இருள் கவியத் தொடங்கியதும் புத்தர் சிலை ஒளிரத்தொடங்கியது. சிறு நியான் விளக்குகள் கற்களில் வைத்துப் பொருத்தப்பட்டிருந்தன. அவை கல்விளக்குகள் என அழைக்கப்பட்டன. நானும் அதை கல்விளக்கு என்றுதான் அழைக்க விரும்பினேன். மாலையானதும் ஒளிரத் தொடங்கும் கல்விளக்கின் ஒளியில் புத்தரின் அமைதி ததும்பும் தியானத் தோற்றம் பகல் வெளிச்சத்தில் வெளிப்படுத்தாத மர்ம சாசுவதத்தை நியான் ஒளியில் வெளிப்படுத்தியது.
அந்தப் பகுதியில் ஒவ்வொரு சந்தியிலும் அரசமரத்தின் கீழ் கல்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த புத்தர் சிலைகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த நகரத்திலுள்ள சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒரு கற்கை நெறியைத் தொடரும்போது எனக்கு சரத் ஆனந்தவுடன் நட்பு ஏற்பட்டது. அவன் மாத்தறையிலிருந்து இந்தக் கோர்ஸ் செய்வதற்காக வந்திருந்தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எங்களுக்கு விரிவுரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. பொரலஸ்கமுவயிலுள்ள சமுத்ரா தேவி பிரிவேனாவில்தான் வகுப்புகள் நடந்தன. பிரிவேனாவின் நுழைவாயிலில் இரண்டும், பிரிவேனாவின் உள்ளே எட்டுமாக மொத்தம் பத்துக் கல்விளக்குகள் பல் வர்ண அழகுடன் புத்தர் சிலையைப் போர்த்தி இருந்தன. மாலைப்பொழுதில் அதிலிருந்து கசிந்து வரும் வர்ண ஒளி ஒருவித மர்ம அழகை வளாகத்தின் சூழலுக்கு கடத்தியது.
சரத் ஆனந்த வர்ண ஒளியில் ஜொலிக்கும் புத்தர் மீது எந்தவித ஈடுபாடும் அற்றவன் போல் அவரைச் சட்டை செய்யாமல் பிரிவேனாவுக்குள் நுழைவதையும், வெளியேறுவதையும் நான் அவதானித்திருக்கிறேன். அவன் எதிலும் கூடுதல் ஆர்வமற்றவன் போலிருந்தான். அதிலும் குறிப்பாக இந்த மத விசயங்களில் பெரியளவு உடன்பாடான அபிப்ராயங்களை அவன் சொல்லி நான் கேட்டதில்லை.
நான் ஒருவித விறுவிறுப்பான ஆர்வத்துடனும் (மேலும் துல்லியமாகச் சொல்வதானால் ஆர்வக்கோளாறுடனும்), உற்சாகத்துடனும், சரத் ஆனந்த ஒருவித சலிப்புடனும், அலைச்சலுக்குள்ளான வேட்கை குன்றிய மனநிலையுடனும் விரிவுரைகளில் கலந்துகொண்டோம்.
இந்தக் கோர்ஸ் ஆங்கில இலக்கியக் கோர்ஸ். நான் ஓர் ஆங்கில ஆசிரியராகவும், இலக்கிய ஆர்வலனாகவும் இருந்ததே இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான காரணமாக இருந்தது. ஆனால் சரத் ஆனந்த இந்தக் கோர்ஸைத் தெரிவு செய்ததற்கான காரணம் விநோதமானதாகத் தோன்றியது. இதே கோர்ஸைத் தொடரப் பதிவு செய்திருக்கும் லுக்மினியை காதலித்து திருமணம் செய்வதுதான் அவன் இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான உயர்ந்தபட்ச இலக்காக இருந்தது. என்னவொரு இலட்சியம் என அவன் குறித்து ஓர் இளக்காரமான பெருமிதம் எனக்குள் தோன்றியது. லுக்மினியை நான் நேரில் கண்டிராத குறையை ஒரு நாள் சரத் ஆனந்த போக்கினான்.
பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையை அண்டிக் கிடந்த பென்ஞ்சில் இரண்டு உருவங்கள் உட்கார்ந்திருந்ததை என் கண்கள் ஆர்வமாக நோக்கின. அந்த ஆண் உருவம் சரத் ஆனந்த என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் பார்வை மற்ற உருவத்தை நோக்கி அநிச்சையாக நகர்ந்தது. மங்கல் வெளிச்சத்திலும் பளபளப்பான அவள் முகம் பிரகாசமாகத் தெரிந்தது. ஒரு மெல்லிய புன்னகை அவள் உதடுகளில் பூப்பதும் மறைவதுமாக இருந்தது. அருகிலிருந்த கல்விளக்கின் ஒளி அவள் மீது மெல்லிதாகப் படர்ந்து கொண்டிருந்தது. கல்விளக்கின் ஒளியில் அவள் முகத்திலும் புத்தரின் முகத்தில் ஓடிய அதே சாஸ்வதம் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நான் ஏனோ தவறி இருந்தேன். அந்த செக்கல் பொழுதில் ஒரு மெல்லிய புன்னகையுடன் ஒரு நாகரீகம் கருதி நான் அவர்களைக் கடக்க முற்பட்டபோது, என்னை அடித் தொண்டையால் அன்பாக அழைத்தான் சரத் ஆனந்த.
“மச்சான், இங்க வா…”
மாத்தறைச் சிங்களம் சற்றுக் கரடுமுரடானதாக எனக்குத் தோன்றியது. நான் பசப்பும் வார்த்தைகளால் அழைப்பை மறுதலித்துச் சைகை செய்துவிட்டு வந்த வழியே நகர ஒரு பூனையைப் போல் தருணம் பார்த்தேன். அவன் முகம் இறுகுவது மங்கலான நியான் வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது. இறுகிப் போயிருக்கும் இப்படியான ஒரு பெளத்த சூழலில் அவன் நட்பை நான் ஓர் அரசியல் நோக்கமும், சுய பாதுகாப்பு நோக்கமும் கருதி விரும்ப வேண்டி இருந்தது. அதனால் அவன் மீண்டும் ஒரு முறை அழைப்பதற்காக காத்திராமலே ஒரு விசுவாசமுள்ள பிராணியைப் போல் வாஞ்சையுடன் அவன் பக்கமாக நடந்தேன்.
அவள் கழுத்துக்குக் குறுக்காக சரத் ஆனந்த தன் கைகளைப் போட்டபடி இன்பத்தில் சற்று அசைந்துகொண்டிருப்பது மங்கலான ஒளியிலும் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது.
அப்போதும் அவனது கைகள் அவளது கழுத்துக்குக் குறுக்காக இருந்தன. ஆனால் பிடி சற்றுத் தளர்ந்திருந்தது. நியான் வெளிச்சத்தில் அவள் வெட்கத்தில் நெளிவதை நான் மீண்டும் ஒரு முறை பார்ப்பதில்லை என அப்பாவித்தனமாக எனக்குள் முடிவுசெய்து கொண்டேன்.
எனக்கு முதன் முதலில் அவன் லுக்மினியை அறிமுகம் செய்து வைத்தான்.
நானும் பென்ஞ்சில் உட்கார்வதற்கு வசதியாக இருவரும் சற்றுத் தள்ளி உட்கார்ந்தனர். ஆனால் நான் நின்றுகொண்டிருப்பதையே அப்போதைக்கு விரும்பினேன்.
“இது லுக்மினி…நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புறம்”
கல்விளக்கின் வெளிச்சம் இப்போது லுக்மினியில் படுவதை நான் என் உடலால் தடுக்கும் தோரணையில் நின்றிருந்தேன். அது எதேச்சையாக நடந்துவிட்டது. ஆனாலும் அவள் முகத்தில் இயல்பாக இருந்த ஒளியில் அவளது நாணத்தை நான் கண்டேன். அப்போது அவர்கள் இருவரின் உடல்மொழியிலிருந்து சரத் ஆனந்த மிகவும் வெளிப்படையானவன் எனவும், லுக்மினி ஒளிவுமறைவுள்ளவள் என்றும் என் மனதில் இருவரையும் பற்றிய சித்திரத்தை வரைந்தேன்.
சந்திப்பின் முடிவு வரைக்கும் நான் நின்றுகொண்டே இருந்தேன். அது பற்றி இருவரும் அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. வேறு பல சோடிகளும் வளாகத்தின் மறுகோடியை நோக்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த மாலைப்பொழுதுகள்தான் அவர்களது காதலை மேலும் வளர்த்துக்கொள்ள உகந்த நேரம் என்ற உண்மை நியான் ஒளியில் எனக்கு வெளிச்சமாகியது.
