முழிப்பு தட்டியவுடன் தலையணையில் இருந்த கோழை குமட்ட, புரண்டு திரும்பும்போது தோள் வலித்தது, கையில் வரி வரியாக பாயின் அச்சு. அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், மணி பார்த்தான், ஏழரை. பாயைச் சுருட்டும்போது முனகச் செய்த முதுகுப் பிடிப்பு சரியாக இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களாகும்.
சமையலறைக்குள் சென்றவனிடம் பல் விளக்கும்படி சைகை செய்தார் அம்மா. வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்தபடி நாவில் எஞ்சியிருந்த க்ளோஸ்ஸப் சுவையுடன் டிக்காஷனின் கசப்பு கலப்பதை அப்போதே கூச ஆரம்பித்திருந்த கோடை வெய்யிலில் ருசித்துக் கொண்டிருக்கும்போது மெல்லிய குரலெழுப்பியபடி அருகில் வந்து உரசி நின்றது அலமேலு. கொஞ்சம் காப்பியைச் சுவற்றில் ஊற்ற, அதைக் குடித்துவிட்டு மீசை இழைகளைச் சுத்தம் செய்தபின் வெண்ணிற உடலை வளைத்து சிறிய பிங்க் நிற நாவால் உடலெங்கும் சுத்தம் செய்துவிட்டு நீட்டிப் படுத்து ஒற்றைக் கண்ணால் பார்த்தது. வீட்டில் காலை நேர ரேடியோச் சத்தம், பேச்சுச் சத்தம் எதுவும் இல்லை. வேலைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த அம்மா பாத்திரம் தேய்ப்பதையும் சாப்பாட்டுப் பொருட்களை எடுத்து வைப்பதையும் வழக்கத்தைவிட மெதுவாக, அதிக ஒலி எழுப்பாமல் செய்து கொண்டிருந்தாள். இவன் அன்றைய தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
எட்டு மணி அளவில் அம்மா கிளம்பும்போது, ‘சாப்பாடு எடுத்து வெச்சுருக்கேன், அப்பாட்ட சொல்லு,’ என்று மெல்லிய குரலில் கூறிவிட்டுச் சென்றாள். இவன் குளித்து முடித்தபோது எட்டரை ஆகியிருந்தது. அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், சாப்பிடத் தோன்றவில்லை. பெரியமணியக்காரத் தெருவிலிருந்து பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மாவட்ட நூலகத்திற்கு நடந்து செல்ல பதினைந்து நிமிடங்களாவது ஆகும், வெய்யிலை சமாளித்து விடலாம்.
வருகை பதிவேட்டில் முன்னரே பத்து பதினைந்து பேர் கையொப்பங்கள். நேற்று எடுத்து வந்திருந்த புத்தகங்களை திருப்பியாயிற்று. புத்தக அறையில் இந்த நேரத்தில் யாரும் இல்லை, பதினொரு மணிக்கு மேல்தான் வர ஆரம்பிப்பார்கள். எந்தப் புத்தகம் எந்த ஷெல்பின் எந்த வரிசையில் இருக்கும் என இந்த ரெண்டு வருடங்களில் கிட்டத்தட்ட மனப்பாடமாகிப் போன அறையில் இந்த முறை எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களை தேட அதிக நேரமாகவில்லை. அனைத்து அடுக்குக்களையும் ஒரு சுற்று சுற்றி வந்ததில், நேற்று புத்தகம் எடுத்துச் சென்ற பின் பிற உறுப்பினர்களால் கொண்டு செல்லப்பட்ட நூல்கள் எவையென்று காண முடிந்தது.
