முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்திவிட்டு மெதுவே இறங்கி வரும்போதே அவள் அதிசயித்தாள், தனக்கு யார் கடிதம் போட்டிருக்கக் கூடுமென. நேற்று பெய்த மழை வாசலில் தேங்கியிருக்கிறது. அதில் அந்தக் கடிதம் விழுந்திருக்கக் கூடாது. நல்ல வேளை, ஈரம் படவில்லை. காய்ந்த இடம் பார்த்து போட்டுவிட்டுப் போயிருப்பது யார், ஜோசஃப்போ? ஜோசஃபாக இருந்தால் மோரோ, தண்ணீரோ கேட்டுக் குடித்துவிட்டு சில கதைகள் பேசிவிட்டுத்தான் போவார். ”பாப்பா, முக்கத்து வீட்டு வேணு, அதாம்ப்பா, முல்லைக் கொடி வெளிய படந்திருக்குமில்ல, அவருதான், மொத்தம் ஆறு புக் எஸ் எஸ் எல் சி, அதாம்மா, உங்க பதினோராவது, வாங்கினாரு. அந்த எக்ஸாமினரே அவரு வீட்டிக்குப் போயி இனி எழுதாதையா, நானே உனக்கு வேல பண்ணி வைக்குறேன்னு கால்ல விழுந்துட்டாரு” என்று சிரிப்பார். ஆனால் ஜோசஃப் எப்பொழுதோ ரிடயர் ஆகிவிட்டாரே. கடிதமே வராத ஒரு வீட்டிற்கு அதிசயமாக ஒன்று வந்திருக்கிறதே, அந்த ஆள் யாரெனப் பார்ப்போம் என்றுகூடத் தோணவில்லையே, இந்த தபால்காரருக்கு என எண்ணியதற்காக தன்னையே அவள் கடிந்து கொண்டாள்.
சிறு வயதில் ஜோசஃப் கொண்டு வரும் கோலி மிட்டாய்க்காக (கோலி மிட்டாயா, கோழி மிட்டாயா?) அவள் காத்திருப்பதுண்டு. அவரை ‘சான்டா க்ளாஸ்’ தாத்தா எனதான் நினைத்திருந்தாள் பலகாலம். அவளுடைய அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரை அவர் கொடுத்தபோது இதே போல் பிரித்துக்கூட பார்க்காமல் அவர் காலில் விழுந்ததும் அவர் பதறியதும் நிழலாடின.
எங்கிருந்து வந்திருக்கிறது இந்தக் கடிதம்? யார் எழுதியிருப்பார்கள்? தபால் முத்திரை தெளிவாக இல்லை, அனுப்பியவரின் முகவரியும் இல்லை. தன்னுடையதைப் போல் சாய்ந்த எழுத்தில் தனக்குத் தெரிந்து எழுதுபவர் யார்?
ஒருகால் அப்பாவாக இருக்குமோ? கண்ணம்மா என்று முகவரியில் எழுதியிருந்தால் அது நிச்சயமாக அப்பா. அவள் அவசரமாக முகவரியை மீண்டும் பார்த்தாள். இல்லை, கல்பனா என்றுதான் இருந்தது. ஏன் ஏமாற்றமும், ஆசுவாசமும் ஒருங்கே வருகிறது என அவளுக்குப் புரியவில்லை. அம்மா சிரிப்பது போல் கேட்டது, சிரிப்பைப் பழிப்பாக, பழிப்பைச் சிரிப்பாக மடைமாற்றம் செய்பவள் அம்மா. ”ஏன்டி, ஸ்வீட்டை இன்னமும் சாப்ட்ல, தயிர்ஞ்ஜாம் வேண்டாமா?”