கெண்டினைச் சூழ்ந்து காதலர்களுக்கு விசுவாசமுள்ள நாய்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துக்கிடந்தன. சில நாய்கள் கெண்டினுக்குள்ளேயே அலட்சியமாக படுத்துக்கிடந்தன. அவற்றின் கண்களில் எப்போதும் பசியின் ஏக்கம் குடிகொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவற்றுக்குப் பிரத்தியேகமாக ஏதும் உணவுகள் வாங்கிக் கொடுத்ததில்லை. சிலவேளை சரத் ஆனந்த தான் லுக்மினியுடன் காதல் இன்பத்தில் சுகித்துக்கிடந்தபோது எதையேனும் நாய்களுக்கு விட்டெறிந்திருக்கலாம். அதன் அடையாளமாக அவனை எப்போதும் ஒரு நாய் நன்றியுடன் பார்த்துக் கொண்டு படுத்துக்கிடந்தது.
லுக்மினியின் அறிமுகம் கிட்டிய அந்த மாலைப்பொழுது என்னால் என்றுமே மறக்க முடியாததாக என்னைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அதன் அர்த்தம் கொஞ்சமும் எனக்குப் பிடிபடுவதாக இல்லை. அவளுடன் நட்பாக இருப்பதில் எனக்குள் ஒரு தனிப்பட்ட ஆர்வம் முளைவிட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் சரத் ஆனந்தவைப் போல் என்னுடனும் அவளது நட்பு ஓரளவு வளர்ந்துகொண்டு சென்றது. சரத் ஆனந்த பின்னர் சில வார நாட்களில் அவசியம் கருதி லீவெடுக்கும் சந்தர்ப்பங்களில் லுக்மினிக்கும் எனக்குமிடையில் நட்பு தங்குதடையின்றி முன்னேற்றங்கண்டு வந்தது.
இங்கு பொதுபலசேன எனும் தீவிரமான பெளத்த இயக்கம் ஒன்று முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரத்திலும், பள்ளிவாசல்களையும், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளையும் உடைப்பதிலும் தீயிட்டுக் கொளுத்துவதிலும் மும்முரமாக இருந்தது. சிறிஜெயவர்தனபுர போன்ற இடங்கள் அவர்களின் பிரதான கோட்டைகளாக இருந்தன. இந்த நகரத்தில் முஸ்லிம்கள் அவ்வளவாக இல்லை. இங்கு தனிமையில் இருப்பது ஆபத்தானது என்பதால்தான் இதுபோன்ற நட்புகளை நான் பெரிதும் விரும்பி வளர்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. நான் ஒரு முஸ்லிம் மதவாதியோ, இனவாதியோ இல்லாவிட்டாலும் அது அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் என்ற அச்சத்தில் நான் சரத் ஆனந்த, லுக்மினி போன்றவர்களின் தயவுக்குள் ஒளிந்துகொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் எனக்குள்ளிருந்த ஒரு தாழ்வுணர்ச்சியும் அந்த நட்பை நான் பூசிக்க காரணமாயிற்று. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதுவும் லுக்மினி போன்ற அழகான தலைநகரத்துப் பெண்ணுக்கு நாட்டின் யுத்தம் நடைபெற்று அழிபாடுகளுக்குள்ளான பின்தங்கிய கிராமமொன்றிலிருந்து சென்ற, ஒரு பெண்ணைக் கவரக்கூடிய அழகில்லாத சிறுபான்மை இனத்தவனான என்னை அவள் தன் இதயத்தில் வைத்திருப்பதோ அல்லது குறைந்தபட்சம் அப்படியான ஒருவனை அவள் தெரிந்து வைத்திருப்பதோ எனக்கு கௌரவமான ஒன்றாகப் பட்டது.
சரத் ஆனந்த வெளிப்படையாகவே பொதுபலசேன எனும் இந்த பௌத்த தீவிரவாத அமைப்பை கடுமையாக எதிர்ப்பவன். பெரும்பான்மைச் சமூகத்தில் அவன் ஒரு மாற்றுக்குரலாக இருந்தான். சரத் ஆனந்த நாட்டில் உருவாகி வந்த முஸ்லிம் மக்களுக்கெதிரான பொதுபலசேன போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் அடிப்படைவாத அரசியல் சித்தாந்தங்களுக்கும் எதிரானவனாக இருந்தான். அவன் அரசியல் சார்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது. அவன் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் விசயத்தில் தெளிவாக இருந்தான். அனைவரும் இலங்கையர் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. மிக அபூர்வமாக சிரிக்கும் குணம் கொண்ட அவனிடம் உள்ளூர ஈரம் இருப்பதை நான் தெரிந்துகொண்டது இதுமாதிரியான உரையாடல்களின்போதுதான். பின்னர்தான் அவனுடனான நட்பை நீடிக்க விரும்பி இருந்தேன்.
