உங்க அப்பா இனி வராதாமே, உனக்குத் தெரியுமா, என்றான் மணிமாறன் மேரியைப் பார்த்து.
மேரி அன்றுதான் சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாட வந்திருந்தாள். கசங்கிய பாவாடைச் சட்டையும் இரட்டை ஜடையும் போட்டிருந்தாள். எட்டு வயதை நெருங்கிக்கொண்டிருந்தாள். இருவரில் யார் கருப்பு என மணிமாறனுக்கும், மேரிக்கும் எப்போதும் ஒரு சண்டை வரும். இருவரின் நிறமும் அப்படி. பாதி விளையாட்டில் மணிமாறன் அப்படிக் கேட்டதும் இரண்டு நாட்களாய் மறந்திருந்த தன் அழுகையை மீண்டும் கண்களுக்கு ஞாபகப்படுத்தினாள். அதற்கு மேல் அவளுக்கு அங்கு நிற்கப் பிடிக்காமல் கடல் மணல் கால் புதைய வேகமாக தன் வீட்டிற்கு ஓடினாள். மணிமாறன் அவள் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். எங்கே அவள் தன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவாளோ என்று பயந்துகொண்டு எதிர்த் திசையில் ஓட்டம் பிடித்தான். சற்று நேரத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் அமைதியும் அலை ஓசையும் விளையாடிக் கொண்டிருந்தது.
புயல் அடித்து ஓய்ந்த இடத்தில் மீண்டும் பெருமழை பிடிப்பது போல் அமைதியைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் மேரி. அவள் அழுதுகொண்டு வருவதைப் பார்த்து, வீட்டின் மூலையில் சுருண்டு கிடந்த அனுசியா எழமுடியாமல் எழுந்து அவளை மார்போடு அணைத்து, ‘என்ன’ என்று கேட்டாள். அழுகையில் மேரிக்கு வாயில் வார்த்தை வரவில்லை. அவள் சமாதானமடையும்வரை காத்திருந்தாள் அனுசியா. அழுகை கொஞ்சம் சிறிதாக மீண்டும் கேட்டாள்.
“அம்மா, அம்மா, அப்பா வராதாமே, மணி சொல்றான்”.
அனுசியா எதுவும் பதில் சொல்லவில்லை அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்தவே பெரும்பாடாக இருந்தது. தான் இப்போது அழுதால் மேரி புரிந்துக்கொண்டுவிடும் என்று அவளை அப்படியே மார்போடு அணைத்தவாறு சுவரில் சாய்ந்துகொண்டாள். அழுத குழந்தை சிறிது நேரத்தில் அப்படியே தூங்கிவிட்டது. அவளை அப்படியே கீழே கிடத்திவிட்டு அவள் மெல்ல எழுந்து வெளியே வந்தாள்.
கிட்டத்தட்ட முப்பது நாள் ஆகிவிட்டது ஆரோக்கியம் கடலுக்குச் சென்று. கடலுக்குச் சென்று முதல் நாள் இரவே பெரும் புயல் மையம் கொண்டதாக அறிவிப்பு வர, கிராமமே பரபரப்பானது. அனைவரும் தள்ளியிருந்த பள்ளிக்கூடத்திலும், சமய கட்டிடத்திலும் தங்க வைக்கப்பட்டனர். கடலுக்குச் சென்றவர்களின் பெயர்கள், அங்க அடையாளங்கள், உயரம், எடை போன்ற விவரங்கள் குறிக்கப்பட்டன. பல குடும்பங்கள் மூன்று நாட்களும் அழுதவாறே இருந்தன. புயல் ஓய்ந்தும் மக்கள் ஊருக்குள் வர ஆரம்பித்தனர். தகவல்கள் வரத் துவங்கியது. கடலுக்குச் சென்ற பலரின் கதி என்ன என்றே தெரியவில்லை. சில மீனவர்கள் வேவ்வேறு ஊர்களில் கரையேறினர். பலரின் கதி என்னவென்றே தெரியவில்லை. நாட்கள் நகர்ந்தன. தேடுதல் நடப்பதாகத் தொலைக்காட்சி மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது. அவர்கள் இந்திய மீனவர்களா அல்லது தமிழக மீனவர்களா என விவாதங்கள் நடந்தன. மிதக்கும் பிணங்களை கண்டெடுத்தனர். எதுவும் முழுசாக இல்லை.
