சொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை

கமல தேவி

பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது. அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தன. கிருஷ்ணாபுரத்தின் நிறுத்தத்தில் ஒரு நடுவயதுக்காரர் ஏற முடியாமல் பேருந்தில் ஏறினார். பேருந்தில் நல்ல கூட்டம். அவள் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையிலிருந்து அவரைப் பார்த்தாள். வேட்டியை மடித்துக் கட்டியிருந்த அவரின் கால்முட்டி வீங்கி பளபளப்பாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தபின் தயங்கி எழுந்த சுரபியை, “கூட்டத்தில் சேலய கட்டிக்கிட்டு நிக்க முடியாது… வேணாம்,” என்ற குரல் தடுக்கையிலேயே கம்பியில் சாய்ந்திருந்த அவரின் தோளை நுனிவிரலால் தொட்டு அமரச் சொன்னதும் அமர்ந்து கொண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மா நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினார். இவர் கொஞ்சம் தள்ளி நாசூக்காக அமர்ந்து கொண்டார்.

பக்கத்தில் அவளைவிட இளையவன் நின்றிருந்தான். கூட்டம் என்றாலும் தவறான தொடுகையை உடல் அறியக் கற்றிருக்கிறது. அனிச்சையாய் திரும்பி, “தள்ளி நில்லுங்க தம்பி,” என்றாள். நல்லவனாக இருக்கக்கூடும். இல்லையென்றால் “ தனியாக காருல வரலாமில்ல,” என்று எகத்தாளம் பண்ணியிருப்பான். இத்தகைய எகத்தாளமான பதில்களை தினமும் பேருந்தில் பெண்கள்  கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இறங்கியதும் அம்மா பூ வாங்கச் சென்றார். முட்டிவலிக்காரர் அருகில் வந்து,“ரொம்ப நன்றி கண்ணு..கால்ல இன்னதுதான்னு சொல்ல முடியாத வலி,”என்றார். “அதனால என்னங்க? மருந்து தடவுறீங்களா?”என்றாள். “அதுக்குதான் வந்ததே. போயிட்டு வர்றேன் பாப்பா,” என்று ஆட்டோவில் ஏறினார். குத்திய சிறு சிலாம்பை எடுக்காமலிருப்பதைப் போல சுரபியின் மனதில் பேருந்து நிகழ்வு அருவிக் கொண்டிருந்தது.

தை குளிர் இந்தக் காலையில் மெல்லிய படலமாய் உடலைத் தொட்டு கணம் தோரும் ஊடுருவிக் கொண்டிருந்தது.பாலக்கரையில் இறங்கி அம்மாவுடன் நடக்கையில் உறவுகளும் அங்கங்கே இணைந்து கொண்டனர். தெப்பக்குளத்தை சுற்றிக் கடக்கையில் குளத்தின் உள்வெட்டுச் செதுக்குகள் தெரிந்தன. முன்னால் சென்ற ஜீன்ஸ் குழந்தை குளத்தினுள் சுற்றி வெட்டப்பட்டிருந்த கிணறுகளை எண்ணிக் கொண்டிருந்தது. சிறு சந்தைக் கடக்கையில் நேர்க்கோட்டில் அடுத்த தெருவில் தெரிந்த சிவனாலயத்தைப் பார்க்கையில், “இமைப்பொழுதும் என்நெஞ்சை நீங்காதான் தாள்வாழ்க” என்ற ஒலிப்பெருக்கிக் குரல் அவள் காதுகளைத் தொட்டு மனதில் படர்ந்தது.

