சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர்

(Unauthorised translation made for non-commercial use at this particular website only. The Author and Publishers have been contacted, and this post will be removed if permission to translate and display are denied.)

(ஆங்கிலத்தில், Eleanor Parker)

போஸ்ட்-ட்ரூத்‘ என்பது நம் காலத்துக்குரிய சொல் – குறைந்தபட்சம், ஆக்ஸ்போர்டு அகராதிகளின் பார்வையில்; அவை ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல்லை 2016ஆம் ஆண்டின் சிறப்புச் சொல்லாய் அறிவித்திருந்தன. ‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.

ஒரு புதிய சொல் தோன்றும்போது அது எதை விவரிக்கிறதோ அதுவும் புதியதாய் தோன்றிய ஒன்று என்ற எண்ணம் வலுப்பெறுகிறது: விவரிப்பதற்கான புதுச்சொல் தோன்றும்வரை அது இருக்கவில்லை என்ற எண்ணம். இந்த விஷயத்தில் நிலைமை அப்படியல்ல, ‘மெய்ம்மை-பிந்தைய’ என்ற சொல் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டாலும்கூட; வரலாற்றாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரியும், தகவல் குறிப்புகளுக்கு இருக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியுடன் உணர்ச்சிகளும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் பொதுக் கருத்தைக் கட்டமைக்காத காலம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. இப்போது என்ன வேறுபாடு என்றால், புனைச்சுருட்டுகளும் பொய்ச்செய்திகளும் எவ்வளவு வேகமாக புழங்குகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்: உண்மையல்லாத, அல்லது, திரிக்கப்பட்ட கதைகளை பரப்புவதில் மிகப்பெரும் செய்தி நிறுவனங்களும் பொது மக்களும் பங்கேற்க சமூக ஊடகங்கள் இடம் கொடுக்கின்றன. உண்மை குறித்த அக்கறை கொண்டவர்களுக்கு இது ஒரு வலுவான சவாலாய் இருக்கிறது.

ஆனால் பொய்க் கதைகள் தங்கு தடையின்றி பரவுகின்றன என்பது குறித்த கவலையும்கூட புதிதல்ல. 14ஆம் நூற்றாண்டின் இறுதில், ஜியஃப்ரி சாஸர் இது குறித்து ‘தி ஹவுஸ் ஆஃப் ஃபேம்’ என்ற கவிதையில் கூர்மையாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை ஒரு கனவு- தரிசனத்தை விவரிக்கிறது. இந்தக் கனவில் சாஸர், ஓயாமல் பேசிச் சிரிக்க வைக்கும் கழுகொன்றால் ஆகாயத்தில் தூக்கிச் செல்லப்பட்டு, சொர்க்கத்துக்கும் பூமிக்கும் நடுவில் நிற்கும் ஒரு கோட்டையை அடைகிறார். இதுதான் புகழ் வீடு. பேச்சிலும் எழுத்திலும் உதிக்கும் அத்தனை வார்த்தைகளும் இங்கு வந்து சேர்கின்றன.

கடலின் ஆர்ப்பரிப்பு போல் பல லட்சக்கணக்கான பேச்சுக்கள் அனைத்தின் ஓசைகளும் கோட்டையைச் சுற்றி ஆர்ப்பரிக்கின்றன. அவற்றின் விதியை நிர்ணயிக்கும் சக்திதான் புகழ்: அவளுக்குப் பல செவிகள், கண்கள், நாவுகள். அவள் தன் அரண்மனைக்கு வரும் சொற்கள் மற்றும் கதைகளின் விதியைத் தீர்மானித்து வீற்றிருக்கிறாள். கனவில் சாஸர், அவள் ஆணைகள் இடுவதைக் காண்கிறார்- அவை நியாயமற்றவையாகவும் வெளிப்பார்வைக்கு தன்னிச்சையாகவும் தோன்றுகின்றன. சில உண்மைக் கதைகள் மறக்கப்பட வேண்டும் என்றும் சில பொய்க் கதைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவள் தீர்மானிக்கிறாள்; நல்லவர்கள் சிலர் நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியவர்கள் என்றும், வேறு சிலர் மறதியின் இருளுக்குத் தக்கவர்கள் என்றும் சபிக்கப்படுகிறார்கள். அதே சமயம், தகுதியற்றவர்களுக்கு இறவாப் புகழும் அருளப்படுகிறது.