பத்திரிக்கைகள் படிக்கும் இடம் நிறைந்திருந்தது. எந்த இதழும், தினசரியும் மொத்தமாக படிக்கக் கிடைக்காது, கையில் அகப்படும் தாள்களை வாசிக்க வேண்டியதுதான். படித்துக் கொண்டிருந்த ஒருவர் எழ அவரிடத்தில் அமர்ந்து அவர் விட்டுச் சென்ற ஞானபூமியின் சில தாள்களை படித்தான். அடுத்து அமர்ந்திருந்த இளைஞர் வேலைவாய்ப்பு தாள்களில் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பின் இவனும் அவற்றை புரட்டியதில் மருத்துவர், பொறியாளர் வேலைகளைவிட மற்ற, கேள்விப்படாத துறைகளில் இருந்து அழைப்புக்கள் அதிகமாக தென்பட்டன. வீட்டிற்கு கிளம்பும்போது மணி பன்னிரெண்டு, அப்பா இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்.
அப்பா இன்னும் எழுந்திருக்கவில்லை. சாப்பிடப் பிடிக்காமல், எடுத்து வந்திருந்த புத்தகங்களை வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ‘எங்கடா போய்ட்ட நேத்து விளையாடலாம்னு சொன்னியே, வந்து பாத்தேன். அப்பா தூங்கிட்டிருந்தாரு, ஒடம்பு சரில்லயா?’ என்று கேட்டுக்கொண்டு முரளி வந்தான்.
‘ஆமாண்டா, மருந்து வாங்கத்தான் போயிருந்தேன்’
‘இப்ப வரியா, கோபால், மணிலாம் பின்னாடிதான் இருக்காங்க’
உள்ளே திரும்பிப் பார்த்தவன் முரளியுடன் சென்றான். இவன் போர்ஷனுக்கு பின்னால் உள்ள காலி மனை கிரிக்கெட் மைதானமாக செயல்படும். அங்கிருந்த தென்னை, பஞ்சு மரங்களின் நிழல் கோடையின் உக்கிரத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் பாதுகாப்பு தந்தது. ஒரு மணி வாக்கில் சாப்பிடுவதற்காக அனைவரும் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பா எழுந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘சாப்பாடு வெச்சுருக்குன்னு அம்மா சொன்னா’ என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகம் படிக்கத் துவங்கினான். அப்பா சாப்பிட்டவுடன் மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.
மெல்ல எழுந்து ரேடியோவை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று எலுமிச்சை மரத்தின் அடியில் அமர்ந்தான். ‘ஆப் கி ப்ஹர்மாயிஷ்’ஷில், ‘காதல் பைத்தியக்காரத்தனமானது, போதையூட்டுவது’ என்று கிஷோர் குமார் குரலில் ராஜேஷ் கன்னா உருகிக்கொண்டிருக்கும்போது- நிஜத்தில் நேரில் பார்த்தே இராத பியானோவை, நடிகருக்கு பதிலாக இவன் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க – ‘என்னடா இந்த வெய்யில்ல வெளில இருக்க’ என்று குரல் கேட்டது. சுந்தரி அக்கா வந்து விட்டார்.
‘இல்லக்கா உள்ள புழுக்கமா இருக்கு அதான்’
‘எப்போ ஸ்கூல் தொரக்கறாங்க’
‘வர மண்டேக்கா’
அடுத்த பாடலில் ‘நான் எழுதிய கடிதம் ஆயிரக்கணக்கான வண்ணங்கள் கொண்ட அழகிய காட்சியாக’ மாறிக்கொண்டிருக்கும்போதே அந்த வகுப்பறைக் காட்சி இடைவெட்டி, அனைத்தையும் நிறமிழக்கச் செய்தது. எல்லா வருடமும் அது கண்டிப்பாக நிகழும் என்று சொல்வதற்கில்லை, போன வருடம்கூட அதற்கு தேவையேற்படவில்லைதான். ஆனால் இழந்த வண்ணங்களை மீட்க முடியவில்லை. ‘நீ அழை, உனக்காக காத்திருக்கிறேன்’ என்று ஹேமந்த் குமார் அதற்கடுத்த பாடலை முடித்துக் கொள்ளும்போதுதான் ஒலிபரப்பில் மீண்டும் கவனம் செலுத்த முடிந்தது. இதை இனி மீண்டும் எப்போது ஒலிபரப்பி எப்போது பாடியபடியே மாடியில் உலவ என்று கவலைப்பட முடியாமல் இந்த புதுப் பிரச்சனை பயமுறுத்தியது.