‘கடேசில சாப்ட்றேம்மா’
“என்ன கடசியோ? டிரெஸ், பேனா எல்லாத்தையுமே கடசி, கடசின்னுட்டு”
‘இப்போகூட இந்த லெட்டர பிரிக்கறதவிட அதக் கடேசியா செய்யத்தான் தோணுதம்மா’ அம்மா நிச்சயமாக பழித்துக் கொண்டிருப்பாள். ஆனாலும், அம்மா கடிதம் எழுத மாட்டாளா, என்ன? அவள் மீண்டும் ஒருமுறை முகவரியைப் பார்த்தாள். அம்மாவின் எழுத்து குண்டு குண்டாக இருக்கும்.
அவள் யதேச்சையாக கையிலிருந்த காகிதத்தில் காற்றில் படபடக்கும் அந்த நீலப் பறவைகளைப் பார்த்தாள். உயிரற்ற பறவைகள். அவை உயிரும் கொண்டு வருமோ என்னமோ?
எல் ஜி ராய் எழுதியிருப்பானோ? கல்பனாவிற்கு சிரிப்பு வந்தது. எல் ஜி ராய் எழுதியிருப்பாரோ என்று நினைக்க வேண்டுமோ? அன்றுகூட எதிர்பாராத மழை. முழுதுமாக நனைந்த அவன் சீட் முன் நின்று தன் ஆர்டரைக் காண்பித்த நேரம்- அவனுக்கு வெல்கம் சொல்வதா, மேஜையிலிருந்து கைகளை எடுக்கிறீர்களா என்று சொல்வதா, எனத் திகைத்தாள். அவன் ‘சாரி’ என்றபின்தான் அவள் இயல்பிற்கு வந்தாள்.
“நீங்கள் ப்ரேஞ்ச் மாறி வந்திருக்கிறீர்கள். சாரி”
‘இல்லையே, விசாரித்துவிட்டுத்தானே வந்தேன்’
“சாரி, போய் போர்டைப் பாருங்கள்.”
அவன் போய்ப் பார்த்துவிட்டு மீண்டும் குழப்பத்துடன் வந்தான்.
“சரியாகத்தானே வந்திருக்கிறேன்” என்றான் அழாத குறையாக.
‘என்ன சார், ப்ரமோஷனில் வருகிறீர்கள், நேரத்திற்கு வர வேண்டாமா? லேட்டு முத நாளே. உங்க கன்ஃபர்மேஷன் ஒரு நாள் தள்ளிப் போகும் தெரியுதா?’ என்றாள் அவள்.
அவனுக்கு உயிர் வந்தது. ”சாரி, சாரி,” என்றான்.
அவனுடன் நிறைய ப்ரேங்க்ஸ். எப்போதும் எதற்காவது அவளிடம் மாட்டிக் கொள்வான். ஸ்டாக் இன்ஸுரன்ஸ் தேதியை அவன் ஒருமுறை கவனிக்கவில்லை. அது வங்கியில் அடமானத்தில் இருந்த கேஷ் க்ரெடிட் ஸ்டாக்ஸ். சோதனையாக அந்த ஸ்டாக்ஸ் திருடும் போய்விட்டது. மதிப்பு பத்து லட்சம். என்ன செய்வான் அவன்? நெக்லிஜென்ஸ், கேர்லெஸ்னஸ், கூட்டுச் சதி- காப்பு நிச்சயம். எப்படியெல்லாம் பயமுறுத்தினாள் அவனை அவள். அக்கவுண்டைப் பார்த்து அவளே அந்த காப்பீட்டைச் செய்துவிட்டாள் என்று அறிந்ததும் அவன் விட்ட பெருமூச்சு, அவள் கைகளை விடாது பற்றிக் கொண்டே இருந்தது, ‘பிசாசு’ என்று செல்லமாகத் திட்டியது, ‘முத்துடைத்தாம நிறை தாழ்ந்த பந்தற்கீழ்’ என மனம் விம்மியதோ? ராய் வெட்ஸ் சர்மிஷ்டா என அழைப்பிதழ் வந்தபோது பூத்த பவளமல்லி சற்று வாடியே வாசம் வீசியது.’ராய் வெட்ஸ் சர்மிஷ்டா, கல்பனா வெட்ஸ் ஹர் ஐய்ஸ்’ என கவித்வ சோகம் கவ்வியது. பச்சை ஓடு தெறித்து விரிந்து பருத்திக்காடு கிளியைப் பார்த்துச் சிரித்தது.