ஒரு நாள் இரவு சமுத்ராதேவி பிரிவேனாவின் விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். விடுதி புத்தரின் தியானத்தை ஒத்த ஓர் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது. பிரிவேனாவில் பிரித் ஓதி முடிந்து எல்லோரும் அமைதிக்குத் திரும்பி இருந்தனர். வெளியில் கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் ஜொலித்துக்கொண்டிருந்தார். பிரிவேனாவின் வளாகத்தில் இப்படி எட்டு வெவ்வேறு இடங்களில் அவர் எந்தக் கவலையுமற்று ஜொலித்துக்கொண்டிருந்தார். அப்போது பொதுபலசேனவின் கருத்துகளைத் தீவிரமாக ஆதரிக்கும் இளம் பிக்கு ஒருவரும் எங்களுடன் தங்கி இருந்தார். நான் முஸ்லிம் என்பதை அறிந்துகொண்ட அவர் என்னுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இந்தப் பிரிவேனா விவாதம் எங்களுக்குள் இடம்பெறுவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்னர்தான் இலங்கையின் புராதன நகரங்களுள் ஒன்றான குருநாகலவில் பள்ளிவாயல் ஒன்றை பொதுபலசென ஆதரவாளர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருந்தனர்.
இளம் ஹாமதுரு தனது கொள்கைக்கு ஏற்ற விதத்தில் கடுகடுப்பானவராகவும் சரியான புரிதலற்றவராகவும் இருந்தார். சிலவேளைகளில் அவர் உளறுவது போன்றும் எனக்குத் தோன்றியது. இலங்கையில் ஒரு உன்னத நாகரீகமோ அறிவெழுச்சியோ நிகழ்வதாக இருந்தால் அது சிங்கள சமூகத்திடமிருந்துதான் உருவாகும் என்ற எனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவே நான் இதுவரை சந்தித்த சிங்கள நண்பர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் இலங்கையை ஒரு சாக்கடை நாடாக மாற்றும் சிந்தனையுடனும் சிலர் இருப்பதை இந்த ஹாமதுரு மூலமாக நான் அறிந்துகொண்டேன்.
நடுநிசி நேரம். பிரிவேனாவில் நிலவிய அமைதியை பிரிவேனாவின் எல்லைக்குள் வாசஸ்தலத்தை அமைத்திருந்த நாய்களின் ஊளைச்சத்தம் கலைத்தது. நான் அப்போதும் விடுதிக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் சரமாரியாக ஜொலித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஊளைச் சத்தத்தையடுத்து விடுதிக்குள்ளிருந்த இளம் ஹாமதுரு பேசத் தொடங்கினார்.
“முஸ்லிம்கள் ஒரு புதிய சவர்க்காரம் ஒன்றைப் பாவிக்கிறீர்கள். அது என்ன சவர்க்காரம்? அதுதான் ஹலால் சவர்க்காரமா?” என ஹாமதுரு என்னிடம் கேட்டார். அவர் தொனியில் ஒரு நையாண்டி இழையோடியது. அப்போது சரத் ஆனந்த ஹாமதுருவை ஒருவித ஏளனத்துடனும் அலட்சியத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அதுமாதிரியான உரையாடல்களில் ஆர்வமற்றவன். போதாக்குறைக்கு அவன் பொதுபலசேன போன்ற அமைப்பின் கருத்துகளுக்கு மிகவும் எதிரானவனாகவும் இருந்தான். முஸ்லிம் கடைகள், பள்ளிகளை எரியூட்டுவது மகா முட்டாள்தனம் என ஹாமதுருவிடம் சற்றுக் கடுமையாகவே பேசிவிட்டு மரியாதை கருதி அவன் அமைதியானான். ஆனால் நான் ஹாமதுருவுக்கு பதில் வழங்க வேண்டி இருந்தது. ஹாமதுருவின் முகத்தில் இருந்த ஏளனமும் வெறுப்பும் தொடர்ந்தும் நீடிப்பதை நான் அவதானித்தேன். அது பெரும்பாலும் என்னைக் குறித்ததாக இருந்தது.
