எதிர்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

முப்பத்தி மூன்று நீண்ட வருடங்கள்; உள்ளே புதைந்த குண்டென வெளிவர இயலாத காலங்கள்; ஆனால், இப்போது அது இரத்த ஓட்டத்தை குறுக்குகிறது. ஆம், கீறி அதை வெளியே எடுக்கும் வேளை நெருங்கி விட்டது. குண்டின் பெரும் பகுதியை சிவநேசன் எடுத்துவிட்டார்; மிகுதியை மங்களாதான் எடுக்க வேண்டும்.

.மனிதனை உயரச் சொல்லும் மலைகளும், தேர்களும், கோயில்களும், ஏன் நம் முன்னே நின்று நீ சாதாரணமானவன் என்று சொல்லாமல் சுட்டிக் காட்டுகின்றன? சாந்தவனேஸ்வரரும், சாந்த நாயகியும் ஒன்றாக அமர்ந்து வர கம்பீரமாக அசைந்தசைந்து வரும் தேரின் முன்னால் வெண்குடையின் கீழே வெள்ளைத் தாமரை வடிவ பீடத்தில் வெண் பட்டுடுத்தி கலைமகள் வருவது புதுப்பட்டியின் சிறப்பு. ஊரை சற்றே பிளந்து ஓடும் வெட்டாறு. செவிவழிச் செய்தியாக அறிந்தது கச்சபேஸ்வரர் கனவில் சிவன் தோன்றி சரஸ்வதி தேவியை     நிறுவி அவளுக்கும் தன்னைப் போல் சிறப்புகள் செய்ய ஆணையிட்டார் என்பது. சிறுவனாக அம்மாவின்  ஒரு கையை நானும், மறு கையை மங்களாவும் பற்றிக் கொண்டு, ‘ஏம்மா, சரஸ்வதியும் இந்த ஊர்வலத்ல வரா?’ என்று கேட்டதும் அம்மா சொன்ன பதிலும் கல்வெட்டு போல் பதிவாகி இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தவில்லையே என்ற வாட்டம் இப்போதும் நீடிக்கிறது. ஆனால், அது இனி இருக்காது.

அம்மா சொன்னாள், ’சுபத்ராவோட கண்ணனும் பலராமனும் இருக்ற படத்தை நம்ம கூடத்ல பாத்திருக்கல்ல; அதே மாரி சிவனுக்கு, தங்க சரஸ்வதி. ஆதி சங்கரர் சரஸ்வதி அஷ்டோத்ரத்ல ‘சிவானுஜாய’ன்னு அதாவது ‘சிவனுக்கு இளையவளே’ன்னு சொல்றார். ’பூரி ஜகன்னாத யாத்ர’ மாரி நம்ம ஊர்ல தங்கையும், அண்ணனும், மன்னியுமா நம்மளயெல்லாம் பாக்க வரா; உங்க ரண்டு பேருக்கும் தான் சொல்றேன்-உடம்பொறப்புக்காக முடிஞ்சதெல்லாம் செய்யணும்- தன் பங்க, கூடப் பொறப்புக்காக விட்டுக் கொடுக்கணும் .நீங்க சாதாரண உடம்பொறப்பில்ல; ரெட்டையா பொறந்தவா; ரொம்ப பாசமா, அனுசரிச்சுண்டு இருக்கணும்; ஆனா, எங்க நம்ம ராஜ நந்தினி மாரித்தான் இருக்கேள்.’

இன்று தெளிவாகப் புரிகிறது- அம்மா தங்கள் இயல்பை எவ்வளவு சரியாகக் கணித்திருக்கிறாள் என்று. தாத்தாவுடன் அவர்கள் பூர்வீக வீட்டில் இருந்தபோது காமாக்ஷி என்ற பசு இரு கன்றுகளை ஒரு சேர ஈன்ற நேரம் கௌசிகன் எனவும், மங்களா எனவும் நாங்கள் பிறந்தது அன்று அந்த ஊரில் மிகப் பெரிய விஷயமாகப் பேசப்பட்டதாம்; அம்மாவிற்கு மங்கள கௌசிகா இராகம் மிகவும் பிடிக்கும்; எங்கள் ஒற்றுமையைப் பேரிலாவது இணைத்துவிட ஆசைப்பட்டிருக்கிறாள், பாவம். அதிலும் ’ஸ்ரீ பார்க்கவி’யை அம்மா பாடக் கேட்கணும்; அதையெல்லாம் எங்கே தொலைத்தோம்? நாளை தெப்பத்தின்போது நம்ம நாகஸ்வர வித்வானை வாசிக்கச் சொல்லி கேட்கணும்; அதுகூட நான் இறுதி முறை கேட்பதாக இருக்கக்கூடும்.

