கபில ஏரியில் நீர் நிறைந்திருக்கிறது. வண்ணமயமான படகுகள் இக்கரையிலிருந்து மறுகரையை அடைய போட்டி போடுகின்றன. வானில் சூரியன் ஏரிக்குள் தானும் இறங்கப் போவதாக உற்சாகத்துடன் எச்சரிக்கிறான்.
காந்திமதியும், கல்யாண சுந்தரமும் துடுப்பு வலித்து அந்த மரப்படகை செலுத்தினர். அவர்கள் இருவர் மட்டுமே அதில். மோட்டார் படகுகளிலும், பெடல் படகுகளிலும் பெரும்பாலும் விடுமுறையைக் களித்துக் கொண்டாட வந்த கூட்டம். மதிக்கு மரப்படகை துடுப்பினால் செலுத்தும் ஆசையினால் அவர்கள் அதில் கூச்சலிட்டுக் கொண்டும், நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்துக் கொண்டும் விளையாடுகிறார்கள்.
காந்திமதி அப்பொழுதுதான் அதைப் பார்த்தாள்– தங்க உடலுடன் வெள்ளிச் செதில்களுடன் ஒரு பெரிய மீன். அதன் கவர்ச்சி தாள முடியாததாக இருக்கிறது. படகிற்கு இணையாக நீந்தியும், மூழ்கியும் வருகிறது. தன் கண்களால் அவளைப் பார்த்து ஏதோ செய்தி சொல்ல முயல்கிறது. அவள் சுந்தரத்தைக்கூட மறந்துவிட்டாள். இந்த மீன் தன்னிடம் வந்தால் எப்படியிருக்கும்? படகு சற்று சாய்ந்தபோது மீன் படகினுள் துள்ளிக் குதித்தது. சுந்தரம் வியப்பில் ‘’ஆ’வென்கிறார்;.இப்போதுதான் பார்க்கிறார்; அது வட்டமிட்டுச் சுழன்று துள்ளி மீண்டும் ஏரிக்குள் போய்விடுகிறது. ஆனால், என்ன இது– வெள்ளிச் செதில்கள் படகினுள் பாதி உதிர்ந்திருக்க தங்க உடலுடன் அது ஏன் ஏரிக்குப் போனது?
காந்திமதி கனவிலிருந்து விழித்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. செதில்கள் இல்லாமல் மீன் என்ன செய்யும்? இப்படி ஒரு கனவு வருவானேன்? அவள் தற்செயலாக வயிற்றைத் தடவிப் பார்த்தாள். பிள்ளை முண்டுகிறான். வயிற்றில் உதைக்கிறான். அவளுக்கு கனவு மறந்து போயிற்று.
அருகில் சுந்தரம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். நீல நிற இரவு விளக்கு, உயர்ந்த ஜன்னலின் வழியே தெரியும் விடியலுக்கு முந்தைய நிலா, தயங்கித் தயங்கி பவழமல்லி மரத்தின் கிளைகளையும், செம்பருத்தியின் இலைகளையும் அசைக்கும் காற்று, கட்டிலை ஒட்டி அதன் சலன சித்திரங்கள்…அவள் மகன், உறங்கும் அவள் கணவனைப் போல் இருப்பானா?அவளுக்குப் பொங்கிப் பொங்கி வந்தது, அவன் மார்பில் ஒரு சிறுபறவையெனத் துயில ஆசை வந்தது.
குருவாயூர் கோயிலில்தான் மதி அவரைப் பார்த்தாள். அவர்கள் வெளிப் பிரகாரத்தில் சற்று ஒதுங்கி நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது ’இங்கேயும் இது போல் வந்துவிட்டதா?’ என்று கோபம்தான் வந்தது முதலில். திரண்ட தோளும், அகன்ற மார்பும்,முகத்தில் இயல்பான சிரிப்பும், தூய வெள்ளை வேஷ்டியும், இடுப்பில் சுற்றியிருந்த சந்தனக் கலர் மேல் துண்டுமாக ஒரு இளைஞனும் அவரது அண்ணன் போல் தோன்றும் மற்றொருவரும் உள்ளே வருகையில் அவள் அவர்களை அறிந்து கொண்டுவிட்டாள். ‘எவ்வளவு சிம்பிள்’ என்று இப்போது தோன்றியது. சன்னதியை விட்டு அவர்கள் வருகையில் அவன் கையிலிருந்து மேல் துண்டு நழுவ அவள் எடுத்துக் கொடுத்த கணம்.. ஆம்.. திருமணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன.
