ஆதவனின் ‘அகதிகள்’

வெ. சுரேஷ்

அண்மையில் என் மகள்கள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு அவரது மருமகள் தனது மூன்று மாதக் குழந்தையுடன் சில நாட்கள் முன்தான் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார். அவளது கணவர், வேறு ஊரில். மகள்களுக்கு வியப்போடு வருத்தமும், “இவங்க ஏம்ப்பா இங்க இந்த வீட்ல வந்து இருக்காங்க? எப்படி இங்க அவங்க ஹஸ்பண்ட்கூட இல்லாம இங்க இருக்க முடியும்? எங்களுக்கு அவங்களப் பாத்தா பாவமா இருக்குப்பா,” என்று புலம்பித் தீர்த்து விட்டார்கள். “உங்க அம்மாலேர்ந்து அநேக பெண்களுக்கும் இதுதாண்டா நம்ம நாட்டுல வாழ்க்கை,” என்று சொல்வதற்குள், “நானும் அப்படித்தான் இருந்தேன். நாளைக்கு உங்களுக்கும் அப்படித்தான்,” என்று மனைவி பளிச்சென்று கூறினார். உண்மைதானே?

ஆனால், மனைவி நம் வீட்டுக்கு வந்து வாழத்  துவங்கும்போது, இதை அவ்வளவாக நினைக்காத மனம், நாளை என் மகள்களுக்கும் அப்படித்தானே என்று எண்ணும்போது துணுக்குறத்தான் செய்கிறது. இதை அசை போட்டபடி இருந்தபோது, ஆதவனின் ‘அகதிகள்’ எனும் சிறுகதைக்குத் தாவியது மனது.

அதுவும் வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் உருவாக்கும்  மனநிலை பற்றிய கதைதான். இருவேறு பாரம்பரியங்கள், மரபுகள்   பின்னணிகள் கொண்டவர்களிடையேயான உறவுகள் பற்றிய கதை. இரு நண்பர்களுக்கிடையே அகதிகள் குறித்தான உரையாடலில் துவங்குகிறது, பிறகு வன்முறை, மனிதர்கள் திடீரென்று தம் சக மனிதர்களை பகைமையும் குரோதமும் கொண்டு பார்ப்பதையும், வெட்டிக் கொன்று விடுவதையும் குறித்துப் பேச்சு தொடர்கிறது. இந்த வேறுபாடுகள், இதனால் கிளர்ந்தெழும் துவேஷ உணர்வுகள் பற்றியும் பேச்சு வரும்போது, கதை சொல்லியின் நண்பர், தமிழரின் தொன்மையான நாகரிகம், மொழி முதலானவற்றின் மீதான, சிங்களரின் தாழ்வுணர்ச்சியும் பொறாமையுமே அவர்களின் துவேஷ உணர்வுக்கும் இலங்கைப்   பிரச்னைக்கும் மூல காரணமென்கிறார்.

விவாதத்தின் ஒரு கட்டத்தில் கதைசொல்லி, வேண்டிய அளவுக்கு குரோதமும் பகைமை உணர்வுகளும் நம் வீடுகளிலேயே உள்ளது என்று சொல்லி, அன்பல்ல, வெறுப்புதான் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. பொறாமை, துவேஷம் இதெல்லாம்தான் மனிதர்களுக்கு இயல்பாக வருகிறது, இதற்கு நீர் பெரிய விளக்கங்கள் தரத் தேவையில்லை, என்று சொல்லி  விவாதத்தை முடிக்கிறார். பின் வீடு திரும்பும் கதைசொல்லியின் மனதில் தொடரும் எண்ணவோட்டங்களே மீதி கதையாக விரிகிறது.

வாசிப்பதில் அதிக ஆர்வமுள்ள, அதிகம் பேசாத மனிதர்களை, அச்சு மரபுக்கு உரியவர்கள் என்றும், வாசிப்பில்  அதிகம் நாட்டமில்லாத, ஆனால் பேசுவதிலும், சிந்தனையைவிட செயல் புரிவதில் அதிக நாட்டம் உள்ளவர்களை பேச்சு மரபைச் சார்ந்தவர்களென்றும், மக்கள் மரபு ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இக்கதைசொல்லியின் வீட்டில் உள்ள ஆண்கள் இருவரும் அச்சு மரபுக்காரர்களாக இருக்கிறார்கள், பெண்களில் கதைசொல்லியின் தாயார், நிச்சயமாக பேச்சு மரபுக்காரர்- பஜனை, கதாகாலட்சேபம் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்ட அவருக்கு பேசப் பிடித்திருக்கிறது. ஆனால், அவர் தன் வீட்டு ஆண்கள், இரு அச்சு மரபுக்காரர்களுக்கிடையில், எப்போதும் அந்நியமாய் உணர்பவர்.

இந்த நிலையில், கதைசொல்லியின் மனைவியாக வருபவர், எந்த மரபென்று எளிதாகப் பிரிக்க முடியாத இயல்புடையவர்- படிக்கப் பிடிக்கும், அதைவிட பேசப் பிடிக்கும். இந்த அச்சு மரபுக்காரர்களின் இறுக்கமும் முசுட்டுத்தனமும் நிறைந்த வீட்டில் மருமகளின் வருகை நிச்சயம் இன்னொரு பேச்சுமரபுக்காரரான அந்தத் தாய்க்கு பலம் சேர்த்திருக்க வேண்டும், அவரை மகிழ்ச்சியடைய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அது அப்படி நிகழ்வதில்லை. தன்னிலிருந்து வேறுபட்டு இருப்பவரைக் கண்டு மட்டுமா வெறுப்பு முளை  விடுகிறது? தன் மருமகளின் கலகலப்பும் தன் இயல்பில் அவர்  உறுதியாக இருக்கும் நிலையும் இவரிடத்தில் அன்பை அல்ல, ஒரூ பாதுகாப்பின்மையையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

வாய் திறவாமல் ‘பதவிசாக’ இருக்கும் பக்கத்து வீட்டு மருமகள்களே இப்போது அவரைக் கவர்கிறார்கள். இப்போது அவர் முன்பைவிட அதிகமாக கோவிலுக்குப் போகிறார். தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள, தனக்கு என்று ஒரு கௌரவம் தேடிக் கொள்ள, வாழ்நாளெல்லாம் அச்சு மரபைத் துரத்திக் கொண்டிருந்த அந்தத் தாய் அதற்கு பதில் தன்  மருமகளைப் போல்,  தன் இயல்பிலேயே ஸ்திரமாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறாள். தன்னிடம் உள்ள திறனில் நம்பிக்கையுடன் இருக்கும் மருமகளின் குணத்தைக்  காணும்போது எரிச்சலடைகிறாள். வேறெதையும் துரத்தாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும் ஒரு கோபம், எரிச்சல் வரத்தானே செய்கிறது? பல சமயங்களில் சாத்வீகமும் பொறுமையும்கூட பகைமை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? உணவு, உடை, உறையுள் என்ற இந்த மூன்று அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பால் உள்ள வேறுபாடுகள் அத்தனைக்கும் மனமே காரணமாகிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் தனி எனப் பிரிந்திருக்கும், தனக்குரிய வீட்டுக்கு வெளியே ஆதரவு தேடும், இந்த உலகமே ஒரு பெரும் அகதி முகாம் என்றும் சில சமயம் தோன்றாமலில்லை.

ஆதவன், பேச்சு மரபு, அச்சு மரபு என்று பேசுவது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டிக்கொள்வதற்கு அல்ல. தளம் இலக்கியச் சிற்றிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் கி. ராஜநாராயணன், எல்லா மொழிகளையும் ஒலிப்பான்கள் (phonetic script) கொண்டு எழுதும்போது அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது, என்கிறார். ஒலிகளுக்கு இடையே பிரிவினையில்லை என்பதால் ஒலிப்பான்களை பொது எழுத்துருக்களாக பரிந்துரைக்கவும் செய்கிறார். மொழியைச் செவிப்பதற்கும் கண் கொண்டு காண்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கி.ரா. மிக நுட்பமாக உணர்ந்திருக்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். பேச்சு மரபு, நேரடியானது, ஊடகமற்றது- unmediated என்று சொல்லப்படுகிறது. அச்சு மரபில் ஒலியின் தூல வடிவம் ஒரு ஊடகமாய் குறுக்கிடுகிறது. பேச்சு மரபைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத வகையில் அச்சு மரபில் உள்ளவர்களுக்கு மொழி ஒரு கருவியாகிறது. மனம் மொழியடுக்குகளின் வழி தன்னைத் தொகுத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதால் அச்சு மரபினரின் மனம் மொழியால் அமையும் கருத்துகளின் கருவி நிலையில் இயங்கவும் செய்கிறது. ‘அகதி’ கதையின் துயரம், பேச்சு மரபுக்கு உரியவளாக இருந்தாலும் கதைசொல்லியின் தாய், தன் மருமகள் அச்சு மரபுக்கு உரியவராய் இருப்பதாலேயே அவரிடமிருந்து விலகிப் போகிறார்.

சிறு வயதில் தான் கண்ட பாகிஸ்தானிய அகதிகளைப் பற்றிய நினைவுகளில் துவங்கும் சிறுகதை, பின்னர் ஈழத் தமிழ் அகதிகளின் நிலை குறித்த எண்ணங்கள் என்று சென்று இன்னும் நெருக்கமாக கதைசொல்லி தன் வீட்டில் உள்ள நிலையை அகதிகளின் நிலையுடன் ஒப்பிடுவதில் முடிகிறது. தனி மனித சக்திகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு துயரத்தின் முன் நாம் என்னதான் செய்ய முடியும்? புறச் சூழல் பற்றி கோபப்படலாம், கவலைப்படலாம், தீர்வுகளைத் தேடலாம். ஆனால் நாம் செய்யக்கூடியது என்னவோ, முதலில் நம்முடன் இருப்பவர்களின் துயரை உணர்வதுதான்.

I saw the first refugees…. But even then I did not suspect when I looked at these fugitives that I ought to perceive in their pale faces, as in a mirror, my own life and that we all,  we all would become victims of the lust for power of this one man“, என்று எழுதுகிறார் Stephen Zweig, நாஜிக்காலத்தின் துவக்க அகதிகளைத் தான் எதிர்கொண்டது குறித்து, பல ஆண்டுகள் கழித்து. ஆதவன் பேரழிவு என்று சொல்லத்தக்க துயரங்கள் இல்லாத சாதாரண மத்திய வர்க்க வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அவராலும், தில்லி அகதிகளைப் பார்க்கும்போது, ஈழத்தமிழர்களின் நிலையை நினைக்கும்போது, அவர்களின் வெளிறிய முகங்களில் ஒரு கண்ணாடி போல் நம் வாழ்வைப் பார்க்க முடிகிறது. புத்திசாலித்தனத்தையும் கடந்த இந்தப் புரிந்துணர்வுதான் ஆதவனைத் தனித்து காட்டுகிறது.

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.