வேலை இல்லா பட்டதாரி

ஜிஃப்ரி ஹாஸன்

வேலையில்லா  பட்டதாரியாக வாழ்வைத் தொடங்கி  நடத்திச் செல்வது என்று அப்துல் காதர் முடிவெடுத்தபோது அது இவ்வளவு கடினமானதாக இருக்கும் என அவன் எண்ணி இருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்தவர்கள் எல்லா ஊழல்களையும் புரிந்து தனது குடும்பத்தின் சொத்துகளைப் பெருக்குவதில் காட்டும் அக்கறையை வேலை இல்லாத பட்டதாரிகளின் தொழிற் பிரச்சினையில் எடுத்துக் கொள்வதாக இல்லை. அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகத்தான் அப்துல் காதரும் இருந்தான்.  வேலை இல்லா பட்டதாரியாக வாழ்வதில் நிரம்பி இருந்த கொடுமைகளின் கனதி அவனை உயிருடன் உளவியல் சித்ரவதை செய்வதாக இருந்தது.

  அப்துல் காதருக்கு தன்னை ஒரு வேலை இல்லா பட்டதாரியாக உணர்த்தும் மகத்தான பணியை முதன் முதலில் அவனது தந்தைதான் தொடக்கி வைத்தார். ஆரம்பத்தில் குறிப்பாலும் பின்னர்  நேரடியாகவும் அவனது தந்தை தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்து விட்டிருந்தார். அதை அவனது தந்தை தன் வாயாலேயே சொல்லுமளவுக்கு இப்படிப் பொறுப்பற்றவனாக நடந்து விட்டோமே என்று அப்துல் காதருக்கும் ஒரு சிறிய வருத்தம் இருக்கத்தான் செய்தது.

வேலை இல்லா பட்டதாரி என்ற முதல் கிண்டலும் எதிர்ப்பும் இப்படி தன் வீட்டுக்குள்ளிருந்தே வெடிக்கும் என்பதை அப்துல் காதர் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஓசிச் சாப்பாடு, ஓசி ஃபேன் படுக்கை, அவ்வப்போது கொழும்புக்கு ஓசிப் பயணம், தம்பி கெட்ட கேட்டுக்கு ஓசிப் பணத்தில் புத்தகக் கொள்வனவு என ஓசி வாழ்வு தறிகெட்டு ஓடத் தொடங்கியபோது தந்தைக்கும் வேறு வழி இல்லாமல் போய்விட்டது. அப்துல் காதருக்கு இந்த ஓசி வாழ்வின் இன்பங்கள் தனது அன்றாட வாழ்வின் துன்பங்கள் என்பதை பாமரத்தனமாக உணர்த்த வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்

அப்துல் காதர் பட்டதாரியாக வெளியேறிய மறுதினமே அவன் ஒரு அரசாங்க உத்தியோகத்தனாக இருப்பான் என்பதுதான் அவனது தந்தையின் கணிப்பாக இருந்தது. அது பொய்த்துப் போன போது அப்துல்காதர் மீது அவருக்கிருந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

அப்துல் காதருக்குள்ளும் ஒரு வகையான கலகக்காரன் இருந்து கொண்டுதான் இருக்கிறான். சூடு, சொரணையில் உச்சக்கட்டத்தில் இருப்பவன். தன்னை அவமதிப்பவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவனது தொடர்புகளைச் சாகும் வரை துண்டிக்கும் போர்க் குணம் உள்ள அப்துல் காதருக்கு இந்த அவமானம் வீட்டுக்குள்ளிருந்து வெடித்தது பெரிய சங்கடமாகப் போய்விட்டது.

வேலை கிடைக்கும்வரை அப்துல் காதர் தனது தந்தையின் பரம்பரைத் தொழிலுக்குத் திரும்பி விடுவோமா என்றும் யோசித்தான். செங்கல்வாடி, சேனைப் பயிர்ச் செய்கை இதுதான் அவனது பரம்பரைத் தொழில். தனது பரம்பரைத் தொழிலை அப்துல் காதர் செய்யாமல் விட்டதற்குக் காரணம் அவனது தாய் அவனை அப்படியான தொழில்களைச் செய்யாமல் தடுத்ததுதான். ஆனாலும் அப்துல் காதருக்கு சிறிய வயதிலிருந்தே இந்தத் தொழில்களில் பரிச்சயம் இருந்ததால் அவன் அதை சிரமமானதாக உணரவில்லை.

