1
என்னை நானே எதிர்கொள்ள முடியாததால்
இரவை வரவேற்கிறேன்
மனம் உறக்கத்தில் லயிக்கட்டும்
எனது தேடல் இந்த உலகுக்கு
அப்பாற்பட்டதாக உள்ளது
எனது பலகீனங்கள் பாவகாரியத்தைச்
செய்யச் சொல்லி என்னை நிர்பந்திக்கின்றன
இறந்துபோனாலும் இந்த நினைவுகளைச்
சுமந்து கொண்டு என்னால் நிம்மதியாக இருக்க முடியாது
வாழ ஆசைப்படும் மனது
எனது ஆசைகளை வேர்விடச் செய்கிறது
அமைதியற்ற மனம் இங்குமங்குமாய் அலைந்து
எனது சமநிலையை பாதிக்கச் செய்கிறது
வாதைகளோடு போராடும் எனக்கு
புதுவாசல் ஏதேனும் திறக்காதா என்று ஏக்கமாக உள்ளது
மயக்கும் வதனமெல்லாம் மரணத்தின் தூதுவன்தான்
வாழ்வின் நிதர்சனங்களிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை
தூக்கத்தில் அசைவற்ற உடலைக் காண நேரும்போது
உள்ளம் திடுக்கிடுகிறது
இதற்கு மேல் உடலால் வேதனையைத் தாங்கிக்கொள்ள
முடியாது எனும்போது உயிர் வெளியேற எத்தனிக்கிறது
எனது பிரார்த்தனைகளெல்லாம்
அமைதியைத் தா என்றே உன்னிடம் இறைஞ்சுகிறது
தோற்றத்தில் கிளர்ச்சியடைய விரும்பவில்லை
எதிர்ப்படும் யுவதியின் நித்யமான ஆத்மனை அறிந்துகொள்ளவே
நான் விரும்புகிறேன்
வாழ்வு எனக்கு வருத்தமளிப்பதால் மட்டுமே
இறைவன் எனக்கு சுவர்க்கத்தை பிச்சையிடுவானா என்ன
வாழ்வை அதன் போக்கில் விட்டுவிட்டேன்
எனக்குரியவை என்று எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை
இயற்கை ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கிறது
என்னால்தான் ரசிக்க முடியவில்லை
மனிதர்கள் துயரப்படும்போதுதான் இந்தப் பூமிப்பந்தில்
தாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணருகிறார்கள்
உலக இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் சக்திக்கு
மனிதன் ஒரு பொருட்டேயில்லை
உலகக் குளத்தில் கல்லெறியாதீர்கள்
அலைகள் அடங்க ஒரு யுகம் கூட ஆகலாம்
நீர்க்குமிழி உலகை வியந்து பார்ப்பதற்குள்
அதன் ஆயுள் முடிந்துவிடும்
கடவுளை எதிர்கொள்ளாத மனிதனே இருக்க முடியாது
நீ உனக்கு வேண்டியதை தேடிக் கொண்டிருக்கும்போது
கடவுளை உன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை
மனிதன் மரணநிலையை அடையும்போது வாழ்க்கை அனுபவம்
பொய்யாகிப் போவதை உணர்ந்து கொள்வான்
தண்டனையை அனுபவிக்க அனுப்பப்பட்ட இடத்தில் ஒரு மனிதனாவது
குற்றவுணர்ச்சியுடன் நடமாடுகின்றானா
நாம் கைதியாயிருக்கிறோம் என உணரும்போது
இந்த உலகம் சிறையாகி விடுகிறதல்லவா
தப்பித்துப் போனவர்களெல்லாம் உன் அகராதிப்படி
பைத்தியங்கள் அல்லவா
மனிதனின் சுவர்க்கக் கனவுகளை நிறைவேற்ற
கடவுள் என்ன காரியதரிசியா
வேறு எங்கும் தேடி அலையாதே
இந்தச் சிறைக் கதவுகளை திறக்கும் சாவி
உன்னுள் இருக்கிறது
என்று சொல்ல ஒருவன் வேண்டுமா?
