குணாவும் அவன் அப்பாவும் ஊத்துக்காட்டம்மன் கோவில் தெருவழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். இருவருமே ஆறடி உயரம். ஒரே நிறம், மெல்லிய கருப்பு. குணாவின் தலை மயிர் முழுக்க கருப்பாகவும், அவன் அப்பாவினுடையது முழுக்க வெளுப்பாகவும் இருந்தது. இருவரில் எவருக்குத் தெரிந்தவர் எதிரில் வந்தாலும் இவர்கள் தந்தை மகன் என்று உறுதியாகச் சொல்லிவிடும் அளவுக்கு உருவ ஒற்றுமை இருந்தது. இருவரும் மெதுவாகவே நடந்து சென்றனர். வயதில் மட்டுமே 30 வருட வித்தியாசம் இருந்தது.
எதிரில் ரவி ஐயர் டி.வி.எஸ். எக்ஸலில் வருவதை குணாதான் முதலில் பார்த்தான். அவரைப் பார்த்ததும் தலை குனிந்துகொண்டே நடக்கத் துவங்கினான். இவர்கள் அருகில் வந்த ஐயர் குணாவின் அப்பா அருகில் வண்டியை நிறுத்திப் பேச ஆரம்பித்தார். ஆனால் குணா நிற்காமல் தொடர்ந்து நடந்தபடி இருந்தான். இவன் போவதை பார்த்த அப்பா இவனைக் கூப்பிட இவன் காதில் விழாதது போல் சென்று தெருமுனையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை வேளையாதலால் கடலூர் சாலையில் பேருந்துகள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன. அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று இவன் ஒருவாறு யூகித்தான். அவனுக்கு வேர்க்கத் துவங்கியது. தன்னுடன் நிமிர்ந்து நடந்து வந்த தன் அப்பா கொஞ்ச கொஞ்சமாக கூனிக் குறுக ஆரம்பித்தார். அவரின் பேச்சு கெஞ்சல் தொனியில் இருப்பதை தூரத்தில் இருக்கும்போதே அவன் உணர்ந்தான். ஒருபுறம் அவனுக்கு கோவமாகவும் மறுபுறம் குற்றவுணர்வாகவும் இருந்தது.
இதே போன்ற ஒரு மாலை வேளையில்தான் எட்டு ஆண்டுகளுக்கு முன் குணா அவன் அப்பாவுடன் கோவிலில் ஐயரைச் சந்தித்தான். அப்போது அவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். அன்று வெள்ளிக்கிழமை. கோவிலில் யாரோ ஒருவருடைய உபயம். அதனால் அம்மனுக்குப் பூஜைகள் நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் திரையை மூடி அவர் எதோ செய்வார். பிறகு திரையை திறந்து தீபாரதனை காட்டுவார். ஒவ்வொரு முறை அம்மன் ஒவ்வொன்றால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும். எண்ணெய், விபூதி, சந்தனம், பஞ்சாமிருதம் எனப் பல அபிஷேகங்கள் முடிந்து, மந்திரங்கள் ஓதி வேகமாக மணியடித்து கடைசியாக தரும் பொங்கலுக்காக மட்டுமே காத்திருந்த கூட்டத்துடன் குணாவும் அவன் அப்பாவும் நின்றிருந்தனர். குணாவின் அப்பாவைப் பார்த்ததும் சிரித்துவிட்டுக் குனிந்து குணாவை பார்த்து, “என்ன செட்டியாரே, நம்ம பையனா” என்றார், ஐயர்.
குணாவின் அப்பா சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையசைத்தார். ஐயர் குணாவிடம், “என்னடா படிக்கிற” என்றார்.
“ஏழாவது” என்றான் குணா.
“தினம் கோயிலுக்கு வாடா”
“தினமுமா பொங்கல் தருவாங்க”
“ஏன், பொங்கல்னா தான் வருவியா”
குணா அமைதியாக இருந்தான். பிறகு அவர்கள் இருவரும் எதோ பேசிக்கொண்டிருக்க குணா பொங்கல் சாப்பிடத் துவங்கினான்.
மறுவாரம் அவன் கோவில் பக்கமே போகவில்லை. அடுத்த வெள்ளியும், பொங்கலும் அவன் நினைவுக்கு வரத் திறந்து வைத்திருந்த புத்தகத்தை அப்படியே மூடி விட்டு எழுந்து கோவிலுக்கு விரைந்தான். அவன் இருந்த வன்னியப் பெருமாள் கோவில் தெருவில் இருந்து இரண்டாவது இடது திருப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெரு. தெருவின் கடைசியில் இருந்தது கோவில். ஓட்டமும் நடையுமாகச் சென்றான். கோவில் வாசலில் ஐயர் மட்டுமே இருந்தார். தன் சைக்கிளில் புறப்படத் தயாராக இருந்தார். தூரத்தில் இவனைப் பார்த்ததும் கொஞ்சம் கோவமாக இவனை அழைத்தார். குணா அருகில் சென்றதும், “எங்கடா போற”
“கோவிலுக்குத்தான் வந்த”
“கோவிலுக்கு வர நேரமாடா இது, சரி வந்து சைக்கில்ல ஏறு,” என்றார்.