‘டேய் உன்னட அங்க படிச்சவனுகளெல்லாம் வேல எடுத்துட்டானுகளா..?’ அப்துல் காதரின் தந்தை அவ்வப்போது பொறுமை இழந்து எத்தனை தடவை இப்படிக் கேட்டிருப்பார் என்பதை அப்துல் காதருக்கு இப்போது சரியாக கணக்கிட்டுக் கூற முடியாதுள்ளது. அநேகமாக அவரும் அவனும் வீட்டில் சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இப்படித்தான் உரையாடல் தொடங்கும். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை என்பதை புள்ளி விபரங்களோடு தந்தைக்கு அப்துல் காதர் தெளிவுபடுத்துவான்.

ஊருக்குள்ளும் தெரிந்தவர்கள் காணும் போதுஎன்ன செய்றிங்க?’ எனக்கேட்டு தலையில் ஒரு பாறாங்கல்லைப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால் ஊருக்குள்ளும் தலை காட்டுவதை இயன்றளவு குறைக்கத் தொடங்கினான் அப்துல் காதர். ஆனால் வீட்டைச் சமாளிக்கும் விசயத்தில்தான் அப்துல் காதர் திணறிக்கொண்டிருந்தான்.  இதனால் தனது செலவுகளுக்கான பணத்தை இனித் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வதில்லை என ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு அப்துல் காதர் ஒரு முடிவு எடுத்து விட்டிருந்தான். அது அவனுக்குள்ளிருந்த அந்தக் கலகக்காரனின் திருவிளையாடல். அந்தக் கலகக்காரன் சூடு சொரணையில் உச்சக்கட்டதில் இருப்பவன். எப்பேர்ப்பட்ட கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

தனது செலவுகளுக்காக உம்மா இரகசியமாகத் தரும் பணத்தையும் பெற்றுக் கொள்வதில்லை என்ற முடிவும் அதன் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் சிறு  தொழில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது என அப்துல் காதர் முடிவெடுத்தான். அவனது ஊரிலுள்ள அப்துல் காதரின் நண்பன் ஒருவன், சிறிது காலம் அப்துல் காதருடன் ஒன்றாகப் படித்தவன். ஆசிரியர் சற்றும் எதிர்பாராத தருணமொன்றில் தனது புத்தகப் பையால் அவரின் மண்டையில் அடித்து விட்டு பாடசாலையை விட்டும் தப்பிச் சென்ற தனது பால்ய நண்பன் தற்போது சொந்தத் தோணி, வலை வைத்து ஆற்றில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதை அப்துல் காதர் அறிந்திருந்தான்இப்போது அப்துல் காதருக்கு தனது பால்ய நண்பனை விட்டால் வேறு யாரும் உதவுபவர் இருப்பதாகவும் தெரியவில்லை. இது மாதிரியான தொழில்களில் அப்துல் காதருக்கு பப்ளிக்காக ஈடுபடுவதற்கு அவனது பட்டதாரிகௌரவமும்சற்றுத் தடையாக இருந்தது.

எனினும் தனது பால்ய நண்பனுடன் இணைந்து இரவு நேர மீன் பிடியில் ஈடுபடுவது என்ற உறுதியுடன் இருந்தான். தனது பால்ய நண்பனைச் சந்தித்து அதற்கான அனுமதியையும் அப்துல் காதர் பெற்றுக் கொண்டான். அந்தகெப்பில் பால்ய நண்பன்பார்த்தியா மச்சான் படிச்சி என்னடா கிழிக்கிற.. என்றும் கர்விக் கொண்டான். தனது இதுவரை கால ஆதங்கத்தையும் இறக்கி வைத்து விட்டதான ஆசுவாசம் அவன் முகத்தில் அப்போது தென்பட்டுக் கொண்டிருந்தது. அப்துல் காதரை சந்தர்ப்பம் பார்த்து அடித்து விட்ட திருப்தி அவன் முகத்தில் படர்ந்ததையும் அப்துல் காதர் கவனிக்கத் தவறவில்லை

