சென்ற வாரம் பதிப்பிக்கப்பட்ட நித்ய சைதன்யாவின் ‘அகம்‘ என்ற சிறுகதை ஆசீர்வதிக்கப்பட்டது- பதாகையின் இருநூறாவது கதை அது. பதிப்பிக்கப்பட்டு ஒரு வாரம் ஆனபின், எந்த ஆரவாரமும் இல்லாமல் அந்த மைல்கல் கடக்கப்பட்டிருப்பது இன்றுதான் தெரிந்தது. பதாகையில் வந்த மற்ற பல கதைகளைப் போலவே எந்த விமரிசனமும் எதிர்வினையும் இல்லாமல் இந்தக் கதையும் வாசிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இது ஒரு முக்கியமான இடம் கடக்கப்பட்டிருப்பதன் தடமாகிறது. இது போல் இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள வேறு பல கதைகளும் அவ்வவற்றின் அளவில் ஏதோ ஒரு தடமாக பின்னொரு காலம் அங்கீகரிக்கப்படலாம். இந்த எதிர்பார்ப்புதான் பதாகை தொடர்ந்து இயங்க காரணமாகிறது.
ஒரு படைப்புக்கு கிடைக்கக்கூடிய எதிர்வினை என்பது எப்போதும் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக, நாம் நினைத்தபடி அமைவதில்லை. “‘அகம்‘ சிறுகதை படித்தீர்களா, என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு நண்பருக்கு அஞ்சல் செய்து கேட்டபோது, அவர் அளித்த பதில் அவ்வளவு மகிழ்ச்சியளிப்பதாய் இல்லை:
“சென்ற வாரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் உங்கள் அஞ்சலுக்குப்பின் படித்தேன். அவ்வளவாக சுரத்தில்லாது, அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்டது போல் இருக்கிறது. தொடக்கத்தில் கிழம், கிழவன் எனத் திட்டுகிறார். அப்புறம் ஏனோ தாத்தா என பாசத்துடன் விளிக்கிறார். முடிவில் பிரம்மஸ்ரீ என மரியாதையுடன் போகிறது. தலைப்புக்கேற்ற அகத்தேடலாகவும் இல்லை. சைவ சித்தாந்த விளக்கங்களும் இயல்பாக பொருந்தாமல் தேய்வழக்காகத் துருத்திக்கொண்டு இருக்கிறது.”
நித்ய சைதன்யாவின் இரண்டாம் கதை இது- இதற்கு முன் மலைகள் தளத்தில் ஒரு கதை வெளிவந்திருக்கிறது (‘நிழலேந்திய மரம்‘ ). கவிதைகளில் காண முடியாத களத்தை நித்ய சைதன்யா தன் கதைகளுக்கு என்று எடுத்து வைத்திருக்கிறார்- அதிர்ச்சி என்பது அதன் ஒரு இயல்பு என்று நினைக்கிறேன்.
வெகுச் சில கதைகளே எழுதியவர்களின் எழுத்தை எவ்வாறு அணுகுவது? நண்பர் அளித்த கருத்து, எந்தச் சலுகையும் இல்லாத கறாரான பார்வை கொண்டது. அதனால் அது மதிப்புமிக்கது. ஆனால், பதிப்பிக்கத் தகுந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது இந்த எழுத்தாளர்களின் சாத்தியத்தைதான் பார்க்கிறோம். வேறு வகையில் சொல்வதானால், பதாகையில் வெளிவரும் இந்தக் கதைகள் சிறந்த கதைகள் என்று முன்வைக்கப்படுவதில்லை- விமரிசிக்கத்தக்க கதைகள் என்ற நம்பிக்கையில்தான் இவை தேர்வு செய்யப்படுகின்றன. விமரிசனங்கள் எதிர்மறையாய் இருந்தபோதிலும் அவற்றுக்கான பதிலைத் தம்மகத்தே கொண்ட கதைகளாய் விளங்கும் உயிர்ப்பு இவற்றுக்கு உண்டு என்பதுதான் எதிர்பார்ப்பு.
“”கிழட்டுத் தாயோளி உயிர வாங்குதானே” என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டே பன்னீர் பாட்டில்கள் அடங்கிய சாக்குப்பையை தோளில் துாக்கிவைத்தேன். உருவத்திற்குப் பொருந்தாமல் பஞ்சைப்போலிருந்தது.
”பேபி ஸ்டோர்ல குடுத்துட்டு. உங்கக்காவுக்கு ரெண்டு தேங்கா வாங்கிக்கோடா மாப்ள” என்றது கிழம். கோமணம் மீறி விதைப்பை ஒன்று வெளித்தெரிந்தது. எண்ணெய்க் குவளையால் பன்னீரை மொண்டு வெள்ளைப்பிளாஸ்டிக் பன்னீர் பாட்டிலில் புனல்கொண்டு ஊற்றினார். எனக்கு எப்போதும் அவர்மீது ஒருவித ஏளனம் கலந்த எரிச்சல்தான். குடும்பத்தின் சவால்களுக்குப் பயந்த பெருங்கோழை.”