அழியக்கூடிய இந்த உலகிற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்தான்
ஆத்மாவை இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்!
2
இந்த நட்சத்திரங்களின் ஒளி என்னை வந்தடைய எத்தனை நாட்களாகின்றன
சலனங்களே வாழ்க்கைக் கடலிலிருந்து அலைகளை உருவாக்குகின்றன
மரணம்தான் தெரியப்படுத்துகிறது அன்பின் மகத்துவம் என்னவென்று
வானத்தின் முகவரியை மேகங்கள்தான் அறியும்
பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதால்
நரகத்தில் கடவுளைத் தவிர எவருமில்லை
நாய்கள் உறங்கும் நடுநிசியில் என் உள்ளம் விழித்திருக்கிறது
ஆதியில் இருந்த வார்த்தைகளிலிருந்தே படைப்புகள் வெளிப்பட்டன
எய்யப்பட்ட அம்புகள் எதிராளியின் குருதியில் நனைகின்றன
காலம் சகல நிகழ்வுக்கும் சாட்சியாக இருந்துவருகிறது
அதிதிகள் இந்த உலகை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்
ஆட்டுவிக்கும் மன உணர்வுகளுக்கு நான் அடிமைப்பட்டுத்தான்
கிடக்க வேண்டுமா
என்னைக் கொண்டு செல்லும் மரண அலைகளுக்காக
எவ்வளவு நாள் காத்திருப்பது
இரவுகளிலும் நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டிருந்தால்
வேறு எங்கு நான் செல்வது
ஊசலாடும் வாழ்க்கையிலிருந்து எப்போது என்னை விடுவிப்பாய்
எனது துயர வரிகளுக்கு நீதான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை என் ஒருவனுக்காவது அளிக்கக் கூடாதா
இந்த ஒரு இரவாவது என்னை நிம்மதியாக உறங்க விடுவாயா
விதியின் ரேகைகள் துர்பாக்யசாலி என்கிறது என்னை
கனவுகளிலாவது இறக்கைகள் கொடு
இந்த உடலைவிட்டுக் கொஞ்ச நேரம் உலாவி வருகிறேன்
ஓர் இலை உதிர்ந்ததற்காக மரம் துக்கம் அனுசரிக்குமா என்ன
நிலையான ஒன்றை தேடிச் செல்பவர்கள் ஏன்
சித்த சுவாதீனத்தை இழந்து விடுகிறார்கள்
காலவெள்ளம் மனிதர்களை எங்கெங்கோ அடித்துச் சென்று
கடைசியில் மரணப் பள்ளத்தாக்கில் தள்ளிவிடுகிறது
ஜனன வாயிலும், மரண வாயிலும் என்றுமே மூடப்படுவதில்லை
எண்ணக் குவியல்களைக் கிளறும்போது குப்பைகளே வெளிப்படுகின்றன
மாற்றங்களை உற்று நோக்கினால் மரணம் அதற்குள் ஒளிந்திருப்பது தெரியவரும்
வாழ்க்கையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே
நான் விடைபெற இருக்கிறேன்
கடவுளின் சட்டதிட்டத்தின்படி நானொரு குற்றவாளி
எனது ஆன்மதீபம் சிறிது சிறிதாக அணைய இருக்கிறது
எனது வேர்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ள அபயக் குரல் எழுப்புகின்றன
விதியின் மாபெரும் இயக்கம் என்னை இங்கும் அங்கும் பந்தாடுகிறது
தந்திரமில்லாதவர்களை உயிரோடு புதைத்து விடுகிறதல்லவா இவ்வுலகம்
இந்த உலக நடப்புகள் என்னை பாதிக்காதவாறு
எனக்கு உணர்வுகளற்றுப் போகட்டும்
இந்த சரீரத்திலிருந்து விடுதலையாகும் நாளை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
சித்தர்களைப் போல உறவுகளுடனான பிணைப்பினை
உதறித்தள்ள முடியவில்லை
ஸ்தூலமான விதைக்குள் சூட்சுமமான விருட்சம்
மறைந்துள்ளதை அறியத் தவறிவிடுகிறோம்
நித்யமான ஒன்றைத் தேடுபவர்கள்
எனது எழுத்துக்களை வெற்றுப் புலம்பல் என
ஒதுக்கிவிடமாட்டார்கள்.