அப்துல் காதரின் ஊருடன் அண்டி ஓடிய  இலங்கையின் புகழ்பெற்ற ஆறான மாதுரு ஓய ஆற்றில் இரவு ஒன்பது மணியளவில் இறங்கி தோணியில் மீன் பிடிப்பதுதான் இப்போது அப்துல் காதரின் தொழில். இதற்காக இரண்டு நாட்கள் பால்ய நண்பன் அப்துல் காதருக்கு பயிற்சி வழங்கினான். பயிற்சி நெறி முடிவில் அப்துல் காதர் துடுப்பு வலிப்பது பால்ய நண்பன் வலை வைத்து மீன் பிடிப்பது என அப்துல் காதரின் வாழ்வுப் படகு நகரத் தொடங்கியது.

ஆனால் வீட்டில் இந்த தொழில் நடவடிக்கை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வாழைச்சேனையில் ரூம் எடுத்து எக்ஸாம் ஒன்றுக்கு அப்துல் காதர் படித்து வருவதாக வீட்டில் ஒரு நம்பிக்கை பொதுவாக நிலவி வந்தது. இந்த இரகசியத்தை பால்ய நண்பனும் தனது உயிருள்ளவரை காப்பாற்றுவதாக அப்துல் காதரின் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தான்.

இப்போது அப்துல் காதருக்கு சிறிய தொகை பணம் கிடைத்து வந்தது. அதைக்கொண்டு வீட்டிலும் சிறிய வேலைகள் செய்து வந்தான். ஆனால் அதற்கு எந்த மதிப்பும் கிடைக்கவில்லை. வாப்பாவின் முகம் இன்னும் விடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அப்துல் காதருக்கு ஒரு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். அது வரைக்கும் அப்துல் காதர் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் உழைத்தாலும் அவனுக்கு மதிப்புக் கிடைக்காது. இந்த மடத்தனமான போக்கினால் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் ஆத்திரத்தின் உச்சகட்டத்துக்குப் போய் திரும்பி வந்தான். அந்த கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

மீன் பிடி தொழிலில் கிடைக்கும் பணம் அப்துல்காதரின் கையில் புத்தகங்களாக மாறிக்கொண்டிருந்தது. அதற்காக அவனுக்கு மாதம் ஒருமுறை கொழும்புப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவனது கொழும்புப் பயணத்திற்காக தனது பால்ய நண்பனிடம் 2 நாட்களுக்கு முன்னமே விடுமுறையை அறிவிக்க வேண்டி இருந்ததுதான். இத்தகையை சந்தர்ப்பங்களில்தான் அப்துல்காதர் தற்கொலை பற்றிச் சிந்தித்ததுண்டு. மார்க்கம் மட்டும் அதை தடை செய்யாமல் இருந்திருந்தால் அப்துல் காதர் எப்போதோ ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருப்பான்.

அப்துல்காதர், தான் கொழும்புக்குச் செல்வது புத்தகம் வாங்குவதற்காகத்தான் என்பதை பால்ய நண்பனுக்கு ஒரு போதும் சொன்னதில்லை. சொல்லியிருந்தால் சில வேளை தற்கொலைக்கு பதிலாக கொலையே நடந்திருக்கலாம். அதாவது  பால்ய நண்பன் அப்துல்காதரை ஆத்திரம் தாங்க முடியாமல் அடித்தே கொன்றிருக்ககூடும். இந்த அச்சம்தான் அப்துல் காதரை அவனிடம் சொல்லவிடாமல் தடுத்தது.

சிலவேளைகளில் பால்ய நண்பன் தன்னை ஒரு முதலாளி போன்று பாவனை செய்ய நினைக்கிறபோதும் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனைக் கவனத்திற் கொண்டு அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. ஏனெனில் அந்தக் கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