நான்கு மணி அளவில் அப்பா எழுந்து நாளிதழ் படித்து, பின் மீண்டும் தூங்கி விட்டார். வேலை முடிந்து வந்த அம்மாவின் முகத்தில் அவள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதின் ஆயாசம். சமையலறையிலிருந்து சைகை செய்து இவனை அழைத்தவள், ‘எழுந்தாளா, எப்ப எழுந்தா?’ என்று கேட்டாள். ‘ஒண்ணாயிருக்கும், அப்பறம் நாலு மணிக்கு எழுந்தா அப்பறம் திரும்பி தூங்கியாச்சு’. ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியவள் இரவுணவை தயார் செய்து விட்டு அப்பாவை எழுப்பினாள். பத்து முறைக்கு மேல் கூப்பிட்ட பின் எழுந்தவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டார். எட்டு மணிக்கெல்லாம் வீட்டில் விளக்கணைத்தாகி விட்டது. பின்புறம் சென்று காலி மனையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், கொசுக்கடி அதிகமாகவும் உள்ளே வந்தான். அம்மாவும் படுத்திருந்தாலும் தூங்கி விட்டாளா என்று தெரியவில்லை. பாயை விரித்து வைத்தவன், சுவற்றில் சாய்ந்தபடி இருளை நோக்கிக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள் காலையில் ‘ஒடம்பு செரியில்லையா’ என்று கேட்டபடி அப்பாவை எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் அம்மா. இந்த நேரங்களில் அது அத்தனை எளிதல்ல. பத்து நிமிடத்திற்கு மேல் மன்றாடியப் பின் புரண்டு படுத்த அப்பா, ‘என்ன வேணும், மனுஷன் தூங்கக்கூட கூடாதா’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கடித்துப் துப்பினார். ‘அதுல்லமா, ஒடம்பு சரியில்லையானுதான் கேட்டேன்’ என்று சமாதானமான குரலில் சொல்லிவிட்டு அம்மா, ‘ஆபிஸுக்கு லீவ் லெட்டர் அனுப்பணுமா’ என்று மீண்டும் மெதுவாக கேட்டதும் ‘மனுஷன நிம்மதியா இருக்க வுடாத, எப்பப்பாரு வேல வேல, ஒடம்புக்கு முடியலனா என்ன பண்ண முடியும்’ என்று கத்திவிட்டு மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டார்.
பின் அம்மா எவ்வளவு சொல்லியும் எதுவும் பேசவில்லை, கண்ணைக்கூட திறக்கவில்லை. அம்மா அழுகையை அடக்கிக் கொள்வதைப் பார்த்தான். காலை உணவை சாப்பிடாமல் ஒன்பது மணிக்கெல்லாம் நூலகம் சென்றவன் மதியம் வரை அங்கேயே இருந்தான். இரவுணவை சாப்பிட மட்டும் எழுப்பியதைத் தவிர அன்று மாலை அம்மா எதுவும் பேசவில்லை. மீண்டும் எட்டு மணிக்கு விளக்கணைப்பு, மீண்டும் இருளின் அமைதியினுள் மூழ்கியபடி இவன். அன்று அத்தனை தூரம் நடந்தும் தூக்கம் எளிதில் வரவில்லை. அம்மாவும் அடிக்கடி புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள், வெள்ளி. நூலகத்திற்கு விடுதலை. இருந்தும் ஒன்பது மணிக்கே கிளம்பினான். ‘என்னடா நேத்தும் ஆள காணும், அப்பாக்கு இன்னும் முடியலையா?’ என்று கேட்ட முரளிக்கு ‘ஆமாம்டா, இன்னும் நாலஞ்சு நாளாகும் போல’ என்றான்.
