சீருடை

மு வெங்கடேஷ்

கொசுவத்தை நீவிவிட்டு வயிற்றை எக்கி செருகிக் கொண்ட பிறகு, மடிப்புக் கலையாமலிருக்க, அம்மா பற்களில் இடுக்கிக் கொண்டிருந்த ஊக்கை வைத்து மொத்த கொசுவத்தையும் சேர்த்து பிணைத்துக் கொண்டாள். உடலை அப்படி இப்படி திருப்பி புடவை சுற்றின் நேர்த்தியை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், மாரி மெதுவாக “அம்மா, பாவாடை தைக்கனும்மா. கிழிசல்ல ஊக்கை மாட்டிக்கிட்டு பள்ளியோடவத்துக்கு போ முடிலம்மா” என்றாள்.

“எல்லாம் பாத்துக்கலாம்டி. தம்பி இப்ப வந்திருவான். ஏதாச்சும் இட்லி கிட்லி வச்சுக் கொடு. வெளயாடிட்டு உள்ள வரும்போதே பசி பசின்னு பறப்பான். நான் மேலத் தெருவரை போயிட்டு வந்திடறன். சரசு பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்காளாம்”

அம்மாவின் பதில் மாரியை பெரிதாக பாதிக்கவில்லை. முத்து பிறந்தபோது அவளுக்கு ஒன்பது வயது. இரண்டாவதாவது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டுமென ஐயம்மாள் பட்ட பாடுகள் மாரிக்கு அத்துப்படி. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. கடைசியாக குலதெய்வம் முத்துமாரிக்கு பால்குடம் எடுப்பதாக மாரி வேண்டிப் பிறந்தவன்தான் முத்து. அம்மா, அப்பா பிரார்த்தித்ததை விட தம்பி வேண்டுமென்று மாரி பிரார்த்தித்தது அதிகம். பக்கத்துக்கு வீட்டு ஆயிஷா அக்கா மகள் நஸ்ரினுக்கு ஒரு தம்பி இருக்கிறான், அதனால் தனக்கும் ஒரு தம்பி வேண்டும் என்ற ஏக்கம். அதனால்தானோ என்னவோ மாரிக்கு தம்பி மேல் அவ்வளவு வாஞ்சை.

மாரி, ஊரிலிருக்கும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பதென்பதோ எட்டாம் வகுப்பு, பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதே இல்லை. தம்பியைப் பார்த்துக் கொண்டு அவனுடன் விளையாடுவதிலேயே நேரத்தைச் செலவழித்தாள். அம்மா தம்பியை வளர்த்ததை விட இவள் வளர்த்ததுதான் அதிகம். சோறூட்டுவது முதல் தாலாட்டித் தூங்கவைப்பது வரை. அவளைப் பொறுத்தவரை இவ்வுலகத்தில் சிறந்த இடம் தன் வீடு, சிறந்த மொழி தம்பி பேசும் மழலை மொழி, சிறந்த விளையாட்டு தம்பியுடன் விளையாடுவது. மொத்தத்தில் அவள் உலகமே தம்பிதான். அவன் கைக்குழந்தையாக இருந்த போதிலிருந்தே, பால் கரைத்து கொடுப்பதாகட்டும், கஞ்சி வச்சுக் கொடுப்பதாகட்டும், எல்லாமே மாரிதான். “ரோ ரோ ரோ ரோ ரோ….. இந்தா அக்கா வந்துட்டேன் பாரு, அழக்கூடாது. எங்க ராசால்லா, எங்க ஐயால்லா. என்னைக்கு எங்க ஐயா ரெண்டு இட்லி திண்ணு ஒரு கிளாசு காபி குடிக்காரோ அன்னைக்குத் தான் எனக்கு நிம்மதி” என்று கொஞ்சியபடி பார்த்து பார்த்து செய்வாள்.

மாரியுடன் பக்கத்து வீட்டு நஸ்ரினுக்கு எப்போதுமே போட்டிதான். அனைத்து விளையாட்டிலும் நஸ்ரினைத் தோற்கடித்துவிடும் மாரி, தம்பி விளையாட்டில் மட்டும் தோற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் தம்பி பிறந்தபின் அதிலும் போட்டி போடுவாள். தனக்கும் ஒரு தம்பி இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாள். வருடா வருடம் பொங்கல் பண்டிகையன்று ஊரில் நடக்கும் “உப்பு மூட்டை” போட்டியில் தம்பியைத் தூக்கிக் கொண்டு ஓடும் மாரி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றாள். தம்பியைத் தூக்கிச் சுமப்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது.

சரசு வீட்டிலிருந்து வந்த அம்மாவிடம், “எம்மா, தம்பிய ஸ்கூல்ல போடனும்னிட்டிருந்தியே, இங்கிலீசு மீடியத்திலதானேம்மா” என்று ஆரம்பித்தாள். கொஞ்ச நாட்களாக இந்த இங்கிலீஷ் மீடியம் பேச்சு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தது.

