அலைகடலில் மிதவைகள் கனவைச் சுமந்து செல்கின்றன. அலைகளை எதிர்த்தும் அவற்றுடன் இசைந்தும்,செல்லும் அவைகள் ஒளிக்கதிரில், புரிந்தும் புரியாமலும் புன்னகைக்கின்றன.
வண்ணக் கொடிகள் கட்டிய என் ஓடம் தனித்துத் தெரிகிறது. அதைக் காற்று சீண்டும்போதெல்லாம் கொடிகள் சீறுகின்றன, நிலைக்கு வருவதற்கு தவிக்கின்றன. பறக்காத கொடியில் பார்வை இலயிப்பதில்லை.
இதனுள் மூன்று பெட்டகங்கள் இருக்கின்றன. எல்லாம் உன் பொருட்டுத்தான்; ஒருக்கால் என் பொருட்டாகவும் இருக்கலாம். சொல்லவும், சொல்லாமல் சொல்லவும் எனக்கு நிறைய இருக்கிறது. உனக்கும் இருக்கலாம்? பின்னரும் அக்கரை போனது ஏன்?
மல்லியும், முல்லையும் சேர்ந்து பூத்த அதிசயம் நம் நட்பு. மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காலை. நீ எதிர் வந்தாய். நான் உன் எதிரில். ஆனால், எதிரியாக வரவில்லை. ஒரு தயக்கப் புன்னகை; தலையசைப்பில் நாம் மீண்டும் எதிரெதிர்.
எனக்குச் சிறு சபலம். என்னுடன் வருவாய் என. நடந்த பாதையில் மீண்டும் பயணிக்க மாட்டாயோ? அப்படியென்றால் அப்பால் அலைகள் தழுவும் கரையை நோக்கி ஏன் சென்றாய்? எனக்கு எதிர்த்திசை என்பதாலா? இந்தப் பிரிவினைகள் நமக்கு இல்லை என்று சொல்ல நான் தவித்தேன். நான் நீயாக நினைத்தபோது நீயும் நானாக நினைத்திருப்பாய். அது நமது வெற்றி. அதன் நினைவாகத்தான் அந்த பச்சைப் பெட்டகம்.ஆனால் அது நிறையவேயில்லை. இருந்தும் அதிலுள்ள பவள மணிகளை நான் எண்ணிப் பார்க்கையில் என்னுள் உணரும் இன்பம் உன்னிலும் வருகிறதா என இந்தக் கடல் கேட்டு வந்து என்னிடம் சொல்லும்.
எனக்கோ நிறங்கள், ஆசைகள், ஆவல்கள். உனக்கு பிடித்தது வெள்ளை அல்லவா?அதனால்தான் இரண்டாம் பெட்டகத்தில் முத்துக்கள். அது என் இயல்பின் வெளிப்பாடு என்பதும் உனக்குப் பிடிக்கும் என்பதால்தான். நீ வெண்முத்துக்களைச் சேர்த்து உன் மார்பில் அணைப்பதை என் வெண்கொடி நிச்சயம் வந்து சொல்லும். எனக்குத் தெரியும், உன்னால் அனைவர் எதிரிலும் அதை எடுத்து அணிய முடியாதென்று. ஆனாலும் என் வெள்ளைக்கொடி உன் கைவிரல்கள் அதை அளைவதை என்னிடம் மீண்டு வந்து சொல்லும்.
ஏனோ, நாம் அன்றொரு நாள் தற்செயலாக நின்றிருந்த சிறு குளக்கரையோரம் மீண்டும் சென்றேன். அதில் மண்ணெடுத்து கோபி சந்தனமெனக் குழைக்கிறார்கள். வாசனைத் துளி ஏதுமில்லை. கலாபச் சந்தனத்தின் விழைவு இல்லை. மண்ணனிந்த நெற்றி அல்லது நெற்றி அணிந்த மண்ணா?
கோபிகைப் பெண்கள் கூட்டமாக மரணித்த குளம். உனக்குச் சொல்ல நினைத்த அந்தக் கதை இன்னமும் சொல்லப்படவேயில்லை.அந்தக் குறையாத அன்பை வார்த்தைகளால் நான் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் உன் கண்கள் என்னைக் கெஞ்சும்-சொல்லிவிடாதே, நான் மரணப்பட்டுப் போவேன் என்று.
வெராவலில் கண்ணனின் காலில் அம்பு பட்டுவிட்டதாம்; அவன் என்னமோ சிரித்துக்கொண்டுதான் இருந்தான். அவன் குழல்தான் காற்றில் மிதந்து அவர்கள் உயிரை உருக்கியது. அவன் இல்லாமல் போவதைத் தாங்காத அந்தப் பெண்கள் இறந்த கோபி தலாபில் உன்னை நினைத்துக் கொண்டு,ஏதோ தோன்றி இந்தக் கடலின் கரைக்கு வந்து அலைகள் மூலம் தோணியில் என் கனவுகளை உனக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
நீ ஏன் இங்கு வந்தாய்? என்ன கற்றுக் கொள்ள வந்தாய்? கேத்தி பந்தாரின் மௌனச் சந்துகளில் ஓடியோடி உன்னை அழைத்த குரல் எது? எந்தக் காற்றின் உயிரோசையாய் அதை நீ இனம் கண்டாய்? துறந்தும், மறந்தும், துடிப்பும், தவிப்புமாய் அந்தக் கண்களில் நான் கண்ட துயரம்தான் என்ன? அதை நான் எப்படி உணர்ந்தேன்? அந்தத் துயரை நீ அணை தேக்கிப் பாதுகாப்பது உன் வெற்றி என்று யார் சொன்னார்கள்? தன் வாதையை முழுதும் மௌனமாக சகித்துக் கொள்ளும் வனமிருகமா நீ?
உன் கோட்டைக் கதவுகளை நான் தட்டித் தகர்த்தெறிய உண்மையாக முயலவில்லை. அதன் சிறு பிளவொன்றில் கால் நுழைத்து, உடல் நுழைத்து ஒரு சிலிர்ப்பாக உன் உளம் நிறைக்க விழைந்தேன். யாசகன் கேட்காத உணவை கைகள் கோர்த்து இருத்தி வைத்துக் கொடுக்க ஏன் இந்த விழைவு என என் தன்மானம் தடுத்தது. வண்ணங்களின் உலகை உனக்குக் காட்ட ஆசைப்பட்டேன்.
மண்ணையே பார்த்துக் கொண்டு இருக்கும் உனக்கு விண்ணைக் காட்ட வேண்டும். புல் வேய்ந்த குடிசையில் ஒரு வாரமேனும் உன் ஸுஃபி பாடல்கள் என் ஆத்மாவை துளைக்க வேண்டும். ஆகையால்தான் நீல வானை மட்டுமே காட்டும் வெற்றுப் பெட்டகமும் இதில் வைத்துள்ளேன். நீ அதை நிரப்பி அணுப்புவாய் என. நீ சிரிக்கிறாய் என நினைக்கிறேன். வரமாட்டாய் எனத் தெரிந்தும் என் மிதவைகள் பயணப்படுகின்றன.
சிந்து நதியின் மேற்பரப்பில் பட்டுத் தெறித்து நலுங்கும் நிலாக் கதிர்கள் இன்று மாலை அரபிக் கடலின் மேல் படர்ந்து அடர்ந்து சிவந்து அடங்கிய சூரியனின் கதிர்களல்லவா? இந்தக் கடலலையும் மீறும் அந்த துப்பாக்கி குண்டுகளை நீ இயக்கவில்லை என்று சொல்வதற்காகவாவது வருவாயா?