இப்பொழுதே அந்த தெப்பக்குளத்தைப் பார்க்க வேண்டும்.தேரின் சந்தடியிலிருந்து விலகி அந்த நீரைக் காண வேண்டும்;வெந்தெரியும் மனதிற்கு அந்த ஈரம் ஓர் ஆறுதல்; மங்களாவை நான் சந்திக்கையில் அவள் கண்களில் பளபளக்கும் நீரை எதிர் கொள்ளும் வலிமையை பரந்து நிற்கும் குளம் எனக்குத் தரலாம். மேலும் என் பிறந்த ஊரில் நான் பார்க்கும் கடைசி தெப்பமாகத்தான் இது இருக்கும்.

‘என்ன கௌசிகா, குளத்துக்கு இப்பவே வந்துட்டே. இன்னும் நேரமிருக்கே?’ என்றான் ராமு

“எனக்குக் காத்ருக்கப் பொறுமயில்லடா”

‘என்னதுடா, உன் தோதுக்கு தொப்பம் நடக்கணுமா, திருப்பியும் கண்டத சாப்ட ஆரம்பிச்சுட்டியா? அப்படியும்தான் என்ன அடுத்த விச பாக்கலாமோன்னோ?’

‘ஏன்டா உளற, சித்த காத்தாட இருந்துட்டு, தேர் பவனி முடிஞ்சு நெலக்கு வரும், சாமியெல்லாம் குடும்பமா வரும்; அப்றம் தெப்பம். நன்னா, பாக்கலாம்ணு வந்துட்டு உங்கிட்ட மாட்டினுட்டேன். நா இங்க இருக்கறதுல உனக்கென்னடா கஷ்டம்?’

“நல்ல கூத்துடா இது, உடம்பொறந்தாள ஃபுல்லா விட்டாச்சு, குடும்பத்தோட சாமி பாக்கறாணாம், யாரப் பாக்க வந்தியோ, என்னவோ, நான் போய்ட்டு அப்றம் வரேன், குளத்ல இறங்கிடாதே”

‘போடா, போடா உன்ன எனக்கும் என்ன உனக்கும் இன்னி நேத்திக்கா தெரியும்?’

இவனிடமும் சொல்லாமல்தான் போகப்போகிறேன்.வானத்தில் கூட்டமாய் பல பறவைகள் பறக்கும், தனியாகப் பறக்கும் பறவையும் உண்டே!

தெப்பத்திற்காக குளத்தில் நீர் நிறைந்திருந்தது. மேலைச்சூரிய ஒளியில் செம்பொன் கண்ணாடித் தகடென மின்னியது.காற்று ஏற்படுத்தும் சலனத்திற்கேற்ப இயற்கையின் ஒளி நடனம். மனிதனுக்கு சபலம்தான் சலனத்தின் காரணம் போலும். பேரெழிலும், பெருமிதமுமாக நீராழி மண்டபம் நின்றிருந்தது. மாலை தெப்பம் முடிந்த பிறகு மதகைத் திறந்து விடுவார்கள்; அப்படிக் குறைந்த நீரிலும் இம்மண்டபம் பெருமிதமாகத்தான் இருக்கும். என் வீட்டை வாங்கிய சிவநேசன் அப்படித்தான் பெரிய மனிதராக நிற்கிறார்.