“ஏட்டி கூறு கெட்ட கழுத நமக்கெதுக்குடி அதெல்லாம்?” என்று அம்மா மீண்டும் மறுக்க ஆரம்பித்தாள்.

“எம்மா நீ செத்தப் பேசாம இரேன், இப்போ அதான் பேசன். பக்கத்து வீட்டு ஆயிஷா அக்காகூட அவுக ரெண்டு புள்ளைகளையும் அங்கதான் சேத்து விட்ருக்காம். தெரியுமா ஒனக்கு?”

“அது சரி, பேசனாம்லா பேசனு, வாரியக் கட்ட பிஞ்சிரும் பாத்துக்கோ. ஏழு கழுத வயசாவுது, பொட்டப் புள்ளைக்கு கொஞ்சமாது வீட்டு வனவருத்தம் தெரிய வேணாம்? பக்கத்து வீட்டு ஆயிசா புள்ளைங்கள சேத்துருக்கான்னா அவா புருசன் துபாய்ல இருந்து கத்த கத்தயா அனுப்புறாரு. அதுக இங்கிலீசு பள்ளிக் கூடத்துக்குப் போயி படிக்குங்க. உங்க அப்பா என்ன துபாய்லயா இருக்காரு? இல்ல பணம்தான் நம்ம வீட்டு மரத்துல காய்க்கா? இந்த பேச்ச இதோட விட்ரனும் பாத்துக்கோ. நானாது பரவாயில்ல ஏச்சோட விட்டேன், உங்க அப்பாக்கு தெரிஞ்சுச்சுன்னா கொன்னே போட்ருவரு பாத்துக்கோ” என்று ஏசினாள்.

“எம்மா நா என்ன என்னியவா சேத்து விடச் சொல்றேன். தம்பியத்தான சேக்கச் சொல்றேன்,” என்று மாரியும் விடுவதாக இல்லை. “அதெல்லாம் சரிதான் ஆனா உங்க அப்பாட்ட யாரு சொல்றது?” என்று அம்மா இழுக்க, “நீதான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மாரி. “சரி, பாப்போம், மனுசன் என்ன சொல்றார்னு,” என்று சொல்லிவிட்டு அம்மா தூங்கப்போக, மாரி மனதிற்குள் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

மாரிக்குத் தன் தம்பியை எப்படியாவது இங்கிலீசு மீடியத்தில் சேர்த்து விட வேண்டுமென்ற ஆசை. அதற்காக அப்பாவிடமும் சென்று பேசினாள். “எப்பா எப்படியாது தம்பிய இங்கிலீசு மீடியத்துல சேப்பும்பா, எனக்கு இந்த வருசம் புதுத் துணிகூட வேணாம்பா. தம்பிக்கு மட்டும் கரார் கடைக்குப் போயி நல்ல துணி வாங்குவோம். எனக்கு அடுத்த வருசம் பாத்துக்கலாம்பா,” என்றாள்.

“ஏம்லா, பாவாட கிழிஞ்ச்சிருக்குன்னியே. புதுசு வேணாமா?” என்றார் அப்பா.

“அடுத்த வருசம் பாத்துக்கிடுவம்ப்பா.” அவளுடைய ஆர்வத்தைப் பார்க்க அப்பாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.

முதல் நாள் மாரி தம்பியைப் பள்ளிக்குக் கிளப்பிக் கொண்டிருந்தாள். தலைசீவி, பொட்டு வைத்து.

“அடியே மாரி என்னட்டி இது கோட்டிக்காரத்தனம்? ஆம்பள புள்ளைக்குப் போயி பொட்டு வச்சிக்குட்டு?” பக்கத்துக்கு வீட்டு வேணி அத்தை வந்தாள்.

“நீ ச்சும்மா கெடத்த, எந்தம்பிக்கு நா பொட்டு வப்பேன், பூ வப்பேன் ஒனக்கு ஏன் இப்படி பொத்துக்குட்டு வருது?”

“எம்மாடி நீ ஒந்தம்பிக்கு என்னத்தையும் வைம்மா. எனக்கு என்ன வந்துச்சு?” என்று அவள் கோபித்துக் கொள்ள, “அப்படிச் சொல்லீட்டுப் போவியா பேசாம? வந்துட்டா அங்கேருந்து வாய இம்புட்டு நீளம் வச்சிக்கிட்டு” என்றாள் மாரி.

“ஒன் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான, பாக்கத்தான போறோம். அரசங்காட்டுலேந்து ஒம்மாமன் பரிசம் போட வந்திட்டே இருக்கானாம்டி. சொடலமாடனுக்கு சோடி போட்டது போல வருவான் பாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வேணி அத்தை.

மாரிக்கும் தெரிந்த விஷயம்தான். அடுத்த வருச முத்துமாரி கொடை முடிஞ்சதும் பேசி முடிச்சுப்புட வேண்டுமென ஐயம்மாள் துடித்துக் கொண்டிருந்தாள். “பொட்டப்புள்ளய பொழுதோட கட்டி வச்சிப்புடனும். மாசத்துக்கொண்ணுன்னு ஒர்த்தி குத்த வச்சிடறாளுக. அப்புறம் மாப்பிள்ள தேடி நம்மாள ஆகாது. முருகைய்யனுக்கு என்னா கொற. மொத்த ஜில்லாவும் அவனக் கண்டா மெரண்டு நிக்கும். இவள ராணி போல பாத்துக்கிடுவான்” மாரியைப் பற்றிய முடிவுகளில் மாரியை யாரும் கலந்து கொள்வதில்லை.