அனுசியாவுக்கு நாட்கள் நகர நகர நம்பிக்கை குறையத் துவங்கியது. அவள் வீட்டிலேயே அடைந்துகிடந்தாள். இரண்டு தெரு தள்ளியிருக்கும் அனுசியாவின் அம்மாதான் தினமும் மகளுக்கும் பேத்திக்கும் சமைத்துக்கொண்டு வந்து தந்துவிட்டு போனாள். அவளும் அழுது அழுது அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டாள். அனுசியாவுக்கு அப்படி முடியவில்லை. அது அவள் ஆசையாகக் காதலித்து, வீட்டை எதிர்த்து சண்டை பிடித்து, பட்டினி கிடந்து, அடி வாங்கி வென்றெடுத்த வாழ்க்கை. மகள் பிறந்ததும் அவள் வாழ்க்கை வேறு பரிணாமம் அடைந்தது. எப்போதாவது குடித்தவன் கூட மகளின் வருகைக்குப் பிறகு குடிப்பதை விட்டுவிட்டான். கடலம்மாவே தனக்கு மகளாகப் பிறந்தாக அவனுக்கு ஒரு நினைப்பு உண்டு. அவன் தன் மகளைக் கொஞ்சுவதை பார்க்கவே மற்றவர்களுக்கு அவ்வளவு ஆசையாக இருக்கும்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு தன் மகளை ஏமாற்றுவது என்று அனுசியாவுக்கு தோன்றியது. எப்படியும் ஒரு நாள் தெரிந்தே தீரும். சரி தெரியும் போது தெரியட்டும் என்று முடிவெடுத்தாள். இனி அடுத்த வேலையைத்தான் பார்க்க வேண்டும். “இந்தப் பிள்ளையை பாக்கவேனுமே” என்று பல யோசனைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இருட்டத் துவங்கியிருந்தது.
விடிவதற்கு முன்பே எழுந்துவிட்டாள் அனுசியா, மேரி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். வாசல் அருகே ஏதோ பேச்சுக்குரல் கேட்க என்னவென்று வெளியே எட்டிப்பார்க்க அங்கே பரட்டை என்பவன் யாரோ சிலரை கூட்டிக்கொண்டு வந்துக்கொண்டிந்தான். பரட்டை உள்ளூர்க்காரன். உடன் வருபவர்கள் அதிகாரிகளைப் போல் இருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் அனுசியா இறங்கிச் சென்று அவர்களைப் பார்த்தாள். வந்தவர்களில் ஒருவர், “அனுசியா நீயாம்மா” என்றார்.
இவள் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள்.
அவர் மீண்டும் தொடர்ந்தான் “இங்க பாரும்மா, நேத்து ராத்திரி ஒரு பொணம் கர ஒதுங்கிருக்கு. அடையாளம் தெரில. அடையாளம் குடுத்தவங்கள்ள எதுலாம் பொருந்தி வருதோ அவங்கள்ளாம் அடையாளம் காட்ட வர சொல்லிருக்கு. நீயும் காலைல 10 மணிக்கு டவுன் ஆஸ்பத்திரிக்கு வந்துரும்மா” என்றார்.
அனுசியா பெருங்குரலெடுத்து அழுதாள். வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதாள். அக்கம்பக்கத்து ஆட்கள் எல்லாம் கூடினர். சில பெண்கள் அவளுடன் சேர்ந்து ஒப்பாரி பாட துவங்கினர். அன்று விடிந்ததே ஏன் என்பது போல் ஆகியது. அதைப்பார்க்க முடியாமல் வந்தவர்கள் மெல்ல நகர்ந்தனர். அழுது அழுது மெல்ல ஓய்ந்து எழுந்தவள் அப்போது தான் கவனித்தாள் தனக்கு பின்னாள் நின்று கொண்டு மேரியும் அழுதுகொண்டிருந்ததை.
காலை வேளை பேருந்து முழுக்க வேலைக்குச் செல்பவர்களால் சூழ்ந்திருந்தது. எது நடந்தாலும் மக்கள் எப்போதும் அடுத்த வேலைக்குத் தயாராகவே இருப்பார்கள். அனுசியாவுக்கு போகவே விருப்பமில்லை. இது நாள் ஆரோக்கியத்தை நினைத்தால் அவன் சிரித்த முகமே நினைவுக்கு வரும். ஒரு வேலை அது அவனாகவே இருந்தாள். இனி காலம் முழுக்க சிதைந்த அவன் உருவத்தையேதான் நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா. அது எப்படி முடியும். அதை நினைக்கும்போதெல்லாம் பேருந்தை விட்டு இறங்கிவிடலாமா என்றே தோன்றியது அனுசியாவிற்கு. சில நொடிகள் யாராவது இவள் முகத்தை உற்றுப் பார்த்தாலே சொல்லிவிடுவார்கள், இவள் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறாள் என்று. அவள் முகம் அப்படித்தான் இருந்தது. சரியாக வாரப்படாத தலைமுடி காற்றில் பறந்து கொண்டிருந்தது. அரைமணி நேரப்பயணம் எதோ ஒரு நீண்ட பயணம் போல் இருந்தது.
கேட்டு விசாரித்துச் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தாள் அனுசியா. அவளுக்கு முன்பே அங்கு பல குடும்பங்கள் காத்திருந்தன. அதில் அவளுக்குத் தெரிந்தவர்களும் இருந்தனர். அழுகை சத்தம் சுற்றிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அவளுக்கு அப்போது அழவேண்டும் என்று தோன்றவில்லை. எல்லோரையும் சுற்றிப் பார்த்தாள். எல்லோரும் சொந்த பந்தங்களுடன் வந்திருந்தனர். ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். தன்னைப்பற்றி நினைத்தாள். தனக்கு இனி யார் இருக்கிறார்கள். தனக்கும் மேரிக்கும் இனி யார் ஆதரவு. ஆரோக்கியத்துக்கு இருந்த அம்மாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாள். தனியாக இந்த வாழ்க்கையை இனி எப்படி எதிர்கொள்வது என்ற பயமே அப்போது அவளிடம் இருந்தது.
