இரு மனிதர்களுக்கிடையேயான நட்பின் அடிப்படை என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு கொள்கிறோமா? அல்லது, நீண்ட காலம் நீடிக்கும் பழக்கம் புரிதலைச் சாத்தியமாக்கி, ஆழப்படுத்தி, நட்பையும் ஆழப்படுத்துகிறதா? சில பேருடன் எளிதில் நட்பு கொள்ள முடிகிறது. சிலரிடம் காரணமே இல்லாமல் விலக்கமே உருவாகிறது. யாரை விரும்புகிறோம், யாரை வெறுக்கிறோம் என்பதற்கெல்லாம் காரணங்கள் உண்டா? அல்லது, முதலில் தோன்றும் பிடித்த/பிடிக்காத உணர்வுக்கு தர்க்க ரீதியான காரணங்களை நாம் முனைந்து உருவாக்கிக் கொள்கிறோமா? பலரிடமும், ஏன், எல்லாருடனுமே நட்பாய் பழகவே மனம் ஆசைப்படுகிறது. ஆனால் சிலருடன் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. விருப்புக்கும் இருப்புக்குமான இந்த இடைவெளியின் காரணங்களைத் துல்லியமாக விளக்கி விட முடியுமா?
அப்படி துல்லியமாக விடை அளித்து விடமுடியாத கேள்விகளாகவே எனக்கு எப்போதும் தோன்றுபவை இவை. ஆனாலும் மனித மனமும் மனிதனின் காரண காரிய விளக்கத்தை எப்போதும் நாடும் பகுத்தறிவும், எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்க ரீதியான விளக்கத்தை நாடியபடியே உள்ளன. இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிதான், இலக்கியத்தின் ஊற்றுக்கண் எனலாம். கலங்கிய நதியென ஓடும் வாழ்வின் ஆழங்கள் வெளிப்படும் தெள்ளிய, ஆனால் கணப்போதைய தருணங்களை மறு உருவாக்கம் செய்து, ஒரு வகையில் அதன் பொருளை நிரந்தரமாக்கி, இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிகளைப் புரிந்து கொள்ளவே இலக்கியம் உதவுகிறது. தத்துவத்துறையில் Is-Ought Problem என்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி இதுவே பல்வேறு பார்வைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது – அறத்தாறு எதுவென்ற கேள்வி இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இடைவெளியை நோக்கும்போது நம்முன் எழுவதைத் தவிர்க்க முடியாது. இலக்கியம் விடை தருகிறதோ, இல்லையோ, கேள்வியை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த அத்தனை கேள்விகளுக்குமான பதில்களையும், கேள்விகளையுமேகூட தர்க்கப்பூர்வமாக அலசிப் பார்க்கும் சிறுகதையே ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’
தில்லியில், ஒரு ‘சர்க்கார் காரியாலயத்தில்’ வேலை செய்யும், பகுதி நேர எழுத்தாளராகவும் இருக்கும் கைலாசம், எல்லோரோடும் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு வாழும் தகுதி கொண்ட திறந்த மனம் படைத்த ஒரு நவீன மனிதனாகவே தன்னை உணர்பவர். அலுவலகத்தின் இட நெருக்கடி காரணமாக, அவர் அமர்ந்து வேலை செய்யும் அறையை இன்னொரு அலுவலருடன் பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அப்படி அவரது அறைக்குள் வரும் இன்னொரு நாற்காலிக்காரர், அகர்வால்,
எத்தனை முயன்றும் அகர்வாலுடன் கைலாசத்தால் இயல்பான நட்புறவை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. .அகர்வாலோ அவரை பலவிதங்களிலும் நெருங்கி, நட்பாக பழக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நெருங்க நெருங்க இவரது விலக்கம் அதிகரிக்கிறது.
இதை எண்ணி மனம் நொந்து, தன்னைப் பற்றிய ஒரு ஏமாற்றத்தில் உண்டாகும் குற்றவுணர்ச்சியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வரும் தன் நண்பர் ராமுவுடன் வெளியே (அகர்வாலுடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்த்த மகிழ்ச்சியுடன்) சாப்பிடச் செல்கிறார் கைலாசம். இவர்கள் இருவரிடையே நடைபெறும் நட்பு குறித்த உரையாடலுமே இந்தச் சிறுகதை.