இந்தக் குளத்தைப் போலத்தான் காவியும், வெள்ளையும் அடித்து சின்னஞ்சிறு படிகள் அமைத்து என் வீட்டிலும் தரையில் பதிக்கப்பட்ட தெப்பக்குளம் இருந்தது. அழகான கோலங்கள் வரையப்பட்ட செந்நிற கற்கள், அதை மூடி,பால் வெண் பூச்சால் இணைக்கப்பட்டிருக்கும். நவராத்திரி சமயத்தில் சிறு உளியால் பூச்சினை அகற்றி, கற்களை எடுத்துவிட்டு நான் ஒதுங்கி விடுவேன்; எனக்கு முடியவில்லை என்பதல்ல, அவளும் செய்யட்டுமே என்ற வீம்புதான். உதட்டைப் பிதுக்கிப் பழித்தவாறே மங்களா அதில் நிரப்பப்பட்டுள்ள மணலை அள்ளுவாள். குடம் குடமாய்த் தண்ணீர் விட்டு குளத்தில் பொம்மைகள் மிதக்கும்; சுற்றிவர மின் விளக்குகளின் அலங்காரம்.

அது புதைத்து வைத்திருந்த அந்த இரகசியம் எங்கள் வீட்டை விற்கும் நேரத்தில்தான் வெளிப்பட்டது. அதை நான் மட்டுமே சுமந்தலைந்தேன் முப்பத்தி மூன்று வருடங்களாக. இரு நாட்களுக்கு முன்தான் சிவநேசனிடம் சொன்னேன். என் மனப் பாரம் குறையக் குறைய அவர் மகத்தான மனிதராக வளர்ந்துகொண்டே வந்தார். ”அழாதீங்க, கௌசி சார், இப்ப என்ன நடந்து போச்சு; சரி, உங்க வீட்ட விக்க எங்கிட்ட ஒப்பந்தம் பண்ணீங்க, நான் அட்வான்ஸ் மட்டும்தான் கொடுத்திருந்தேன் அப்ப. உங்களயே சிதிலமான வீட்ட முழுசா இடிச்சு சமப்படுத்தி தரச் சொன்னது நாந்தான். அப்படி இடிக்கையில  ஒரு வெள்ளிச் சொம்புல வெள்ளிக் காசுகள், தங்கக்காசுகள் கிடச்சிருக்கு. அதை அப்ப சொல்லல நெஜத்த மறச்சுட்டோம்னு மனசு பதறிகிட்டேயிருந்திருக்கு உங்களுக்கு. ஏதோ பெரிய குத்தம் பண்ணாப்ல வந்து எங்கிட்ட சொல்லிக் கரையறீங்க. அது உங்க சொத்து சார், என்னுதா எப்படி ஆவும்?எங்கிட்டேந்து வழிப்பறி செஞ்சீங்களா, திருடினீங்களா எந்தத் தப்பும் செய்யலியே; அந்த வீடு உங்க பரம்பர சொத்துன்னும், ஒருகாலத்ல நல்லா வாழ்ந்தவங்கன்னும் எங்க தாத்தா சொல்லியிருக்காங்க.

மனைக்கித்தானே பணம் கொடுத்தேன், மனய கரெக்டா கொடுத்திட்டீங்க, புதயலுக்கு நான் ஆசைப்படவுமில்ல, அத எதிர்பாக்கவுமில்ல. உங்க வீட்ல இருந்த கிணத்த தூத்தா கொடுத்தீங்க, இல்ல வெட்டி எடுத்துட்டுப் போய்டீங்களா? நெலத்ல வெட்டி அமைச்சது கிணறு,நெலத்தை வெட்டிப் புதச்சது பணம். ரெண்டும் வேறவேறங்க. அட, அழுவாதீங்க, உங்க பணம் உங்ககிட்ட கரெக்டாத்தான் சேந்திருக்கு; இத நீங்க புதயல் கிடைச்ச ஒன்னே சொல்லியிருந்திங்கன்னா நா அப்பவும் அது என்னுதில்லன்னுதான் சொல்லியிருப்பன். என்ன ஒன்னு, நீங்க குத்த உணர்ச்சியோட இப்படி அலைஞ்சிருக்க வேணாம். கௌசிக் சார், உண்மைல உங்களப் பாத்தா பரவசமா இருக்கு; எனக்கு இந்த விவரம் இன்னயமுட்டும் தெரியாது, நீங்க சொல்லலேன்னா யாரும் சொல்லவும் போறதில்ல ஆனா, என்ன மனுஷன்யா நீரு, உம்ம சொத்துக்கு கூனிக் குறுகிறீங்க. இனி குழம்பாதீங்க, சந்தோஷமா இருங்க, நண்பரா வந்து போய்க்கிட்டிருங்க. காசு, பண விவகாரமெல்லாம் வேணாம்’