குணா தயக்கத்துடன் சைக்கிளில் ஏற, அவர் வேகமாகச் சைக்கிளை உப்பளம் சாலையில் உள்ள கோவிலுக்கு ஓட்டிச் சென்றார். அதுவும் ஒரு முத்துமாரியம்மன் கோவில்தான். அங்கு இவருக்காக சில பெண்கள் காத்திருந்தனர். வேகமாக உள்ளே சென்ற அவர் திரையை மூடி தன் வேலையைத் துவங்கினார். குணாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஓடிவிடலாமா என்று யோசித்தபோது, திரையை லேசாகத் திறந்து ஐயர் இவனை அழைத்தார்,
“டேய் தம்பி, அந்த மணிய வேகமா அடிடா,” என்றார்.
கம்பியில் கட்டியிருந்த கயிரை அவிழ்த்து குணா வேகமாக மணி அடித்தான். அவன் மண அடிக்க அடிக்க கோவிலுக்கு ஒருத்தர் பின் ஒருத்தராக வந்தபடி இருந்தனர். இவர் பூஜையெல்லாம் முடித்து தீபாரதனை காட்டி வெளியே வந்து குங்குமம் கொடுக்கும்போதுதான் இவனைப் பார்த்து போதும் என்று கையசைத்தார். அதற்குள் குணா வேர்த்து நனைந்திருந்தான்.
குணாவின் வேலை ஐயருடன் இப்படியே படிப்படியாக தொடர்ந்தது. வெள்ளி என்பது வாரத்தின் அனைத்து நாட்களும் கோவிலுக்கு போக ஆரம்பித்தான். சில நாட்களில் ஐயருக்கு வேறு வேலைகள் எதாவது இருந்தால், குணாவே நேராகக் கோவிலுக்கு சென்று பக்கத்து வீட்டில் சாவி வாங்கி வந்து திறந்து விளக்கு ஏத்திவிட்டு வருவான்.
ஒருநாள் ஐயர் குணாவின் வீட்டிற்கு வந்து அழைத்தார். இவனும் எதோ கோவில் வேலை என்று அவருடன் சென்றான். அவர் வழக்கமாகப் போகும் இரண்டு கோவிலுக்கும் போகாமல் கடலூர் சாலையில் இருந்த பச்சைவாழியம்மன் கோவிலுக்குச் சென்றார். அந்தக் கோவிலின் கதவைத் திறந்து விளக்கு ஏற்றிவிட்டு வரும்போது ஒரு சிலர் கோவிலுக்கு வந்தனர். வந்தவர்களில் ஒருவர் ஐயரைப் பார்த்து, “அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு” என்றார்.
“இப்ப தேவலாம். நடக்க கொஞ்சம் நாளாகும். சொன்னா எங்க கேக்கறார். மழையில போவாதீங்கன்னா அப்பத்தான் வெளிய போய் கால உடச்சிக்கிட்டாரு” என்றார் அலுப்பாக.
“சரி விடுங்க எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு சாமி கும்மிட்டுச் சென்றார்.
அதன்பிறகு கோவிலுக்கு யாரும் வரவில்லை. புறப்படலாம் என்று எழுந்தபோது ஐயர் குணாவை அழைத்தார்,
“டேய் தம்பி, இங்க வாடா”
குணா அவர் அருகில் சென்று அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் வாயையே பார்த்தான்.
“குணா, எங்கப்பாதான் இந்த கோவில பாத்துக்கிறாரு. அவருக்கு உடம்பு சரியில்ல. கொஞ்ச நாள் நான் சொல்ற மாதிரி செய்,” என்றார்.
அவன் எதுவும் பேசாமல் அவர் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இங்க பாரு நாளையிலிருந்து தினமும் நீ இங்க வா, வந்து கதவ திறந்து விளக்கு போட்டுட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு திரும்ப கதவ சாத்திட்டு போய்டு. சாவியை ராத்திரி நான் போரப்ப வந்தி உன் வீட்டுல வாங்கிக்கற. யாருன்னா வந்தா தட்டுல கற்பூரத்த ஏத்தி மூணு சுத்து சுத்தி காமிச்சிட்டு விபூதியும், குங்குமமும். குடு. யாருன்னா ஐயர் எங்கன்னு கேட்டா இதோ வந்துடுவாருன்னு சொல்லிடு,” என்றார்.
“எவ்வளவு நேரம் இருக்கனும்”என்று கேட்டான் குணா.