“நாங்க அப்படி ஒரு சவர்க்காரமும் பாவிக்கல ஹாமதுரு,“ என நான் பணிவாக பதிலளித்தேன். அந்த பதிலால் ஹாமதுரு திருப்தியடையவில்லை என்பதையும் அது அவரது ஏளனத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகரித்திருப்பதையும் நான் அவரது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டேன். அப்போது இரண்டு பூனைகள் மறியேறும் சத்தம் ஈனக் குரலில் தொந்தரவூட்டும் சத்தமாக கேட்டது. சரத் ஆனந்த மூர்க்கம் அடைந்தவனாக கடுமையான தூஷண வார்த்தைகளால் அந்தப் பூனைகளைத் திட்டினான். அவன் உண்மையிலேயே கோபம் கொண்டிருந்தான். அந்தக் கோபம் பூனைகள் மீதன்றி ஹாமதுரு மீதுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். பூனைகளை திட்டுவதற்காக சரத் ஆனந்த பாவித்த சொற்கள் ஒரு ஹாமதுருவின் முன்னால் ஒரு பௌத்தன் சாதாரணமாக பயன்படுத்தி நான் கேட்டதில்லை. அது ஹாமதுருவுக்கும் தெரிந்திருந்தது. சரத் ஆனந்தவுக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஹாமதுரு சரத் ஆனந்தவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படித்தான் சரத் ஆனந்தவும் ஹாமதுருவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது. அவன் அப்போதும் லுக்மினியைத்தான் நினைத்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும்.
“சந்துபொந்துகளிலெல்லாம் பள்ளிவாசல்கள கட்டுறதாலதான் பள்ளிகள உடைக்காங்க,” எனச் சொல்லி நான் என்னை ஒரு மாற்றுக் கருத்தாளன் எனவும் இனவாதி இல்லை எனவும் நிரூபிக்க முற்பட்டபோது சரத் ஆனந்த அதை மறுத்துரைத்தான்.
“இங்கு பௌத்த விகாரைகளுந்தான் சந்திக்குச் சந்தி இருக்கே,” கல்விளக்கின் வெளிச்சத்தில் அமைதிச்சுடராக வீற்றிருந்த புத்தரைச் சுட்டிக்காட்டியபடி சொன்னான். நான் தர்க்கத்தை தவிர்க்கும் பொருட்டு அவனை ஆமோதித்தேன். ஒரு மின்னல் போல்தான் அவனது பேச்சில் எப்போதும் ஒரு வெளிச்சமும் அதிர்வும் இருக்கும். ஆனாலும் நான் எனது கருத்தில் உறுதியாகவே இருந்தேன். தலைநகரத்தில் முஸ்லிம் வர்த்தகத் தளங்களிலும், பள்ளிவாசல்களிலும் பல கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தன.
அடுத்த வாரம் சனி மாலை கெண்டினில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.
“நாளை உன்னால் லுக்மினியைச் சந்திக்க முடியுமா?” என்று என்னிடம் கேட்டபடியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் எதிரே கிடந்த கதிரையில் உட்கார்ந்தான் சரத் ஆனந்த. அவன் அப்படிக் கேட்டதிலிருந்தே நாளை விரிவுரைகளில் கலந்து கொள்ளாமல் இன்றுடன் கிளம்பப் போகிறான் என்பதை ஊகித்துக்கொண்டேன். எனக்கும் நாளை கலந்துகொள்ளாமல் இன்றுடன் கிளம்பிவிடும் ஓர் எண்ணம் இலேசாக இருந்தது. அவன் சார்ந்து லுக்மினியிடம் எனக்கு ஒரு வேலை இருப்பதை உணர்ந்து கொண்டு நான் அதை வெளிப்படுத்த விரும்பாமல் மறைக்க விரும்பினேன். சரத் ஆனந்தவுக்கு உதவுதன் மூலம் அவனுக்கும் எனக்குமிடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் அதேநேரம் லுக்மினிக்கும் எனக்குமிடையிலான உறவும் வலுவடையும் என நான் எண்ணினேன்.
சரத் ஆனந்தவின் அன்பை மேலும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தயக்கமின்றி “ஆம் நான் சந்திக்கிறேன்“ என்றேன்.
