முடியும், இல்லையா? நாம் இந்தப் பயணத்தை மட்டும் மேற்கொள்ள முடிந்தால் கடந்த காலம் இவ்வளவு துயரம் அளிப்பதாகவும், அதன் குரூரங்கள் இவ்வளவு வலி தருவதாகவும் இருக்காது.
இது ஒரு நம்பிக்கைதான். யதார்த்தத்தில் நடக்கும், நடக்காது போகலாம். ஆனால் ஒரு கவிதை என்று வரும்போது, அதில்கூட இது போன்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்த முடியாது என்றால் எப்படி? நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பனைதான் மெய்ப்பிக்க வேண்டும், இல்லையா?
அதை இந்தக் கவிதை செய்கிறது என்று நினைக்கிறேன். நினைவுமுள் என்ற தலைப்பு முதலில் ஒரு உறுத்தல், வலி என்பது போல் உள்ளது. அதன்பின் கடைசியில் கடிகார முள் போல் அதுவும் இடம் மாறக்கூடியதுதான் என்ற ஒரு நம்பிக்கைக்கு இடம் அளிக்கிறது. நம் துயர நினைவுகள் எப்போதும் ஒரு முள்ளாய் நமக்கு வலிக்க வேண்டியதில்லை, புன்னகையை நோக்கிய ஒரு பயணத்தில் எல்லாம் மாறலாம். நினைவுமுள் துயரிலிருந்து நம்பிக்கைக்கும், கடந்தகாலத்திலிருந்து எதிர்காலத்துக்கும் நகரக்கூடியதுதான்.
ஜிஃப்ரி ஹாசன் கவிதை – நினைவுமுள்
…
ஒளிப்பட உதவி – cafepress.com