“ஆறு மணிக்கு வா, ஏழரை மணிக்கு போய்டு. நான் எட்டரை மணிக்கு வந்து சாவியை வாங்கிக்கற. சாயங்காலம் ஐஞ்சு மணிக்குச் சாவியை வீட்டுல தந்திடற.” என்றார்.
குணா தயக்கத்துடன் சரி என்றான்.
“தட்டுல வர காச நீயே எடுத்துன்னு வந்திடு நான் உங்கிட்ட வாங்கிக்கிற” என்றார்.
மறுநாள் மாலை ஐயர் குணாவின் வீட்டிற்கு வந்தார். அவனிடன் சாவியையும், ஒரு நான்கு முழம் வேட்டியையும் தந்தார். அவனை வேட்டி கட்டிக்கொண்டு போகச் சொன்னார். அவன் தெரியாது என்று சொல்ல அவரே அவனுக்கு வேட்டியையும் கட்டிவிட்டார்.
குணா முதல் நாள் வேலையைச் சிறப்பாக செய்தான். சில்லறைகளையும் சாவியையும் ஐயரிடம் அன்று இரவு ஒப்படைத்தான். ஐயர் சில்லறைகளில் கொஞ்சமாக எடுத்து குணாவின் கைகளில் திணித்தார். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. மொத்தமாக இரண்டு ரூபாய்க்கு மேல் அவன் செலவு செய்ததில்லை. ஐயர் சென்றபின் உள்ளே குளியலறைக்கு சென்று எவ்வளவு என்று பார்த்தான். எட்டு ரூபாய்கள் இருந்தது. முதல் நாள் இருந்த தயக்கத்தை அந்த எட்டு ரூபாய் காணாமலாக்கியது. காசை அவன் வீட்டில் தரவில்லை. மறு நாளிலிருந்து அவன் தட்டில் இருக்கும் காசை எண்ண ஆரம்பித்தான். ஒவ்வோரு நாளும் ஒரே மாதிரி தான் காசு வந்தது. சில ரூபாய்கள் கூடக் குறைய இருந்தது. அது ஐயர் கொடுப்பதிலும் எதிரொலித்தது. அன்று ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாகத் தட்டில் அதிக பணம் விழ குணாவின் மூளை வேறு மாதிரியாக யோசித்தது. அதிகமாக வந்த காசையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டான். வழக்கமாகக் கொடுக்கும் காசையே ஐயரிடம் தந்தான். அதைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மாற்றத்தைக் கவனித்தான். கண்டுபிடித்து விடுவாரோ என்று பயந்தான். அவர் எதுவும் கேட்கவில்லை.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் குணா கோவிலில் இருக்கும்போது, ஒருவர் வந்து, ஐயர் எங்கே, என்று கேட்டார். வழக்கம் போல் இவன், இதோ வந்து விடுவார், என்றான். அதற்கு அவர் கோவமாக, “டேய், எத்தன நாள நீயும் இப்படியே புளுவின்னு இருப்ப” என்றார்.
இவன் கொஞ்சம் பயந்தவாறு அமைதியாக இருக்க, அவர் தொடர்ந்தார்
“நான் எதிர் ஊட்டுல தாண்டா இருக்கன். தெனிக்கும் பாத்துனு தான் இருக்கன் நீதான் வர, நீதான் போற,” என்று கத்தினார்.
அதற்குள் இரண்டு பெண்கள் வர அவர்களிடம் முறையிட்டடார். அவர்கள் இவர் பேசுவதை கண்டுகொள்ளாமல் சாமி கும்மிட, “எவன் எவனோ உள்ள வரான். கேட்க ஆள் இல்லாம போச்சு. நாளைக்கு காட்டற நான் யாருன்னு” என்று கத்திக்கொண்டே சென்றார்.
அனைவரும் சென்றதும் குணா கோவிலை பூட்டிக்கொண்டு, காசை எடுத்துக்கொண்டு வெளியேறினான். இரவு ஐயர் வந்தது அவரிடம் அனைத்தையும் சொன்னான். அவர் கத்தியதும் வந்துவிட்டதாகவும், காசு எதுவும் வரவில்லை எனவும் சொன்னான். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.
அதன்பிறகு ஐயர் குணாவை தேடி வரவில்லை. குணா கோவிலுக்கு ஐயரைத் தேடி சென்றான். அவர் இவனைக் கண்டுகொள்ளவில்லை. தன்னைத் தவிர வேறு யாராவது கோவிலுக்கு போகிறார்களா என்று கோவிலுக்கு சென்று பார்த்தான். அவன் ஐயரின் அப்பா காலில் கட்டுடன் இருந்தார். இவ்வளவு கையில் காசைப் பார்த்துவிட்டு இப்போது காசில்லாமல் குணாவிற்கு கோவம் கோவமாக வந்தது. வெள்ளிக்கிழமை பூஜைக்கு சென்று ஐயர் அழைப்பார் என்று காத்திருந்தான். அவர் அழைக்கவேயில்லை. வேறு சிறுவர்கள் மணியடித்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு அழுகை வருவது போல் இருந்தது. அனைவரும் போகும் வரை காத்திருந்தான். அனைவரும் சென்றதும் ஐயரே பேச ஆரம்பித்தார்,
“ஏண்டா… எங்கிட்ட எவ்வளவு காச திருடிருப்ப” என்றார்.
