‘பிள்ளையாய் இருந்துவிட்டால், இல்லை ஒரு துன்பமடா,’ என்பது கண்ணதாசனின் மிக பிரபலமான ஒரு பாடல் வரி. இப்படி ஒரு கணமேனும் நினைக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சிக்கல்கள் மிகுந்த நடப்பு வாழ்வில், நிஷ்களங்கமான, சிந்தனையின் பளுவற்ற, நாளை என்ன நடக்குமோ என்ற பதற்றமற்ற குழந்தைப் பருவத்துக்கே திரும்பிச் செல்ல விரும்பாதவர்கள் யார்? நாம் அனைவருமே சமயங்களில் ஒன்றுமறியாத குழந்தைகள் போல நடிப்பதும், நம்மை நாமே ஒன்றுமறியாத குழந்தைகளாக நினைத்துக் கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. சில மனிதர்களிடத்தில் இது இன்னமும் ஆழமாக செயல்படும் விதம் காரணமாக காலப்போக்கில் ஆழ்மன பழக்கமாகவே மாறுவதையும் உளவியல் நிபுணர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இது மாதிரியான ஒரு இடத்தையும் சூழலையுமே ஆதவன் தன் ‘சின்ன ஜெயா’ என்ற சிறுகதையின் மூலம் கவனப்படுத்துகிறார்.
திருமண வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும், திருமணம் நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும், ஜெயா என்ற முதிர்கன்னியின் சிந்தனையோட்டங்களைச் சொல்வதே ஆதவனின், ‘சின்ன ஜெயா’. கிட்டத்தட்ட சம்பவங்களே இல்லாத ஒரு வித்தியாசமான சிறுகதை இது. அதிகாலையில், வயதான தன் தந்தை, கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்கச் செல்லும் சத்தம் கேட்டு விழித்துக் கொள்ளும் ஜெயாவின் அச்சங்கள், குழப்பங்கள், விரக்தி ஆகியவை வெளிப்படுவதே இந்தச் சிறுகதை. முதிர்கன்னி என்ற ஒரு தன்மையை முழுக்க முழுக்க உளவியல் ரீதியாகவே அணுகியிருக்கிறார் ஆதவன்.
விழித்துக் கொள்ளும் ஜெயாவின் மனதில் தன் நிலையைப் பற்றிய பல சிந்தனைகள் ஓடுகின்றன. தன் பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க அவ்வளவாக, முனைந்து முயற்சிக்காமல் இருப்பதை நினைத்துக் கொள்கிறாள். உடனிருந்த வரையில், இவர்களை படாத பாடு படுத்திவிட்டு, இவளுக்கு முன்னாலேயே காதல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றுவிட்ட தன் தம்பியை நினைத்துக் கொள்கிறாள். ஆனால், தன்னைச் சுற்றியுள்ளவர்கள், அனுதாபம் கொள்வது அவளது பெற்றோர் குறித்தே தவிர, தனக்காக இல்லை என்பதையும் நினைத்துக் கொள்கிறாள். ‘அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், வயசாகிவிட்டது. ஓடியாடி மாப்பிள்ளை பார்க்க முடியாது… ஒரே பிள்ளையும், இப்படிப் பண்ணிட்டான்’.
தன் நிலையில் எது செய்தாலும், அது விமர்சனத்துக்கே உள் ளாவதையும் நினைத்த்துக் கொள்கிறாள்.’சற்று யோசனையாக அமர்ந்து இருந்தால் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை,’ அதனால் இப்படி,. அதற்கு பயந்து ஒரு செயற்கையான சுறுசுறுப்பைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். சற்று சிடுசிடுத்தாலோ, கல்யாணம் ஆகாத ஏக்கத்தை மீண்டும் இப்படிக் காட்டுகிறாள் என்ற குத்தல். ஆனால் வயதான ஒரு காரணத்தாலேயே அவளின் பெற்றோர்கள், இயல்பாக சுதந்திரமாக இருக்கலாம். அவர்களின் வயது காரணமாக அது மன்னிக்கப்படும். தவிர அவர்களின் அறுவையையும் இவள் தாங்கிக் கொள்ள வேண்டும்.