என்று துவங்குகிறது கதை. இதையடுத்த பத்திகள், தாத்தாவின் பழக்க வழக்கங்களை விவரிக்கும்போதே அம்மாவுக்கு தாத்தாவிடம் உள்ள முரண் உணர்வு நிலை சொல்லப்படுகிறது – வீட்டுக்கு வராத தாத்தா, வழியில் ஏதாவது சாப்பிடத் தந்ததை அம்மாவிடம் சொல்லும்போது, “சட்டென்று அவள் முகத்தில் ஒரு குழைவு தோன்றும். முந்தானையால் கண்களை ஒற்றிக் கொள்வாள்“. ஆனால் அடுத்த வாக்கியத்திலேயே, “அம்மா பிறந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சண்டை நாறும். அம்மாவின் வாயில் இருந்து தெறித்து விழும் வார்த்தைகளால் தாத்தா நடுங்கிப்போவார். ”நீச முடிவான் பாழுங்கிணத்துல என்னெக்கொண்டு தள்ளிப்போட்டானே. இந்தப்பிஞ்சுக்காக நான் இன்னும் உயிரோட இருக்கேன்”, என்று செல்கிறது கதை.
‘பத்துத்தறிகள் போட்டு இரண்டு ஜவுளிக்கடைகளை நடத்திவந்த‘ தாத்தா திடீரென்று சாமியார் ஆகிறார், அவர் இருக்குமிடம் தெரிந்ததும் மூன்று பெண் குழந்தைகளுடன் போய் அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார் பாட்டி. தாத்தா சாமியார் போல் இருந்து கொண்டு ஊதுபத்தி செய்து விற்றுக் கொண்டிருக்கிறார். பேரன் ஒரு காதல் தோல்விக்குப்பின் பாட்டி வீட்டுக்குச் சென்று, தாத்தாவுக்கு அணுக்கமானவனாக- ஊதுபத்தி செய்ய உதவி, அவரது சைவ சித்தாந்த தத்துவங்களை ஆர்வமில்லாமல் கேட்டு- வளர்கிறான்.
தோற்றுப் போனவராக, வேடதாரியாக-, இரக்கத்துக்கு உரியவராக அல்ல, வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் உரியவராக வெவ்வேறு இடங்களில் விவரிக்கப்படும் தாத்தா, பேரனின் பார்வையில்தான் நமக்குக் கிடைக்கிறார்- அவரை வசவு பாடும் அம்மாவின் பார்வையில் கிழவனாக, பாட்டியின் அணுக்கத்தில் தாத்தாவாக, இறுதியில் சக காவி வேட்டிக்காரரின் வணக்கத்துக்குரிய பிரம்மஸ்ரீ மாணிக்கம் சுவாமியாக. அம்மா திட்டும்போது இந்தத் தாத்தா நடுங்கிப் போகிறார், இருபது ஆண்டுகளாகப் பேசிக் கொள்ளாமல், ஆனால் தாத்தாவிடம் மாறாப்பிரியம் கொண்ட, எப்போதும் தரையை வெறித்துக் கொண்டிருக்கும் பாட்டியுடன் தனக்கென்று ஒரு உலகில் ஆணவ மலம் பற்றியும் பட்டினத்தார் பாடல்கள் பற்றியும் பேசும், துறவு பூண்ட சித்தாந்தியாக இருக்கிறார்- தன்னிடம் வினயமாக நடந்து கொள்ளும் சாதகன் வரும்போதுதான் அவரது அகம் மலர்கிறது-
“வந்தவர் நாற்காலியில் அமராமல் தாத்தாவின் காலருகே பயபக்தியோடு தரையில் அமர்ந்தார். நான் தாத்தாவின் முகத்தைப்பார்த்தேன். அதுவரை நானறியாத புதுபாவனை அவர் மீது வந்து இறங்கியிருந்தது.”
இங்கு மலர்வது தாத்தாவின் அகம் மட்டுமல்ல, கிழட்டுத் தாயோளி என்று திட்டிய, தற்கொலை செய்து கொண்ட தந்தையை இழந்த, காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற பேரனின் அகமும்தான்- இப்போது அவனும் தாத்தாவை புது பாவனையுடன் பார்க்கிறான், இல்லையா? தாத்தாவைப் போலவே தனது இழப்புகளையும் சரிக்கட்டும் ஒரு இடத்தை அவனும் அடையலாம், அவனே அவமானமானது, ஏளனத்துக்குரியது, மதிப்பற்றது என்று அதை நினைத்தாலும்.