நேரடியாக இப்படிக் கேட்டதும் குணா பயந்துவிட்டான். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. அமைதியாக இருந்தான். மீண்டும் அவர் ஆரம்பித்தார்,
“எத்தன வருஷமா கோவில பாக்கறன், என்னிக்கு என்ன கிழமை, என்ன நாளுக்கு எவ்வளவு தட்டுல விழுமென்னு எனக்குத் தெரியாதா, நீ தெனமும் உனக்குன்னு கொஞ்சம் தனியா எடுத்துக்கின்னுதான் எங்கிட்ட காச தந்திருக்கிற. சரி போனா போவுதுன்னு விட்ட,” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். அந்த நேரம் யாரோ ஐயரிடம் வந்து பேச்சு கொடுக்க அவன் வீட்டுக்கு ஓடிவந்து விட்டான். அதன் பிறகு இவன் கோவில் பக்கமே செல்லவில்லை. ஐயரை வழியில் எங்காவது பார்த்தாலும் மறைந்துகொள்வான். வளர வளரக் கொஞ்சம் தயிரியம் வந்தது. அவர் எதிரில் வந்தால் இவன் எங்கோ பார்த்த மாதிரி சென்றுவிடுவான்.
“டேய் போலாமா?” என்றார் குணாவின் அப்பா. குணா திரும்பிப் பார்த்தான். ஐயர் போய்விட்டிருந்தார். அவன் அப்பா அவனுடன் எதுவும் பேசவில்லை. இருவரும் வீட்டிற்கு வந்தனர். குணாவிடம் மெதுவாக அவன் அப்பா, “ஐயர் ரொம்ப வருத்தப்பட்டார். நீ பண்ணது தப்பு. கோவில உன்ன நம்பி விட்டா நீ இப்படியா பண்ணுவ” என்றார். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. பிறகு அவரே தொடர்ந்தார், “நீ போய் அவர்கிட்ட மன்னிப்பு கேளு. எனக்குக் கஷ்டமா இருக்கு. நான் எப்படி இனிமே அவர் முகத்துல முழிப்பேன்,” என்றார்.
குணா அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண்களில் கோபம் தெரிந்தது. ஆனால் அதை மறைத்தவாறு தலையை குனிந்து கொண்டான். அப்போது மாடியில் துணி காய்ப் போட்டுவிட்டு அவன் அம்மா உள்ளே வர, அவன் அப்பா, “நாலு மணிக்குப் போ, ஐயிரு வீட்டுலதான் இருப்பாரு” என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.
குணா அவர் போவதைப் பார்த்தவாறு அவரிடம் சொன்னான்,
“என்னால மன்னிப்பலாம் கேக்க முடியாது.” என்று சொன்னான்.
திரும்பி அவர் முறைக்க, இவனும் பதிலுக்கு முறைத்தான். பிறகு அவர் தீர்மானமாக சொன்னார், “இதப்பார், நீ பண்ணத்த அவர் இன்னும் யாருகிட்டயும் சொல்லாம இருக்கறதே பெரிய விஷயம், ஒருவேளை இது வெளிய தெரிஞ்சி நாலு பேரு எங்கிட்ட வந்து, என்ன உன் புள்ள இப்படி பண்ணிட்டானேன்னு கேட்டா, நான் நாண்டுன்னு தான் சாகனும், ஒழுங்கா போய் மன்னிப்பு கேளு,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அவன் அம்மா நடப்பது எதுவும் தெரியாமல் முழிக்க, இங்கிருந்தால் அம்மாவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று அவன் வேகமாக வெளியேறினான்.
மாலை நான்குமணி. குணா ஐயர் வீட்டிற்குச் சென்றபோது அவர் வாசலிலேயே நின்றிருந்தார். இவனைப் பார்த்தவுடன் மெல்லப் புன்னகைத்தார். இவன் அமைதியாக அவர் முன் நின்றான்.
“என்னடாப்பா சவுக்கியமா” என்றார் நக்கலாக.
குணா அவர் கண்களை பார்த்து “நான் திருடன்தான். எனக்குப் புரியுது. நீங்க யாரு?” என்று கேட்டுவிட்டு பொறுமையாகத் திரும்பி நடந்தான். அவர் முகம் மெல்ல மாறிக் கொண்டிருந்தது