அப்போது என் கடைவாயிலிருந்து ஒரு அசட்டுத்தமான புன்னகை வழிந்துகொண்டிருந்ததை அவன் பெரும்பாலும் கவனித்திருக்கக்கூடும். அதை அலட்சியம் செய்தபடி கெண்டின் சர்வரை பார்த்து இரண்டு முட்டை ரொட்டிக்கும் இரண்டு பிளேண்டிக்கும் ஓர்டர் கொடுத்தான். சென்ற வாரம் நான் அவனுக்கு இதேபோன்று முட்டை ரொட்டியும் டீயும் வாங்கிக் கொடுத்திருந்தேன். அதனால் இந்த வாரம் அவன் எனக்கு வாங்கித் தருகிறான். அந்த விஷயத்தில் அவன் மிகவும் கறாராக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு வாரம் அவன் வாங்கினால் மறு வாரம் நான் வாங்க வேண்டும் என்ற ஒழுங்கை அவன் கடைப்பிடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தான். சாப்பிடுவதற்கு முன் ஹராமா ஹலாலா எனக் கேட்டுக்கொள்வான். பொதுபலசேனா சில ஆண்டுகளுக்கு முன் ஹலால் உணவுப் பிரச்சினையைக் கிளப்பி இருந்தது. அப்போதிருந்துதான் அவனுக்கு உணவில் ஹலால் பிரச்சினை ஒன்று இருப்பது தெரிய வந்திருக்க வேண்டும். ஹலால் உணவுகளை மட்டும்தான் நாங்கள் சாப்பிடுவோம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. மனிதர்களை மதம், இனம், சாதி பார்த்து வகைப்படுத்தி அணுகுவது அவன் நோக்கமில்லை. இருந்தாலும் அவரவர் உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு அவன் வாய்ப்பளிப்பதையே பெரிதும் விரும்பினான். கிட்டத்தட்ட நானும் அதே மனோநிலையில்தான் இருந்தேன். மதரீதியாக எனக்குள்ளும் பெரிய கற்பனைகள் ஈடுபாடுகள் இருந்ததில்லை. மதம் குறித்து விவாதம் புரியுமளவுக்கு அதில் ஆர்வமோ ஈடுபாடோ எனக்கு இருப்பதாக நான் நினைக்கவுமில்லை.
நாளடைவில் லுக்மினிக்கும் எனக்கும் கல்விளக்குக்கும் புத்தருக்குமிடையிலான நெருக்கம் போல் அதிகரித்தது. சரத் ஆனந்தவுக்கும் லுக்மினிக்குமிடையிலான காதலை விடவும் எனக்கும் லுக்மினிக்குமிடையிலான நட்பு அசுர பலம் கொண்டு மேலெழுவதாகத் தோன்றியது. சரத் ஆனந்த என் நினைவிலிருந்து மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருந்தான். அவன் இருந்த இடத்தில் லுக்மினி வந்துவிட்டிருந்தாள்.
லுக்மினியும் அவனுடனான தொடர்பை நான் அறியாத வேறு சில காரணங்களுக்காக குறைத்து விட்டிருந்தாள். அவர்களின் காதல் கெண்டின் அருகில் கிடக்கும் பென்ஞ்சில் கல் விளக்கின் வெளிச்சத்தில் அநாயாசமாக வளர்ந்து வந்ததைப் போல இப்போது எங்களுக்குள் அது இருட்டில் நடப்பவனைப் போல் தட்டுத்தடுமாறிக் கொண்டு வளர்ந்தது. இது என்னை அறியாமல் நடந்துவிட்டது என்று என் மனம் நம்பியது. நாளடைவில் லுக்மினிக்காக நான் அவனைத் தவிர்த்தேன். லுக்மினி எனக்காக அவனைத் தவிர்த்தாள்.
லுக்மினி அன்று மிகவும் அட்டகாசமாக உடுத்தி வந்திருந்தாள். அவள் ஆடைகள் அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. அதை உள்ளூர இரசித்துக்கொண்டு வெளியில் அதைக் கண்டுகொள்ளாதவன் போல் பாவனை செய்தேன். அவள் அன்று ஏதோ ஒரு பரபரப்பில் இருப்பது தெரிந்தது.
“ஷேக்ஸ்பியர் கவித நோட்ஸ் முழுசா இருக்கா?” என்னிடம் அது முழுமையாக இருந்தபோதும் நான் அவளை சும்மா கேட்டேன்.
“இருக்கு” சொல்லிக்கொண்டே ஹேன்ட் பேக்குக்குள் கைவிட்டுத் துளாவினாள். வேறு வேறு விசயங்கள் அவள் கையில் சிக்கிக் கொண்டிருந்தன.