வேணி அத்தை இந்தப் பக்கம் போனதும் பக்கத்து வீட்டு சங்கரன் தாத்தா வந்தார்.

“இது என்னட்டி கூத்தா இருக்கு, வெள்ளக்காரத் தொரகணக்கா? சூவு, சாக்சு, கழுத்துல என்னது தொங்கீட்டு? மூக்கு வடிஞ்சா தொடைக்குறதுக்கா?”

“ஏ தாத்தா அது டையி, இதெல்லாம் ஒனக்கு எங்க தெரியப் போவுது? முன்னப்பின்ன பள்ளிக்கூடம் பக்கம் போயிருந்தாத்தான? பாரேன் இவன் பெரிய டாக்டர் ஆயி, நீ காச்சல்னு வந்து நிக்கும்போது பிட்டியில பெரிய ஊசியா போடச் சொல்றேன்”

“அடியாத்தி இவ ஏன் இந்த வரத்து வாரா. இன்னும் தொர பள்ளிக்கூடத்துக்கே போவல அதுக்குள்ளயும் டாக்டர்ங்கிறா இன்ஜினீயர்ங்கிறா,” என்று சொல்லிக் கொண்டே தாத்தா தான் வைத்திருக்கும் மூக்குப் பொடியை எடுத்து சற்று உறிஞ்சிக்கொண்டுச் சென்றார்.

ஒவ்வொருவரையும் பேசி சமாளிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை மாரிக்கு. ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து விட்டு பள்ளிக்கூடம் செல்லத் தயாரானார்கள். ”அடியே மாரி ஒனக்கும் தம்பிக்கும் ரெண்டு சம்படத்துல பழைய சோறும் ஊறுகாயும் வச்சிருக்கேன் பாரு. மறக்காம எடுத்துட்டுப் போங்க” என்று வீட்டினுள் இருந்து அம்மா ஞாபகப்படுத்தினாள். எரிச்சலடைந்த மாரியோ “எம்மா அவனுக்குப் போயி பழைய சோத்த குடுத்துட்டு? அந்த பிளாஸ்க்ல கொஞ்சம் பால காச்சி ஊத்து, நா போற வழில சூப்பர் கடைல ரெண்டு கூட கேக்கு வாங்கிக் குடுத்துக்குறேன்” என்று சொல்லி விட்டு ஒரு சம்படத்தை மட்டும் எடுத்து தன் பையில் திணித்துக் கொண்டாள்.

ஊரில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆங்கில வழி பள்ளிக்கூடம். அரசு பள்ளிகளையேப் பார்த்துப் பழகிய ஊருக்கு இது புது அனுபவம். குழந்தைகள் சூ, சாக்ஸ், டை அணிந்து வருவதை ஊரே கூடி நின்று வியப்பாகவும் வித்தியாசமாகவும் வேடிக்கை பார்த்தது. மாரியும் தன் தம்பியை அழைத்து வந்தாள், ஒருவித பெருமிதத்துடன். எதிரே தன் பிள்ளைகளுடன் வந்த ஆயிஷா அக்கா, “என்ன மாரி தம்பிய விட வந்தியா?” என்று கேட்க “ஆமாக்கா” என்று சொல்லி விட்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள். சுற்றியும் சிறுவர் சிறுமியர் புது சீருடையில் நின்று கொண்டிருந்தனர். வகுப்பறை வரை சென்று தம்பியை விட்டுவிட்டு மதியம் வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னாள். உள்ளே நுழையும்முன், “எக்கா இந்த டை கழண்டு கழண்டு விளுது” என்றான் முத்து.

“அதெல்லாம் ஒன்னும் ஆவாது,” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பாவாடை கிழிசலை கோர்த்து மாட்டியிருந்த ஊக்கை கழட்டி டையை சட்டையோடு சேர்த்து போட்டுவிட்டாள். “இனி சாயந்திரம் வீட்டுக்குப் போறவர கழளவே கழளாது” என்று சொல்லி, டாட்டா காண்பித்தவாறே வாசலை நோக்கி நடந்தாள்- “இனி பெரிய படிப்பெல்லாம் படித்து, டாக்டராவோ இன்ஜினியராவோ தம்பி வந்துவிட மாட்டானா என்ன,” என்று நினைத்தபடி.

One comment

  1. என்ன வெங்கி,
    பெரியவர்களின் ஆசைகளை,சிறுமிக்கு வரவழைத்துவிட்டீர்களே?சிறுமிக்குத்தான் தம்பிமீது எவ்வளவு ஆசை, பாசம்! அருமையான நடை, நல்ல கதை. வாழ்துக்கள் வெங்கி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.