000

ஆற்றின் முதுகு நிலவொளியில் பளபளத்தது. பால்ய நண்பன் நிலாக்காலங்களில் வீச்சுக்கு வருவதில்லை. ஆனால் இன்று வந்திருந்தான். இன்று அவன் வந்தது மீன் பிடிக்க அல்ல என்பதை அப்துல்காதர் நடு ஆற்றின் முதுகில் மிதந்த தோணியில் இருந்தபடி உணர்ந்தான். மீன் பிடிக்கும்போது ஆற்றிலும் வலையிலுமே பால்ய நண்பனின் கண்கள் நிலை குத்தி நிற்பதையும் மீன்கள் அகப்படாத சந்தர்ப்பங்களில் சவலால் ஆற்றின் முதுகில் ஓங்கி அடிப்பதுமே பால்ய நண்பனின் வழக்கமாக இருந்தது. இன்று எந்த மீனும் அகப்படாவிட்டாலும் எந்த சலனங்களுமின்றி ஆற்றின் அமைதியை ஒத்த ஒருவகை அமைதி பால்ய நண்பனில் ஊடுறுவி இருந்ததை அப்துல் காதர் நோட்டமிட்டான்.

ஆற்றின் முதுகில் பட்டுத் தெறித்த நிலவொளியில் அப்துல் காதரின் முகத்தை ஏறிட்ட படி பால்ய நண்பன் ஒரு முக்கிய விடயம் குறித்து அப்துல் காதருடன் பேச்சுத் தொடுத்தான்.

“மச்சான், என்ட தங்கச்சி வெளிநாட்டிலிருந்து வந்திருக்காள்றா..முதல் இருந்தத்த விடவும் இப்ப அவள் நல்ல அழகுடா மச்சான், உன்ன அவளுக்கு கலியாணம் பேசிப் பார்க்கச் சொல்லி உம்மா சொன்னாடா..”

அப்துல் காதருக்கு அந்தக் கதை இலைக்கறிச் சட்டியில் இடி விழுந்ததைப் போல இருந்தது. அப்துல் காதர் தனது வாழ்க்கைத் துணைவி படித்தவளாகவும் அவனது கனவுகளுக்கு இயைந்து கொடுப்பவளாகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு இலட்சியமாகவே கொண்டிருந்தான். இலக்கியம் பற்றி, புத்தகங்கள் பற்றி, தெரியாத ஒரு பாமரப் பெண்ணால் தனக்கு ஒரு போதும் நல்ல துணைவியாக இருக்க முடியாது என்பதை அப்துல் காதர் உறுதியாக நம்பி வந்தான். தனது தந்தையைப் போல் தன்னைப் புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால் அவனது இலக்கியமும் கனவுகளும் கருகிப் போய்விடும் என அப்துல் காதர் கடுமையாக அஞ்சினான். பால்ய நண்பனின் சகோதரியால் அவனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

பால்ய நண்பன் என்றுமில்லாதவாறு இந்த நிலாக் காலத்திலும் ஆற்றுக்கு வந்தது மீன்பிடிக்க அல்ல மாப்பிள்ளை பிடிக்கத்தான் என்பதை அப்துல் காதரால் உணர்ந்து கொள்ள முடியுமாக இருந்தது.

“அவளுக்கென்னடா குற, கலியாணத்த முடிச்சிட்டு வெளிநாட்டுக்குப் போய் ஊட்ல இரிக்கிற குற வேலயையும் முடிச்சிருவாள்..அதுக்குப்புறகு அவள் வெளிநாடு போக மாட்டாள்..தொழிலப்பத்தி நீ யோசிக்கத் தேவல மச்சான், வாப்பா உனக்கு ஒரு புதுத் தோணி வாங்கித் தாரெண்டும் சொல்லி இருக்காரு..”

பால்ய சினேகிதன் தனது தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைத்துவிட்டான் என்ற தீர்மானத்தை ஏற்கனவே எடுத்துவிட்டவனைப் போலவே பேசிக் கொண்டிருந்தான்.

இப்போது இருள் சூழ்ந்து கொண்டது. மேகங்கள் நிலவை மூடி இருக்க வேண்டும். தூரத்தில் மீன்கள் துள்ளும் ஓசை அப்துல் காதருக்கு துல்லியமாகக் கேட்டது. அப்துல் காதர் பால்ய சிநேகிதனை நேர் கொண்டு பாராமல் வேறு எங்கேயோ திரும்பிப் பார்த்தபடி யோசித்தான்.

அரசாங்க வேல கிடைக்கு மட்டும் இவனோட மீன் பிடிக்க வந்தா ஒரேயடியா நம்மல வீச்சு வலக்காரனாவே ஆக்கிருவான் போல இருக்கு, என்றுதான் அப்போது அப்துல் காதர் அநேகமாக யோசித்திருப்பான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனை இந்த இடத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்பதில் அப்துல் காதர் உறுதியாக இருந்தான்.