மேளச்சத்தம் கேட்டதும் சுரபி, “தாலி கட்டியாச்சோ?”என்றாள். “இல்லை அரசக்கால் ஊன்றாங்க” என்றார் சின்ன மாமா. செம்மஞ்சளில் ஔிப்பழமாய் ஆதவன் எதிரே தென்னங்கீற்றுகளின் பின் எழுந்து கொண்டிருந்தான்.பேசிக்கொண்டும், குளிர்ந்த சந்தனத்தைத் தொட்டுக் கொண்டும் மண்டபத்தினுள் நுழைந்தார்கள். சுரபி தன்மனதிற்குள், “மனுசரக் கண்டதும் பொங்கக் கூடாது. தொடாம பேசனும்,” என்று நினைத்துக் கொண்டாள். அவள் ஆழத்தில் வளைந்து நெளிந்து கொண்டிருந்த ஆதங்கம் சட்டென்று  மனதின் மேற்பரப்பில் தலை நீட்டியது.யாரையும் தெரியாமக்கூட தொடக்கூடாது. கல்லூரி முடித்து வந்து கற்றுக் கொண்ட முதல் சமூகப் பாடம். தொடுகைய தவறா நினைக்கற, பார்க்கிற, பயன்படுத்தற ஊர்லதான் எங்கப் பாத்தாலும் கூட்டம் என்று நினைத்துக் கொண்டாள்.

காலை ஆறு மணியென்பதால் நெருங்கிய சொந்தங்களாக கூடியிருந்தார்கள். மெதுவாக சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. அம்மாவின் சொந்தங்கள். பள்ளி விடுமுறை நாட்களின் முகங்கள் என்பதால் கூடுதல் நெருக்கம். பால்யத்தின் வண்ணங்கள் .சிரித்துப் பேசி அமர்ந்திருந்தார்கள். சிவப்புச் சேலையில் மணப்பெண் வணங்கி அமர்ந்தாள். மீண்டும் சடங்குகள். அம்மா உறவுக்கார சித்தப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் சுரபியை அடையாளம் கண்டு புன்னகைத்தார். கூட்டம் திரளத் திரள மனம் எச்சரிக்கையானது. அதை நினைத்து மேலும் புன்னகைத்ததை நீலவண்ணச்சட்டை போட்டவர் தனக்கென நினைத்து தலையாட்டினார்.

தோளில் குழந்தையுடன் வந்த அண்ணன் அவளின் கைப்பற்றி, “எப்ப வந்த,”என்றது .தாம்பூளத் தட்டிலிருந்த மாங்கல்யத்தை வணங்கி மஞ்சலரிசி எடுக்கையில் குழந்தையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டது.

“வாயில போடக்கூடாதுடா… மூக்கருத்துருவேன்,” என்ற சுரபியின் சைகையைப் புரிந்துகொண்டு அடிக்க வந்தான். கன்னங்களை உப்பி, உதடுகளைக் குவித்து சேட்டை காண்பித்தான். இடதுகையால் அண்ணனின் சட்டையை முதுகுப்புறத்தில் பற்றியிருந்தான். அண்ணின்  தோளில் கை வைத்து சுரபி, “சட்டை நல்லாயிருக்கு,” என்றதும் அண்ணன் மலர்ந்து ஏதோ சொல்ல வந்து மாமா அழைக்க எழுந்து சென்றது.

எழுந்து மஞ்சலரிசி தூவி மேலிருந்த அரிசியை தட்டியபடி அமர்கையில் சுற்றம் கலைந்து கொண்டிருந்தது. மண்டபத்திலுள்ள அனைவருமே அரிசியை தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவளுக்கு ஏதோ ஒரு கரம் அனைவரையும் வாழ்த்தியது போலிருந்தது. திருமகள் தீபத்தை ஏந்திய சகோதரி முன் செல்ல மணமகளின் சகோதரன் கை பற்றி மணமானவர்கள் அக்னி வலம் வந்தனர்.