இன்றுகூட சிரிப்பாக வருகிறது. அவர் தேன் நிலவிற்கு முதலில் அழைத்துச் சென்ற இடம்-‘சாமி காட்டவா நானு’.
அவளுக்குக் கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது. ’ஒருக்கால் கோயில் பித்தோ?’
அவர் கூட்டி வந்த இடம் க்ரீன் ஃபீல்ட் ஸ்டேடியம்.
‘மூணு புள்ளக சுமப்பியா? அவனுகள விஞ்ச ’ரொனால்டோ’வாலக்கூட முடியல்லன்னு ஊரு பேசிக்கிடணும்.’
‘அதென்ன மூணு?’
‘ஃபார்வேடு, மிட்ஃபீல்டு. கோல் கீப்பர்’
‘அல்லாமும் நம்ம மக்க, மூணோட நிறுத்திக்க எஞ்சாமி’, என அவள் சிரித்தாள்.
‘நா டைடானியம் க்ளப் மெம்பருல்ல; எத்தன கோல் அடிச்சவன் நானு. எங்காலு படாத எடமில்ல இங்க’
மதிக்கு ஓரளவிற்கு கால்பந்து விளயாட்டைப் பற்றித் தெரியும். இப்பொழுது அவள் சுந்தரத்தையும் மிஞ்சிவிட்டாள்.
“ஏன் கனவு அப்படி வந்தது?” அவளுக்கு கலக்கமும் இருந்தது,கனவெல்லாம் அப்படியா பலிக்கும் என்ற எண்ணமும் வந்தது.
அந்த கால்பந்து மைதானத்தில் குவிந்திருந்த பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் அறுபது வினாடிகள் இதயம் துடிப்பதை நிறுத்தியது. திறமையாக பந்தை பாதத்தால் சுழட்டி ‘இதோ கொண்டுவந்துவிட்டான். கோல் விழுந்துவிட்டது’. ஒரே ஆரவாரம். உற்சாக மிகுதியில் கால்களை விர்ரென்று உதைத்த அவன் கீழே விழுந்தான்.’தான் வாலிபனாக அல்லவோ விளையாடினோம், இங்கே சிறுவனாக அல்லவா படுத்திருக்கிறோம்’ என்று அவன் மனம் நினைத்தது.மருத்துவமனையின் செவிலியர் ஓடி வந்து அவனை மீண்டும் படுக்கையில் கிடத்தியபோது அவன் காலின் மேல்தோல் வழண்டு உட்சதை தெரிந்தது.
மதிக்குப் புரிந்துவிட்டது; டாக்டரை அழைக்க ஓடினாள்.
அவனுக்கு ஒன்பது வயதுதான் ஆகிறது.சீருடை அணிந்த செவிலியர்கள், உதவியாளர்கள், நடை வண்டிகள், மௌனப் படம் போல் தென்படுகிறார்கள். ஏனோ விரைந்து கொண்டிருக்கிறார்கள், விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர் நெற்றிச் சுருக்கங்களுடன் அம்மாவுடன் பேசிக்கொண்டே உள்ளே வந்தார்.
“இளைய நண்பனே,காலை வணக்கம்” என்றார் சிரித்துக்கொண்டே.
அவன் படுக்கையில் இருந்து எழுந்து நெற்றியில் கை பதித்து வணங்கினான். அவ்வளவுதான், மேல் தோலின் கொப்புளம் கழன்று தோல் அழண்டு விட்டது. ’கடவுளே’ என மதி விசும்பினாள்.
மருத்துவர் அவனை செயற்கை உறக்கத்தில் ஆழ்த்தினார்.