இதன் பின் சாஸர், இதைவிட சஞ்சலப்படுத்தும் ஒரு காட்சியை விவரிக்கிறார். புகழ் வீட்டைக் காட்டிலும் இது அதிக குழப்பமாகவும் நிலையில்லாமலும் இருக்கிறது: சுள்ளிகளால் ஆன இந்த வீடு, அசாத்திய வேகத்தில் சுழன்றபடி சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டில், ‘டைடிங்ஸ்‘ நிறைந்திருக்கின்றன; இது பயனுள்ள ஒரு மத்தியகால ஆங்கிலச் சொல், சேதி அல்லது தகவல் என்ற எளிய பொருள் கொண்டது, ஆனால் அதே வேளை வம்பு, வதந்தி போன்றவற்றின் எதிர்மறைச் சாயல்களும் அதிகம் கொண்டது. மனதில் நினைக்கக்கூடிய அத்தனை விஷயங்களைப் பற்றிய சேதிகளும் இந்த வீட்டில் சுற்றி வருகின்றன, அவை புழக்கத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் என்று அடுத்தடுத்து பேசிப் பெருகுகின்றன, விரைவில் பொய்யும் மெய்யும் இணைந்த பிரிக்க முடியாத கலவையாகி, நெருப்பைப் போல் பரவுகின்றன, ‘தவறித் தெறித்த பொறியால்/ நகரே தீக்கிரையாகும் போல்

குறிப்பாய்ச் சொல்லத்தக்க வகையில் கண்முன் நிற்கும் ஒரு தருணத்தை சாஸர் விவரிக்கிறார். வீட்டின் சன்னலின் வழியே வெளியேற ஒரு உண்மைக் கதையுடன் பொய்க்கதை ஒன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டுமே, “முதலில் என்னைப் போக விடு!” என்று கத்துகின்றன. இறுதியில், சகோதர உறவு பூண்டு உலகைச் சுற்றி வர இரண்டும் ஒப்புக் கொள்கின்றன. இனி இவர்களின் உறவுப் பிணைப்பு மிக நெருக்கமானதாக இருக்கும் என்பதால் யாராலும் மெய்யையும் பொய்யையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தச் சேதிகள் இதற்குப்பின் பயணிகளாலும், மாலுமிகளாலும், யாத்திரீகர்களாலும் எங்கும் கொண்டு செல்லப்படுகின்றன; உண்மைத் தகவல்களைவிட சுவாரசியமான கதைக்கு மதிப்பு கொடுப்பவர்கள் என்று மத்தியகால சமூகத்தில் முத்திரை குத்தப்பட்ட குழுக்கள் இவை.

சாஸரின் ஓசை மிகுந்த, கிறுகிறுக்க வைக்கும் புரளி வீடு, டிவிட்டர் பயனர்கள் எவருக்கும் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். எதைச் சாஸர் புரிந்து கொண்டு, இந்தக் கவிதையில் கூர்மையான வகையில் உயிர்ப்புடன் சித்தரிக்கிறார் என்றால், ஒரு கதை பரவுகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உண்மைக்கு மிக அபூர்வமாகவே மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதைத்தான். இந்த எண்ணத்தில் சாஸர் நீண்ட கால ஆர்வம் கொண்டிருந்தார், கான்டர்பரி டேல்ஸின் பின்னணியும் இதுவே: அந்தக் கவிதையில் யாத்திரிகர்கள் ஒருவருக்கொருவர் கதைகள் சொல்லிக் கொள்கையில், கதை கேட்பதும் பகிர்ந்து கொள்வதும் எவ்வளவு சிக்கலானது என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அவரவர் கதைகளை புகழும்போதும் வன்மையாகக் கண்டிக்கும்போதும் யாத்திரிகர்கள் தத்தம் நலன்கள் மற்றும் அக்கறைகளால்தான் உந்தப்படுகிறார்கள், கதைக்குரிய உள்ளார்ந்த மதிப்பால் அல்ல. கதையொன்று சொல்லப்பட்டபின், அது கேட்பவர்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதை கதை சொன்னவன் கட்டுப்படுத்த முடியாது.

புகழ் வீடு என்ற கதை, சாஸரால் முடிக்கப்படவில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ உலகு குறித்து கவலைப்படுபவர்களுக்கு அது விடைகள் எதுவும் அளிப்பதில்லை. சாஸர் விவரிக்கும் சித்திரத்தின் எதிர்வினையாய் நாம், நம் காலத்துக்குரிய ‘சேதிகளை’ பகிர்ந்து கொள்வதில் இன்னும் கவனமாய் இருக்க வேண்டும் என்று வேண்டுமானால் தீர்மானித்துக் கொள்ளலாம், ஆனால் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு சாஸர் அதிகம் இடம் கொடுப்பதில்லை. ‘மெய்ம்மை-பிந்தைய’ என்பது புதிய சொல்லாக இருக்கலாம், ஆனால் அது மிகப் பழைய பிரச்சினையை விவரிக்கிறது.

நன்றி – Chaucer’s Post-Truth World, Eleanor Parker, History Today 

ஒளிப்பட உதவி – A Clerk of Oxford

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.