இளமஞ்சள் தழல்… பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.காற்று தொட்டெழுப்பி தழலாடும் நடனம். மேலெழுந்து தாவி விரிந்து நின்று நெளிந்தது. இப்படியொரு தழலில்லா மனதுண்டா?… புறச்சூழல் சத்தங்களால் தடுத்தும் சுரபியின் ஆழ்மனம் பின்னோக்கிச் சென்றது. உணவைக் கையிலெடுக்கையிலேயே வயிற்றில் குமட்டும்போது சுரபியின் வயது ஆறு இருக்கலாம். எந்த நேரமும் கோழை நிறைந்த நாசி. துடைத்த நேரம் தவிர மற்ற நேரங்களில் மற்றவரை விலக வைத்திருக்கலாம். அவள் வயதுப் பிள்ளைகளின் வேகத்திற்கு இவள் எப்போதும் பின்தங்கியேயிருந்ததாய் சுரபிக்கு நினைவிருந்தது. இருமலை நிறுத்த இயலாமல் நிறைந்த கண்களுடன் ஊதா நிறச் சீருடை பாவாடையில் முகம் பொத்தியிருந்த வகுப்பறை நாட்களில் அவள் ஓரமாய் எங்கோ இருந்தாள்.

மருத்துவரிடம் சித்தப்பா பேசியது என்னவென்று அவளுக்கு நினைவில்லை. அவள் கண்களை மூடி எக்ஸ்ரே மேசையில் படுக்கையில் உள்ளே விரியும்  இருள் உலகம் அவளை நடுங்கச் செய்யும். அவள் உறங்கும் கட்டிலின் கீழே எப்போதும் ஒரு பெரிய வலை அல்லது தேன்கூடு இருப்பதாக உணர்ந்து கொண்டேயிருந்தாள். அதில் விழுந்துவிடுவோமோ என்ற பயத்தால் எப்போதும் கட்டில் சட்டத்தை பற்றிக் கொண்டிருக்கும் அவளின் கை. வகுப்பறைப் பாடங்கள் நிச்சயம் கனவுக் காட்சிகளே. தினமும் மாத்திரை விழுங்குகையில் கேள்வி ஒன்று சிக்கிக் கொள்ளும்.மூச்சு விடுகையில் ஏற்படும் வலியைப் போலவே பயம் எப்போதும் அவள் உடனிருந்தது. உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் அதன் கரையிலமர்ந்து வேடிக்கை பார்த்தபடியிருந்தாள்.

சுரபிக்கு குழந்தைக் கால ஏக்கங்கள் இரண்டு இருந்தன. ஒன்று வீட்டின் முன்புறம் இருந்த கிணற்று நீரைத் தொட்டு விளையாடும் சிட்டாக பிறப்பது. அடுத்தது அவள் ஐஸ்காரர் வீட்டில் பிறந்திருக்கலாம் என்பது. தொண்டையிலிருந்து அடிவரை இழுத்துப் பிடித்து இருமல் வரும் காலை வேளைகளில், “பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகுது…. சீக்கிரம் வா குளிக்க,” என்றால், “நானே குளிச்சிக்கிறேன்…” என்பாள்.

சாப்பாடு ஊட்டும்போது, “ஒவ்வொரு பருக்கையா தின்னா… இப்படிதானிருக்கும் ஒடம்பு… இந்த பிள்ளைகள பாரு…” என்றால், “நானே சாப்பிட்டுகிறேன்…,” என்பாள்.

“…..சரி வா…”

“வேணாம்…நானேதான் சாப்பிடுவேன்,”என்று தள்ளிச் சென்றுவிடுவாள்.

“இவ்வளவு புடிவாதம் பொம்பள பிள்ளக்கி ஆவாது…”என்பார் அம்மா.

ரேங்க் கார்டு கொடுக்கும் நாளன்று உடன்பிறந்தவர்கள் அப்பாவிடம் கையெழுத்து வாங்குகையில், ”எந்த கணக்கில் இந்த மார்க்கை விட்ட…. எந்த கேள்விக்கு நேரம் பத்தல…” என்று அவர்களின் விசாரணைகள் முடிந்தபின், சிவப்பு அடிக்கோடுகளிட்ட தன் அட்டையோடும், குனிந்த தலையோடும் தனியே வந்து நிற்கும் சுரபியிடம், ”நல்லா படிக்கனும்,”என்பார்.