சுந்தரத்தோடு அவள் போன அகத்தியமலை மழைக் காடுகள் நினைவில் நிழலாடின. காடுகள் பசுமை மட்டுமல்ல–அவை மர்மத்தின் மௌனக் குரல்கள். பெயர் தெரியாத அடர்ந்த மரங்கள், உடல் தெரியாது அதில் ஆடும் பறவைகள், அவைகள் உதிர்த்த சிறகுகளை எந்த தேவனிடம் சேர்க்க இந்தக் காற்று அணைத்து எடுக்கிறது? இத்தனை பசிய மணம் நிலத்தில் இல்லை, குறுக்கிடும் நீரோடைகள் எங்கிருந்துதான் வருகின்றன? காட்டின் அந்தரங்கத்தை அறிந்த பெருமையில் குட்டி நீர்வீழ்ச்சி பாலெனப் பொங்குகிறது. நீர்வீழ்ச்சி என்ற சொல்லே பிடிக்கவில்லை, அருவி என்று சொன்னால் எவ்வளவு அழகாக இருக்கிறது! அவள் இறங்கி இறங்கி நிலம் செழிக்கத்தானே ஓடி வருகிறாள்? தன் நினைவில் ஆழ்ந்த அவள் அந்தக் காட்டெருமையைக் கவனிக்கவில்லை; அது முட்ட வந்துவிட்டு பின்னர் காட்டுக்குள் போய்விட்டாலும் இன்றுகூட நடுக்கமிருக்கிறது அதை எண்ணும்போதெல்லாம்.
சுந்தரம் எத்தனை முறை அதற்காக அவளை பகடி செய்தார்? ஆனால், அவளை விட்டுவிட்ட காட்டெருமை ஏன் செந்திலைத் தாக்க வரவேண்டும் தோல் அழற்சி நோயாக?
அப்பாவும், மகனுமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
“டிவி பாரேன், நம்ம சூபர் லீக் அணி, கேரளா ப்ரிமீயர் லீக்குக்கு தண்ணி காட்டுது பாரு. செந்திலு, நீஆடுவடா, நாஞ் சொன்னா நடக்கும்”
அவன் தலையசைத்தான். ஆனாலும் நினைத்தான்
‘விளையாட்டில் எத்தனை உற்சாகம், ஒருவருடன் ஒருவர் எத்தனை வேகமாக மோதுகிறார்கள்? பந்து உதைக்கும் கால்களின் தோல் எவ்வளவு அழுத்தத்தை தாங்குகிறது? கீழே விழுகிறார்கள், எழுகிறார்கள், எழும்ப முடியாதவர்களை மருத்துவக் குழு உள்ளே வந்து ஏதோ செய்கிறது. அவர்கள் உடனே ஓடத் தொடங்குகிறார்கள். அந்த டாக்டர்கள் என்னை சரி செய்துவிடுவார்களே, ஏன் என்னை இந்த டாக்டரிடம் அழைத்து வந்தார்கள்? நான் கண்டிப்பாக சொல்லப் போகிறேன்- எனக்கு அந்த மருத்துவர்கள்தான் வேண்டுமென்று.’
அப்பாவிடம் சொன்ன போது சிரித்துக்கொண்டே “போலாம், செந்தில். இப்போஅவங்க சாக்கர் க்ரவுண்ட்ல இருக்காங்க இல்ல? இன்னும் ஒரு வாரம் மேட்ச் இருக்கு. அதுக்குள்ள நீயே அங்க போய் அவங்களைப் பாக்கப் போற, நீ எஞ்சாமிய்யா, தகப்பன் சாமி நீ, நல்லாயிடுவையா” என்றார். அவன் பார்க்காதபோது கண்களைத் துடைத்துக்கொண்டார்.
‘நானும் அந்த க்ரவுண்ட்ல விளையாடுவேன்’
மதி அருகே வந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள்.
அவனுக்கு வந்திருப்பது Junctional Epidermolysis Bullosa (JEB). அதாவது மேல் தோல் கொப்புளங்கள் தோன்றி தோல் அழிவு ஏற்படும் ஒரு நோய். மேல் தோல் அடுக்கின் அழிவினால் அவன் உடலில் மூன்றில் இரண்டு பங்கு மேல் தோல் அழன்று வெளிவந்துவிடுகிறது. அவன் உடல் சிறு உரசலைக்கூட தாங்க இயலாததாக இருக்கிறது.