 நடு ஆற்றில் வைத்து பால்ய நண்பனின் கோரிக்கையை ஒரேயடியாக மறுத்து விடுவது அவ்வளவு உசிதமானதல்ல என அப்துல் காதரின் உள் மனம் அவனை எச்சரித்தது. இலேசான, தற்காலிகமான ஒரு பதிலை வழங்குவது என்ற தீர்மானத்துக்கு இப்போது அப்துல் காதர் வந்துவிட்டிருந்தான்.

இப்போது நிலவொளியில் மீண்டும் ஆற்றின் முதுகு பளபளக்கத் தொடங்கிற்று. நிலவை விட்டும் மேகங்கள் விலகி இருக்க வேண்டும். பால்ய சினேகிதனின் ஊடுறுவும் கண்களில் பதிலுக்கான ஏக்கம் தெரிந்ததை அந்த மங்கலான ஒளியிலும் அப்துல் காதர் நோட்டமிட்டான்.

 ‘பார்ப்பம்என்று மட்டும் சொல்லத்தான் அப்துல் காதர் அதிகம் விரும்பினான். இருந்தாலும் அதற்கு கொஞ்சம் சமனான ஆனால் நண்பனுக்கு சற்று நம்பிக்கையூட்டக்கூடியதான ஒரு பதில் அப்துல் காதரிடமிருந்து வெளிப்பட்டது.    

வீட்டயும் கதச்சிட்டுச் சொல்றன் மச்சான்..!’

இதற்கிடையில் அப்துல் காதர் தனது எதிர்கால துணை பற்றி அதிகம் கனவுகள் கண்டவன். தற்போது ஒரு வேலை இல்லா பட்டதாரியாக அவன் இருந்தாலும் வாழ்க்கையில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற குறிக்கோளில் அவன் உறுதியாகவே இருந்து வந்தான். எத்தகைய சந்தர்ப்பத்திலும் அத்தகைய கனவுகளை அவன் கலைத்துவிட விரும்பியதில்லை. இதெல்லாம் பால்ய சிநேகிதனுக்கு புரியாது என்பதையும் அப்துல் காதர் நன்கறிவான். அதனால் அது பற்றி அவனுடன் அப்துல் காதர் எதுவும் பேச விரும்பவில்லை.

ஆனால் தன்னை எவ்வாறு பால்ய சினேகிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அதற்கு மேலும் அறிந்து கொள்ள அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் இடங்கொடுக்கவில்லை. ஒரு சாமான்ய வீச்சுவலைக்காரன் போல்தான் அப்துல் காதர் பால்ய நண்பனின் கண்களுக்குத் தென்படுகிறானா? இப்போது அப்துல் காதர் எனும் வேலை இல்லா பட்டதாரியை அவனுக்குள்ளிருக்கும் கலக்காரன் கழுத்தை நெரித்துக் கொள்ளுமளவுக்கு ஆத்திரத்தின் உச்ச கட்டத்தில் இருந்தான். ஏனெனில் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன் அவன்.  

ஒரு வேலை இல்லா பட்டதாரியாக வாழ்வதில் அப்துல் காதரால் எதிர்கொள்ள நேரிட்ட மிகப்பெரிய ஒரு சோதனைக் கட்டமாக அதை அப்துல் காதர் கருதினான். நாளை இந்த வீச்சு வலைத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்ற உறுதியான தீர்மானத்துக்கு அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் வந்துவிட்டிருந்தான். எவனுக்கும் வளைந்து கொடுக்காத கலகக்காரன் அவன். அநேகமாக அப்துல் காதரும் பால்ய சிநேகிதனும் வீச்சுக்கு வந்த கடைசி இரவாக அன்றைய இரவு இருந்ததை பால்ய சினேகிதன் கடைசி மட்டும் அறியாமல்தான் இருந்தான்.

