‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்

டுடே

ஒவ்வொரு கழுத்தையும்
சவரக்கத்தி முனையில் வைத்துக் கொண்டு
மாங்கா மண்டையைக்கூட அலங்கரித்தபடி
ஒவ்வொருவரையும்
கவனமாக வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கும்
அந்தச் சலூன்காரர்
இதுவரை யாரையும் கழுத்தறுக்காதது
இன்றைய தேதிக்கு
ஆச்சரியமாத்தான்டே இருக்கிறது

oOo

மாம்பழ சீஸன்

எத்தனைப் பதவிசாகத் தட்டினாலும்
ஒரு மாம்பழம் அதிலிருந்து நைஸாக நழுவி உருண்டோடி விடுகிறது
பின்னால் ஓடிய கைகளுள் ஒன்று
கழிவு நீர் வருவதற்குள் கபக்கென அமுக்கி
அதனைக் கையளித்தபோது
அவர் கண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும்
அந்தக் கருணை ஒளியைக் காண்பதற்காக
இதுவரைக்குமான
பதற்றங்களும் மெனக்கெடல்களும் பாய்ந்து கவ்வல்களும்
எத்தனை எத்தனையோ
வேறு வேறு மாம்பழங்கள்
வேறு வேறு மாமனிதர்கள்
வேறு வேறு சந்துகள் பொந்துகள் அவ்வளவே
ஒரு உருண்டோடியின் பின்னாலோடும்
ஒரு வாய்ப்பு கிட்டிய நாளில்
மாம்பழ உருவாக்கியின் முதல் தொடுதலுக்கு
அந்த மாம்பழம் எவ்வளவு நெகிழ்ந்து கொடுத்திருக்குமோ
எவ்வளவு நெகிழ்வைக் கொடுத்திருக்குமோ
அத்தனைக் குழைவுகளையும்
அத்தனை இளக்கங்களையும் கையிலள்ளி
இந்தாருங்கள் பிடியுங்கள் என்றேன்
மாம்பழக்காரரே உடனே யேசுநாதராக மாறி
திவ்வியத்தின் ஒளியை என் மீது பாய்ச்சிடாதீர்
மாம்பழத்தின் பக்கமும் லேசாக அதைத் திருப்பி விடும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.