இந்தியாவின் சிறந்த குழைந்தைகள் மருத்துவ மனை இது. மிகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் இங்கிருக்கிறார்கள். எங்கும் பசுமை கொஞ்சும் சூழல். இங்கு காலனுக்கு என்ன வேலை?
’பிஞ்சுதிர, பூஉதிர கனியுதிர, காயுதிர’ என சித்திரகுப்தனின் முரசு ஏன் மாற்றி மாற்றி முழங்கியது? கருவறையில் பூக்கும் உயிர், கனவுலகில் மிதக்கும் பெற்றோர், தன்னுடைய ஜீன்ஸ்ஸிலதைக் கொண்டு உலகாள விழையும் சிற்றுயிர், இத்தனை பெரிய உலகில் அது வாழ வழியில்லையா? பிள்ளைக் கலி தீர்த்துவிட்டு இவன் போய்விடுவானோ? நாங்கள் விட்டுவிடுவோமா என்ன?
அம்மையும், ஐயனும் அவனுக்குப் பிடிச்ச திருநவேலி அல்வாவும் உளுந்து வடையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவனுக்கு இதுவா வேண்டும்? பந்து, கால் பந்து.. இந்த ஆஸ்பத்திரிதான் பெரிதாக இருக்கிறதே. நான் விளையாடலாமே. இந்த டாக்டர் சிரித்துக் கொண்டே அவனை என்னவோ செய்கிறார். ஒரே தூக்கம் தூக்கமாக வருகிறது. பீலே வந்து, ‘எழுந்திரு, வா, விளையாடலாம்’, என்கிறார். அது யார் சத்தமில்லாமல் ரொனால்ட்டா? இந்த டாக்டருக்கு இவர்களெல்லாம் யார் என்றே தெரியாது. அவருக்கு விளையாட்டே பிடிக்காது.
அதிக கவனம் எடுத்துக்கொண்டு செந்திலைக் கவனித்தாலும், இன்றைய நவீன சிகிச்சைகளை அளித்தாலும், அவன் நிலை மோசமாகிக் கொண்டே வருவது மருத்துவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
“சுந்தரம் சார், உங்க தோலையோ உங்க வொய்ஃப் தோலையோ எடுத்து உங்க மகனுக்கு ஒட்ட வைக்கலாம்னு நெனைக்கிறோம். பொருந்தர ஸ்கின் டைப்பத்தான் எடுப்போம். இந்த க்ராஃப்டிங்க் மற்றும் ஒட்ட வைத்தல் உங்களுக்கு சம்மதம்னா செஞ்சு பாக்கலாம். உங்க தோல் ஈசியா வளந்துடும். ஆனா, அவங்கிட்ட இதில் முழு வெற்றியை இப்பவே சொல்ல முடியாது. என்ன சொல்றீங்க?”
‘நாங்க ரெடி, நீங்க இப்பகூடச் செய்யலாம்’
அவர்களின் தோட்டத்தில் ஒட்டு மாமரங்களை நட்டு வளர்த்த நினைவு வந்தது மதிக்கு. கடவுள் எங்கிருந்தோ தனித்தனியாக இருப்பதை ஒட்டி இணைத்துவிடுகிறார். மர்ம முடிச்சுக்களோடு காணப்பட்ட அந்தப் பெயர் தெரியாத மரம், அகத்தியமலை மழைக்காடுகளில் பார்த்த மரம், பட்டைகள் மாறிய நிறமாய் அன்று என்னவொரு வசீகர கவர்ச்சியாக இருந்தது! அவளை நெல்லையப்பர் கைவிடவில்லை. செந்திலுக்கு குருத்துத் தோல் வளரும், ஆம்.. அது அழன்றுவிடாது, கொப்புளங்கள் தோன்றாது, வெடித்து உள்ளெலும்பு வெளிவராது. அவன் கால்பந்தின் நாயகன். அப்பனின் கனவை அவன் சாதிப்பான்.
சுந்தரத்தின் தோல்தான் ஒத்து வந்தது.
செந்திலுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் அப்பா அவன் உடலோடு இருக்கப் போகிறார் என்பது மட்டும் எப்படியோ புரிந்தது.
‘ஐயா, நான் உன்ன மாரி பெரிசாயிடுவேனில்ல, அப்ப நான் டைடானிக் டீமுக்காக ஆடுவேனே. ஆனா, டாடி நீ என்ன மாரி சின்னவனா ஆயிடுவியா?’
சுந்தரம் மிகக் கவனமாக அவனைத் தொட்டார். ”நாம ரெண்டு பேருமே பெரியவங்களா இருப்போம்.’
அவன் உடல் முதலில் ஏற்றுக் கொண்டுவிட்டு பிறகு அந்த தோல் திசுக்களை முழுதுமாக உதறிவிட்டது. டாக்டர் குழு திகைத்துப் போயிற்று. இனி இவனை எப்படி காப்பாற்றுவது?
அவன் பெனால்ட்டி கார்னர் கோல் அடித்து அணியை வெற்றிப் பெறச் செய்கிறான், மெஸ்ஸி அவனைக் கட்டி அணைக்கிறார். திருவனந்தபுரம் எஃப்சியின் ராஜேஷ் தோளில் அவனைத் தூக்கி கூத்தாடுகிறார். பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. அவன் எல்லா டிவியிலும் தான் தெரிவதை ஆசையோடு பார்க்கிறான். ’செந்தில்,அந்த பைசைக்கிள் கிக்கிற்காக எனக்கு உன்ன கண்ணாலம் கட்டிக்கிடணும் போல இருக்குடா ‘என்கிறாள் கோமதி. அவ தான் எம்புட்டு அழகா இருக்கா?அவ தானே தெனம் வந்து அவனோட உக்காந்திருக்கா, திருட்டுத்தனமா கொடுக்காபுளி கொடுக்குறா? ஆனா ஏன் நல்ல தமிழே பேச வல்ல அவளுக்கு. அவன் ஹாஸ்பிடலேந்து போனதுமே அவளுக்கு சொல்லித் தருவான்.
“சாரி, சுந்தரம், நீங்க செந்தில வீட்டுக்கு கூட்டிப் போயிடுங்க இனி நாங்க செய்ய ஏதுமில்ல” என்றார் மருத்துவர்.
எதற்கும் கலங்காத சுந்தரம் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசும்பினார். காந்திமதி காரிடோரில் நின்று அழுதாள். வெள்ளிச் செதில்களை உதிர்த்த மீன். தங்க உடலுடன் அது ஏரியில் போயிற்றே– அது என்னவாயிற்று?அதற்கு என்னதான் ஆகப் போகிறது?
இல்லை, அதற்கு ஒன்றுமாகவில்லை. அது நீந்திக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கிறது. அதன் அம்மா அதை சாக விடமாட்டாள். அவள் கடவுளுடன் போராடுவாள். ஒட்டு மாமரங்களை வேலியிட்டு காத்தவள் அவள், வெயிலில் கருகாது நீரூற்றி வளர்த்தவள் அவள், துளிர் விட்டு வளர்கையில் அந்த மரக் கன்றுகளிடம் பேசியவள் அவள். சூரியன் அவைகளைத் தொடுகிறான் எனவும், அந்த மாயப் பச்சை இலைகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கவிதை சொன்னவள் அவள்.
‘செந்தில் அப்பா, கொஞ்சம் வாங்க நான் டாக்டரிட்ட பேசணும்’ என்றாள்.
“இனி அவங்க செய்ய ஒன்னுமில்ல, மதி.”
‘இருக்குதுங்க ‘
“என்ன இருக்கு? அவங்களவிட நமக்குத் தெரியுமாக்கும்?”
‘நமக்கு வைத்தியம் பத்தி தெரியாதுதான். ஆனா, மாத்து வழி இருக்கான்னு கேக்கலாமில்ல?’
“என்ன வழி? இறுதி வரை….. சாரி.. இங்கனையே இருக்கச் சொல்லுதியா?”
‘நா மன சாந்திக்குத் தானே கேட்கணுங்கேன்: மாத்து இல்லைன்னு அவங்க சொன்னா எல்லாரும் வீடு போயிடலாம்’ என்றாள் பிடிவாதமாக.
டாக்டர் அவர்களை ஏறிட்டார். அவரது மேஜையில் ‘ஜீன் தெரபி அன்ட் ரெசரக்ஷன்’ என்ற புதிய புத்தகம் இருந்தது.
One comment