“இன்றைக்கு நான் நண்பி ஒருத்தியின் பேர்த்டே பார்ட்டிக்குப் போகனும்… ஃபைவ் மினிட்ஸ்ல பஸ்…” தேடிக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தாள். நான் அவள் பதட்டத்தை இரசித்துக்கொண்டிருந்தேன்.
“பரவால்ல… பிறகு எடுப்பம்” நான் சமாளித்தேன். அவள் கைக்கு அது கிடைக்காத அவதியும், அவசரமும் அவள் முகத்தில் உறைந்திருந்தன. சரத் ஆனந்தவுக்கு இந்தப் பயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நானும் அது பற்றி அவளிடம் கேட்கவில்லை. அவன் அந்த பென்ஞ்சில் அவளுக்காக காத்திருப்பான். இருவரும் வேறு வழியால் வெளியேறினோம். பூக்கள் அள்ளிச்சொரிந்திருந்த பல வர்ணக்குடையை எடுத்து விரித்துப் பிடித்தபடி பேவ்மெண்டில் அவள் நிதானமாக நடந்து வந்தாள். நான் அவள் விருப்பம் பற்றி அக்கறை கொள்ளாது அவளை சற்றே உரசினாற்போல் நடந்து சென்றேன். சரத் ஆனந்தவின் நினைப்பு அவளுக்கு வராத வகையில் அவளை சூழலுக்கு மாற்றிக்கொண்டு வந்தேன். தேவையற்ற ஜோக்குகள் சொல்லி அவள் மனதில் இடம்பிடித்தபடி கூடவே இழுபட்டுக் கொண்டிருந்தேன். அவளை பத்திரமாக பஸ் ஏற்றிவிட்டு அவள் அழைப்பு இல்லாததால் சற்றே ஏமாற்றத்துடன் மீண்டும் பிரிவேனா நோக்கி நடந்தேன். சரத் ஆனந்த எப்போதும் உட்கார்ந்திருக்கும் பென்ஞ் வெறுமையாய்க் கிடந்தது.
அடுத்த வாரம் எங்கள் பண்டிகை உணவுகளை அவளுக்காகப் பொதி செய்து கொண்டு வந்திருந்தேன்.
“இது எங்கட பண்டிகை உணவு” எண்ணெய் ஊறிய வெள்ளைக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பலகாரங்களை அவளிடம் நீட்டினேன். அதை தன் அகலத் திறந்த அழகான ஆச்சரிய விழிகளோடு பெற்றுக் கொண்டாள். எனக்குள் உள்ளூர மகிழ்ச்சி திரண்டது. சரத் ஆனந்தவின் கண்களில் படாமல் இந்த கலாசார உணவுப் பரிமாற்றம் நடந்து முடிந்தது. ஆனால் கல்விளக்கின் ஒளியில் புத்தர் மட்டும் அதனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
சரத் ஆனந்த வழமையான அந்த பென்ஞ்சில் லுக்மினிக்காக காத்திருந்து ஏமாறத் தொடங்கினான். லுக்மினியும் நானும் அவனை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே பிரிவேனாவை விட்டு வெளியேறுவதற்கு வேறு வாயிலைத் தெரிவுசெய்திருந்தோம். அந்த வாயிலிலும் கல்விளக்கின் ஒளியில் புன்னகைக்கும் புத்தர் அந்தரத்துடன் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கல்விளக்கின் வெளிச்சத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த சரத் ஆனந்தவின் காதல் இப்போது மங்கலாகி முழுமையாகவே இருளாகிவிட்டிருந்தது. சரத் ஆனந்தவின் கண்களில் இப்போது புதிதாக ஒரு நெருப்பு எரியத் தொடங்கி இருந்தது.
”அடோ..! தம்பிலா, என் காதல் கோட்டைய உடைச்சிட்டு நீ இடத்தப் புடிச்சிட்டாய்… எனடா…?” சரத் ஆனந்தவின் குரல் மேலும் தடிப்பேறி இருந்தது. சிங்களவர்கள் முஸ்லிம்களை ஏளனமாக அழைக்கப் பயன்படுத்தும் “தம்பிலா“ என்ற வார்த்தையை அன்றுதான் அவன் முதன் முதலாகப் பயன்படுத்தியதைக் கேட்டேன். அது எனக்கு ஒருவித குற்றவுணர்ச்சியைத் தந்தது. என்னை பூமி விழுங்கிக்கொள்வது போல் உணர்ந்தேன். என்னில் உரசினாற் போல் வந்துகொண்டிருந்த லுக்மினி சற்று மிரட்சியுடன் விலகி நகர்ந்தாள். சரத் ஆனந்தவின் நட்பு அது உருவாகிய அதே இடத்தில் அதே போன்றதொரு மாலைப்பொழுதில் அஸ்த்தமனமாகிப் போனது.