மருத்துவமனை ஆட்களும் உள்ளுர் போலிஸும் வந்ததும் பிணவறை திறக்கப்பட்டு சிறிது நேரத்தில் ஒவ்வொரு பெயராக கூப்பிடத் துவங்கினர். மனைவி அல்லது தாய், தந்தை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இருவருமே இல்லையென்றால் யார் நெருங்கியவர்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முதல் பெயர் கூறப்பட்டதும் ஒரு குடும்பம் பெருங்குரலெடுத்து அழத் துவங்கியது. இப்படி ஒவ்வொரு பெயர் கூப்பிடும்போதும் ஒவ்வொரு திசையில் இருந்து அழுகுரல் கேட்டவாறு இருந்தது. உள்ளே சென்று வருபவர்கள் எல்லோருமே மார்பில் அடித்துக்கொண்டே வெளியே வந்தனர். எல்லோருமே தன் கணவன் போலத்தான் இருப்பதாகவும், தன் மகனை போலத்தான் இருப்பதாகவும் சொன்னார்கள். எவராலும் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. அனுசியா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மேரி மட்டுமே அழுதவாறு இருந்தாள். அனுசியா அவளைச் சமாதானப்படுத்தினாள் “அது நம்ம அப்பாவா இருக்காது, அங்கப்பாரு அது அவங்க அப்பாவாம், நீயேன் அழற” என்று மேரியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அனைத்துப் பெயர்களும் அழைக்கப்பட்ட பின் கடைசியாக அனுசியா அழைக்கப்பட்டாள். அனுசியா அங்கு ஏற்கனவே பார்த்திருந்த ஒரு பெண்ணிடம் மேரியை விட்டுவிட்டு உள்ளே சென்றாள்.
பிணவறையின் குளிர் அவள் உடலில் தாக்கியதும் அவளுக்கு ஏதோ இனம் புரியாத ஒரு பயம் உருவாகியது. இதயம் வேகமாகத் துடிக்க துவங்கியது. மயக்கம் வருவது போல் இருந்தது. அவள் போர்த்தப்பட்ட ஒரு உடலின் அருகில் அழைத்துச் செல்லப்பட்டாள். அப்படியே ஓடிவிடலாமா என்று நினைத்தாள். அங்கு காவல்துறையை சேர்ந்தவர்கள் இருவரும், மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று பேரும் இருந்தனர். அவளிடம் பெயர் விவரமெல்லாம் கேட்டு சரி பார்த்த பின்னர். அவளுக்கு அந்த பிணம் திறந்து காட்டப்பட்டது. முதலில் பார்த்தும் அவள் மிகவும் பயந்துவிட்டாள். பிறகு மனதை தேற்றிக்கொண்டு பார்த்தாள். சரியாக அடையாளம் தெரியவில்லை. பிறகு கீழே கால்களைப் பார்த்தாள். கால்களை பார்த்ததும் அவளுக்குத் தெரிந்துவிட்டது. அது அவள் கணவன்தான். இரண்டு ஆண்டுகள் முன் நடந்த ஒரு விபத்தில் ஆரோக்கியத்துக்கு காலில் பிளேட் வைக்கப்பட்டிருந்தது. அது சரியாக அங்கேயிருந்தது. அனுசியாவிற்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது. அப்படியே மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள். அவளைத் தூக்கிக்கொண்டு வந்து வெளியே காற்றாற அமரச்செய்து தண்ணீர் தெளித்து எழுப்பிக் குடிக்க தண்ணீர் தந்தனர். தண்ணீரைக் குடித்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பொங்கி வந்த அழுகை அடக்க அந்த நேரம் போதுமானதாக இருந்தது. சுற்றுக்கூட்டம். போலிஸும், ஆட்களும் நின்றிருந்தனர். ஒரு போலிஸ்காரர் அவளிடம் கேட்டார்.
“என்னமா எதுனா அடையாளம் தெரிஞ்சிதா” என்று.
அவள் மேரியை ஒருதரம் பார்த்தாள். மேரி அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அழத் தயாராக இருந்தாள். மற்ற குடும்பமும் அவள் எதையோ கண்டுபிடித்துவிட்டாள் என நம்பியது. அவர்களும் அவள் சொல்லப்போகும் பதிலைக் கேட்க ஆர்வமாக இருந்தனர். அவள் போலிஸை பார்த்து அது தன் கணவன் போல் இல்லை என்றாள். மற்றவர்கள் முகத்தில் ஒரு ஏமாற்றம். மேரியின் முகத்தில் நிம்மதி வந்தது.