3
துயிலெழுந்தபோதுதான் தெரிந்தது இந்த வாழ்க்கை ஒரு கனவென்று
உலகம் மாயை என்றவுடன் மரணம் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது
மயானபூமியில் மனிதன் மனதின் இயந்திரமாகத்தான் திரிகிறான்
மரணவூரில் மரணம் நிகழாத வீடொன்றைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா
உலகியல் மனிதர்கள் கடவுளை வரமருளுபவர்களாகவே கருதுகிறார்கள்
ஞான சொரூபத்திடம் பணத்தினை பிச்சையாகக் கேட்பது கேவலமல்லவா
பற்றி எரியும்போததான் தெரிகிறது விட்டில் பூச்சிக்கு
தான் மரணத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தோம் என்று
கண்ணுக்கு அழகாக இருப்பவர்களால் மரணத்தை வென்றுவிட முடியுமா
உங்களுக்கு தெரியாது மரணம் வெவ்வேறுவிதமாக மனிதனை வந்தடைவது
உயிர் பிரியும் வேளையில் தான் செய்த தவறுகளுக்காக
குற்றவுணர்ச்சி கொள்ளும் ஆன்மாவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கிறது
தான் கைவிடப்பட்டதாக கருதும் ஒருவனுக்கே
கடவுளைக் காண வேண்டுமென்ற ஏக்கம் பிறக்கிறது
படைப்புக்கான அவசியம் கடவுளுக்கு ஏன் ஏற்பட்டது என
நான் அறிய விரும்புகிறேன்
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து உயிர்களால் விடுபட முடியவில்லை
துன்பகரமான விளையாட்டை கடவுள் ஆரம்பித்திருக்க வேண்டாம்
விதிவசத்தால் மனிதன் துயரப்படுவது அவனுக்கோர் விளையாட்டு
அவனுக்கு உகந்ததை நிகழ்த்திக் கொள்ள
மனிதர்களை அவன் கருவியாகப் பயன்படுத்துகிறான்
அவனுடைய கடுமையான சட்டதிட்டங்களை
மரணத்திற்கு பிறகுதான் நாம் அறிந்து கொள்கிறோம்
உலக நடப்புகள் ஒவ்வொன்றும் கடவுள் கருணையற்றவன்
என்பதையே நிரூபிக்கின்றன
தனது குமாரரர்களில் ஒருவனுக்கு மட்டுமே மரணத்தை வெல்லும்
வாய்ப்பை அவன் வழங்கியிருக்கிறான்
துயரத்தின் வலியினால் அரும்பும் கண்ணீரில்
புனிதத்தன்மை மிகுந்திருக்கிறது
கொடுப்பதும் கெடுப்பதும் அவன்தான்
மனிதனின் சுயத்தை உதாசீனப்படுத்தும் நரமாமிசதாரி அவன்
ஆசாபாசங்களற்ற அவனின் ஆளுகைக்கு
கீழேதான் இந்த உலகம் இருந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை நதியை அதன் போக்கில்
செல்லட்டும் என விட்டுவிட வேண்டும்
விடை தேடிக் கொண்டிருப்பவர்கள்தான்
உங்கள் முன் திருவோடுடன் அலைவது.
