எதையாவது ஒன்றை
எழுதும்போதும்
எதையாவது ஒன்றை
கடன் வாங்க
வேண்டி இருக்கிறது
எவருக்கோ உரியதை
அவர் அனுமதி இன்றி
எடுத்துக்கொள்ள
வேண்டி வருகிறது
ஒரு எண்ணம்
ஒரு படிமம்
ஒரு சிந்தனை
ஒரு சொல்
ஒரு எழுத்து
மற்றும்
இவற்றைத்தாண்டியும்
இவற்றில் அடங்காததுமான
ஏதோ ஒன்று
அல்லது
ஒன்றுக்கும் மேற்பட்டது.
யாரோ ஒருவரின்
உடலில் இருந்துகொண்டு
எவரோ ஒருவரின்
இருக்கையில்
அமர்ந்து கொண்டு
பாதங்களிலில் படிந்துவிட்ட
துல்லியமாக
குறிப்பிட்டுச் சொல்ல முடியாத
காலத்தின் தூசை
துடைக்க முயன்றபடி
எதைப்பற்றியோ
எவரோ ஒருவர்
எப்பவோ
கற்பிதம் செய்தது போல
இதோ,
எழுதி முடித்து விட்டேன்.
இதில்
என்னுடையது
என்பது
எது?