என் சிந்தனைகளை ஆர்ப்பரித்து முழங்கிய மேளம் தடுத்தது. ஓ, தேர் நிலைக்கு வந்துவிட்டது.            நாகஸ்வரமும், மேளமும் உச்ச கட்ட பிளிறலில் ஒலித்தன. குளஓரத்து மேடையில் அம்மையும், அப்பனும் தேரிலிருந்து இறக்கப்பட்டனர். எத்தனையோ வருடங்கள் பார்த்திருந்தும் காண அலுக்காத காட்சி இது. சிவன் மட்டும் மேடையிலிருந்து சந்தனம், மஞ்சள், குங்குமம், பட்டுச் சேலை, பூப்பந்து, பழங்கள் வெண்தந்தத்தால் ஆன சிறு வீணை, சுவடிகளை எடுத்துக் கொண்டு கலைமகளின் பல்லக்கு அருகே சென்று சீர் அளித்து அழைக்க, அவள்  தன் பல்லக்கில் அவரையும் ஏற்றிக்கொண்டு மேடைக்கு வந்தாள். சாந்தநாயகி இருவரையும் எதிர்கொண்டு வரவேற்க கொம்பூதப்பட்டது. மலர் பொழிய மூவரும் கோயிலின் உள்ளே  போனார்கள். எனக்கு நீல வானில் தெரிந்த கறுமையும் விலகியது.

ஆம்,மங்களாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டுகள் மறைத்ததற்கு ஈடாக மொத்தத்தையும் அவளிடம் கொடுத்து விட வேண்டும். அவள் அப்படித்தான் என்ன செய்துவிட்டாள் ஒரேயடியாக அவளை விட்டு விலகும்படியாக.

எங்கள் வீடே அம்மாவின் சீதனம். வீட்டோடு மாப்பிள்ளையாய் இருந்த அப்பா காணாமற்போன மன அழுத்தம் தாத்தாவிற்கும்,  அம்மாவிற்கும் இருந்திருக்கலாம். ஊரைக் கூட்டி தடபுடலாக எனுக்கு பூணூல் கல்யாணம். அப்போது தாத்தா உயிருடன் இருந்தார். காலியான பெருங்காய டப்பாதான் அவர் அப்போது. ’எந்த கௌரவத்தைக் காப்பாத்த இந்த வேஷமோ? உங்க “வண்டி”எங்கெங்கே நிக்கறதுன்னு ஊருக்கே தெரியும்.’ என்று அம்மா சொன்னது ஏன் எனக்கு இன்றுவரை நினைவில் நிற்கவேண்டும்? சுயநலம் அப்படி ஒன்றும் தவறில்லை என்று எனக்கு அன்று வித்து விழுந்து விட்டது. அவளும் என்னைப் போலத்தானே ராஜ, நந்தினியின் சண்டையைப் பார்த்து வளர்ந்தாள். தன் தீவனத்தை வாயில் அதக்கிக்கொண்டு மற்றொருவரின்  பானையை கொம்பால் முட்டிக் கவிழ்க்கும் இரண்டும். இடையன் குளிக்க ஓட்டிச் செல்கையில் முரண்பட்டு ஓடும். புல்லுக்கட்டையோ, வைக்கோலையோ முதலில் ஒன்றுக்குப் போட்டுவிட்டால் பாய்ந்து சீறிக்  கவ்வும்; கட்டைத் தெறித்துக்கொண்டு பாயப் பார்க்கும். தாத்தாவும் என்னைச் செல்லம் கொண்டாடினார்; எல்லாமாக அவளுக்கு என்னைப் பிடிக்காமல் செய்திருக்கலாம். அவள் என்னை அவமானப்படுத்தியதை முப்பத்து மூன்று வருடங்களாக என்னால் மறக்க முடியவில்லை; ஆனால்,சிவநேசனைப் பார்த்த பிறகு மரத்தில் புதைந்த கோடாரி தானே வெளிப்பட்டுவிட்டது- சீழ், ரணம், வலி, சுவடு எதுவுமில்லை