மறு நாள் தனது ஊரில் வளர்ந்து சடைத்துக் கிளை பரப்பி நின்ற ஆல மரத்தின் கீழ் தன் பால்ய நண்பனைச் சந்தித்த அப்துல் காதர் அவனது திருமணக் கோரிக்கையை முற்றாக நிராகரித்தான். தனது எதிர்கால வாழ்வு பற்றியும் வாழ்க்கைத் துணை பற்றிய கற்பனைகளையும் பால்ய நண்பனிடம் ஒரு நாகரீகத்துக்காக அப்துல் காதர் பகிர்ந்து கொண்டான். பால்ய நண்பனோ இதுவெல்லாம் நடக்கிற காரியமா என்பதைப் போல் அலட்சியமாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

000

திருமணப் பேச்சுவார்த்தையால் தன் பால்ய சிநேகிதனின் நட்பையும் அவன் புண்ணியத்தால் கிடைத்த வீச்சு வலைத் தொழிலையும் இழந்துவிட்ட அப்துல் காதரை திருமணம் என்ற பேய் விடாது தொடர்ந்தும் விரட்டிக் கொண்டே இருந்தது. வேலை இல்லா பட்டதாரியாக ஒரு மாதிரியாக தட்டுத்தடுமாறி நகர்ந்து கொண்டிருந்த அவனுக்கு வீட்டிலும் கலியாணப் பேச்சுகள் களை கட்டத் தொடங்கி இருந்தன. அவனது பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ வாழ்க்கைத் துணை பற்றிய அவனது கனவுகளை அறிந்து கொள்ளத் தெரியாமலிருந்தது. அது பற்றி அவன் கவலைப்படவுமில்லை. அப்படி எல்லாம் யோசிக்குமளவுக்கு அவர்கள் படித்தவர்களோ, புரிதலுள்ளவர்களோ இல்லை என்பதை அப்துல் காதர் நன்கறிவான்.  அப்படி திருமணமும் நடந்து விட்டால் பால்ய சிநேகிதனும் இனி ஆற்றுக்கு கூட்டிச் செல்லமாட்டானே என்ற படபடப்பு அப்துல் காதரை அலைக்கழித்தது. அவனது தந்தையும் அப்துல் காதரை திருமணம் முடித்துக் கொண்டு வீட்டைக் காலி செய்யும் யோசனையை அண்மைக்காலமாக தொடர்ச்சியாக முன்வைத்து வரத் தொடங்கி இருந்தார். அதனை வேலை இல்லா பட்டதாரியான அப்துல் காதர் தனது வாழ்வில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானமாகக் கருதினான்.

எனினும் இந்த சூழலிலிருந்து தப்பிச் செல்வதற்காக தாயுடன் மட்டும் இரகசிய ஒப்பந்தமொன்றைச்  செய்து கொண்டு வெளியூருக்குத் தப்பிச் செல்வது பற்றியும் அப்போது அப்துல் காதருக்கு ஒரு யோசனை வந்து தொலைத்தது.

இப்படியாக வேலை இல்லா பட்டதாரியான அப்துல் காதரின் வாழ்வு உள் வீட்டில் நாறிக் கொண்டிருந்தாலும் அவனது அயல் வீட்டுச் சாச்சியின் தயவால் அக்கம் பக்கத்தில் சூடு கிளப்பிக் கொண்டுதான் இருந்தது. வருவோர் போவோரிடமெல்லாம் அப்துல் காதரின் அருமை பெருமைகளை கொஞ்சம் மிகைப்படுத்தி அள்ளி வைப்பதுதான் அவரின் ஒரே பொழுது போக்காக இருந்தது. இப்படித் தூர இடம் சென்று படித்துப் பட்டம் பெற்று வந்தும் எதுவுமே படிக்காத பக்கத்து வீட்டுச் சாச்சியின் ஒரே பொழுது போக்குப் பொருளாக தான் ஆகிவிட்டோமே என்ற வெட்கம் அப்துல் காதரை மிக மோசமாக வாட்டத்தான் செய்தது. இருந்தாலும் அதை அப்துல் காதர் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. காரணம் வேலை இல்லா பட்டதாரி என்ற அவனது சமூக அடையாளத்தை மறைத்துக் கொண்டு தன்னையும் ஒரு படித்த மனிசனாக ஊரில் காட்டிக்கொள்ள அந்தப் புகழுரைகளை அனுமதிப்பதைத் தவிர வேறு வழிகளும் அவனுக்கிருக்கவில்லை.