யாரும் பார்வையில் புலப்படாத மாலைப்பொழுது என்பதால் என்னை அடிக்கும் ஆவேசம் சரத் ஆனந்தவுக்குள் கனன்று கொண்டிருந்தது. அவன் என்னை அடிக்க முனைந்தபோது லுக்மினி அதைத் தடுத்து விட்டாள். அதுதான் அவனைக் கடுமையாகப் பாதித்தது. மிகவும் கடுமையான வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே அன்று என் பார்வையிலிருந்து மறைந்து சென்றான் சரத் ஆனந்த.
அதன் பின் சில வாரங்களாக சரத் ஆனந்தவை நான் காணவில்லை. பிரிவேனா விடுதியில் அன்றிரவு தங்கி இருந்தேன். லுக்மினியுடன் தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும்போது வெளியில் பரபரப்பான சத்தம் ஒன்று கேட்டது. பிரிவேனா விடுதியின் மேல்மாடி அறையின் சாளரத்தை திறந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையை வீசினேன். அடுத்த தெருவில் தீக்கதிர்கள் ஆவேசமாக மூண்டெழுவது தெரிந்தது. அந்த இடத்தில் முஸ்லிம் பள்ளி ஒன்று இருப்பது எனக்கு சடுதியாக நினைவுக்கு வந்தது. வெளியேறிச் செல்வதா அல்லது உள்ளேயே ஒளிந்து கொள்வதா என்ற பதட்டத்தில் சில கணங்கள் அப்படியே சமைந்து நின்றேன். விடுதிக்குள்ளிருந்த மாணவர்கள் சிலர் சத்தமிட்டுக்கொண்டு வெளியே ஓடுவது தெரிந்தது. அதில் என்னைத் தெரிந்த சிலர் வெளியே வராமல் உள்ளே இருக்கும்படி சொல்லிக்கொண்டு ஓடுவதை அசைவற்றுக் கேட்டுக்கொண்டு நின்றேன். இது பிரிவேனா என்பதால் எனக்கு சற்றுப் பாதுகாப்பான இடம் என்றும் தோன்றியது. சிறிது நேரத்தின் பின் திரும்பி வந்த நண்பன் ஒருவனிடம் களநிலவரங்களை விசாரித்தேன்.
“உங்கட பள்ளிவாசலத்தான் பத்த வெச்சிருக்கு”
மிக நிதானமாகச் சொன்னான். என் மீது ஒரு பரிதாபப் பார்வை பார்த்தான். தன் செல்போனில் அவன் பிடித்த காட்சிகளை காட்டினான். நான் சில கணங்கள் திடுக்கிட்டுப் போனேன். பள்ளிக்குத் தீமூட்டும் பொதுபலசேனக் கும்பலில் மிக முக்கியமானவனாகவும் மும்முரமாகவும் ஆவேசமாக இயங்கிக் கொண்டிருந்தான் சரத் ஆனந்த. அந்தக் குளிர்ச்சியான இரவிலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. அவனது இந்த சடுதியான மாற்றம் கண்ணாடிச் சில்லுகளாக என்னை உடைத்துக் கொண்டிருந்தது.
அந்த இரவு எனக்கு வெறுமையாகத் தெரிந்தது. பிரிவேனாவின் மேல்தளத்தில் தூணில் சாய்ந்துகொண்டு உணர்ச்சியற்ற கண்களால் சாளரத்தின் வழியே வெளியை நோக்கினேன். பலவர்ண நியான் ஒளி மாறி மாறி தன் பிரகாசத்தை வெளிப்படுத்தியது. அருகில் கிடந்த பென்ஞ் தனிமையாய் இருந்தது. அந்த பென்ஞ்தான் லுக்மினிக்கும், சரத் ஆனந்தவுக்கும் மிகப்பிடித்தமானது. அதன் அருகில் சரத் ஆனந்தவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாயொன்று பசித்த கண்களால் அவனில்லாத பென்ஞை வெறித்தபடி படுத்துக்கிடந்தது.
கல்விளக்குகள் இப்போது எனக்கு ஒளியற்றுத் தெரிந்தன. புத்தரின் முகம் தன் வழமையான பொலிவை இழந்து ஒரு வித இறுக்கத்துள் புதைந்திருப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது.