நான் ஆறாவது படிக்கும்போது எங்களுக்கு தெரிந்தவரொருவர் அவர் வீட்டு நாய் ஈன்ற குட்டிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தார். டாமி, ஜிம்மிகளுக்கு மத்தியில் வித்தியாசமாக, என் அம்மா குழந்தையாக இருக்கும்போது அவர்கள் வீட்டில் வளர்த்த ‘ஐவன்’ என்ற அல்சேஷனின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டதும், அந்தப் பெயரை கேட்பவர்கள் ஒரு கணம் துணுக்குறுவதும், எனக்கு பெருமிதத்தை அளித்தது.
பெயருக்கு ஏற்றாற்போல் ஆஜானுபாகுவாக, சிங்கம் போல் பிடரியுடன் கம்பீரமாக இருந்ததாக அம்மா குறிப்பிட்ட ஐவன் போல் இதுவும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டாலும், அது என்னவோ சராசரி நாய் போல்தான் வளர்ந்தது. வீட்டிற்கு அருகில் சின்ன சலனம் இருந்தாலும் குறைப்பது ஆரம்பத்தில் பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும் என் வீட்டிற்கு பலமுறை வருபவர்கள், அடுத்த போர்ஷனுக்கு வரும் விருந்தாளிகள் என யாரை, எத்தனை முறை பார்த்த பின்பும் குரைத்துத் தள்ளுவது அதன் மனநிலை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வீட்டின் பின்புறத்தில் இருந்த எங்கள் போர்ஷன்களுக்கு வர இருள் நிறைந்த சந்துதான் வழி. எங்களுக்கு நேர் பின்வரிசையில் சிதிலமடைந்த கல்யாண மண்டபம், யாரும் குடியிருக்காத பேய் நடமாட்ட புரளிகள் உலவும் பங்களா பாணி வீடு, காலி மனை. எனவே இப்படி ஒரு காவல் தேவைதான் என பக்கத்து குடித்தனக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும். ஐவனின் குரைப்பு குறித்து பிரச்சனை எழவில்லை, அதுவும் இஷ்டம் போல் குரைத்துத் தீர்த்தது. அதன் சத்தம் முன் சந்தையும் தாண்டி தெருவரை கேட்பதால், ‘அந்த கத்து கத்துனு கத்தற நாய் வீடு இருக்கற தெரு’ என்பது பெரிய மணியக்காரத் தெருவிற்கு அடையாளமாகிவிட்டது.
ஒரு நாள் சனிக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் நூலகம் செல்லக் கிளம்பியவன் தூங்கிக் கொண்டிருந்த ஐவனுக்கு மூக்கில் முத்தமிட முயன்றேன். பயமோ, தூக்கம் கலைந்த கோபமோ, உறுமியபடி என் மீது பாய்ந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழ, ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவனை அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காதான் முகத்தில் ரத்தம் என்று தடுத்து நிறுத்தினார். ஐவனின் நகமோ பல்லோ பட்டு கண்ணிற்கு மிக அருகில் கன்ன எலும்பில் காயம். எதனால் என்று சரியாக தெரியாவிட்டாலும் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என்றார் டாக்டர்.
தொப்புளைச் சுற்றி பத்து பன்னிரண்டு ஊசி போடப்படுமே என்ற பீதியில் இருந்தவனுக்கு, நாய்க்கடிக்கு புதிதாக சந்தைக்கு வந்திருந்த, ஒரு முறை மட்டுமே போட வேண்டிய முன்னூற்றி ஐம்பது ருபாய் தடுப்பூசி கொஞ்சம் நிம்மதி அளித்தாலும் வேறொரு சந்தேகம் உண்டானது. சமீபத்தில்தான் ‘கெனி பிக்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொண்டிருந்தேன். இரண்டொரு நாட்களில் கன்னவெலும்பு கருநீல நிறமாகி , கொருக்குத் தட்டியிருந்தது. இரண்டு வாரங்கள் கழித்து அது உதிர்ந்து தோல் இயல்பான நிறத்திற்கு மாறும் வரை எங்கு சென்றாலும் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வு.
வீட்டில் ஐவனைக் கொடுத்து விடும் முடிவுக்கு வந்து விட்டார்கள். அது தெரியாமல் செய்து விட்டது என்று நான் சொன்னதை யாரும் கேட்பதாயில்லை, கண் தப்பித்தது என் அதிர்ஷ்டம்தான் என்றும் அடுத்த முறை அது மீண்டும் கை கொடுக்காமல் போனால் என்ன ஆகும் என்றும் கேட்டார்கள். அழைத்துச் செல்பவர் வந்த அன்று ஓலமிட்டபடி இருந்த ஐவனை அவர் இழுத்துச் செல்வதை தெருமுனை வரை அழுதபடி சென்று பார்த்தேன். அன்று ஐவன் செய்த ரகளையைப் பற்றி பெரிய மணியக்காரத் தெரு சில நாட்கள் நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்தால் என் அப்பாவின் கண்ணும் கலங்கி இருந்ததுதான் ஆச்சரியம். அம்மா அழுவது எனக்கு புதிதல்ல, அதற்கான சூழ்நிலை அடிக்கடி என் வீட்டில் உருவாகும். என் வயது பையன்கள் அழுதும் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரியவர்களில் ஆண்கள்கூட அழுவார்கள் என்று அன்றுதான் தெரிந்தது.
அதன்பின் திருமணம் முடிந்து மகனும் பிறந்து பின், எந்த யோசனையோ, காரணமோ இன்றி கிளி ஒன்றை வாங்குவது வரை வளர்ப்பு பிராணிகள் பற்றிய எண்ணம் தோன்றியதில்லை. என் பால்யத்தில் நடந்த, எப்போதோ மறந்திருக்க வேண்டிய மிக எளிய, ஆனால் மனதின் ஆழத்தில் இருந்து அவ்வப்போது மேலெழுந்து வரும் நிகழ்வு ஒன்றுதான் கிளிக்கும் எனக்குமான ஒரே நேரடி சம்பந்தம்.
எங்களை ஆரியர்கள் என்று சொல்ல முடியாது, எங்கோ எப்போதோ என் குடும்பத்தின் குடிமரபில் எங்கும் நேர்வது போல் இயல்பான கலப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கு என் மூக்கையும் ஒரு சான்றாக நான் முன்வைப்பதுண்டு. தாயைப் போல் தீர்க்கமான நாசி இல்லாமல் என் மகனும் ‘சப்ப மூக்கு சப்பான் பொம்மையாகிப்’ போனது குறித்து இரு குடும்பத்திலும் கொஞ்சம் வருத்தம். லவ் பர்ட்ஸ், பஞ்சவர்ணக் கிளி எனப் பலவகைப் பறவைகளை விற்றுக்கொண்டிருந்தவனிடம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு நான் கிளி வாங்க இவைகூட தூண்டுதலாக இருந்திருக்கக்கூடும். இத்தனைக்கும் லவ் பர்ட்ஸ் பார்ப்பதற்கு அத்தனை அழகு, குரலும் இனிமை. ஒரு கிளியின் விலைக்கு இரு லவ் பர்ட்ஸ் வேறு.
வீட்டிற்கு வந்தவுடன், கிளியை கொஞ்ச நேரம் ரசித்து விட்டு கூண்டை எங்கு மாட்டுவது, என்ன உணவு, யார் கொடுப்பது போன்ற, நான் அதுவரை யோசித்திராத நடைமுறை விஷயங்கள் குறித்து என் மனைவி முடிவுகள் எடுக்க ஆரம்பித்தாள். நானே உணவளிக்கும் பொறுப்பையும், கூண்டைச் சுத்தம் செய்யும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதாக சொன்னேன். பள்ளி முடிந்து வந்த மகனுக்கும் கிளியைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷம். ‘அம்மா மூக்கு மாதிரி இருக்குலப்பா’ என்று அவன் சொல்ல என் மனைவிக்கு கோபமாக வெளிப்படும் சந்தோஷம். ‘இதுக்கு என்ன பேருப்பா’ என்று கேட்டவுடன் தான் அதை பற்றிய நினைவு வந்தது. என் பாட்டி, சிறுவயதில் தன் வீட்டில் கிளி வளர்த்தார்கள் என்றும் அதன் பெயர் ‘மிட்டு’ என்றும் சொன்னார்.
நான் குழந்தையாக இருக்கும்போது என் பாட்டி தன் பால்ய கால அனுபவங்கள் பலவற்றை சொல்லி இருக்கிறார். பத்து பன்னிரண்டு வயது வாக்கில் அவர் மிகப் பெரிய கதைசொல்லி என்பது புரிந்தது. ஆனால் அதற்குப் பின் இத்தனை வருடங்கள் கழித்தும், அவர் சொல்வதில் எது உண்மை, பொய் என்பது எனக்கு பிடிபடுவதே இல்லை என்பதால் அவர் சொல்வதெல்லாம் பொய் என்ற இடத்திலிருந்தே ஆரம்பிப்பது என் வழக்கம். கிளி விஷயம் எப்படியோ, இப்போது பெயர்தான் முக்கியம் என்பதாலும், அவர் சொன்ன பெயர் எல்லோருக்கும் பிடித்துப் போனதாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ‘மிட்டு’வை இன்னும் வாஞ்சையாக ‘மிட்டு மியா’ என்று அழைக்கலாம், வட மாநிலங்களில் இந்த உருது பின்னொட்டு சேர்க்கும் வழக்கம் உண்டு என்ற கூடுதல் தகவலையும் பாட்டி அளித்தார். வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்தவர்தான் என்றாலும் வழக்கம் போல் இது குறித்தும் சந்தேகம் எழத்தான் செய்தது.
எழுந்தவுடன் ‘குட்மார்னிங்’, படுக்கும் முன் ‘குட்நைட்’ என மிட்டுவுடன் ஒட்டிக்கொண்டுவிட்ட என் மகன் பெரிதாக முடியாவிட்டாலும் கூண்டைச் சுத்தப்படுத்துவதில் எனக்கு உதவினான். கூண்டின் சிறு கதவைத் திறந்து உள்ளே ‘துவரம் பருப்பு’, தண்ணீர் கிண்ணங்களை வைப்பது அவனுக்கு ஒரு சாகசம். மிட்டு உண்டு முடித்து மூக்கை கூண்டின் கம்பிகளில் தேய்க்கும்போது, ஒற்றைக் காலை மட்டும் கொண்டு கம்பியை பற்றிக் கொண்டு நிற்கும்போது கிளர்ந்து சத்தம் போடுவான்.
அனைவருக்கும் மிட்டுவை பிடித்துப் போனாலும், அது என்னவோ விலகியே இருந்தது. முதலில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் வருத்தம் என்று நினைத்தாலும் அப்படியல்ல என்று விரைவில் புரிந்தது, அது உண்பதில் எல்லாம் எந்த சுணக்கமும் இல்லை. மிட்டுவிடம் எப்போதும் ஒரு அலட்சிய தோரணை, உள்ளே வைக்கப்படும் உணவையும் திறை ஏற்றுக்கொள்ளும் அரசனின் பாவனையுடன்தான் உண்ணும். என் அறையின் ஜன்னலோரத்தில் பறவைகளுக்கு வைக்கப்படும் தானியங்களை உண்ண அவை வரும்போதுகூட எந்த உணர்ச்சியையும் காட்டாது. இரவு நேரத்தில் என் மகன் தன் பாடங்களை அதற்கு படித்துக் காட்டும்போது மட்டும், கூண்டின் அருகில் வந்து ஒரு கண்ணை மூடியபடி கவனிப்பது போல் நின்றிருக்கும்.
ஒரு மாதம் கழிந்து கிளி எப்போது பேசும் என்ற கேள்வியை மகன் எழுப்பினான். அதற்கு தொடர்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றும், மிளகாயை அதன் நாவில் தேய்த்தால் விரைவில் பேசும் என்றும், தாங்கள் வளர்த்த கிளி அவ்வாறுதான் பேசியது என்றும் என் பாட்டி கூறினார். பயல் அதைச் செய்ய வேண்டும் என்றான், அவனுக்கு பத்து வயதாக இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. யார், எப்படி மிளகாயை அதற்கு தருவது? பாட்டி நடுங்கும் கையுடன் அப்படியே மிளகாயை நீட்ட அன்று மிட்டு என்ன மனநிலையில் இருந்ததோ பாட்டி கொஞ்சம் அசந்திருந்தால் விரலைப் பிடுங்கி விட்டிருக்கும்.’கோணக்கேடு பிடிச்சது, வயத்தாலி சனியன்’ என்று திட்டித் தீர்த்த பாட்டி அரைத்து விழுதாகக் கொடுக்கலாம் என்று அடுத்த யோசனையை சொன்னார். மிளகாய் சாப்பிட்டு ஒத்துக்கொள்ளாமல் கழிய ஆரம்பித்து இறந்து விடப்போகிறது, என்று என் மனைவி கூற அந்த யோசனையை கைவிட்டோம்.
ஆங்கிலமா, தமிழா என்று யோசித்து, பேச்சு வழக்கில் இருப்பது போல் இரண்டிலும் கற்றுத் தருவது, பின் மிட்டுவின் சமர்த்து என்று முடிவு செய்து, ‘குட்மார்னிங்’, ‘வணக்கம்’, ‘வெல்கம்’ என்று கலந்து கட்டிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். நானொருவன் அங்கு கத்திக் கொண்டிருப்பதை கவனிக்காமல், நான் அங்கில்லாதது போலவே மிட்டு நடந்து கொண்டது. இரவு நேரங்களில் அதற்கு தானறிந்த சில மாயாஜாலக் கதைகளை என் மகன் சொன்னதில் மந்திரவாதியின் உயிர் கிளியில் இருந்து குருவிக்கு குடிபெயர்ந்து, குருவி செத்தது. மிட்டு எப்போதும் போல் தலை சாய்த்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்ததே ஒழிய பேச மட்டும் செய்யவில்லை.
என் பாட்டி வேறு, தங்கள் ஊரில் கிளிகள் இந்த நேரத்தில் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் என்றும், ஒன்று இங்குள்ள கிளிகள் சாமர்த்தியசாலிகள் அல்ல, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் திறமையானவர்கள் இல்லை என்று பொருள்படுமாறு சொல்ல ஆரம்பித்தார். பாட்டியின் சொல்வன்மையை நான் நேரடியாக உணர்ந்தவன். மகனுக்கு என் திறமை மீது சந்தேகம் வந்து விடப் போகிறது என்று கிளியைப் பேச வைத்தல் பற்றி இணையத்தில் தேடி படித்து அவற்றில் சொல்லி இருந்தது போல் சில முயற்சிகள் செய்தேன். மகன் பேச ஆரம்பித்த காலகட்டத்தில் அவனுக்குக்கூட நான் இத்தனை சிரத்தையாக வார்த்தைகள் சொல்லிக் கொடுக்க்கவில்லை என்பது என் மனைவியின் அவதானிப்பு. எதுவும் பலன் அளிக்கவில்லை, மிட்டு கல்லுளிமங்கனாகத்தான் இருந்தது.
அடுத்த முயற்சியாக அறையில் யாரும் இல்லாபோது நான் அதற்கு வசைச் சொற்களையும், ஆபாச வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அதை கவனித்த என் மனைவி கடுப்பாகி விட்டாள். நல்லவற்றைவிட தீயவைதான் எளிதில் பதியும் என்பதால் அப்படி செய்தேன் என்று நான் சொன்னதற்கெல்லாம் அவள் சமாதானம் ஆகவில்லை. நான் சொல்வதை மகனும் கேட்டு அப்படியே பேச ஆரம்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று அவள் சொன்னது நியாயம் என்பதால் அந்த முயற்சியை நிறுத்தினேன்.