‘இப்போ எங்க போற?’,
‘சந்துரு வீட்டுக்குடா,’
‘சண்டேதானே ஊர்லேந்து வர்றதா சொன்னான்?’
‘இல்லயே… சும்மா போய் பாக்கறேன்’.
‘வந்துட்டான்னா வர்றப்ப அவனயும் கூட்டிட்டு வா, ஒங்கப்பாக்கு இன்னும் முடியலல?’
‘வைரல் பீவரா இருக்கலாம்னு டாக்டர் சொல்றார்’
பள்ளி முகப்பில் இருந்த வாட்ச்மேனிடம் டை வாங்கவேண்டும் என்று சொல்லி உள்ளே நுழைந்தான். மிகக் குறைவான ஆள் நடமாட்டத்துடன் பள்ளி இன்னும் பிரமாண்டமாக, தன்னுள் நிறைந்திருக்கும் மௌனத்தோடு புதிதாக இருக்கிறது. இலக்கில்லாத சுற்றுதல். பள்ளியில் வளர்க்கப்படும், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் ‘லவ் பேர்ட்ஸ்களின்’ கீச்சுக்கள், பல வண்ணங்கள். தலைமையாசிரியர் அலுவலக அறையருகே சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த, பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த, மாணவர்களின் பட்டியல் மதிப்பெண்களுடன். இரண்டு வருடங்களில் இதில் இடம் பெற முதல் வாய்ப்பு வரும். கேள்விப்பட்டிருந்த கிசுகிசுக்கள் தந்த குறுகுறுப்பில் தலைமையாசிரியர் அறை உள்ள தளத்திற்கு செல்லும்போது யாரோ பேசியபடி இறங்கும் ஒலி கேட்டதால் அவற்றை உறுதிப்படுத்த முடியாமல் திரும்பி இறங்க வேண்டியிருந்தது.
இத்தனை வருடங்கள் அமர்ந்திருந்த வகுப்பறைகளில் ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேரம் கழித்தான். இரண்டு மாதமாக யாரும் புழங்காமல் இருந்ததால் அறைகளில் கார நெடி, இறுதி வகுப்பு நாளன்று குறிக்கப்பட்ட பட்ஸ்/ ப்ளாசம்ஸ் இன்னும் அழிக்கப்படாமல். பரீட்சைக்கு முன் சுவர்களில் இருந்து சார்ட்கள் அகற்றப்படும்போது கீழே உதிர்ந்த பசை திரிகளில் இன்னும் கோந்தின் கிறுகிறுப்பான வாசம். பல ஆசிரியர்கள், சம்பவங்கள், ஆண்டு விழா பரிசுகள் என ஆற்றுப்படுத்தும் அதே நேரத்தில் பள்ளியாண்டின் முதல் நாளில் உள்ளூர குறுகி நின்ற சில தருணங்களை நினைவூட்டும் அறைகள். செவன்-எப்பில் இந்த ஒரு வருடமாக பகற்கனவுகளில் மட்டும் அமர்ந்திருந்த பெஞ்சில் உட்காரும்போது ஏதோ சாதித்த அற்ப திருப்தி. அங்கேயே கண்ணயர்ந்து படுத்து எழும்போது கழுத்தில் வலி. வரும் வருட வகுப்பறைக்குச் சென்றான். பொதுவாக எப்போதும் நண்பர்களோடு அமரும் இறுதி பெஞ்சிற்கு முந்தைய டெஸ்கில் யாரோ எப்போதோ செதுக்கிய பெயர்.
வீட்டில் நுழையும்போது ‘ரெண்டு மூணு நாளா வெளிலயே சுத்திட்டிருக்கியே ஸ்கூல் தொறக்கற நேரத்துல படுத்துக்கப் போற’ என்று கேட்டார் சுந்தரி அக்கா.