கைலாசமும் அகர்வாலும் ஏன் நட்பு கொள்ள முடிவதில்லை என்பதை கைலாசமும் ராமுவும் பல்வேறு கோணங்களில் விவாதிப்பதை ஆதவன் தனக்கே உரித்தான கூர்மையான, ஆழமான, சமயங்களில், வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் நகைச்சுவையுடன் பதிவு செய்திருப்பதே இந்தக் கதையை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஒன்றாக ஆக்குகிறது. ராமுக்கு இவர்கள் இடையில் நட்பு கைகூடாததில் கைலாசத்துக்கு இருக்கும் வருத்தம், தேவையில்லாத ஒன்றாக, இருப்பதாகப் படுகிறது,. “பழக முடியலேன்னா, வெட்டி விட்டுற வேண்டியதுதானே,” என்பதே அவரது எளிமையான தீர்வு. ஆனால் கைலாசத்துக்கு அப்படியல்ல. “எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், யார் மனதையும் புண்படுத்தக் கூடாது, கருத்து பரிமாற்றம், செயது கொள்ளணும்னு” நம்புகிறவர் அவர். ஆனால், அதை ஒரு மூட நம்பிக்கை என்று நிரூபித்துவிடுகிறார் அகர்வால்.
இது இரு தனிமனிதர்கள் இடையேயான பிரச்னை மட்டுமல்ல, இருவேறு மொழிகள், கலாச்சாரங்களின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதிலும் பிரச்னை இருக்கிறதோ என்பதையும் அலசுகிறார் ஆதவன். தமிழரான கைலாசம், உத்தரபிரதேசவாலாவான அகர்வால் எதிர்பார்க்கும் ஒரு சராசரி “மதராஸி”யாக இருப்பதில்லை. சப்பாத்தி, சமோசா, சாப்பிடுவதிலோ இந்திப் படங்களை பார்ப்பதிலோ எந்தத் தயக்கமும் கைலாசத்துக்கு இல்லை என்பதில் அகர்வாலுக்கு இருக்கும் ஏமாற்றத்தில் மிக நுட்பமாக இந்தியாவின் வடக்கு- தெற்கு அரசியலையும் கொண்டு வந்து விடுகிறார் ஆதவன். கைலாசத்திடம் இல்லாத, வட இந்திய எதிர்ப்புணர்வுக்கு பதிலாக அகர்வால் மேற்கொள்ளும் இட்லி, தோசை, சாம்பார் விருப்பம், தமிழக அறிஞர்கள், அரசியல் ஆகியவற்றின் மீது அவர் இவருக்காக மேற்கொண்டு காட்டிக்கொள்ளும் ஆர்வம், இவையெல்லாம் கைலாசத்துக்கு ஏதோ தேசிய ஒருமைப்பாட்டுக்கான போட்டியில் நடக்கும் நாடகத்தில் பங்கு பெரும் உணர்வை ஏற்படுத்துகிறது.
அடுத்து பெண்கள், செக்ஸ் ஆகிய விஷயங்கள் குறித்து உரையாடல் திரும்புகிறது. இவற்றைப் பற்றி சகஜமாக இருவரும் பேசிக் கொள்ள முடிகிறதா என்று கேட்கிறார் ராமு. அதையும் முயற்சித்தாயிற்று, ஆனால் அதைப் பற்றி பேசினால், அவன் அதற்கு மட்டும்தான் லாயக்கானவன் என்று தான் நினைப்பதாக அவன் நினைப்பதில்தான் முடிகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார் கைலாசம். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்றதுண்டா என்றால், அந்தக் கூத்தும் நடந்துவிட்டது, அகர்வால், வீட்டு தோசை சாப்பிட வேண்டும் என்றதால், கைலாசத்தின் வீட்டுக்கு ஒருமுறை வந்திருக்கிறார். ஆனால், அங்கு, அவர் கைலாசத்தில் மனைவியின் சமையலைப் புகழ்வதும், அவரை மகிழ வைப்பதற்காக அபத்தமான ஜோக்குகளை அடிப்பதும் கைலாசத்தின் மனைவிக்கு பிடிக்காமல் போகிறது- அவர் கண்டிப்புடன் சொல்லிவிடுகிறார், அகர்வால் வீட்டுக்குத் தானும் வரமாட்டேன், கைலாசமும் போகக் கூடாது என்று. இதற்கு ராமுவின் பதில், பெண்கள் இந்த விஷயத்தில் எப்போதுமே நல்ல முன்னெச்சரிக்கையுடைவர்கள் என்பது.
ஆங்கிலத்தில்,Two good people not made for each other, என்று சொல்வார்கள். கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.
கதையின் இறுதியில் அலுவலகக் கேர்டேக்கரிடம் தம் அறையில் அகர்வாலின் இருக்கைக்கும் தன் இருக்கைக்கும் நடுவே ஒரு தடுப்பு போட்டுத் தரச்சொல்லி கைலாசம் கேட்க, உ.பி வாலாக்களோடு சேர்ந்திருக்கவே முடியாத நிலை குறித்த கேர்டேக்கரின் பிரசங்கத்தை மறுப்பேதும் சொல்லாமல், மௌனமாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார் கைலாசம்.
2 comments