மிட்டு மகா கர்வியாக அல்லது படு முட்டாளாக இருக்க வேண்டும். அது அந்த வசை, ஆபாசச் சொற்களில் இருந்துகூட ஒரு வார்த்தையையும் கற்றுக்கொள்ளவில்லை. ஏன் மிட்டு நல்ல, பண்புள்ள கிளியாக இருக்ககூடாதா என்று என் மனைவி சொன்னதை நான் ஏற்கவில்லை, அதற்கும் பண்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது என்பது என் வாதம். கிளி மீதுள்ள என் ஆர்வம் குறைய ஆரம்பிக்க, அதை பராமரிக்கும் பொறுப்பு என் மனைவியிடம் சென்றது. மகனுக்கு நீதானே பொறுமையாக சொல்லிக் கொடுத்தாய், என்று அதையும் அவள் தலையில் கட்டி விட்டேன். யாருக்கும், எதற்கும் மிட்டு மசிந்து கொடுக்கவில்லை, அதற்கு சிறிதளவேனும் ஒட்டுதல் இருந்ததாக நாங்கள் நினைத்திருந்த மகனுக்கும்கூட. ஒவ்வொரு இரவும், விடுமுறை நாளிலும் அவன் அதன் முன் பொறுமையாக ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை.
இந்த நேரத்தில் மிட்டுவை விடுதலை செய்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன். மனைவியிடம் பேசிப் பார்த்தேன், முதலில் ஒப்புக்கொள்ளாதவளை, கிளிக்கு ஆயுசு குறைவு, அது இறந்தால் மகன் மிகவும் வருந்துவான், குழந்தையின் மனதை பாதிக்கக்கூடும், எனவே இப்போதே அதை வெளியே விட்டு விடலாம் என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லி என் வழிக்கு வர வைத்தேன். மகனிடம் இந்தப் பேச்சை ஆரம்பித்தபோது அவனும் ஒப்புக்கொள்ளவில்லை. கிளியை கூண்டில் அடைப்பது பாவம் என்று நான் இறுதியாக சொன்ன காரணத்தில் இருந்த அப்பட்டமான பொய்யை அவன் உணர்ந்திருக்கக் கூடும். அதை வெளிப்படையாக சொல்லும் வயதில்லை அவனுக்கு. ஆனால் ‘மிட்டுக்கு ப்ளை பண்ண தெரியும்லபா’ என்று மட்டும் கேட்டான்.
அந்த ஞாயிறு அன்று காலையிலேயே மாடிக்குச் சென்றேன். கலங்கிய கண்களுடன் இருந்த மனைவி, வர மாட்டேன் என்று சொல்லி விட்டாள், மிளகாய் கொடுக்க முயன்ற சம்பவத்திற்கு பின் மிட்டு மேல் கோபமாக இருந்த பாட்டிகூட கொஞ்சம் கனிந்திருந்தார். முகத்தில் சுரத்தே இல்லையென்றாலும் மகன் மட்டும் வந்தான். இறுதி நேர ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தி கூண்டை திறந்தேன். முதலில் புரியாமல் வழக்கம் போல் உள்ளேயே அமர்ந்திருந்த மிட்டு பின் வெளியே வந்து சில அடிகள் எடுத்து வைத்து திரும்பிப் பார்க்காமல் பறந்தது. அது கண்ணில் இருந்து மறைந்த பின்னும் தொடுவானத்தை பார்த்தபடி இருவரும் நின்று கொண்டிருக்க ‘மிட்டு வீட்டுக்கு போய் சேந்துடும்லபா’ என்று கேட்டான். எனக்கோ, ஐவன் வீட்டை விட்டுச் சென்று சில நாட்கள் கழித்து புதிய இடத்தில் சந்தோஷமாக இருப்பதாக கேள்விப்பட்டபோது ஏற்பட்ட அதே ஏமாற்ற உணர்வு.
GREAT STORY…WRITE MORE!