‘சும்மதான்க்கா’
‘சாப்டியா, உங்கம்மா கெளம்பும்போது சொன்னங்க, ரெண்ட் நாளா காத்தால வெச்சுட்டு போன சாப்பாடு அப்டியே இருந்துதாமே. இன்னிக்கு இங்க சாப்டு, உருளக்கெழங்கு காரக்கொழம்பு பண்ணிருக்கேன்’
‘இலக்கா வீட்லயே சாப்டறேன்’ என்றவனை வற்புறுத்தி தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். தலைகுனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், ‘எப்பம் போல படிக்கணும்டா, கவலைப்படாத, எல்லா வீட்லயும் நடக்கறதுதான்’ என்று அக்கா சொன்னார். சோற்றை அளைந்தபடி இருப்பதை பார்த்து ‘நான் வாசல்ல ருக்கேன்’ என்று வெளியே சென்றார். சாப்பிட்டுப்பின் வெளியே வர, ‘ஓன் பிரெண்ட்ஸ் பின்னாலதான் இருக்காங்க’ என்றார். ‘நா இங்க கொஞ்ச நேரம் படுத்துக்கறேன் கா’ என்று சொல்லி அங்கேயே தூங்கி எழும்போது மணி ஐந்துக்கு மேல் ஆகியிருந்தது.
அம்மா அன்று மாலை விடாப்பிடியாக அப்பாவை எழுப்பி, உடம்புக்கு என்ன, வேலைக்கு மீண்டும் எப்போது போகப் போகிறார் என்று கேட்டார். கடுகடுப்பாக அப்பா சொல்லும் பதில்களை முன்வைத்து மேலும் கேள்விகள் கேட்டு ஒரு கட்டத்தில் அம்மா அழ ஆரம்பித்தார். இனி எப்படியும் நாளைக்குள் எல்லாம் முடிந்து விடும்.
அடுத்த நாள் சண்டை இன்னும் தீவிரம் அடைந்தது. தனக்கு மரியாதை தரவில்லை, அப்படிப்பட்ட இடத்தில் வேலை பார்க்கப் போவதில்லை என்ற எப்போதும் சொல்லும் காரணத்தை அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா செய்திருந்த டிபனை தட்டோடு வீசினார். அறையில் தாளித்த கடுகின் மணம், தேங்காய் பிசிறல்கள். ‘நா வேணா போய் பேசறேன், திருப்பி சேத்துப்பாங்க’ என்று சொன்ன அம்மாவை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அம்மா சுவற்றோரம் ஒண்டி அமர, டேப் ரெக்கார்டரின் வயரைப் பிடுங்கி கையில் சுற்றிக்கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கி நீட்டியபடி அப்பா மிரட்டுவதை சுந்தரி அக்கா எட்டிப் பார்த்து விட்டு போனார். ஒரு மணி வாக்கில் சண்டையின் அந்த அலை ஓய்ந்தபின் நாளிதழை அப்பா படிக்க ஆரம்பிக்க, இவனிடம் வந்த அம்மா ‘ராமசாமி ஸார கூட்டிட்டு வா’ என்றார்.
சின்ன மணியக்காரத் தெருவில் இருந்த மாவட்ட கல்வி அலுவலகம், ஒரு காலத்தில் பங்களாவாக இருந்திருக்கக்கூடும். கூடப்படிப்பவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாது. இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருக்கும்போது உள்ளே செல்லாமல், அதிகாரிகள் உபயோகத்திற்கான வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வழியாகச் சென்று அவர் அறை ஜன்னலின் அருகே நிற்பதுதான் வழக்கம். எதிரே ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க ‘மாவட்ட கல்வி அலுவலர்’ ராமசாமி, கோப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தார். உருண்டையான உடலுக்கு பொருத்தமான வட்ட முகத்தில், இரண்டுடனும் ஒத்துப்போகாத தீவிரத்தன்மை, கொஞ்சம் எல்லை மீறினாலும் விழுந்து பிடுங்கி விடுவார் என்பது போல். அம்மாவுடன் வேலை பார்க்கும் அவரைவிட பதினைந்து இருவது வயது மூத்த தோழி எல்.எல்லின் கணவர். பெரியவர்கள் சொன்னால் கணவன் கேட்பான் என்ற நம்பிக்கை இன்னும் அம்மாவிற்கு உள்ளது.
