‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’
‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.
‘இல்ல ஸார், நான் சொல்லப் போற..’
‘என்ன காரணமாயிருந்தாலும் சரி, நீ ரைட்டர், லிடிரரி வரக் பேரை சொல்லாம உன்னால ஒரு பத்து நிமிஷத்துக்கு இருக்க முடியுதான்னு பாரேன்’
‘பண்லாம் ஸார், இது குறுங் கதை தானே, நோ ப்ராப்ளம். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவு ஸார். நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட், பப்ளிக் எக்ஸாமுக்கு முதல் நாள் நைட் எதையும் படிக்காம தூங்கிட்டு காத்தால ஏழு மணிக்கு தான் எழுந்துக்கறேன்..’
‘இது நிறைய பேருக்கு வர கனவு தான், நத்திங் ந்யு ஆர் ஸ்பெஷல்’
‘நான் முடிக்கல ஸார். கனவுன்னு நான் சொன்னேன்ல, அது தப்பு. ஆக்ஷுவலா அது கனவுக்குள்ள கனவு, அதாவது என் கனவுல நான் ட்வல்த் ஸ்டூடன்ட்டா இருக்கேன்ல , அந்த பையன் தான் பரீட்சைக்கு எதுவும் படிக்கமா தூங்கிடற மாதிரி கனவு காணறான், நான் இல்ல.. அவன் பயந்து போய் முழிச்சுகிட்டு எல்லாம் கனவுன்னு புரிஞ்சுக்கிறான், அதே நேரம் எனக்கும் தூக்கம் கலஞ்சிருச்சு’
‘சரி இதுக்கும் நீ மொதல்ல சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்’
‘இனிமே தான் விஷயமே இருக்கு. நான் ஒரு குறுநாவல் எழுதிட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமில்லையா’
‘அதான் ரெண்டு வருஷமா நீ முக்கி முக்கி எழுதிட்டிருக்கறத என்கிட்டே அப்பப்ப படிக்க குடுக்கறியே’
‘அதுல பத்து நாளா திருத்தங்கள் செஞ்சிட்டிருக்கேன் ஸார்’
‘அப்ப அதையும் என் கிட்ட படிக்க தரப் போற, எத்தனை தடவையா உன் செங்கல்பட்டு புராணத்தை படிக்கறது’
‘அத விடுங்க. கதைல அந்த பண்ணண்டாவது படிக்கற பையன் இருக்கான்ல..’
‘நீதான அவன், மூணாவது மனுஷனை பத்தி சொல்ற மாதிரி பேசற’
‘கதைப்படி அவன் பாத்திரம் தானே ஸார். அந்த பையன் இதே மாதிரி, அதாவது, எக்ஸாமுக்கு ப்ரேபர் பண்ணாத மாதிரி கனவு கண்டு பயந்து எழுந்துக்கற மாதிரி ஒரு பகுதி எழுதியிருக்கேன் ஸார். அதுக்கு அடுத்த நாள் நைட் எனக்கு இந்த மாதிரி கனவு வருது, லைப் இமிடேட்ஸ் ஆர்ட். நீங்க ரைட்டர்/புக் பேர்லாம் தான சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க, ஸோ ‘க்வோட்ஸ்’ யூஸ் பண்றது தப்பில்லை.’
‘நீ திருந்த மாட்ட’
‘வாழ்கையே ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டோட புனைவு மாதிரி ஆயிடுச்சுன்னு சொன்னது கரெக்ட் தானே ஸார்’
‘ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டா, என்னய்யா ஹாரி பாட்டர கதைக்குள்ள கொண்டாற’
‘நீங்க தானே நேம் ட்ராப்பிங் கூடாதுன்னு சொன்னீங்க. இப்ப பாருங்க நீங்களே புக் பெயரை சொல்றீங்க. எல்லாரும் கவனிங்க முற்றுப்புள்ளி ஸார் தான் அவர் சொன்னதை தானே மீறியிருக்கார், நான் இல்ல’
‘ஏன்யா திடீர்னு அந்தப் பக்கம் பார்த்து பேசற’
‘வாசகாஸ் கிட்ட பேசறேன் ஸார், போர்த் வால்ல ப்ரேக் பண்லாம்னு தான்’
‘வாசகாஸா, கஷ்டம். போர்த் வால்ன்னா என்னனு தெரியுமாய்யா, விட்டா சுவத்த பார்த்து பேசுவ போல’
‘வுட்டி அல்லன்லாம் அதை உடைச்சிருக்கார்ன்னு கேள்விப் பட்டிருக்கேன் சார்’
‘அதுக்காக நீயும் கடப்பாறைய எடுத்துக்கிட்டு வந்து வீட்டு சவுத்த உடைச்சிறாத. நீ பண்ணக் கூடிய ஆளு தான். இலக்கியம்னு இல்ல பொதுவாவே ஆர்ட்ட பொறுத்த வரைக்கும் படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோயில் கேஸ்யா நீ’
‘அதெல்லாம் மாட்டேன் ஸார்.’
‘பார் எ சேஞ் நீ சொல்ற கனவு விஷயம் ஓரளவுக்கு சுவாரஸ்யமா இருக்கு, இதை கதையாக்க ட்ரை பண்ணு’
‘இன்னொரு ஐடியாவும் இருக்கு ஸார்’
‘இதான் ஒன்கிட்ட பிரச்சனை, நிறைய ஐடியா இருக்கு, எதையும் உருப்படியா எக்ஸிக்யூட் பண்றதில்ல’
‘கேளுங்க. காலத்துகள் குறுநாவல் எழுதிட்டிருக்கார், அதுல வர கனவு மாதிரியே நிஜத்துலயும் அவருக்கு ஒரு கனவு வருது, இப்ப நான் சொன்ன அதே விஷயம் தான். இதை வெச்சு அவருக்கு ஒரு ஐடியா கிடைக்குது, போர்ஹெஸ பாத்திரமா வெச்சு குறுங்கதை எழுதிட்டு தூங்கப் போறார். அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் அந்தக் கதையை ப்ரைஸ் பண்றாங்க. தூங்கி எழுந்த காலத்துகள், அந்தக் கனவை தன கதைல சேர்க்கிறார். அன்னிக்கு நைட்டும் அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் வராங்க. கதைல வர காலத்துகளுக்கு கனவு வருதா இல்லை கதையை எழுதற காலத்துகளுக்கா, எது நிஜ கனவு எது கனவுல வர கனவுன்னு புரியாத அளவுக்கு கதை ரிகர்ஸிவ் லூப்ல சுத்திட்டே இருக்குது’
‘ஹாரிபிள். இப்படி கன்றாவியா கனவு கண்டே உன் லிடிரரி லைப் முடியப்போகுது’
‘லைப், வாட் இஸ் இட் பட் எ ட்ரீம்’
‘உனக்கு ட்ரீம்யா, எனக்கும் போர்ஹெஸுக்கும் நீ பண்றதெல்லாம் நைட்மேர்’