மச்சி நம்மட அத்துக் காதன்ட படிப்பு இந்த ஊர்ல ஆரும் படிக்கலயாம் மச்சி.. முஸ்லிம் ஆக்கள்ளேயே மூணு பேருதான் இந்தப்படிப்பு படிச்சயாம். அதில ஒண்டு நம்மட அத்துக் காதனாம்

பேன் பார்த்துக் குத்திக் கொண்டே சாச்சி காதர் புராணம் பாடுவது வீட்டுக்குள் கவட்டுக்குள் கைவைத்துக் கொண்டு ஓசிப் பேன் காற்றில் ஒய்யாரமாக படுத்துக் கிடக்கும் அப்துல் காதரின் காதுகளிலும் விழுந்து கொண்டுதானிருந்தது.

மெய்தானா மச்சி அப்ப மத்த ரெண்டு பேரும் எங்கயாம்?’ பேன் பார்க்க வந்த அயல் வீட்டுப் பெண் சாச்சியின் புகழுரையை ஐயத்துடன் நம்புவது போல்தான் அப்துல் காதருக்குப் பட்டது. எதற்கும் அவர்கள் வெளியேறிச் செல்லும் வரைக்கும் தான் வெளியேறிவிடக்கூடாது என்ற உறுதியான முடிவை அப்துல் காதரும் அப்போது எடுத்துவிட்டிருந்தான்.

000

புறக்கணிப்பும் அவமானமும் அப்துல் காதரை கடுமையாக சிதைக்கத் தொடங்கின. திருமணத்தில்கூட அவன் அதுவரை கண்டு வந்த கனவுகளுக்கேற்ற ஒரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான். வேலை இல்லா பட்டதாரிக்கு கனவுகள் தேவையில்லை. இலட்சியங்கள் தேவையில்லை என சில நாட்களாக அப்துல் காதர் அரற்றத் தொடங்கி இருந்த ஒரு நாளில் யாருக்கும் தெரியாமல் அப்துல் காதருக்குள்ளிருந்த கலக்காரன் தற்கொலை செய்துகொண்டான். அந்தக் கலகக்காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

எல்லா வாயில்களும் தனக்கு மூடப்பட்டு விட்டிருப்பது போல் அப்துல் காதர் உணர்ந்தான். வேறு வழியின்றி மீண்டும் பால்ய சிநேகிதனுடன் வீச்சுக்குச் செல்வது என்ற முடிவை அப்துல்காதர் எடுத்து விட்டிருந்தான். இன்று மாலை அவனைச் சந்தித்து தனது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான். பால்ய சிநேகிதனும் வேறு ஒரு உதவியாளரை சேர்த்திருக்காதிருக்க வேண்டும் என அப்துல் காதரின் உள் மனம் இறைவனைப் பிரார்த்தித்தது. பால்ய நண்பனைச் சந்தித்து அப்துல் காதர் தனது விருப்பத்தைச் சொன்ன போது பால்ய நண்பனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 ‘வா மச்சான் எனக்குத் தெரியுண்டா நீ சொன்னதெல்லாம் நடக்காதெண்டு..ராவைக்கு நாம வீச்சுக்குப் போவம்..“

தனது தொழிலுக்கு உதவியாளன் கிடைத்து விட்ட சந்தோசத்தை விடவும் தனது தங்கைக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துவிட்ட மகிழ்ச்சிதான் பால்ய நண்பனின் முகத்தில் அப்போது படர்ந்து கொண்டிருந்ததை அப்துல் காதர் அவதானித்தான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக அவன் அதை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்பதை அப்துல் காதர் நன்றாகவே அறிந்திருந்தான்.   

 

One comment

  1. Great story# Shan

    15. jan. 2017 19.33 skrev “பதாகை” :

    > பதாகை posted: “ஜிஃப்ரி ஹாஸன் வேலையில்லா பட்டதாரியாக வாழ்வைத் தொடங்கி
    > நடத்திச் செல்வது என்று அப்துல் காதர் முடிவெடுத்தபோது அது இவ்வளவு
    > கடினமானதாக இருக்கும் என அவன் எண்ணி இருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்தவர்கள்
    > எல்லா ஊழல்களையும் புரிந்து தனது குடும்பத்தின் சொத்துகளைப் ப”
    >

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.