பின்னந்தலை வியர்வையில் நனைந்திருக்க, உதட்டில் விழுந்த வியர்வைத் துளியை நா வருடியது. உள்ளே இருந்தவர் சென்றபின் அடுத்து வந்தவர் இவனை கவனித்து, ராமசாமியிடம் சொல்ல, திரும்பிப் பார்த்து உள்ளே வருமாறு சைகை காட்டினார். உள்ளே சென்று அவர் முன்னே பேசாமல் நின்று ‘என்னடா’ என்று அவர் கேட்ட பின்பும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்பா திரும்ப வேலக்கு போலயா’ என்று அவர் தலை தூக்காமல் கேட்டபோது அவர் எதிரே அமர்ந்திருந்தவர் திரும்பிப் பார்த்தார். ராமசாமி சொன்னது அறைக்கு வெளியே நின்றிருப்பவர்களுக்கு கேட்டிருக்கக்கூடும். உடலில் வியர்வைச் சுரப்பு இன்னும் அதிகரித்து, அக்குளில் ஈரம் அதிகமாகியபடியே இருந்தது. காதின் பின்புறத்தில் உஷ்ணம். ‘நா வரேன்னு சொல்லு’ என்றார். வெளியே வரும்போது அங்கு நின்றிருந்தவர்களின் பார்வை கூசச்செய்தது.
ஆள் நடமாட்டமில்லாத தெரு வெயிலையும் மீறி கொஞ்சம் அமைதியளித்தது. தொடை இடுக்குகளில் வியர்வை வழிந்து கால்கள் உரசும்போது உணரும் ஈரப் பிசுபிசுப்பு அசூயையாக இருந்ததால் கால்களைச் சற்று அகட்டி நடக்க வேண்டியிருந்தது. வீட்டில் கேள்விகள், மன்றாடல், கோபம் என அதே சுழற்சியில் சண்டை. சொன்னபடி கொஞ்ச நேரம் கழித்து ராமசாமி வந்தார். அப்பா முகம் கொடுத்துப் பேசாதது வழக்கம்தான் என்பதால் நாற்காலியில் அமர்ந்தபடி எப்போதும் போல் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அப்பா ‘நீங்க இதுல்லாம் இன்டெர்பியர் ஆகாதீங்க’ என்று சொல்லிவிட்டார். ராமசாமியின் உடலசைவுகளில் இன்னும் இறுக்கம். ‘இனி என்ன வரச் சொல்லாதம்மா’ என்று அப்பா பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். ‘நீ நல்லா படிக்கறத விட்றாத’ என்று போகும்போது, சொன்னபோது கண்கள் தன்னிச்சையாக விரிந்து இமைத்தன. வீட்டினுள் கவிந்திருந்த அமைதியின் பாரத்தை தாங்க முடியவில்லை. பின்புறம் சென்று அமர்ந்த கொஞ்ச நேரத்தில் வியர்வையோடு கண்ணீரும் சேர்ந்து கொண்டது. சத்தமிடாமல் அழுவது பழக்கம்தான். உள்ளே இறுதிகட்டச் சண்டை நடந்து கொண்டிருக்கும்.
