அகம் கொண்ட தரிசனம் சொல்லில் கட்டுப்படாது. அது போடும் கோலத்தின் நுனியும், அடியும் பற்றி லாசராவின் ’தரிசனம்’ நடக்கிறது.
“குங்குலியச் சுடர் போன்று’ குபுக், குபுக் ஸ்வரப் பந்துகள் குபீரிடுகின்றன, குவிகின்றன, குலைகின்றன, குழைகின்றன, குமைகின்றன. இந்த ராகமுமில்லை, அந்த ராகமுமில்லை, எந்த ராகமுமில்லை, ஆத்மாவின் ராகம் ஒரே ராகம், அவரவர் உடன் கொண்டு வரும் அவரவரின் சொந்த ராகம்.”
“நம்பிக்கை இன்ன உருன்னு யார் கண்டது? நாமா நினைக்கிற உருவைத் தவிர அதுவா அவாவாளுக்குத் தக்கபடி சுயமா, தானா, தனியா எடுத்து அவாளே அறியாமல் அவாளைத் தாங்கற நிஜ உரு ஒண்ணு அதுக்கிருக்கே!” ‘தயா’வின் உரையாடல் இது. ”நம் துக்கம், தோல்வி, அழிவு இவைகளே நம் பக்க பலங்கள்”. இதுவும் சாதாரண வாக்கியம் இல்லை. பெண்ணைச் சூழ்ந்துள்ள இது அவளின் பலமும்கூட. அவள் வாழத் தேவையான வைராக்கியமும்கூட. ”இதென்ன அர்த்தம் பண்ணற அனர்த்தம்” (‘தோன்றுகிறதா?’)
“வேஷம் போடுவதும், போட்டுக்கறதும் நாமாத்தான் என்பதற்கு அத்தாட்சி மாதிரி, வேஷம், வேஷம் என்று கொண்டே ஒரு நாள் வேஷம் கலைந்த பின்னும் வேஷம் மாறாமல் இருந்தால் அப்போ அது வேஷமா? நிஜமா? அப்பவும் அது வேஷந்தானா, இல்லை வேறு ஏதாவதா? எது நிஜம்?” நாம் அனைவரும் நாடக மேடை நடிகர்கள் என்பதால் வேஷம் கலைந்த பின்னும் நம் வேஷம் மாறுவதில்லை- ஆள் தான் மாறி நடிக்கிறோம். புனைவுகள் தொடர்கின்றன. தயாவின் தவிப்பான கேள்வி அவளது தவத்தின் வேஷம் நிஜமாகிப் போகும் இடம் வேஷம் நிலைக்கிறதா இல்லையா?
இந்த வேஷ வினோதம் ‘நேரங்களில்’ அழகாகத் தொடர்கிறது. ”ஒரு ஒரு வேஷமும் ஒரு ஒரு நிழல். ஒவ்வொரு நிழலும் ஒரு ஒரு வர்ணம். அவை ஆடுவதும், பூசுவதும், வருவதும், மறைவதும் சில சமயங்கள் தெரிவதுகூட இல்லை.”
“நெருப்பு உருகி ஒழுகுவது போல் சுருதியோடிழைந்து குரல் உள் வழிந்து நிரம்பி மற்ற ஓசைகளின் உணர்வை அப்புறப்படுத்தியதும், நிதானமாய், படிப்படியாய், வேகமாய், அகாரங்கள் மேலே கொக்கிகளை மாட்டி, குழந்தையைக் குளத்தில் முழுகக் கையைப் பிடித்து இழுப்பது போல், அவை அனைத்தும் அத்தனைக் கைகளாய் அவனைப் பற்றி தோட்டத்திலிருந்து வீட்டுள் இழுத்தன.” “தும்பியின் இறக்கையின் நயத்துடன் சன்னமான சல்லாக்கள் அவனைச் சுற்றிலும் மேலும் மோதி அலைந்து மிதந்தன.” “இமைகளுக்கிடையில் விழிகள் விதைகளாய் விழித்துக் கொண்டிருந்தன” காற்றில் வரும் சுருதி- இங்கே கதாநாயகனின் மன நிலைக்கேற்ப நெருப்பாக உருகி வழிகிறது. சூழ்நிலைக் கைதியாய் வாழும் மானுட அவலம் கொக்கிகளாக மாட்டி அவனை அங்கே நிலை நிறுத்துகிறது. விலக முடியாத தவிப்பு சல்லாக்களால் பிணைக்கிறது. இமை மூடியும் தூங்கா கண் பாவை அவருக்கு விழித்திருக்கும் விதை! கதையை மட்டும் சொல்லவில்லை அவர், கதையைகூட சொல்லத் தேவையில்லை, சொல் சுமக்கும் கனம் நம்மையே கதைமாந்தர் எனச் செய்துவிடுகிறது. தளையும், விடுதலையும் மானிட வரம் அல்லது சாபமோ? இரண்டுமே தேவையோ, தேவையெனில் எம்மட்டில், இல்லையெனில் எப்பொழுதிலிருந்து?