“இனிமேல் ஹாஸ்பிட்டலுக்கு வரவேண்டாம். அதவிட ஊசி வேணாம், உவ்வே.. மாத்திரை வேணாம். ஆனா பொட்டுக் கடலையும் வெல்லமும் டெய்லி சாப்பிடனும்,” என்று கன்னத்தைத் தட்டி டாக்டர் சொன்னபோது ஐந்தாம் வகுப்பிலிருந்தாள்.

அம்மாவை தம்பி, தங்கை கட்டிப் பிடித்திருக்கையில் தள்ளி நிற்கும் சுரபியை அம்மா, “உன்னப் போல பிள்ள பெத்துட்டா குறச்சலில்ல… எல்லாத்துக்கும் பிடிவாதம்.. மனுசற கண்டா என்னமா இருக்குமோ…. தொட விடுதா பாரு. சனஞ் சேராதது..”என்று பேசிக்கொண்டே செல்வார்.

திருமண மேடையில் தழல் இறங்கியமைந்து கங்குகளானது. “சாப்பிட போகலயா ?”என்றபடி வந்த அண்ணன் சுரபியின் இடதுகையைப்பிடித்துக் கொண்டு நின்றிருந்தவர்களிடம் பேசத் தொடங்கியது. அண்ணனின் கரம் என்னும் சூட்சுமம் தூலமாகியது. கிணறுகள் வற்றிப் போன கடுங்கோடை விடுமுறையில் தாத்தா, “கிணதுத்துல தெக்குமூலையில் ஒருஊத்துகண்ணு திறந்திருக்கறதாலதான்…குடிக்க தண்ணீ இருக்கு,”என்று வெத்தலப்பெட்டி தாத்தாக்கிட்ட சொல்லிக் கொண்டிருந்தார்.வெத்தலப்பெட்டி தாத்தா, “ஒத்த ஊத்தும் அத்துப் போன கேணிய பாத்ததில்ல. எங்கியாச்சும் கண்ணுக்கு அகப்படாமயாச்சும் இருக்கும். உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்த மழைக்கும் சுரக்காதும்பாங்க,” என்றார்.

கமலையில் போய் நின்றாள் சுரபி. இரு கருங்கற்கள் கிணற்றின் உள்வரை நீண்டிருந்தன. அதில் கால் வைக்கையில் சுரபிக்கு தொடை நடுங்கியது. கவுனை தூக்கிக் கொண்டு அடுத்த அடி வைக்கையில் பெரியம்மாவின்,  “டேய் …சுரபிய பிடி,” என்ற குரல் கேட்டபோது நுனிவரை நடந்திருந்தாள். கால்களை எந்தப் பக்கம் வைத்தாலும் தடுமாறும்நேரம் அண்ணன் கை அவளை இறுகப்ப ற்றியிருந்தது.

“ஊத்து பாக்கனும்… விடு…”

“சரி பாரு….” அண்ணன் கையை விடவில்லை.

காய்ந்து பாசி கருகியிருந்த பாறையில் ஒருநேர்க்கோடாய் நீர் கசிந்தபடியிருந்தது. தேங்கியிருந்த நீரை மேலும் எட்டி நோக்கி “நீ பாக்கறியா? நான் புடிச்சுக்கறேன்,” என்று பின்னால் வந்து பிடித்துக்கொண்டாள்.

மழைக்கால விடுமுறைகளில்  இலவம் ஓட்டில் உனிப்பூ நிறைத்து வாய்க்காலில் படகு விடுகையில் சுரபியின் வலது கை, அண்ணனின் இடது கையிலிருக்கும்.