நான்கு மணி அளவில் இவனருகே வந்த அம்மா ‘வந்து காப்பி குடிடா, மத்தியானமே சாப்டல’ என்றார். முகம் காலையில் இருந்ததை விட திடமாக இருந்தது. உள்ளே அப்பாவும் காபி குடித்துக் கொண்டிருந்தார். மாலை உண்ணும்போது அம்மாவும் அப்பாவும் சில வார்த்தைகள் பரிமாறிக்கொண்டார்கள். வேலைக்குச் செல்வதைப் பற்றிய பேச்சு எழவில்லை. அன்றிரவு வீட்டில் டிவியும், ரேடியோவும் ஒலித்தது. அடுத்த நாள் காலை, அன்று சமைக்க வேண்டிய உணவைப் பற்றி பேசிக் கொண்டார்கள். வீடு மெல்ல இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஹிந்தி தொடரில் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் என அம்மாவிற்கு மொழிபெயர்த்தார் அப்பா. ‘நாளக்கு ரெடியா’ என அப்பா கேட்க, தலையாட்டினான். ‘புக்ஸ்க்கு கவர் போட்டு கொடுத்துடுங்களேன், நீங்கதான் க்ளீனா பண்ணுவீங்க’ என்று அம்மா சொன்னதில் தெரிந்த செயற்கையான உற்சாகம் இவனுக்கு புதிதல்ல.
திங்கள் காலை வழக்கம் போல் எழுந்த அப்பா காய்கறி நறுக்குவது, இவனுக்கு மதிய உணவை எடுத்து வைப்பது போன்ற சின்ன உதவிகளை அம்மாவிற்குச் செய்தார். ‘சாப்டாம இருந்துராதீங்க’ என்று அப்பாவிடம் சொல்லி விட்டு அம்மா கிளம்பியபின் தினசரியை எடுத்து படிக்க ஆரம்பித்தார். ஒரு வரி விடாமல் படித்து முடிக்க பதினொன்று ஆகிவிடும். இன்றிலிருந்து பள்ளிக்கு ‘பேண்ட்’. தையல் அளவைக் கொடுக்கும்போதும் தைத்த உடையை வாங்கும்போதும் இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. மூட்டையை தூக்கிக் கொண்டு நடை.
பள்ளி மீண்டும் உயிர்பெற்றிருந்தது. துள்ளும் வெள்ளை, சிவப்பு இரட்டைச் சடைகள், பல விதங்களில் கட்டப்பட்ட டைகள். புதிய சீருடைகளைவிட அதிகமாக சற்றே சாயம் போன சென்ற வருடத்திய உடைகள். முட்டிவரை நீளும், ஆடுசதை வரை மூடும், நைந்து, கணுக்காலுக்கு சற்று மேல் வரை மட்டுமே வரும், எனப் பலவித காலுறைகள், அவற்றுக்கு இணையான தரத்தில் ஷூக்கள். தேர்வாகாமல் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியவர்களின் அசௌகர்யம். புதிதாக பள்ளியில் சேர்ந்திருப்பவர்களின் ஆரம்ப கட்ட கூச்சம்.
வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நண்பர்களின் உற்சாக வரவேற்பு. பசங்களிடம் புதிதாக பேண்ட் போட்ட சந்தோஷம். கோடையை கழித்ததை பற்றிய பரஸ்பர பிரஸ்தாபங்கள். இந்த ஆண்டு பாடமெடுக்கப் போகும் ஆசிரியர்கள் யாரென்று ட்யூஷன் செல்லும் ஓரிரு மாணவர்களை கேட்டான். விடுமுறை நாட்களின் சோம்பல் இன்னும் மிச்சமிருக்கும் புதிய ஆரம்பத்தின் கிளர்ச்சியில் தளும்பி இருந்த வகுப்பறைச் சூழலில் அச்சத்தை தள்ளி வைக்க முடிந்தது. முதல் மூன்று பீரியட்களுக்கு இவர்களுக்கு ஏற்கனவே சொல்லிக் கொடுத்துள்ள ஆசிரியர்கள். இன்னும் நான்கு பீரியட்கள்தான். அடுத்து வந்த ஆசிரியர் புதியவர். தன்னை அறிமுகம் செய்துகொண்டபின் ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வர இவன் முறை. எழுந்து தன் பெயரைச் சொன்னான்.
‘பாதர் என்ன பண்றார்?”