கேள்விகள்.. பதில் இருந்தும் பயப்படும், பயப்படுத்தும் கேள்விகள். ’மாயமான்’ சற்று தள்ளி நின்று பதில் சொல்கிறது. ”செயல் எனும் சிலந்திதான் என் கடவுள். செயலின் ஒடுக்கம்- புலனின் ஒடுக்கம், புலனின் ஒடுக்கம்- மனதின் ஒடுக்கம், மனதின் ஒடுக்கம்- உயிரின் அமைதி“.
“இருளில் கண்கள் தொடர முடியா அந்த ஓசையின் வளைவுகளை, வளைவுகளின் நுட்ப அழகுகளை செவியால் எப்படிப் பளிச்சென்று பார்க்க முடிகிறது, பருக முடிகிறது! தம்பூரை மீட்டினாற் போன்ற உருகோசையில் நினைவு ஒன்றுபட்டு அந்தத் தேடலின் தவிப்பில் நெஞ்சு முங்கி முங்கி எழுகையில், தன் தன்மையே துலங்கித் தனிப் பரவசமடைந்தான். தானும் அத்துடன் அதன் தேடலோடிழைந்தான்.” காதுகள் இன்னிசையில், அதைவிட உயிர் நிரப்பும் ஓசையில் அவர் எழுத்தில் கண்களுமாகி விடுகின்றன.
“தான் உண்டாக்கிய நெருப்பில் நான் திருப்பித்திருப்பி தன்னயே காய்ச்சிக் கொள்கிறது. நாம் இறக்கவில்லை. ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது எப்படியோ ஏனோ பிறந்துவிட்டது. பிறந்தபின் அதனால் இறக்க முடியவில்லை. இருந்து தான் ஆக வேண்டும்.”
”தட்டில்லாது சுடர் ஒன்று அஞ்சலியில் அவளை வட்டமிட்டு அந்தரத்தில் நீந்திற்று. கம்மென்று அகில் மணம் புகையின்றிக் கமழ்ந்தது.” ”செயலளவில் ஒன்றும் நேர்ந்து விடவில்லை, எண்ணமும் செயலே என்பது தவிர. பூக்கள் மணப்பதற்காகப் பூக்கவில்லை. தம் இயல்பில் பூக்கின்றன, அதனால் மணக்கின்றன.” (ஏகா)
செவியின் நுட்பம் இவரை வியப்பிற்குள்ளாக்குவது வியப்பில்லை இசையின், ஒலியின், கூவல்களின், கேவல்களின், மெளனம் போடும் நிசப்த சப்தத்தின் உபாசகர் வேறு எப்படி இருப்பார்? ’சப்தவேதி’ சொல்கிறது- ”கற்பனை என்பது ஆபத்து. கட்செவி போன்று, அதிசன்னமான ஓசைகளைப் பெறும் செவியையும் படைத்து, பிறகு அவ்வோசைகளின் உள்ளர்த்தங்களைக் கண்டுபிடிக்க, அவ்வழியே கற்பனையும் ஓட்டிவிட்டால் அப்புறம் தசரதனின் சப்தவேதி சமாசாரம்தான்”. “இரவில்தான் சப்தங்களின் சக்தி வலுக்கிறது. ஒளி மங்கியதும் ஒலி ஓங்குகின்றது.” ”அவளுடைய தரிசனத்தின் இன்பமே, ஒரு சகிக்கவொண்ணா துன்பம்”
“மின்னல் வானத்தை வெட்டும் பொழுதெல்லாம், வானம் அடிபட்ட விலங்கு போல் அலறியது”
ஜதியின் ஸ்வரம் நாம் அறிவோம். சிந்தனையின் ஸ்வரம்? ’ஆஹூதி’- “அம்மாவின் கூந்தல் முடிச்சில் தாழம்பூ மடல் தகதகவென கமகமக்கும் அல்லது கமகமவென தகதகக்குமா? கம கம தக தக சிந்தனையின் ஸ்வரம் எப்படி மணக்கிறது?”
அதிநுட்பமாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றைச்சரம்தான் மின்னல் என ஒளி காட்டி கண்ணைப் பறிக்கிறது.
“கண் திறந்தால் ஒளி. மூடினால் இருள். மூடியும் திறந்தும் உழன்றால் உயிர் என எனக்கு நானே பெயர் வைத்துக் கொண்டு செயல் வகுத்த நிலை முந்திய கர்ப்ப வெளியில் நானற்று நிறைந்திருக்கிறேன். எத்தெய்வமும் அடியூன்றிய ஆகாச கோசம் நான்.”
லாசராவின் எழுத்துக்கள்- எண்ணங்கள் முற்றுமாக ஏறி, அதன் பின்னரும் வாசகர் தன் எண்ணத்தைக் கண்டடைய வழி வகுக்கும் வசீகரம் சொல்லில் அடங்காது. தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும், காட்சிகளையும், பேச்சுக்களையும் தரிசனமாக்கும் வித்தைக்காரர். இதில், வாசகருக்கு கிட்டும் அனுபவம் அவரவர் வார்ப்பிற்கு ஏற்றபடி.
நன்றி – தி இந்து
One comment