அவள் தன்னிச்சையாக இருக்க முடிவது அலுவலகத்தில்தான். ஆனால் இன்று அங்கும் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் இவளது தோழிகள்- இவளை புரிந்துகொண்ட இவளது தியாகத்தை மதிக்கும் தோழிகள்- இருவரும், இன்னும் ஏழு நாட்கள் லீவு. அதுவரை, தங்கள் பிரிவில் இருக்கும் கங்காதரனை , நாற்பது வயதாகியும் இன்னும் திருமணமாகாத கங்காதரனை சமாளிக்க வேண்டும். ஆண் பார்வை, கங்காதரனின் பார்வை, அவள் மனதில் கிலி ஏற்படுத்துகிறது. ஆண்களைப் பார்த்தாலே அவளுக்கு பயமாயிருக்கிறது. இவ்வளவு ஆண்டுகள் தன் ருசியுடன், தன் சிந்தனைகளுடன் வாழ்ந்து பழகிவிட்ட அவள், ஒரு ஆணுக்காக அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பே கசக்கிறது.
இந்த நினைவுகளால், உறக்கம் வராத ஜெயா ஒரு புத்தகத்தை எடுக்கிறாள், படிப்பதற்காக. அதிலிருந்து ஒரு புகைப்படம் விழுகிறது. அவளும் அவள் தம்பி ரமணனும் சிறு வயதில் எடுத்துக் கொண்ட படம். தம்பியை நினைத்துக் கொள்கிறாள். தன் பெற்றோரைப் போல் இல்லாத தன் தம்பியே பரவாயில்லை என்று தோன்றுகிறது அவளுக்கு. அவளைவிடச் சிறுவன் என்றாலும், தன் சுயேட்சைத் தன்மையாலும், சாகசத்தாலும், துறுதுறுப்பாலும், இவளை மிஞ்சியதன் மூலம் இவளைச் சின்னவளாக உணரச் செய்தவன். இதை நினைக்கும்போதே சட்டென்று, தன் தோழிகளில்லாத இந்த வாரத்தை பயமின்றி, குழப்பங்களின்றி கழிக்கவும் உபாயத்தை இந்தப் போட்டோ கொடுப்பதைக் காண்கிறாள். ஆம், இந்தப் போட்டோவில் இருப்பதைப் போல அவள் சிறுமியாக இருக்கப்போகிறாள். தன் தோழிகள் தனக்குத் தந்த பாதுகாப்பு உணர்வை இந்த போட்டோ தரும் என்ற உணர்வுடன், ஞாபகமாக, அலுவலகம் கிளம்பும்போது அதையும், எடுத்து தன் கைப்பைக்குள் வைத்துக் கொள்கிறாள் ஜெயா.
ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். தன் தோழிகள் திரும்பி வரும்வரை இந்தப் புகைப்படம், தன்னை தன் அச்சங்களிலிருந்தும் அலைபாய்தல்களிலிருந்தும் காப்பாற்றும் என்று தன்னைத்தானே நம்ப வைத்துக் கொண்டு அச்சங்களை உதறி, அலுவலகத்துக்குக் கிளம்புகிறாள் “சின்ன ஜெயா”.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்பண்புகள், படித்த, பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களுக்கும் சில குறிப்பிட்ட சூழல்களில் அரணாகின்றன என்பது நவீன காலத்துக்குரிய நகைமுரண். இவற்றுக்கான தேவையை இன்னமும் பெண் உணர்கிறாள் என்பது அவளது வேதனையாக இருக்கலாம், ஆனால் அந்த வேதனை அவள் வாழும் சமூகத்தின் சிறுமையைச் சோதித்துப் பார்ப்பதாக இருக்கிறது. அவளுக்கு கல்வித்துறையிலும் பணியிட வாய்ப்புகளிலும் அளிக்கப்படும் சம உரிமைகள் அவள் மூலமாக,பொருளாதார பயன்களைப் பெருக்கிக் கொள்ளத்தானா என்றுகூடத் தோன்றுகிறது. ஒரு பெண்ணிடம் பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அத்தனை சுதந்திரங்களும் இருப்பதாகத் தோன்றினாலும்கூட அவள் என்ன செய்கிறாள், என்னவாக இருக்கிறாள் என்பதை அவள் வாழும் சமூகம் எவ்வளவு கறாராக வரையறை செய்கிறது என்பதை ஆதவன் மிக மென்மையாகவும், புரிந்துணர்வுடனும் ‘சின்ன ஜெயா’வில் பதிவு செய்திருக்கிறார். பொருளாதார சுதந்திரமும் பணி சார்ந்த அதிகாரமும் மட்டும் ஒரு பெண்ணுக்கு முழு விடுதலை அளிப்பதில்லை, யாரையும் சார்ந்திராத அவளது தனியிருப்புக்கான அங்கீகாரமும் தேவைப்படுகிறது என்பதுதான் ‘சின்ன ஜெயா’ க்களின் சோகம்.
2 comments