வரப்பில், வயலில், நாய் வருகையில், மழையில், தூங்குகையில், தொட்டியில் முழுகிக் குளிக்கையில், உடல்நலமில்லா நேரங்களில், கோவில் பிரகாரத்தில், தாத்தாவின் மோசமான உடல்நிலைத் தருணங்களில், அக்காவிற்கு குழந்தை பிறக்கையில், வாழ்வின் முக்கிய தீர்மானத்தை தீர்க்கமாகச் சொன்ன வேளையில் என்று அனைத்து நேரங்களிலும் அந்தக்கரமிருந்தது. பெரும்பாலும் தூலமாக சிலபோது சூட்சுமமாக.

மண்டபத்தில் கூட்டம் குறைந்திருந்தது. உணவிற்காக கை கழுவிவிட்டு வந்த சுரபி, மாமாவின் கரங்களைப் பற்றி “சாப்டீங்களா?” என்றாள்.  “இல்லம்மா… கை கழுவிட்டு வர்றேன்,” என்றவரின் கரங்களின் வயோதிக நடுக்கத்தை தன் கையில் உணர்ந்தாள்.

உணவுண்ண அமர்ந்ததும் பக்கத்திலிருந்த மோனிகா, “ சித்தி சாப்பிட கை கழுவிட்டா எதையும் தொடக்கூடாது,” என்று வாயில் கை வைத்து சிரித்தாள்.

“இல்ல…இப்ப விட்டா சான்ஸ் கிடைக்காம போயிட்டா,”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

உள்ளங்கைகளை நீட்டிப் பார்த்தாள் சுரபி… பால்யத்தின் செப்பு முகங்கள், பள்ளி நாட்களின் எண்ணெய் படர்ந்து ஔிரும் முகங்கள், கல்லூரி நாட்களின் இனிய முகங்கள். எத்தனை கரங்கள்….மெல்லிய, குளிர்ந்த,வெதுவெதுப்பான , சொரசொரப்பான , வலிமையான, தொடுகையே தெரியாத கரங்கள் என எத்தனை.

கரங்களைப் பற்றுகையில் புன்னகை, விதிர்ப்பு, சுள்ளென்று வியப்பு, கனிவு ,ஆர்வம், வசதி, ஆசுவாசம், நடுக்கம், விடுவிக்கக் காத்திருக்கும் நெருடல், அடுத்த முறை பிடிக்கலாகாது என மனம் நினைக்கும் சில… எத்தனை… ஒரு வழியாக பழகிவிட்டது.

மோனி தன்னைவிட உயரமான மேசைக்காக எம்பி கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளின் மெல்லிய இடது கரத்தைப் பிடித்து அருகிலிருந்த பிடிமானத்தில் வைத்தாள். ஏதோ பூனையின் முதுகைத் தடவியது போலிருந்தது.

மண்டபத்திலிருந்து வெளியேறி தெப்பக்குளத்தைச் சுற்றி நடக்கையில் ஓடிவந்து கையைப் பிடித்து நடந்த மோனிகா, “அவன் சொல்றான்…. இங்க பத்து கேணியிருக்குன்னு… குளத்துக்குள்ள கேணியாம்….” என்று சிரித்தாள்.

இரு கேணிகள் அவன் கணக்கில் சேரவில்லை என்று நினைத்தபடி சுரபி, “கேணி இருக்கே,” என்று சொன்னாள்.

உலர்ந்து ஏடுவிரிந்த குளத்தைக் காட்டி, “ தண்ணிகூட உள்ள இருக்கும். ஊத்துப் பாத்து வெட்டியிருப்பாங்க,” என்றார் ராசு பெரியப்பா.

“சரி…மழை பெய்யும்போது தெரியுமா?”என்றாள் மோனி.

“அப்ப முழுகிடும் தெரியாது…”

“அப்ப அது பொய்…”

“இப்ப போய் பக்கத்தில நின்னு எட்டிப் பாத்தா தெரியுமே… வரியா?” என்றாள் சுரபி.