ஆம், அவள் என் மேல் வழக்கு பதிவு செய்தாள், வீட்டை விற்ற தொகையில் பாதி பங்கு கேட்டு. இவளுக்கு கல்யாணம் செய்து, நகை நட்டு போட்டு, முதல் பிள்ளைப்பேறு பார்த்து எல்லாம் செய்தாகிவிட்டது; எதற்காக பாதிப்பங்கு தரவேண்டும் என வீம்பு எனக்கு இருந்தது. அம்மாவும் அவளுக்கு கால் பங்குதான் தரச் சொல்லியிருந்தாள்; இதெல்லாம் புதையல் எடுப்பதற்கு முன்னே. அவள் கேஸ் போட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது; எத்தனை சுய நலம் என்றும் தோன்றியது. கேசில் நான் ஜெயித்தபிறகு மொத்தமாக அவளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டேன். அவளிடம் புதையலைப் பற்றி மூச்சு விடவில்லை. எதை எதிர்கொள்ளப் பயந்து அப்படி நடந்து கொண்டேன்? அவள் என்னைக் கேள்வி கேட்டிருந்தால்தான் என்ன, நம்பாமலே போயிருந்தாலும்தான் என்ன, நான் அவளிடம் மறைத்திருக்கக் கூடாது. ஆம், தெப்பம் முடிந்தவுடன் கிளம்பி அவளை அவள் வீட்டில் பார்த்து மன்னிப்பு கேட்டுவிட்டு, செக்கையும் கொடுத்துவிட்டு நிம்மதியாக, நிச்சலனமாகப் போய்விட வேண்டும் வெள்ளரியை விட்டு கொடி விலகுவதைப் போல் விலகிவிட வேண்டும். ’மானச சஞ்சரரே’ . யாரிடமும் கோபமில்லை, எந்தப் பொருளுக்கும் ஆசையில்லை, எந்தப் பற்றும் இனி தேவையுமில்லை. இந்த எண்ணத்தைத் தவிர என் மனதில் ஒன்றுமே இல்லை. மங்களாவிடம் என்ன பேசப் போகிறோம், எப்படி அவளைச் சமாதானம் செய்யப் போகிறோம் என்றுகூட மனம் நினைத்து நினைத்து ‘ரிகர்சல்’ பார்த்துக்கொண்டு இல்லை. அவள் சண்டை போடட்டும், அழட்டும், மன்னிக்கட்டும், மன்னிக்காமல் போகட்டும், செக்கை என் முகத்தில் வீசி அடிக்கட்டும் நான் அமைதியாக நடந்து கொள்வேன்- இது மட்டும் ‘ரிகர்சல்’ இல்லையா என்று ஒரு குரல் மனதினுள் கேட்டது.

சிரித்துக்கொண்டே ரயிலேறக் கிளம்பினேன்; எத்தனை புழுக்கமாக இருக்கிறது; இந்த இறுக்கம் மழை பெய்தால் போய்விடும். வழியெல்லாம் சிறு தூறல்கள் விழுந்து கொண்டேயிருந்தன. மின் விளக்குகளின் ஒளிச் சிதறலில் தன்னைக் காட்டி மறையும்  சிறுமழை. காற்றின் அலைகள் ஏந்தி வரும் சாரலில் அம்மா என்னைத் தடவிக் கொடுப்பதைப் போலிருந்தது. அவள் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கையில் என் இதய ஒலி காதுகளில் கேட்டது. கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்து திகைத்தேன்; இருபது வயது மங்களா? இவளுக்கு மட்டும் வயதே ஏறவில்லையா? ’யாருடி, கௌசல்யா?’ என்ற குரலுடன் வந்தவள், ”கௌசீ’ எனக் கதறி அணைத்துக் கொண்டாள்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.