அவன் எழுதியிருப்பானோ, இந்தக் கடிதத்தை?அவனுக்கு தமிழ் எழுத வராதே? வடக்கே போன பிறகு முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே அவர்களுக்குள் கடிதங்கள். முதல் குழந்தை ஆண் என்று ஒரு கடிதம். அந்தப் பயலுக்கே இப்போது இருபது வயதிருக்குமில்ல? அவளை ’சேட்டர் பாக்ஸ்’ என்றே கூப்பிடுவான் ராய்.
ஒருகால் சாதனா வீட்டிலிருந்தோ? அவளுக்குத் தமிழ் தெரியும், ஆனால், பிடிவாதமாக ஆங்கிலத்தில்தானே எழுதுவாள்? அன்று அவ்வளவு கோபத்திலும் சரமாரியாக ஆங்கிலத்தில்தானே திட்டினாள். ஒருவேளை, அதற்காக மன்னிப்பு கேட்டு எழுதியிருப்பாளோ?
நசநசவென்று மழை அன்றைக்கு பெய்து கொண்டிருந்தது. அதற்கே மின்சாரம் நின்றுவிட்டது. சாதனா ஏற்றிய மெழுகுவத்தியில் தங்கள் மூவரின் உருவமும் கரும் பூதங்களெனச் சுவற்றில் அலைபாய்ந்ததை கல்பனா பார்த்துக் கொண்டேயிருந்தாள். தன் நிழலை சாதனாவின் நிழலில் சேர்த்தாள்; அவள் தலையிலடித்துக் கொண்டு சிரித்தது நிழலில் மிகக் கோரமாக இருந்தது. பின் சங்கரின் நிழலில் அழுத்தமாக இணைக்கப் பார்த்தாள். விளையாட்டாகத்தானா என்று அவளுக்கும் தோன்றாமலில்லை. மிக அடிக்குரலில் சாதனா திட்டியது வியப்பென்றால் முதலில் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டு எதுவுமே பேசாமல் அங்கிருந்தும் நகராமல் இருந்தானே அந்த சங்கர், அவனுடைய நிழலிலா என் நிழலை ஒட்டப் பார்த்தேன் என்று அவளுக்கு கசந்து வந்தது. இந்த வயதில் அப்படி ஒரு கசப்பு சாத்தியமா தனக்கு? அந்தக் கசப்பில் ஓர் இனிமையை அவள் உணர்ந்த மாதிரி சங்கருக்கும் ஏதாவது தோன்றியிருக்குமோ? அவன் இருளில் ஆடும் சலனங்களை அறிந்திருப்பான் என்றால் அவளிடம் எப்போதோ பேசியிருப்பானே? சரி, பின்னர் யார்? அந்த ஹோட்டலில் சந்தித்த பேராசிரியரா?
எல்லோரும் போகிறார்களேயென்று அவளும் அன்று ஐயப்ப பூஜைக்குப் போனாள். கருப்பும், காவியுமாக சரண கோஷங்கள், பூக்கள், சந்தனம், வியர்வை என கதம்ப வாசனை. மேளமும், நாகஸ்வரமும், குழந்தைகளின் அழுகையும், சலசலவென கலவையான பேச்சுச் சத்தமும் இழுத்துப் பார்த்தாலும், வழுக்கியோடும் எண்ணங்களும், யாரை ஏமாற்ற இங்கே இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்ற சாட்டையடியும் அவளுக்கு. மெதுவே நழுவி வருகையில் பயங்கரமாகப் பசித்தது. அருகில் இருந்த அந்த உணவு விடுதியிலும் மக்கள் திரள். அதில் நீந்தி ஒரு காலியான இருக்கையை ஒருவாறு அடைந்தாள். எதிரெதிரே ஒருவர் ஒருவராக அமரும் இருக்கைகள் ஒன்றில் நடுத்தர வயதுள்ள கண்ணிய தோற்றமுடைய ஒருவர் உட்கார்ந்திருந்தார். ’யாரும் வருகிறார்களா?’ எனக் கேட்டுவிட்டு ‘இல்லை, நீங்கள் உட்காருங்கள்’ என்ற பதிலால் பாதி பசி போய்விட்டது போல் உணர்ந்தாள். இவள் விரைவாக சாப்பிட்டு முடித்தும்கூட அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ’பில் வந்தால் பரவாயில்லை’ என இவள் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு ‘பில்’ முதலில் வந்தது. அவர் பணத்தை அட்டைக்குள் வைத்துவிட்டு எழுந்து போனார். அதை எடுக்க வந்த பணியாளரிடம் அவள் தன் பில்லைக் கொண்டுவருமாறு சொல்கையில், ‘இப்போ எழுந்து போகிறாரே, அவர் உங்களுடன் வந்தவரில்லியா, அவர் கொடுத்துவிட்டாரே’ என்றவுடன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பணியாளரை ஓடிப் போய் அவரை கூப்பிட்டு வரச் சொன்னாள்.
அவர் திகைத்து உடனே சமாளித்துக் கொண்டுவிட்டார், ”ஸாரி, மேம். நான் சாப்பிட்டதற்கான தொகை என்றே நினைத்தேன். அதனாலென்ன, பரவாயில்லை, நான் ‘ட்ரீட்’ கொடுத்ததாக இருக்கட்டுமே,” என்றார். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. தன் செலவு தன்னுடையது என்று பிடிவாதம் பிடித்தாள். அப்படி ஆரம்பித்த சந்திப்பு பாரதியும், ஓஷோவும், ரமணரும், அரவிந்தரும், திருமழிசை ஆழ்வாரும், ராஜா இசையமைத்த திருவாசகமுமென இரு வருடங்கள் கரை புரண்டு ஓடிற்று. காட்டாறு எங்கு தொடங்கும், எத்திசையில் பாயும், எப்போது திசை மாறும், எப்போது மறைந்து போகும், யார் சொல்லக்கூடும்? தொடர் நட்பிற்கான, தொடர் உறவிற்கான, எது தன்னிடம் இல்லை என அவள் சிந்தித்து அலுத்துவிட்டாள். அவள் முதன்முதலாகப் பரிசெனப் பெற்றது ஒரு தங்கச் சங்கிலி. அதன் கண்ணிகள் ஒவ்வொரு இடமாக விட்டு விட்டுப் போகையில் அவள் பற்ற வைத்துக் கொண்டேயிருந்தாள், பத்தர் மறுக்கும் வரை.
அதெல்லாம் இருக்கட்டும், இந்த எழுத்து அவருடையதில்லை. மருத்துவர்களைவிட கிறுக்கலான எழுத்து அவருடையது. மேலும், விலாசத்தை ‘டைப் ‘ செய்யும் வழக்கம் உள்ளவர். எழுதுவதைவிட பேசுவதிலல்லவா அவருக்கு விருப்பம் அதிகம்? அவரும் இல்லையென்றால் வேறு யார்?
எதற்கு இந்த சிந்தனை? பிரித்துப் பார்த்தால் தெரிந்து போகிறது. அவள் கூடத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு, பிரிக்கலாம் என நினைத்தாள். சுவரின் ஈரம் முதுகில் ஜில்லென்றிருந்தது. தமிழ் டீச்சர் லஷ்மிகாந்தம் நினைவிற்கு வந்தார். ‘நனை சுவர் கூரை கனைகுரல் பல்லி’ – என்ன ஒரு சொற்றொடர்! அவள்கூட நனை சுவரில் நின்று அந்தக் கடிதத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வாசலில் தேங்கியுள்ள மழை நீரில் தன் முகத்தைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது.
அருமை