மோனி,“தண்ணியில்லாதப்ப தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, அவ்வளவு தூரம் நடக்கனுமா?” என்றாள்.

இங்கு வந்ததிலிருந்து மோனி குளத்திலிருக்கும் கேணிகளையே கேட்டுக் கொண்டிப்பதை உணர்ந்த சுரபி, “பாக்கனுன்னா போகத்தான் வேணும். பாக்கனுன்னு ஆசையா இருந்தா என் கைய பிடிச்சுக்கிட்டே நீ வந்தா பாத்துட்டு வரலாம்,” என்றாள். மோனி சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.

“இதென்ன ஒரு பைசாக்கு பொறாத வேல… பஸ்ஸ பாத்து போகாம. அதோ பஸ் வந்திடுச்சு” என்ற குரலால் தயங்கி பேருந்திற்கு விரைந்தார்கள்.

பேருந்தில் படிவரை ஆட்கள் நின்றிருந்தார்கள். “அடுத்த பஸ்ஸில போகலாம்,” என்ற சுரபியை பொருட்படுத்தாமல் அனைவரும் ஏறத் தொடங்கியிருந்தார்கள். மோனி ஒரே ஓட்டமாக சந்தில் புகுந்துவிட்டாள்.

பேருந்து நகரத் தொடங்குகையில் சுரபி இரண்டாவது படியில் நின்றிருந்தாள். “உள்ள வாம்மா… படியில நிக்காத,” என்ற நடத்துநரின் குரல் மேலும் கோபத்தைத் தூண்டியது. வழிவிடக்கூட இடமில்லை. உள்ளே நடத்துநர், “நெருங்கி நில்லுங்கம்மா படியில ஆளுக நிக்கறாங்க,”என்றார்.

“அடுத்த வண்டியில ஏற வேண்டியதுதானே,” என்ற குரல் கேட்டது.

“அவங்க ஊரு வண்டிக்கு இன்னும் ஒரு மணியாவும்,” யாரோ தெரிந்தவராக இருப்பார்.

சிவன் கோவில் முடக்கு வரப்போகிறது. சுரபிக்கு அடிவயிற்றில் கலக்கம். சரியான சாய்வான முடக்கு, முன்னால் வேகத்தடை வேறு. அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவளுக்கு வியர்வையால் கை பிடிமானம்  குறைவது நன்றாகத் தெரிந்தது. உடலை முன்னால் உந்தி பின்னால் சாயாமலிருக்க முயன்று பயனில்லை. பேருந்து முடக்கில் சாய்ந்து ஊர்கையில் அவளின் கைப்பிடி தளர்ந்தது. அவ்வளவுதான் என்று நினைத்த நொடியில் முதுகில் பலமாக ஒரு கை உந்தி மேலே அவளைத் தள்ளியது.

“வழி விடுங்க,” என்ற பலமான குரல்.

அந்தக் கையின் விசையில் உள்ளே வந்துவிட்டிருந்தாள். மாய கணம். இன்னும் அவளுக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. வியர்த்து வழிந்தது. திரும்பிப் பார்த்தாள். யாரென்று தெரியவில்லை. பக்கத்திலிருந்த ஒரு அக்கா, “பயந்துட்டியா?” என்று கம்பியைப் பிடித்திருந்த அவளின் கையைப் பிடித்தாள். மங்கலான கண்களைச் சிமிட்டியபடி சுரபி  தலையாட்டினாள். ஜன்னல்வழி வந்த காற்று தொட்டு கடந்து சென்றது. சுரபி முதுகில் அந்தத் தொடுகை இன்னும் எஞ்சியிருந்தது. மனம் கைகளிடம் இதற்குதான் மனிதர்களின் கரங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்பதில்லையாக்கும் என்றது.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.