4
வாசலை திறந்தே வைக்கிறேன் எப்போது
வேண்டுமானாலும் மரணதேவதை உள்ளே நுழையலாம்
இறையச்சம் கொண்டவர்கள் பழி பாவத்துக்கு
பயப்படவே செய்வார்கள்
ஜீவிதம் துன்பகரமாக அமையும்போது
சுவர்க்கத்தைப் பற்றிய கனவே மருந்தாகும்
மேய்ப்பன் இல்லாதது மந்தை ஆடுகளுக்கு
சுதந்திரம் தந்ததாய் ஆகாது
கடல் நீரைக் கையில் எடுக்கும்போதுதான்
அதற்கு நிறமில்லாதது தெரிகிறது
விண்ணுலகம் சத்தியத்தின் வழி செல்பவர்களை
மட்டும் சோதனைக்கு உள்ளாக்குகிறது
கடவுள் தன்மை என்பது இந்தப் பூவுடலை
கடவுள் காரியத்திற்கு பயன்படுத்த இடமளித்துவிடுவது
இயற்கை என் இருப்பை நிராகரித்திருந்தால்
நான் இங்கே உயிருடன் இருந்திருக்க முடியாது
பிரபஞ்சவிதியிலிருந்து சிலருக்கு விதிவிலக்கு
அளிக்கப்பட்டுள்ளது எனக்கு வியப்பாய் இருக்கிறது
இருளில் ஐந்தடி தூரம்வரை வெளிச்சம் கொடுக்கும்
விளக்கினை கையில் ஏந்திக் கொண்டு
ஐந்து மைல்களைக் கடந்துவிடலாம் அல்லவா
மணலில் பதிந்துள்ள கடவுளின் காலடித்தடத்தை
உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
கனவை விதைத்த பொருளினை அடைந்துவிட்ட பிறகு
இன்னொன்றை நோக்கி ஓடுகிறோமில்லையா
வாழ்வின் உண்மைகளை மனிதர்கள்
அறிந்துவிடக்கூடாது என்பதற்காக
இயற்கை பல கவர்ச்சிகரமான அம்சங்களால்
மனிதர்களை மயக்கி வைத்துள்ளது
கோபிகைகளிடம் ஆன்மனைக் கண்ட கண்ணனை
உங்கள் தவறுக்கு நியாயம் கற்பிக்க துணைக்கு அழைக்காதீர்கள்
எல்லோருக்கும் கடவுளிடம் அன்பிருக்கும்
ஆனால் கடவுளுக்கு பிடித்தமானவர்களின் பட்டியலில்
உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்பதே முக்கியம்
அழகு கவர்ந்திழுக்கும் அம்சமாக உள்ள வரைக்கும்
சாத்தானுக்கு சேவகம் புரிபவர்களாகத்தான் நாம் இருப்போம்
மலத்தின் மீதமரும் ஈக்களைப் போன்ற மனதால்
கடவுளைக் காண முடியாது
உனக்கு கண்கள் வாய்க்கப்பெறும்போது
இந்தப் பூமியில் இன்னொரு உலகம்
இயங்கிக் கொண்டிருப்பதைக் காண்பாய்
எல்லைக்குட்பட்ட மனதால் அப்படி என்ன
சுதந்திரத்தை அடைந்துவிட முடியும்
எவ்வளவு முயன்றாலும் அலைகளால்
வானத்தை தொட்டுவிட முடியுமா என்ன
எவ்வளவு காணிக்கை செலுத்தினாலும்
கடவுள் செயல்படும் விதியில் கைவைத்து
உன்னைக் காப்பாற்ற துணியமாட்டார்
வாழ்க்கை என்பது ரயில் பயணம்தான்
அவரவர் தங்கள் நிறுத்தம் வந்தவுடன்
இறங்கிச் சென்றுவிடுவார்கள்
ரயில் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும்
உனக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு கதவிருக்கிறது
அதை நீ தட்டுவதேயில்லை
கடவுள் உன்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்
அதை நீ காது கொடுத்து கேட்பதேயில்லை
இவ்வுலக மக்கள் கடவுள் குடிசையில் வாழும்
ஒரு ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
அறிவுக் கனியினால் மனிதனிடம்
கள்ளம் கபடமற்ற தன்மை மறைந்து போனது
கைவிடப்பட்ட இவ்வுலகில் வாழும்
நாமெல்லோரும் சாத்தானின் பிரதிநிதிகள்தான்.